அக்டோபர் 14 அம்பேத்கர் இந்து மதத்தைத் துறந்து பெளத்த மதத்தைத் தழுவிய நாள். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதி இந்துகள் இழைத்த கொடுமைகளில் இருந்து அவர்களை விடுவிக்க அம்பேத்கருக்கு கிடைத்த ஒரே வழி. அன்று தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சாதி இந்துக்கள் என்னென்ன கொடுமைகளைச் செய்தார்களோ, அதிலிருந்து கொஞ்சம் கூட மாறவில்லை - இந்த 60 ஆண்டுகளின் நிலைமை. இன்னும் சொல்லப்போனால் அதைவிட பல மடங்கு தீவிரப்பட்டு இருக்கின்றது. அது நவீன வடிவங்களை எடுத்துள்ளது. முன்னெப்போதையும் விட பார்ப்பன பி.ஜே.பி ஆட்சியில் அது தனது கோரமுகத்தை எந்தவித முகமூடிகளும் இன்றி அப்பட்டமாக வெளிக்காட்டிக் கொண்டு இருக்கின்றது. இட ஒதுக்கீடு மூலம் தலித்துகளின் குறிப்பிட்ட சதவீதத்தினர் பொருளாதார ரீதியாக சமூகத்தில் மேல்நிலைக்கு வந்திருந்தாலும், சாதிய தீண்டாமையும், அவர்கள் மேல் இழைக்கப்படும் வன்கொடுமைகளும் எந்தவிதத்திலும் குறைந்து விடவில்லை. சில இடங்களில் அவர்களது பொருளாதார நிலைமையே அவர்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கான காரணியாக இருந்துள்ளது.

 ambed 350 2பார்ப்பனியத்தை முழுவதுமாக ஏற்றுக் கொண்டுள்ள சாதி இந்துக்களின் மனநிலையில் எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் முற்போக்கு சித்தாந்தங்களால் ஏற்படுத்தவிட முடியவில்லை. அப்படியே ஏற்படுத்தி இருந்தாலும், அதை விரல்விட்டு எண்ணிவிடலாம். பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் போன்றவர்களின் சிந்தனைகள் எல்லாம் படித்த அறிவுஜீவி வட்டாரத்தில் மட்டுமே அறியப்பட்ட, கடைபிடிக்கப்படுகின்ற, செயல்வடிவம் பெறுகின்ற சிந்தனைகளாக இருக்கின்றது. பெரும்பான்மை இந்துக்கள் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்வது கிடையாது. அதை ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக் கொள்வது கிடையாது. தங்களில் ஆழமாக வேறுன்றி போயிருக்கும் சாதிய மேலாதிக்க சிந்தனைகளைக் கைவிடுவது என்பது ஒரு சாதி இந்துவுக்கு உயிரை விடுவதைவிட வலி நிறைந்ததாக உள்ளது. அதற்காக அது பெற்ற மகளையோ, மகனையோ கொல்வதைக்கூட மகிழ்ச்சியாக செய்கின்றது.

 சாதி இந்துக்களின் கொடிய மேலாதிக்க மனப்பான்மையை மாற்ற முடியாது என்பதை இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. அதன் அடிப்படையில் இருந்தே அவை தனது வேலைதிட்டங்களை அமைத்துக் கொள்கின்றன. அதிகபட்சமாக அவர்களிடம் இருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியும் என்றால், ஒரு சாதி ஆணவக்கொலை நடக்கும் போதோ அல்லது வன்கொடுமைகள் நடக்கும் போதோ அதற்கு எதிரான கண்டனங்களை மட்டுமே. அதையும் கூட அவை மிக நாசுக்காக சம்பந்தப்பட்ட சாதி இந்துக்களுக்கு கோபம் ஏற்படுத்தாத அளவுக்கு ஓட்டுவங்கியைப் பாதிக்காத அளவுக்குத்தான் செய்கின்றன. இது போன்ற செயல்களையே அவை தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தாங்கள் செய்த மிகப்பெரிய சேவையாக சொல்லிக் கொள்கின்றன.

 தாழ்த்தப்பட்ட மக்களை மட்டுமே பிரதிநிதித்துவம் செய்வதாக சொல்லிக் கொண்ட கட்சிகளின் செயல்பாடும் பெரிய அளவில் அந்த மக்களுக்கு பயன் எதையும் கொண்டுவந்து சேர்த்துவிடவில்லை. சில எம்எல்ஏக்களையும் சில எம்பிக்களையும் பெற்றதைத் தவிர வேறு எதையும் அதனால் சாதிக்க முடியவில்லை. சுதந்திரம் அடைந்து இந்த 69 ஆண்டுகளில் இரட்டை டம்ளர் முறையை ஒழிக்கவும், கோவில் நுழைவுப் போராட்டங்கள் நடத்தவுமே அவை போராடிக் கொண்டு இருக்கின்றன. தங்களுக்கான வழிபாட்டு உரிமையைக்கூட அவர்களால் இன்னும் மீட்டெடுக்க முடியவில்லை. இதைத் தலித் அமைப்புகளின் தோல்வி என்று சொல்ல வரவில்லை. இந்தக் கட்டமைப்பிற்குள்ளாக... அதை தாங்கிப் பிடித்திருக்கும் பார்ப்பனியத்திற்குள்ளாக... அவர்களால் இதற்குமேல் செல்ல முடியாது என்பதுதான் உண்மை.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக வன்கொடுமைகள் நடக்கும் போது முதல் எதிர்ப்பு என்பதன் அடிப்படையில் இருந்து மட்டுமே தலித் இயக்கங்கள் முதன்மை பெறுகின்றன. ஆனால் அவற்றைத் தடுத்து நிறுத்தும் எந்த வலிமையும் அவற்றிடம் இல்லை. சொல்லப்போனால் அது சாத்தியமான செயலே கிடையாது. தங்களால் இதற்குமேல் எதுவுமே செய்ய முடியாது என்பது அவர்களும் நன்றாக உணர்ந்துதான் உள்ளனர். அதனால் தான் சாதி ஒழிப்புப் பிரச்சாரத்தை அவர்கள் பெரும்பாலும் கைகழுவி விட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்களாகவே இருக்க வேண்டும்; அப்போதுதான் எண்ணிக்கையில் பெரும்பான்மையாக இருந்து தனக்கான உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று சில தலித் தலைவர்கள் சொல்கின்றார்கள். மதம் மாறுவதால் எண்ணிக்கை சிறுபான்மை ஆகிவிடுவோம்; அதுமட்டும் அல்லாமல் மதம்மாறிய பின இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் செய்யும் உரிமையும் இழந்து விடுவோம் என அவர்கள் பதற்றத்தை ஏற்படுத்துகின்றார்கள்.

 இந்துமதத்தில் தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன் என்ற பட்டத்தோடு இருந்தால் மட்டுமே இட ஒதுக்கீடு போன்ற உரிமைகளை பெற முடியும், இந்து மதத்தை விமர்சனம் செய்ய முடியும் என்பதெல்லாம் பிரச்சினையின் தீவிரத்தன்மையை மறுதலிப்பதில் இருந்து தோன்றும் சிந்தனையாகும். ஒருவன் இந்து மதத்தைப் பற்றி விமர்சனம் செய்வதற்கு இந்துவாகத் தான் இருக்கவேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் கிடையாது. அவன் ஒரு கிருஸ்தவனாகவோ, முஸ்லிமாகவோ, சீக்கியனாகவோ, இல்லை பெளத்தனாகவோ இருந்தால் கூட விமர்சனம் செய்யலாம். செய்யக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. சாதியைக் கடைபிடித்தல் என்பது அதுவும் சகமனிதனை தாழ்த்தப்பட்டவன், தீண்டத்தகாதவன் என்று ஒதுக்கி வைக்கும் ஜனநாயக விரோத செயலை, யார் வேண்டும் என்றாலும் எதிர்க்கலாம், அதற்காக குரல் கொடுக்கலாம். அப்படி கொடுக்காமல் இருப்பதுதான் மோசமான செயலாகும்.

 தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மீது சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் தீண்டாமைக் கொடுமையில் இருந்து விடுபட ஒரே வழி மதம் மாறுவது மட்டுமே. வேறு எந்த மாற்றும் இருப்பதாகத் தெரியவில்லை. இங்கு யாரிடமும் மந்திரக்கோல் இல்லை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது சாதி இந்துக்கள் கடைபிடிக்கும் தீண்டாமையைத் தடுத்து நிறுத்தி விடுவோம் என்று சொல்வதற்கோ, சாதி ஆணவக் கொலைகளைத் தடுத்து நிறுத்தி விடுவோம் என்று சொல்வதற்கோ. இந்தியாவில் ஒரு தலித் பிரதமராக வந்தாலும் இந்த நிலைமையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது. பெரும்பான்மை சாதி இந்துக்களின் மனநிலை அழுகி சீழ்பிடித்துக் கிடக்கின்றது. ஒரு புரட்சியே வந்தாலும் இதை மாற்ற முடியாது. அப்போதும் தலித்துகள் பொது இடங்களில் நடமாடவும், ஊர்க் குளத்தில் நீர் எடுக்கவும், கோவிலில் வழிபடவும் போராடிக் கொண்டுதான் இருப்பார்கள். சாதியின் வழியாகவே இந்த உலகத்தைப் பார்ப்பது என்பதும், அதை புரிந்துகொள்வது என்பதும் ஒரு பார்ப்பனிய சிந்தனா முறை. அதை சட்டம் போட்டெல்லாம் சாதித்துவிட முடியாது. இதை நன்றாக அம்பேத்கர் புரிந்துகொண்டதால் தான் மதம் மாறுவதை தனது இறுதிமுடிவாகத் தேர்ந்தெடுத்தார்.

 எப்படி முதலாளித்துவப் புரட்சி இல்லாமல் சோசலிசப் புரட்சி இல்லையோ, அதுபோல மதம் மாறாமல் தாழ்த்தப்பட்டவன் என்ற இழிபட்டம் ஒருகாலும் ஒழியப் போவதில்லை. இது சில பேருக்கு அபத்தமாகக் கூட தோன்றலாம். ஆனால் வேறு மாற்று இருப்பதாக நமக்குத் தெரியவில்லை. இந்து மதத்தில் இருந்துகொண்டே தாழ்த்தப்பட்ட மக்கள் தனக்கான உரிமைகளை வென்றெடுக்க முயற்சிப்பது என்பது செத்த பிணத்துடன் மல்லுக்கட்டுவது போன்றது.

 மதம் மாறுவதன் மூலம் அவர்கள் தங்களது இழிதொழில்களில் இருந்து விடுபட முடியும், சேரிகளில் இருந்து விடுபட முடியும், தீண்டாமைக் கொடுமைகளில் இருந்து விடுபட முடியும், அனைத்து மக்களிடமும் அவர்கள் தங்களுக்கான ஓர் ஐக்கியத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இது எல்லாம் ஒரு முழுமை பெற்ற வடிவில் உடனே நடந்துவிட முடியும் என்று சொல்ல முடியாவிட்டாலும், காலப்போக்கில் முழுமையை நோக்கிப் போகும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். இதற்காக மதத்தை நாம் ஏற்றுக் கொள்கின்றோம் என்பது பொருளல்ல. இந்தப் படிநிலை வரிசையில் அமைந்த சாதிய முறை உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று. எனவே இதைத் தனித்து வைத்தே நாம் பார்க்க வேண்டியுள்ளது. அனைத்து மக்களும் எப்படி பொருளாதார சுதந்திரத்தோடு சமத்துவமாக வாழ வேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ, அதே போல அவர்கள் சுயமரியாதையோடும், தன்மானத்தோடும் வாழ வேண்டும். அதற்கான தீர்வை நோக்கிச் செல்வதற்கு நம்மிடம் தற்போதைக்கு வேறுபாதை இல்லாத போது, குறைந்த பட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் நாம் இயக்கவியல் சிந்தனைக்கு மிக அருகில் வரும் பெளத்த மதத்திற்கு மாறுவதை ஏற்றுக் கொள்ளலாம். எப்படி மதம் மாறுவதால் ஒருவனின் தேசிய உணர்வு மாறாதோ, அதே போல அவனின் சமுக மாற்றத்தைக் கோரும் புரட்சிகர உணர்வும் மாறாது என்பதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 ஆட்சி அதிகாரம் சாமானிய மக்களின் கைகளுக்கு மாறும் போது ஒருவன் இந்துவாக இருந்து மதத்தை தூக்கி எறிவதைவிட பெளத்தனாக இருந்து மதத்தை நிராகரிப்பது மிக எளிதானது. அதனால் அம்பேத்கரின் வழியில் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் மதம் மாற வேண்டும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்த இந்து சனாதன தர்மத்தின் மீது தொடுக்கப் போகும் பெரிய தாக்குதலாக அதுவே இருக்கும்.

-          செ.கார்கி

Pin It