கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்பது முதலில் ஒவ் வொரு துறையிலும் விகிதாச்சாரப் பங்கீடே!  சாதி, இந்திய சமூகத்தின் பெரும் சாபக் கேடு; அது ஒழிக்கப்பட்டுத்தான் தீர வேண்டும் என்று சாதிய அமைப்பினால் பாதிக்கப்படுபவர்கள் மட்டும் அல்லாமல் பயன் பெறுபவர்களும் சொல்லவே செய்கின்றனர். பயன் பெறுபவர்கள் கூறுவது பொய்மை நிறைந்த கூச்சல் என்று எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் பாதிக்கப்படுபவர்கள் அனைவரும் சரியான வழியில்தான் சிந்திக்கிறார்களா? சாதி அமைப்பு எதில் வேர் கொண்டுள்ளது? அது அகமண முறையில் வேர் கொண்டு உள்ளது என்று கூறுகிறார்கள். இது உண்மையே என்றாலும் முழுமையாகக் கொள்ள முடியாது.

அகமண முறையை விட, தொழில் அமைவது தான் சாதிய முறையின் வலுவான அடிப்படைக் காரணம் ஆகும். ஆகமண முறை சாதிய அமைப்பின் பக்க வேர் என்றால் தொழில் அமைவது அதன் ஆணி வேர் ஆகும். தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் பங்களிப் பின் தொடர்ச்சியாக, சாதி மறுப்புக் கலப்புத் திருமணங்கள் நடந்து உள்ளன. ஆனால் சாதிய அமைப்பு சிறிதும் ஆட்டம் காணவில்லை.

தந்தை பெரியாரின், அண்ணல் அம்பேத்கரின் பேராட்டங்களினால், ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கிடைத்த இட ஒதுக்கீட்டின் காரணமாக, அதிகார மையங்களில் மிகச் சிறிய எண்ணிக்கையில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இடம் பெறுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. அக மணக் கட்டுப்பாட்டை மீறி, சாதிக் கலப்புத் திருமணங்கள் நடந்த பொழுது, அதைப் பார்ப்பனர்கள் தொடக்கத்தில் எதிர்த்தனர். ஆனால் காலப்போக்கில் எதிர்ப்பைக் குறைத்துக் கொண்டார்கள். இப்பொழுது அதை ஆதரிக்கின்றனர்; முன்னின்று நடத்தவும் செய்கின்றனர்.

ஆனால் இட ஒதுக்கீட்டை மட்டும், அக்கருத்து முகிழ்த்த பொழுதில் இருந்து இன்று வரைக்கும் தொடர்ந்தும், கடுமையாகவும் பார்ப்பனர்கள் எதிர்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.

பார்ப்பான் கிழக்கே போ என்று சொன்னால் நீ மேற்கே போ என்ற பெரியாரின் சொற்களை மனதில் கொண்டு, இட ஒதுக்கீட்டைப் பார்ப்பனர்கள் அகமண முறையை விட ஏன் கடுமையாக எதிர்க்கிறார்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அகமண முறைக்கு எதிரான கலப்புத் திருமணங்கள் சாதிய நிலையில் சலசலப்பை ஏற்படுத்தி னாலும், நால்வருண அதர்ம அமைப்பில் ஒரு சிறு கீறலைக் கூட ஏற்படுத்துவது இல்லை. ஆனால் இட ஒதுக்கீடு அப்படி அல்ல.

பார்ப்பனர்கள் மட்டும்தான் அதிகார மையங்களில் இருக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் கீழ்நிலை வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்ற நால்வருண அதர்ம அமைப்பில் கீறலை ஏற்படுத்துகிறது. அதிகார மையங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் நுழைவதற்கு வழியை ஏற்படுத்துகிறது. அப்படி அதிகார மையங்களில் நுழையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக் களுக்கு, நாட்டில் உள்ள, இதற்கு முன்னால் அவர்கள் அறிந்தே இராத, பல வாய்ப்புகள் தெரிய வருகின்றன.

இது, அவர்கள் சார்ந்திருக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பிற மக்களுக்கும் அறிமுகப்படுத்தி, தாழ்ந்த நிலையில் இருந்து உயர்ந்து எழ வாய்ப்பை ஏற்படுத்துகிறது. இது வெற்றிகரமாகத் தொடர்ந்தால் அதிகார மையங்களில் பார்ப்பனர்களின் முற்றுரிமை தேய்ந்து விடும். அதன் பின் நாட்டின் செல்வவளங்களைப் பார்ப்பனர்கள் தங்கள் விருப்பப்படி எல்லாம் அனுபவிக்கும்படியாகத் திட்டமிடுவதிலும் செயல்படுத்துவதிலும் தடங்கல் ஏற்படும். அனைத்து நிலை வேலைகளையும் அனைத்து வகுப்பு மக்களும் செய்ய வேண்டும் என்ற நிலையும் ஏற்படும். அதாவது வருணாசிரம அதர்மம் அழியத் தொடங்கிவிடும்.

இந்திய சமுதாயக் கொடுமைகளுக்கு மூலமான வருணாசிரம அதர்மம் எனும் ஆணி வேர் அறுபட்டு விட்டால், அகமண முறை எனும் பக்க வேர் வலுவிழந்து விடும். அகமண முறைக்கு எதிரான கலப்புத் திருமணங்களுக்கு இன்று எழுவதைப் போன்ற எதிர்ப்பு அப்பொழுது எழாது. அப்படி எழாதபடியான பொருளாரதச் சூழல்கள் உருவாகும். அதன் தொடர்ச்சியாக, சாதிய அமைப்பு மெல்ல மெல்லத் தேய்ந்து இறுதியில் மறைந்து போகும். ஆகவே சாதியை ஒழிக்க வேண்டும் என்றால், வருணா சிரம அதர்மத்தை-அதாவது பார்ப்பன ஆதிக்கத்தை அடியோடு ஒழிப்பதுதான் ஒரே வழியாகும். சரி!

பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிப்பது எப்படி? மனு அநீதி வெளிப்படையாக ஆட்சி செய்து கொண்டு இருந்த காலத்தில் பார்ப்பனர்களுக்குத் திறமை இல்லாவிட்டாலும் அவர்களை அதிகார மையங்களில், உயர்நிலைகளில் அமர்த்த வேண்டும் என்பதும், ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குத் திறமை இருந்தாலும் அவர்களைக் கீழ் நிலை வேலைகளிலேயே அமர்த்த வேண்டும் என்பதும், அதனால் எது எக்கேடு கெட்டுப் போனாலும் பரவா யில்லை என்பதும் மாற்ற முடியாத, மாற்றக் கூடாத விதியாக இருந்தது. (பார்க்க: பகவத் கீதை 18: 46,47,48)     

மகாத்மா ஃபுலே, தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் தலைமையிலான பேராட்டங்களுக்குப் பிறகு, மனு அநீதியை வெளிப்படையாக நடைமுறைப் படுத்த முடிவது இல்லை என்பது உண்மை தான். ஆனால் உள்ளறுப்பு வேலைகள் மூலம், இன்னமும் மனு அநீதியே தொடர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. அரசியல் சட்டம் அளித்து உள்ள இடஒதுக்கீடு உரிமையைப் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் முழுமையாகச் செயல்படுத்துவதே இல்லை.

அதிலும் நாட்டின் செல்வ வளங்களைப் பயன்படுத்தும் வழிகளைத் தீர்மானிக்கும் அதிகாரம் வாய்ந்த பணிகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் இடம் பெறாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்கிறார்கள். மீறி இடம் பெற்றே தீர வேண்டிய சூழ்நிலை ஏற்படும் போது, வகுப்புரிமை உணர்வு இல்லாதவர்களையே அமர்த்துகிறார்கள். வகுப்புரிமைப் போராளிகள் அப்படி வாய்ப்புப் பெற்றவர்களுக்கு வகுப் புரிமை உணர்வை ஏற்படுத்தினால், அவர்களை ஆசை காட்டியோ, அச்சுறுத்தியோ, இரண்டு வகைகளிலுமே பணிய வைத்து விடுகிறார்கள். இதனால் அரசியல் சட்டம் அளித்துள்ள வகுப்புரிமை செயல்படாமலேயே போகிறது.      இது எப்படி முடிகிறது?

அதிகார மையங்களில் நுழையும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருப்ப தால், அவர்களைப் பார்ப்பனர்கள் ஆசை காட்டியும், அச்சுறுத்தியும் பணிய வைக்க முடிகிறது. அதன் மூலம் வருணாசிரம அதர்மத்தை நிரந்தரப்படுத்த முடிகிறது. இதற்கு எதிரான தீர்வுதான் விகிதாச்சார இடப் பங்கீடு. அனைத்து வகுப்பு மக்களிலும் திறமைசாலி களும், திறமை குறைவானவர்களும் இருக்கையில், பொதுப் போட்டி முறையில் அனைத்து வகுப்பு மக்களும், மக்கள் தொகையில் அவரவர் விகிதத்திற்கு ஏற்பத்தானே தேர்ந் தெடுக்கப்பட வேண்டும்? ஆனால் உயர் நிலைகளில் பார்ப்பனர்களையும், கீழ்நிலைகளில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களையுமே பொதுப் போட்டி முறை தேர்ந்தெடுக்கிறது.

இது இயற்கை நியதிக்கு முற்றிலும் முரணானது ஆகும். இந்த முரண்பாட்டை ஒழித்து, இயற்கை நியதிப்படி, அந்தந்த வகுப்பில் உள்ள திறமைசாலிகள் உயர்நிலை வேலைகளிலும், அந்தந்த வகுப்பில் உள்ள திறமைக் குறைவானவர்கள் கீழ் நிலை வேலைகளிலும் தேர்ந் தெடுக்கப்பட வேண்டுமானால், விகிதாசாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்துவது ஒன்றுதான் வழி.

இதன் படி, அரசுப் பணிகள், தனியார்த் துறைப் பணிகளிலும், பெட்ரோல், எரிவாயு போன்று முகமை வழங்கலிலும், மேலும் இது போன்ற சமூக, பொருளாதார நடவடிக்கைகள் அனைத்திலும் பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், முற்பட்ட வகுப்பினர், மத சிறுபான் மையினர் ஆகியோருக்கு மக்கள் தொகையில் அந்தந்த வகுப்பு மக்களின் விகிதத்தில் பகிர்ந்து அளிக்க வேண்டும். அப்படிச் செய்தால் அதிகார மையங்களில் பார்ப்பனர் களின் எண்ணிக்கை அறுதிப் பெரும்பான்மையாக இருக்க முடியாது.

அப்படி நேரும் போது, இப்பொழுது மக்கள் நலத்தைக் கணக்கில் கொள்ளாமல், தங்கள் விருப்பப்படி எதேச்சாதிகாரமாக மக்கள் விரோத முடிவுகளை எடுக்கும் பார்ப்பன ஆற்றலின் வலிமை குறைந்து விடும். அனைத்து வகுப்பு மக்களும் இணைந்து முடிவெடுக்கும் பொழுது, அனைத்து வகுப்பு மக்களுக்கும் நலன் பயக்கும் திட்டங்களையே வகுக்க முடியும்.

ஒரு வகுப்பார் மற்ற வகுப்பு மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவது மறைந்துவிடும். அதாவது விகிதாசாரப் பங்கீட்டு முறையைச் செயல்படுத்தினால் பார்ப்பன ஆதிக்கம் ஒழிந்து விடும். வேறு வழிகள், பார்ப்பன ஆதிக்கம் நிரந் தரப்படவே வழி வகுக்கும். ஆகவே சாதி ஒழிப்பு என்பது பார்ப்பன ஆதிக்க ஒழிப்பே; பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு என்பது விகிதாசாரப் பங்கீடே!