எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அஇஅதிமுக ஆட்சி 2021 பிப்ரவரி 26ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் கடைசி நாளில் கடைசி அமர்வில் கடைசி நேரத்தில் இயற்றிய சட்டம்தான் வன்னியர் சமுதாய மக்களுக்கு 10.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் (தமிழக அரசு சட்டம் 8/2021).
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பிற சமுதாயத்தினர் இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்; இன்றளவும் தெரிவித்து வருகின்றனர். எவ்விதக் கருத்தாய்வுமின்றி, எல்லாத் தரப்புகளுடனும், குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பார் (மிபிவ = MBC) என்ற தொகுப்பிலடங்கிய பிற சமுதாயங்களுடன் எவ்விதக் கலந்தாய்வுமின்றி அவசர கோலமாய் அள்ளித் தெளித்த இந்த வன்னியர் தனி இடஒதுக்கீட்டுச் சட்டத்தை எதிர்த்து சீர்மரபினர் (டிஎன்டி) உள்ளிட்ட மிகவும் பிற்பட்ட சமுதாயத்தினர் கொடுத்த குரலுக்குப் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி செவிகொடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது.
அண்ணா வழி, கலைஞர் வழி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த மு.க. ஸ்டாலின் எடப்பாடி வழியில் பயணம் செய்து, வன்னியர் தனி இடஒதுக்கீட்டை உடனே செயலாக்கிட அரசாணை பிறப்பித்துள்ளார். வன்னியருக்கு 10.5, சீர்மரபினருக்கு 7.5, மிகவும் பிற்படுத்தப்பட்டோரில் எஞ்சிய சமுதாயங்களுக்கு 2.5 என்று பாகப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. எடப்பாடியாரைப் போலவே கோபாலபுரத்து இளையவரும் இந்த அரசாணையைப் பிறப்பிக்குமுன் எவ்விதக் கருத்தாய்வும் கலந்தாய்வும் செய்யவில்லை.
வன்னியருக்குத் தனி இடஒதுக்கீடு என்பது மருத்துவர் இராமதாசு தலைமையிலான வன்னியர் சங்கம் எழுப்பிய கோரிக்கையாகும். இதற்காக அவர்கள் நீண்ட போராட்டங்களும் நடத்தியுள்ளனர். சாலை மறியலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புமாக இந்தப் போராட்டங்கள் தீவிர வடிவெடுத்தன. ஒரு பக்கவிளைவாக சாதியம் தலைதூக்கி தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளும் நிகழ்ந்தன. விழுப்புரம் நிகழ்ச்சிகளை மறக்க முடியாதே!
பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் பலன்கள் அம்மக்களுக்குள் மிகவும் பிற்படுத்தப்பட்டோரைச் சென்றடையவில்லை என்ற பட்டறிவின் அடிப்படையில் அந்தப் போராட்டத்துக்கு ஒரு நியாயம் இருந்தது. எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இந்தப் போராட்டம் நடந்தது. அவர் அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசினார். ஒவ்வொரு சமுதாயத்தினரும் தமிழ்நாட்டு மக்கள்தொகையில் என்ன விழுக்காடு என்பதைக் கூட உறுதியாகக் கணிக்க முடியாமல் போயிற்று.
1989ஆம் ஆண்டு கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் வன்னியர், சீர்மரபினர் உட்பட 108 சாதிகளை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் (மிபிவ = MBC) என்ற தொகுப்பு உருவாக்கப்பட்டது. இது ஒரு நல்ல ஏற்பாடு என்று அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொண்ட போதிலும் மரு. இராமதாசு ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் தொடர்ந்து வன்னியர்களுக்கான தனி இடஒதுக்கீட்டையே கோரி வந்தார்.
இந்திய அரசமைப்பு ஒரு சாதியை மட்டும் தனி அலகாய்க் கொண்டு இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யவில்லை. சமூக வகையிலும் கல்வி வகையிலும் பிற்பட்ட வகுப்புகள் (SOCIALLY AND EDUCATIONALLY BACKWARD CLASSES – SEBC) என்பதே அரசமைப்பு குறிப்பிடும் வரையறை. அட்டவணைச் சாதிகள் (SC), அட்டவணைப் பழங்குடிகள் (ST) தவிர. ஏனைய பிற்பட்ட வகுப்புகள் (OBC) என்ற தொகுப்புகள் மட்டுமே சட்டப்படி செல்லும். தமிழ்நாட்டைப் பொறுத்த வரை ஏனைய பிற்பட்ட வகுப்புகளைத்தான் பிற்பட்ட வகுப்புகள் (BC) என்கிறோம். அவர்களுக்குள் மிகவும் பிற்பட்ட வகுப்புகள் (MBC) என்ற புதிய தொகுப்பைச் செய்துள்ளோம். இவையலாமல் சாதியின் பேரில் வன்னியர் என்ற புதிய தொகுப்பை நுழைப்பது சட்டப்படி செல்லாது. இடஒதுக்கீடு சற்றே சிறப்பாகச் செயல்படும் கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் தொகுப்புமுறை இடஒதுக்கீடு வடிவமைக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒற்றைச் சாதியை இடஒதுக்கீட்டுக்குரிய அலகாகக் கருதும் நடைமுறை எங்கும் இல்லை, சட்டப்படி இருக்கவும் முடியாது.
சட்டம் ஒருபுறம் இருக்க, சாதிக்கு சாதி தனித்தனியே இட ஒதுக்கீடு என்பது சாதி அரசியலுக்கு உரமூட்டும், மக்கள் ஒற்றுமைக்கு உலைவைக்கும். தமிழ்த் தேசிய ஓர்மையைச் சிதைக்கும். சமூகநீதிப் போராளியாகக் களத்துக்கு வந்த மரு. இராமதாசு சந்தர்ப்பவாதத்தில் ஊறிய சாதி அரசியல்வாதியாக, கூட்டணி பேர வணிகராகச் சீரழிந்து போனது நமக்கு ஓர் எச்சரிக்கையாகப் பயன்பட வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கான 50 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காட்டை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளுக்கு வழங்குவது என்ற ஏற்பாட்டை முதலில் குறைகூறிய மருத்துவர் இராமதாசு பிறகு அதை ஏற்றுக் கொண்டது மட்டுமல்ல, அதற்கான பெருமைக்கு உரிமையும் கொண்டாடினார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருக்கும் இந்த இட ஒதுக்கீட்டினால் ஏற்பட்டுள்ள விளைவுகள் என்ன? நிறைகுறைகள் என்ன? பயனாளிகளும் பயன்பெறாதாரும் யார்? இந்த வினாக்களுக்கு விடைகாணப் புறஞ்சார் ஆய்வுகள் ஏதும் நடைபெறவில்லை.
இடைக்காலத்தில் சீர்மரபினராகிய டி. என். டி. சமுதாயத்தை டி. என். சி. என்று அரசு மாற்றிய செயல் அம்மக்களைக் கடுமையாகப் பாதித்துள்ளது. டி.என்.டி. (DNT) என்றால் Denotified Tribes அதாவது பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் குற்றப் பரம்பரை (Criminal Tribes) என்று அறிவிக்கை செய்யப்பட்டு, நீண்ட போராட்டங்களுக்குப் பின் அந்த அறிவிக்கையிலிருந்து நீக்கம் செய்யப்பட்டவர்கள். இதைத்தான் சீர்மரபினர் என்று மங்கல வழக்கில் குறிக்கிறோம். இந்த அறிவிக்கை நீக்கம் அவர்களைக் குற்றப் பரம்பரையிலிருந்து நீக்குவதே தவிர பழங்குடித் தகுநிலையிலிருந்து நீக்குவதன்று. டி. என். சி. (DNC) என்றால் Denotified Communities. அறிவிக்கை நீக்கம் செய்யப்பட்ட சமுதாயங்கள் என்று பொருள். இப்போதும் சீர்மரபினர் என்றே சொல்லப்பட்டாலும் பழங்குடித் தகுநிலை பறிபோய் விடுகிறது. மாநில அரசு இந்தப் பிழையை ஏற்றுக் கொண்டாலும் சரிசெய்ய மறுக்கிறது. பழங்குடி மேம்பாட்டுக்கான திட்டங்கள் சீர்மரபினருக்குப் பொருந்தாத நிலை இதனால் ஏற்பட்டுள்ளது.
மிபிவ (MBC) தொகுப்பில் இடம்பெற்றிருந்த சீர்மரபினர் வன்னியர் தனி இடஒதுக்கீட்டுச் சட்டத்தையும் அரசாணையையும் வன்மையாக எதிர்த்து வருகின்றனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட ஏனைய வகுப்புகளான (வண்ணார், நாவிதர் போன்ற) சிறுசிறு சமுதாயங்களின் நிலை இன்னுங்கூட மோசமானது. அரசியல், பொருளியல் வலிமை இல்லாத இந்த மக்களை அலட்சியம் செய்வதில் அதிமுக, திமுக, பாமக ஒன்றுபட்டுள்ளன. காங்கிரஸ், பாசக பற்றிச் சொல்லவே வேண்டாம் (குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கக் காவிக் கொக்குகள் மூக்கை நீட்டினாலும் வியப்பில்லை). இந்தப் பின்னணியில்… போராடும் சமூகநீதி ஆற்றல்கள் உறுதியாக இம்மக்களின் பக்கம் நிற்க வேண்டும். தமிழ்த் தேசியத்தின் பெயராலோ இடது கொள்கையின் பெயராலோ இம்மக்களின் போராட்டத்தைக் கண்டுகொள்ள மறுப்பது அறிந்தோ அறியாமலோ சாதி அரசியலுக்கு ஊட்டமளிப்பதாகி விடும்.
சாதிக்கு சாதி தனி இடஒதுக்கீடு வழங்கினால் சிறு சாதிகளின் நிலை என்னவாகும்? அவர்கள் இடஒதுக்கீட்டால் பயன்பெறுவது என்பதே முயற்கொம்பு ஆகிப்போகும்.
தமிழ்ச் சமூகத்தின் சாதியியைபு (மொத்த மக்கள்தொகையில் சாதிகளின் தகவளவு) குறித்து எந்தக் கணக்கெடுப்பும் நடைபெறவில்லை. விடுமை பெற்ற இந்தியாவில் ஒருமுறை கூட சாதிவாரிக் கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இந்நிலையில் ஒரு சாதிக்கு மட்டும் அந்தச் சாதியினரின் மக்கள்தொகையை மிகையாகச் சொல்லித் தனி இடஒதுக்கீடு கோரப்படுவதும், அந்தக் கோரிக்கை ஏற்கப்படுவதும் மற்றச் சாதிகளும் இதேபோன்ற கோரிக்கை எழுப்பும் நிலைக்கு இட்டுச் செல்லும். ஒவ்வொரு சாதித் தலைமையும் தத்தமது சாதியின் மக்கள்தொகையை மிகைப்படுத்திக் காட்டி அதற்கேற்ப இடஒதுக்கீடு கோருவதற்கும் வழிகோலும்.
வன்னியர்க்கு மட்டுமன்று, எந்த ஒரு சாதிக்கும் தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கையை நாம் ஏற்பதற்கில்லை.
அட்டவணைச் சாதிகளில் அருந்தியர்க்கு ’உள் ஒதுக்கீடு’ வழங்கப்பட்டது மெய்தான். ஆனால் அது ஒரு சாதிக்கான தனி இடஒதுக்கீடு அன்று. சக்கிலியர், தோட்டி உள்ளிட்ட பல சாதிகளின் தொகுப்பே அருந்ததியர். இரண்டாவதாக அது முன்னுரிமை அளித்தல்தானே தவிர, தனி ஒதுக்கீடு அன்று. அதாவது ஓர் இடத்துக்கு 3 விழுக்காட்டை நிரப்ப அருந்ததியரிலிருந்து போதிய ஆட்கள் இல்லாத போது பிற அட்டவணச் சாதிகளைச் சேர்ந்தவர்களைக் கொண்டு அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம். வேறோர் இடத்துக்கு மற்ற அட்டவணைச் சாதியரிலிருந்து போதிய ஆட்கள் இல்லாத போது அருந்தியரைக் கொண்டு அந்த இடத்தை நிரப்பிக் கொள்ளலாம். வன்னியர்க்கான தனி இடஒதுக்கீட்டில் வன்னியருக்குரிய இடத்தை வேறு யாருக்கும் தரலாகாது. அருந்தியர்க்கு ஒதுக்கீட்டு முன்னுரிமை வழங்குமுன் ஜனார்த்தனன் குழு கள ஆய்வு செய்து அறிக்கை தந்தது. வன்னியர்கள் தொடர்பாக இப்படி எந்தக் கள ஆய்வும் நடக்கவில்லை.
எடப்பாடியும் மு. க. ஸ்டாலினும் ஏதாவது சான்று காட்டுவதாக இருந்தால் அது அம்பாசங்கர் ஆணையத்தின் அறிக்கைதான். 1985ஆம் ஆண்டு தமிழக அரசு, அம்பாசங்கர் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணையத்தில் 21 உறுப்பினர்கள் இடம்பெற்றனர். அந்த ஆணையத்தின் தலைவர் அம்பாசங்கர் ஆணையத்தின் உண்மையான அறிக்கையை மறைத்து தன் சொந்த அறிக்கையையே ஆணைய அறிக்கையாகக் கொடுத்து விட்டார் என்று பெரும்பாலான ஆணைய உறுப்பினர்கள் -- 14 பேர் – கையொப்பமிட்டு அரசுக்கு அறிக்கை அளித்தனர். அதனால்தான் தமிழக அரசு அம்பாசங்கர் கொடுத்த அறிக்கையைக் கிடப்பில் போட்டுவிட்டது. இந்த அம்பாசங்கர் வன்னிய சாதிச் சார்புடன் தற்போக்காக அளித்த அறிக்கையை மறுத்த பெரும்பான்மை உறுப்பினர்களில் ஜி. விசுவநாதன், விவி சாமிநாதன், அன்பில் தர்மலிங்கம், சௌந்தரம் கைலாசம், குமரி அனந்தன், குழ. செல்லையா போன்றவர்களும் அடங்குவர். அரசு சார்பாக அம்பாசங்கர் ஆணையத்தில் பணியாற்றிய அதிகாரிகளும் அம்பாசங்கர் தானாகக் கொடுத்த அறிக்கையை ஏற்கவில்லை. அம்பாசங்கர் அறிக்கையை ஏற்க மறுத்த முகன்மையான ஆணைய உறுப்பினர்களில் ஒருவரே இப்போதைய அரசின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
எப்படிப் பார்த்தாலும் 85ஆம் ஆண்டு அம்பாசங்கர் கொடுத்த தரவுகள் 89ஆம் ஆண்டு செய்யப்பட்ட மிபிவ (MBC) ஒதுக்கீட்டின் பலன்களை மதிப்பாய்வு செய்ய உதவாது. 1969ஆம் ஆண்டு சட்டநாதன் ஆணையம் கொடுத்த அறிக்கை காட்டிய நிலமைக்கும் 1985ஆம் ஆண்டு அம்பாசங்கர் காட்டிய நிலைமைக்கும் பாரிய வேறுபாடு உண்டென்றால் 1985க்கும் இப்போதைய நிலைமைக்குமான வேறுபாட்டைக் கருதாமல் விடுவது எப்படிச் சரியாக இருக்கும்?
தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு முறைமையின் செயல்பாடு குறித்து முழுமையான புறஞ்சார் மீளாய்வு தேவை. சாதிவாரிக் கணக்கெடுப்பும் தேவை. அதற்கிடையில் அண்மைக் காலம் வரை (எடப்பாடி அரசின் சட்டத்துக்கும் ஸ்டாலின் அரசின் ஆணைக்கும் முன்பு) இருந்த ஏற்பாடே தொடர வேண்டும். உரிய கருத்தாய்வும் கலந்தாய்வும் இல்லாமல் இந்த ஏற்பாட்டை மாற்றக் கூடாது. வாக்கு வங்கி அரசியலுக்காக இராமதாசின் தூண்டுதலால் எடப்பாடி செய்த குழப்படிக்கு ஸ்டாலின் முட்டுக் கொடுக்கக் கூடாது.
ஒருபுறம் தமிழ்நாட்டின் சமூக நீதி மரபு என்று பேசிக் கொண்டே, மறுபுறம், இருக்கிற முறைமைக்கும் பேராபத்து வந்திருப்பதைக் கண்டும் காணாமலிருப்பது தவறு! இந்த ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏனைய பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற இந்திய அரசின் அறிவிப்பு தமிழ்நாட்டின் முறைமைப்படி 50 விழுக்காடு இல்லை என்பதையே குறிக்கும். இது பெரிய வெற்றி என்று சொல்வதும், இந்த வெற்றிக்கு யார் காரணம் என்று சண்டையிட்டுக் கொள்வதும் மடமையின் பாற்பட்டதே.
பொருளியலில் நலிந்த பிரிவினர்க்கான (EWS) 10 விழுக்காடும் வரப் போகிறதாம்! இது சமூகநீதிக்கு வந்துள்ள பெருங்கேடு. முற்பட்ட வகுப்பினர்க்கு இடஒதுக்கீடு என்பதை ஏற்றுக் கொள்வது இடஒதுக்கீட்டின் உயிர்நாடியையே ஒடுங்கச்செய்து விடும். நாடாளுமன்றத்தில் இதை எதிர்த்து முழங்கிய தமிழ்நாட்டுக் கட்சிகள் இப்போது மௌனம் காப்பது ஏன்?
திமுகவின் நீட் எதிர்ப்புச் சூளுரை செங்கோட்டைச் சுவரில் மோதி நொறுங்கிக் கொண்டிருப்பதைக் காண வருத்தமாக உள்ளது. மிகப் பெரும்பாலான மக்கள் விரும்பிக் கேட்கிற ஒன்றைச் செய்யக் கூட தில்லி சுல்தான்கள் இடந்தர மாட்டார்கள் என்றால் இது என்ன குடியாட்சியம்? இந்தக் கேள்வியை திமுக கேட்க வேண்டும்.
இந்தியா இருக்கும் வரை இந்தி திணிக்கப்படும் என்பது போல் இந்தியா இருக்கும் வரை சமூகநீதி குறுக்கப்படும், மறுக்கப்படும் என்பதைத் தமிழர்கள் அனைவரும் உணர்வது எப்போது?
இடஒதுக்கீட்டில் யாருக்கு எவ்வளவு? என்ற பூசல் நடந்து கொண்டிருக்கும் போதே, புதுத் தாராளிய முதலிய வளர்ச்சி இடங்களையே இல்லாமற்செய்து கொண்டிருக்கிறது. அரசும் பொதுத் துறையுமே சமூகநீதி சார்ந்த இடஒதுக்கீட்டை மறுக்கும் போக்கில் இருக்கும் போது மோதியின் அரசும், அதனைத் தாங்கியும் அதனால் தாங்கப்பட்டும் நிற்கும் அம்பானிகளும் அதானிகளுமா இடஒதுக்கீடு தரப் போகின்றார்கள்? உலக மயமும் தனியார் மயமும் தாராள மயமும் வளர்கின்றன என்றால் சமூகநீதிமயம் சுருங்கி அநீதிமயம் விரிகிறது என்று பொருள்.
வணிகப்படுத்தலையும் மையப்படுத்தலையும் வகுப்புவாதப்படுத்தலையும் (commercialization, centralization and communalization) அச்சாணிகளாகக் கொண்ட புதுத் தாராளிய இந்துத்துவக் கல்விக் கொள்கையின் படையெடுப்பு தொடங்கி விட்டது. ’சமூகநீதிக் காவலர்’ விருது தாங்கிய ஐயாமார்கள் இந்தப் படையெடுப்புக்கு எதிராகத் தங்கள் சமுதாய மக்களையாவது அணிதிரட்டிப் போராடுவார்களா?
சமூகநீதிக்கு இடஒதுக்கீட்டின் இன்றியமையாமையை என்றென்றும் வலியுறுத்தும் போதே சமூகநீதி என்றாலே இடஒதுக்கீடுதான் என்ற கிட்டப்பார்வை குறித்து எச்சரிக்கவும் வேண்டும்.
பொதுவாகவே இடஒதுக்கீட்டுக் கோரிக்கையின் மோசமான பக்கவிளைவுகளில் ஒன்று சாதிவழி அணிதிரட்டலாகும். இடஒதுக்கீட்டை ஏனைய சமூகநீதிக் கூறுகளிலிருந்து பிரித்தெடுத்து அதற்கு மட்டுமே மிகையழுத்தம் கொடுப்பது சாதியொழிப்புக்கு அடித்தளமாக இருக்க வேண்டிய சமூகநீதிக் கோரிக்கையை சாதிக் காப்புக்கு அரணாக்கி விடும் ஆபத்து உள்ளது. பக்க விளைவுகளைக் களைந்து முதன்மை விளைவை நோக்கிப் போராட்டத்தை முன்னெடுக்க சாதி அரசியலும் பதவி அரசியலும் உதவ மாட்டா.
சமூகநீதி சார்ந்த தமிழ்த் தேசியம் இடஒதுக்கீட்டுக்காக விட்டுக்கொடாமல் போராடும் போதே சாதியத்தைக் கட்டோடு எதிர்த்து நிற்கும். தேசியத்தின் பெயரால் இனவாதமும், சமூகநீதியின் பெயரால் சாதியமும் எம் குறிக்கோளுக்குப் பகை!
- தியாகு