தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் மற்றும் புதூர் பகுதிகளில் வெங்காயம் நடவு பணிகள் தொடங்கியுள்ளன. வெங்காயம் நடவு செய்து, 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும் என்பதால் அறுவடைக்கு முன்பாக விளாத்திகுளத்தில் வெங்காயம் கொள்முதல் நிலையத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்று விளாத்திகுளம் வட்டார விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விளாத்திகுளம் வட்ட புதூர் பகுதியைச் சுற்றியுள்ள சுமார் 250-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரி விவசாய நிலையங்களில் உளுந்து, பாசிப்பயறுகளுடன் ஊடுபயிராக வெங்காயமும், மிளகாயும் பயிரிடப்பட்டு வருகிறது.

வெங்காயம் அறுவடைக்கு தயாராகும் சனவரி மாத ஆரம்பத்தில் வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூ.35 வரை விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்கின்றனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வெங்காயம் சந்தைக்கு அதிகளவில் வரத் தொடங்கியதும் வியாபாரிகள் ஒரு கிலோ வெங்காயத்திற்கு ரூபாய் 20 அல்லது 15 ஆக குறைத்து கொள்முதல் செய்கின்றனர். இப்படிப்பட்ட விலை வீழ்ச்சியால், அதிகமான முதலீடு செய்து, கடுமையாக உழைத்த விவசாயிகள், போதிய வருமானமில்லாமல் கடனை திரும்பச் செலுத்த இயலாமல் திண்டாடுகின்றனர்.

தமிழ்நாட்டிலேயே வெங்காயம் பயிரிடப்படுவதில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம், புதூர் பகுதிகள் 2-ஆம் இடத்தை பெற்றுள்ளன. இப்பகுதியில் வெங்காயம் அறுவடை செய்தவுடன் அதை இருப்பு வைத்து விற்கும் அளவிற்கு விவசாயிகளுக்குத் தேவையான வெங்காய கிடங்குகளை தமிழக அரசு ஏற்படுத்தித் தரவில்லை.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்த மாதந்தோறும் நடத்தப்படும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பல மாதங்களாக விவசாயிகள் சார்பாக இக்கோரிக்கையை வலியுறுத்தியும் அது ஆட்சியாளர்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் அறுவடையாகும் வெங்காய உற்பத்தி பல ஆயிரம் டன்களாக இருக்கும் என்பதால், சேமித்து வைக்க கிடங்கு வசதியை அரசு ஏற்படுத்தித் தரவேண்டும். கிடங்கு வசதி இல்லாத காரணத்தினால் குறைந்த விலைக்கு தனியார் வியாபாரிகளிடம் விற்க வேண்டிய கட்டாயத்தைத் தவிர்க்க, தமிழக அரசே இப்பகுதியில் வெங்காய கொள்முதல் நிலையம் அமைத்து, வெங்காய சாகுபடியை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெவெங்காயம் அறுவடைக்கு வருகின்ற ஒவ்வொரு வருடமும் சனவரி மாதத்தில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், புதூர் பகுதியில் தமிழக அரசே வெங்காய கொள்முதல் நிலையத்தை அமைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கும்படி தமிழக விவசாய சங்கத்தின் (கட்சி சார்பற்றது) தூத்துக்குடி மாவட்டத் தலைவர் தோழர் சரவணமுத்துவேல் தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.

Pin It