20 ஆண்டுகளுக்கு முன்னர் தில்லி - பெரோஸ்ஷா கோட்லாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலூக்கத்தின் நினைவுக் கூட்டம்

இன்றைய பிரச்சனைகளின் மையமாக மக்கள் கைகளில் அதிகாரத்தைக் கொண்டு வருவது இருக்கிறது. இந்த நோக்கத்தையொட்டி மக்களை ஐக்கியப்படுத்துவதே முக்கிய பணியாகும். இந்த நோக்கத்திற்காக, நாடெங்கிலும் தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களிடையே குழுக்களைக் நிறுவி வலுப்படுத்தும் வேலையை கம்யூனிஸ்டுகள் நாம் தீவிரப்படுத்த வேண்டும்!

இது தான், கம்யூனிஸ்டு கெதர் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் லால் சிங் அவர்கள் தில்லியில் பிப்ரவரி 24-அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆற்றிய உரையின் முக்கிய கருத்தாக இருந்தது. தில்லி பெரோஸ்ஷா கோட்லாவில் 1993 பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற வரலாற்றுச் சிறப்பு மிக்கப் பேரணியை போற்றுவதற்காக லோக் அவாஸ் வெளியீட்டார் மற்றும் வினியோகிப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.

பாபரி மசூதி உடைத்து நொறுக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடு வகுப்புவாத வன்முறையில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு நேரத்தில், பாராளுமன்ற இரண்டு பெரிய கட்சிகள் மீதும் பெரும்பான்மையான மக்கள் மிகுந்த கோபத்தோடு இருந்தனர். மக்கள் சந்திக்கும் எல்லா பிரச்சனைகளுக்கும் ஆணி வேரானது முதலாளித்துவ அமைப்பும், மக்களை அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்கும் அதனுடைய வழிமுறையும் ஆகும். இதற்குத் தீர்வானது, மக்களை அதிகாரம் பெற்றவர்களாகவும், ஒரு அரசியல் கட்சியின் கடமையானது மக்களை அதிகாரத்திற்குக் கொண்டுவருவதாகவும் இருக்கக் கூடிய ஒரு அமைப்பை நிறுவுவதாகும். பெரோஸ்ஷா கோட்லா பேரணியின் மூலம் இந்தப் புரட்சிகரமான கருத்தானது அரசியல் களத்தில் இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சியால் புகுத்தப்பட்டது.

கடந்த இருபது ஆண்டுகளாக ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றங்களைத் தொகுத்துரைத்த தோழர் லால் சிங் அவர்கள், மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்க வேண்டிய தேவை இந்த நேரத்தின் கொழுந்து விட்டு எரியும் கேள்வியாக இருக்கிறது என்றார். இந்தக் கேள்வியிலிருந்து மக்களைத் திசை திருப்ப ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். இந்த மையக் கேள்வி மீது கவனத்தை வைத்திருக்க கம்யூனிஸ்டுகள் நாம் வேலை செய்ய வேண்டும்.

பொது மக்களுடைய விவாதத்திற்கான தலைப்பைத் தீர்மானிக்கவும், மக்களதிகாரத்திற்கான போராட்டத்திலிருந்து கவனத்தைத் திசை திருப்பவும் ஆளும் முதலாளி வர்க்கம் எப்படி ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை உரை எடுத்து விளக்கியது. மக்களைக் கிளர்ச்சி செய்யும் ஒரு பிரச்சனையை முதலாளி வர்க்கம் எடுத்துக் கொண்டு, அந்தப் பிரச்சனை பொருளாதார அமைப்போடும், சமுதாயத்தின் அரசியலோடும் தொடர்பு இல்லாதது போல அதைக் கையாளுகிறது. ஏதாவதொரு சட்டத்தில் சில மாற்றங்களைக் கொண்டுவருவது, மேலும் ஒரு அதிகார அமைப்பை உருவாக்குவது அல்லது ஒரு அரசு நிறுவனத்தையோ அல்லது கொள்கையையோ சீர்திருத்துவது போன்றவை தீர்வாக முன்வைக்கப்படுகின்றன.

முதலாளி வர்க்க பிரச்சாரத்தின் நோக்கமானது, இன்றுள்ள அமைப்பு நன்றாக இருப்பதாகவும், தேவைப் படுவதெல்லாம் அதன் வெளிப்பூச்சில் சில மாற்றங்கள் மட்டுமே என்ற மாயையில் மக்களைக் கட்டி வைத்திருப்பதாகும். உழைக்கும் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர் கொண்டுள்ள எரியும் பிரச்சனைகளை ஒரு புரட்சிகர மாற்றமின்றி தீர்க்க முடியாதென்ற முடிவுக்கு அவர்கள் வருவதை ஆளும் வர்க்கம் விருப்பவில்லை.

இந்த நேரத்தின் முக்கியமான கடமையானது, தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களை அணிதிரட்டும் நோக்கத்தோடும் அவர்களிடையே அரசியல் விழிப்புணர்வை உருவாக்குவதற்காகவும், குடியிருப்புப் பகுதிகளிலும், வேலை செய்யும் இடங்களிலும், வளாகங்களிலும் குழுக்களை நிறுவி அவற்றை வலுப்படுத்துவதாகும். மக்களை அதிகாரம் கொண்டவர்களாக ஆக்குவதற்கு, அவர்கள் அணிதிரட்டுவதும், விழிப்புணர்வு கொண்டவர்களாக ஆக்குவதும் முக்கியமானதாகும். முதலாளி வர்க்கமும், அதனுடைய ஊடகங்களும், அதனுடைய அரசியல் கட்சிகளும் ஒவ்வொரு நாளும் பரப்பிவரும் பொய்களை நாம் தொடர்ந்து வெட்ட வெளிச்சமாக்கி வரவேண்டும். மக்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக நாம் விட்டுக் கொடுக்காமல் போராடிவர வேண்டும்.

கூட்டத்தில் அனைவரும் ஆர்வத்தோடு பங்கேற்றனர். தொடர்ந்து நடைபெற்ற விவாதங்களில் அனுபவம் வாய்ந்த செயல்வீரர்களும், பெரும் எண்ணிக்கையில் இளைஞர்களும் முனைப்போடு பங்கேற்றனர். அவர்கள் ஈடுபட்டிருக்கும் அணிதிரட்டும் வேலையில் எழுகின்ற முக்கிய கேள்விகளை எழுப்பி, அவற்றிற்கான தீர்வுகளையும் அவர்கள் விவாதித்தனர்.

இந்த சுறுசுறுப்பான விவாதத்தினூடே, நமது நாட்டில் ஆங்கில மொழியின் மேலாதிக்கம் பற்றிய முக்கிய பிரச்சனையை தோழர் லால் சிங் எழுப்பினார். குறிப்பாக 1857 சுதந்திரப் போருக்குப் பின்னர், வண்ணத்தில் மட்டுமே இந்தியர்களாகவும், அவர்களுடைய சிந்தனையிலும், கண்ணோட்டத்திலும் காலனியவாதிகளைப் போலவும் இருப்பதற்கு ஒரு சில இந்தியர்களை, காலனியர்கள் பயிற்றுவித்தனர். இதற்காக அவர்களுக்கு ஆக்ஸ்போர்டிலும், கேம்பிரிட்ஜிலும் பயிற்சியளித்தனர், ஆங்கிலேய பழக்க வழக்கங்களையும், மதிப்பீடுகளையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர், பெரும்பான்மையான இந்திய மக்களையும், இந்தியா மற்றும் இந்திய மக்களுடைய செழிப்பான பாரம்பரியத்தையும் இழிவாக நோக்குவதற்குக் கற்றுக் கொடுத்தனர். காங்கிரசு கட்சியில் ஆரம்பித்து காலனியர்கள் அரசியல் கட்சிகளை நிறுவினார்கள். ஆங்கிலேய மதிப்பீடுகளிலும், பழக்கவழக்கங்களிலும், சிந்தனையிலும் பயிற்றுவிக்கப்பட்டவர்களை இக் கட்சிகளுடைய தலைவர்களாக ஆக்கினர். காங்கிரசு கட்சியில் மட்டுமின்றி, கம்யூனிஸ்டு கட்சி உட்பட பிற கட்சிகளிலும் இவ்வாறு ஆங்கிலத்தில் சிந்திப்பவர்களும், காலனிய வாதிகளுடைய மதிப்பீடுகளிலும், பழக்க வழக்கங்களிலும் ஊறியவர்களும்தான் தலைவர்களாக உள்ளனர். நம்முடைய மக்களுடைய மதிப்பீடுகளைப் பற்றியும், பழக்க வழக்கங்களைப் பற்றியும் அவர்களுக்கு அறிவோ, அனுபவமோ இல்லை. இந்த முக்கிய பிரச்சனைக்கு கம்யூனிஸ்டுகள் தீர்வு காண வேண்டும். தலை ஆங்கிலேயனாகவும், இதயம் இந்தியனாகவும் இருக்க முடியாது. அப்படியிருந்தால் தொழிலாளி வர்க்கம் புரட்சிக்குத் தலைமை ஏற்க முடியாது.

இந்த முக்கியமான கருத்தைப் பற்றிய விவாதத்தில் செயல்வீரர்கள் ஆர்வத்தோடு பங்கேற்றனர். பல தோழர்கள் இந்தப் பிரச்சனை குறித்து முன்வந்து பேசினர்.

வெற்றிகரமான பொது வேலை நிறுத்தத்தின் படிப்பினைகளைப் பற்றியும் விவாதம் நடைபெற்றது. முதலாளித்துவ தாக்குதல்களை எதிர்த்து தொழிலாளி வர்க்கம் போராடத் தயாராக இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது என தோழர் லால் சிங் கூறினார். தொழிலாளி வர்க்கம் தன்னுடைய கடமையை உணரச் செய்ய வேண்டியது கம்யூனிஸ்டுகள் நம்முடைய பணியாகும்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போலவே, இன்றும் முதலாளி வர்க்கம் தன்னுடைய குறுகிய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, சூழ்நிலையை வகுப்புவாத அடிப்படையில் மாற்றுவதற்கு எல்லா வகையான திசை திருப்பல்களையும் தயாரித்து வருவதை தில்லி வட்டாரக் குழுவின் செயலாளர் தனது தொகுப்புரையில் சுட்டிக்காட்டினார். இன்றைய அரசியல் அமைப்பைப் போலவே, ஆளும் வர்க்கத்தின் கட்சிகளும் மதிப்பிழந்திருக்கின்றன. மக்கள் ஒரு மாற்றை விரும்புகிறார்கள். மக்களுக்கு அதிகாரத்தை உறுதி செய்யக்கூடிய ஒரு மாற்று சனநாயக அமைப்பை பிரபலப்படுத்தும் வேலையை நாம் தீவிரப்படுத்த வேண்டும். நாடெங்கிலும் வேலை செய்யும் இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும், வளாகங்களிலும் குழுக்களை நிறுவி உறுதிப்படுத்தும் வேலையை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

Pin It