‘உலக மயமாக்கல்’ என்ற கொள்கை வந்த பிறகு அரசுத் துறைகள் மறைந்து, தனியார்துறை புற்றீசலாக வளர்ந்த நிலையில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட் டோருக்கான வேலை வாய்ப்புகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டன. இந்த ஆபத்தை உணர்ந்து தனியார் துறையில் இடஒதுக்கீடு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக பெரியார் திராவிடர் கழகம் தொடர்ச்சியான பரப்பரை இயக்கங்களை தமிழகம் முழுதும் நடத்தியது. “சம்பூகன் சமூக நீதிப் பயணம்” என்ற பெயரில் கழகம் நடத்திய அந்த பரப்புரை இயக்கங்கள் மக்களிடையே பெரும் விழிப்புணர்வை உருவாக்கியது. 

அய்க்கிய முற்போக்குக் கூட்டணி, முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது, தனியார் துறை இடஒதுக்கீடு பற்றிய உறுதியை அதன் குறைந்தபட்ச செயல் திட்டங் களில் ஒன்றாக வழங்கியது. அதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், பார்ப்பன ஆதிக்கத் தில் மூழ்கிக் கிடக்கும் தனியார் நிறுவனங்களோ உறுதியாக மறுத்துவிட்டன. இதற்காக அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவும் எந்த முனைப்பும் காட்ட வில்லை. 

அயக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி இரண்டா வது முறை பதவிக்கு வந்த பிறகு, தாழ்த்தப்பட்டோருக்கு 5 சதவீத ஒதுக்கீடு வழங்குமாறு தனியார் துறையிடம் வலியுறுத்தப்பட்டது. மீண்டும் தனியார்த் துறை பார்ப்பன - பனியா நிறுவனங்கள் கோரிக் கையை ஏற்க மறுத்து விட்டன. அரசின் பல்வேறு உதவி, சலுகை, மான்யங்களைப் பெற்று செயல்படும் இந்த நிறுவனங்கள், மக்களுக்கு சமூகநீதி வழங்க மறுக்கும் போது, அதைத் துணிவுடன் தட்டிக் கேட்க, ஆட்சி அதிகாரத்தில் இருப்போர் தயாராக இல்லை. 

ஷெட்யூல்டு மக்களுக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக பி.ஜே. புனியா என்பவர் இப்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். பதவிப் பொறுப்பை ஏற்ற வுடன், இரண்டு கோரிக்கைகளை அய்க்கிய முற் போக்குக் கூட்டணி ஆட்சியிடம் அவர் வலியுறுத்தி யுள்ளார். இதில் முதன்மையான கோரிக்கை தனியார் துறைகளில் தாழ்த்தப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டை  உறுதி செய்ய வேண்டும் என்பதாகும். தனியார் துறையிடம் இதை வலியுறுத்த முடியாது என்ற கருத்தை அவர் மறுத்துள்ளார். 

அய்தராபாத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தனியார் துறை அரசiயும், அரசு நிதி நிறுவனங்களையும், தேசியமய வங்கிகளையும் சார்ந்து, அவர்கள் உதவிகளோடு தான் செயல்படு கிறது; எனவே ஒடுக்கப்பட்ட பிரிவினரை கை தூக்கி விடும் சமூகக் கடமையும் பொறுப்பும் அவைகளுக்கு உண்டு” என்று சுட்டிக்காட்டியுள்ளார். 

அமெரிக்கா மற்றும் அய்ரோப்பிய நாடுகள் பலவற்றிலும், மைனாரிட்டி மக்களுக்கான வேலை வாய்ப்பு சட்டப்படி வழங்கப்படும்போது, இங்கே மட்டும் அதை அமுல்படுத்த மறுப்பதில் என்ன நியாயமிருக்கிறது என்று பெரியார் திராவிடா கழகம் எழுப்பி வரும் கேள்வியை பட்டியல் சாதி பிரிவுக்கான ஆணையத்தின் தலைவரும் கேட்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு இதை ஏற்க மறுத்த தனியார் துறையினர் சர்வதேச பொருளாதார நெருக்கடியை ஒரு காரணமாகக் கூறினர். இப்போது நிலைமை சீராகி, தனியார் நிறுவனங்கள் வளர்ச்சிப் பாதையில் நடைபோடத் தொடங்கியுள்ளன. எனவே, ஆளும் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி இதில் கவனம் செலுத்த வேண்டும்; தனது கடமையிலிருந்து நழுவி விடக் கூடாது என்று வலியுறுத்துகிறோம். 

அத்துடன், மத்திய அமைச்சகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஷெட்யூல்டு பிரிவு மக்களுக்கான சிறப்புத் திட்டங்களைத் தயாரித்து, அதற்கு, அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ற வீதத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்ற கருத்தையும் ஆணையத் தலைவர் பி.ஜே. புனியா வலியுறுத்தியுள்ளார். இவை இரண்டுமே சமூக நீதிக் கோரிக்கைகள் ஆகும். 

அதிகாரிகள் மட்டத்தில் இதற்குக் குரல் கொடுத்தாலும், மக்கள் மன்றத்திலிருந்து வலிமையான இயக்கங்கள் நடத்தப்பட வேண்டியது அவசியமாகும். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சந்தையைப் பயன்படுத்தி, இலாபம் குவிக்கும் தனியார் நிறுவனங்கள், அந்த மக்களுக்கான உரிமைகளை வழங்க மறுப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.

Pin It