விமானத் துறையை கடந்த ஐந்தாண்டுகளாக பாதித்துவரும் நெருக்கடி அதன் தவிற்கவியலாத விளைவுகளை உருவாக்கியிருக்கிறது. இந்தத் துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரும் பாதுகாப்பற்ற நிலையைச் சந்தித்து வருகின்றனர். விமான ஓட்டிகளிலிருந்து பயிற்சி விமான ஓட்டிகள் வரையிலும், கேபின் கிரூ-விலிருந்து பயிற்சி கேபின் கிரூ-வரையிலும், தரையில் பணியாற்றும் தொழில் நுட்பத்தொழிலாளர்களும், பிற தரைத் தொழிலாளர்களும் என அனைவருடைய வாழ்வாதாரமும் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது.

கிங் பிஷர் வீழ்ச்சிக்குப் பின்னர், ஏர் இந்தியா, ஜெட் ஏர்வேஸ், ஸ்பைசு ஜெட், இண்டிகோ, கோ-ஏர் என தற்போது ஐந்து விமான நிறுவனங்கள் உள்ளன. இவை நாட்டின் பெரும்பாலான தடங்களில் செயல்பட்டு வருகின்றன. மேலும் அவை வெளிநாட்டு விமான நிறுவனங்களோடு போட்டிபோட்டு சர்வதேச தடங்களிலும் பங்கு வகித்து வருகின்றன.

விமானத் துறையெங்கும் விமான ஓட்டிகள், கேபின் கிரூ உறுப்பினர்கள், பொறியியல் மற்றும் தரைப் பணியாளர்கள் என அனைத்துப் பிரிவுத் தொழிலாளர்களும் ஊதியமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்பட்டு வருகிறார்கள். 3 மாதத்திலிருந்து 6 மாதம் வரை அவர்களுக்கு வர வேண்டிய ஊதியம் வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கிறது. கிங் பிஷரைப் பொறுத்த மட்டிலும் அந்தத் தொழிலாளர்கள் எவ்வித வழியுமின்றி நட்டாற்றில் விடப்பட்டிருக்கின்றனர்.

விமான ஓட்டிகள்

வணிக விமான நிறுவனங்களின் விமான ஓட்டிகளுடைய நிலையை எடுத்துக் கொள்ளுவோம். ஒரு விமானத்தை ஓட்டுவது அதிக திறமையைக் கோரும் வேலையாகும். அதைச் செய்வதற்கு விலை உயர்ந்த, கடுமையான பயிற்சி தேவைப்படுகிறது. விமான ஓட்டிகள் மற்றும் பயிற்சி விமான ஓட்டிகளுடைய இன்றைய நிலைமை என்ன? ஏறத்தாழ 5000 விமான ஓட்டிகள் வேலையில் இருக்கின்றனர். இதில் தலைமை விமான ஓட்டிகளும், துணை விமான ஓட்டிகளும் மட்டுமின்றி அதிக ஊதியம் பெரும் 340 அயல்நாட்டு விமான ஓட்டிகளும் இதில் அடக்கம்.

நாட்டில் வணிக விமான ஓட்டி உரிமம் (CPL) பெற்ற 12,000 பேர் வேலையின்றி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நமது நாட்டிலுள்ள 32 அங்கீகரிக்கப்பட்ட விமான பயிற்சிப் பள்ளிகளாலும், அயல்நாடுகளில் உள்ள பயிற்சிப் பள்ளிகளாலும் பயிற்றுவிக்கப்பட்டவர்கள் ஆவர். மூன்றாண்டுகளுக்கு முன்னர் 6000-மாக இருந்த இந்த எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. ஒருவர் கூட இணை விமான ஓட்டியாக வேலை கிடைக்காத பல பயிற்சிப் பள்ளிகள் இருக்கின்றன. இந்த ஒன்றரை ஆண்டு விமான ஓட்டி பயிற்சிக்கு இந்த இளைஞர்களுடைய பெற்றோர் 25-35 இலட்சத்தை முதலீடு செய்திருக்கின்றனர். பேருந்து ஓட்டுனர்கள், இரயில்வே ஓட்டுனர்கள், பள்ளி ஆசிரியர்கள், இராணுவத்தில் பணிபுரிபவர்கள் என பல பெற்றோர்களும் இவ்வாறு செய்திருக்கின்றனர். அவர்கள் மிகப் பெரிய அளவில் வங்கிகளிலிருந்து பயிற்சிக்காக கடன் பெற்றிருக்கிறார்கள். அதை இப்போது அடைக்க முடியாமல் அவர்கள் சிக்கியிருக்கின்றனர். இந்த இளைஞர்கள், ஒரு இணை விமான ஓட்டியாக எல்லா படிகளும் உட்பட துவக்க சம்பளமாக மாதத்திற்கு ரூ 2 இலட்சம் கிடைக்குமென நம்பியிருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பிற்குப் பிறகு உடனடியாக விமான ஓட்டி பயிற்சிக்கு வந்துவிட்டனர். அவர்களுக்கு கல்லூரி படிப்பு எதுவும் இல்லை. பயிற்சி பெறாத வேலைகளில் அவர்கள் இப்போது வேலை செய்ய வேண்டியுள்ளது. விலை உயர்ந்த பயிற்சிக்காக அவர்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

வேலையில் இருக்கும் விமான ஓட்டிகளும் பிரச்சனையில் சிக்கியிருக்கிறார்கள். கிங் பிஷர் மூடப்பட்டுவிட்டது. 500-க்கும் மேற்பட்ட விமான ஓட்டிகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட கேபின் கிரூவினரும் தங்களுடைய வேலைகளை இழந்து விட்டனர். தங்களுக்குக் கிடைக்காத ஊதிய நிலுவைத் தொகையைப் பெறுவதற்காக அவர்கள் நீதி மன்றங்களை அணுகியுள்ளனர். மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஏர் இந்தியா, தர்மாதிகாரி குழுவின் பரிந்துரைப்படி ஊதியங்களை வெட்டிக் குறைக்கத் திட்டமிட்டு வருகிறது. கடந்த மே மாதத்தில் வேலை நிறுத்தத்தை நடத்திய இந்திய பைலட்டுகளுடைய கில்டு-வின் (IPG) தலைவர்களை வேலையில் மீண்டும் சேர்த்துக் கொள்ள அது மறுத்திருக்கிறது. இந்திய கமெர்சியல் பைலட்கள் அசோசியேசனைச் (ICPA) சேர்ந்த விமான ஓட்டிகள், தங்களுடைய ஊதியத்தைப் பெறுவதற்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோமென அச்சுறுத்தியிருக்கின்றனர்.

கேபின் கிரூ

தங்களுடைய படிப்பிற்காக இலட்சக்கணக்கில் மூதலீடு செய்திருக்கும் ஆயிரக்கணக்கான கேபின் கிரூ தொழிலாளர்களும், பயிற்சியர்களும் வேலையின்றி இருக்கின்றனர். ஒரு கேபின் கிரூ தொழிலாளரின் சராசரி மாத ஊதியம் ரூ 25,000 ஆகும். அவர்களுடைய உடற் பொருத்தத்திற்கு கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. குறிப்பாக பெண்களுடைய இளைமை மற்றும் தோற்றத்திற்கு நிறுவனங்கள் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. எனவே அவர்களில் பெரும்பாலானோர் 30-35 வயதிற்குப் பின்னர் வேலை செய்ய இயலாது. இதற்கு அவர்களுடைய குடும்பத்தினர் தங்களுடைய வாழ்நாள் சேமிப்பை முதலீடு செய்துள்ளதோடு, திரும்பி அடைக்க முடியாத அளவு கடனையும் வாங்கியுள்ளனர்.

கேபின் கிரூ தொழிலாளர்களை ஒப்பந்த முறையில் வேலையில் வைக்க ஏர் இந்தியா துவங்கியுள்ளது. தன்னுடைய கேபின் கிரூ தொழிலாளர்களுடைய வாழ்வாதாரத்தின் மீதும் அவர்களுடைய உரிமைகள் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை அவர்கள் எதிர்க்காமல் இருக்குமாறு அவர்கள் மீது நெருக்குதலை உருவாக்குவதற்காக ஏர் இந்தியா இப்படிச் செய்து வருகிறது. பிப்ரவரி மாதத் துவக்கத்தில் ஒப்பந்த கேபின் கிரூ தொழிலாளர்களோடு பறப்பதற்கு மறுத்ததற்காக சர்வ தேச விமானங்களில் பறக்கும் பல கேபின் கிரூ உறுப்பினர்களுக்கு பணி தரப்படவில்லை.

பொறியியல் மற்றும் பிற தரைப் பணியாளர்கள்

இலாபம் சம்பாதிக்கும் பொறியியல் மற்றும் தரை சேவைத் துறைகளை பிரித்தெடுத்து அவற்றை தனியார்மயப்படுத்த வேண்டுமென்பது அரசாங்கத்தின் தனியார்மயப்படுத்தும் திட்டத்தின் ஒரு அங்கமாகும். ஏர் இந்தியா, சிங்கபூர் ஏர்லயன்சோடு கூட்டாக நிறுவியிருக்கும் ஒரு கம்பெனியின் மூலம் இந்தத் திட்டமானது ஏற்கெனவே இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பொறியியல், தரைப் பணியாளர்கள் மற்றும் பிற உதவிப் பணியாளர்களுடைய நிலைமை மிகவும் நிலையற்று மோசமானதாக இருக்கிறது.

மற்ற விமான நிறுவனங்களை ஒப்பிடும் போது, ஏர் இந்தியாவின் பொறியியல் பாரமரிப்பு மற்றும் பிற தரைப் பணியாற்றும் தொழிலாளர்கள்தான் இந்தியாவின் பல்வேறு விமான நிலையங்களில் வேலை செய்யும் பொறியாளர்கள் மற்றும் தரைப் பணியாளர்களில் மிகப் பெரிய குழுவினராகும். அவர்கள் பிற இந்திய மற்றும் அயல்நாட்டு விமான நிறுவனங்களுக்கு சேவைகள் செய்து, ஏர் இந்தியாவிற்கு இலாபத்தை ஈட்டுகின்றனர். ஏர் இந்தியாவை மீண்டும் இலாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவது என்ற பெயரில் அரசாங்கம் மேற்கொள்ளும் "திருப்பும் யுக்தியின்" ஒரு அங்கமாக, தரைப் பணிகள், பராமரிப்பு துறைகளை ஒரு தனி கம்பெனியாக மாற்றியிருக்கின்றனர்.

பொறியியல், பராமரிப்பு மற்றும் தரைப் பணித் தொழிலாளர்கள் இந்த நடவடிக்கையை, வெளிப்படையாகவே எதிர்த்து வெட்டவெளிச்சமாக்கி வந்திருக்கின்றனர். இந்த புதிய துணைக் கம்பெனிகளில் தாங்கள் வேலை செய்ய மாட்டோமென அவர்கள் அறிவித்திருக்கின்றனர்.

தொழிலாளர்களுக்கு அதே ஊதியமும் வேலை நிலைமைகளும் இந்தப் புதிய துணைக் கம்பெனிகளில் இருக்குமென உறுதி கொடுக்கப்பட்ட நிலையிலும், தொழிலாளர்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள்?

அதற்குக் காரணம், அரசாங்கத்தின் நோக்கம் பற்றித் தொழிலாளர்களுக்கு தெரியும் என்பதாகும். இந்தத் தொழிலாளர்களுடைய ஊதியத் தொகையை ரூ 1000 கோடி குறைப்பதாக சிசிஇஏ (CCEA) அறிவித்திருக்கிறது. தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யாமலும், அல்லது அவர்களிடத்தில் நீண்ட நேர வேலையை குறைந்தபட்ச சம்பளத்தில் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்களைக் கொண்டு செய்யாமலும் ஊதியத்தொகையை எப்படிக் குறைக்க முடியும்? ஏர் இந்தியாவின் அதிகாரிகளைப் பொறுத்த மட்டில், இந்த இரு துணை நிறுவனங்களின் செயல்பாடு, ஏர் இந்தியாவின் விமானங்கள்-தொழிலாளர்களின் விகித எண்ணிக்கையை உலக தரத்திற்குக் கொண்டுவரும் என்கின்றனர். அதாவது தொழிலாளர்களுடைய எண்ணிக்கை குறைக்கப்படும்.

தில்லி, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் விமான நிலையங்கள் தனியார்மயப்படுத்தப்பட்ட பின்னர், இந்த விமான நிலையங்களில் ஏர்போர்ட் அத்தாரிடி ஆப் இந்தியாவின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களின் அனுபவமும் இதையே நிரூபிக்கின்றன. அந்தத் தொழிலாளர்களுக்கு வேலை மூன்றாண்டுகளுக்கு மட்டுமே இருந்தது. இளம் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்த விமான நிலையங்களை இயக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகபட்ச இலாபம் சம்பாதிப்பதில் மட்டுமே குறியாக இருக்கின்றனர்.

இதே பிரச்சனையை தனியார் விமான நிறுவனங்களைச் சேர்ந்த தரை மற்றும் பொறியியல் பணியாளர்களும் சந்தித்து வருகின்றனர்.

இந்தியாவில் இயங்கும் மிகப் பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஜெட் ஏர்லயன்ஸ், அண்மையில் இழப்பில் இருப்பதாக அறிவித்திருக்கிறது. விமான நிறுவனங்களில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் புதிய கொள்கையைப் பயன்படுத்தி, தன்னுடைய 24 % பங்குகளை மேற்கு ஆசிய நிறுவனமாகிய எத்தாட் ஏர்லயன்சிற்கு விற்க ஒரு ஒப்பந்தத்தை அது செய்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அது அதனுடைய தொழிலாளர்களுடைய ஊதியத்தையும், வேலை நிலைமைகளையும் தாக்கி வருகிறது.

எத்தாட் நிறுவனத்திற்கு விற்பதன் ஒரு அங்கமாக, ஊதியத்தை உறைய வைக்கும் முயற்சியை ஜெட் ஏர்வேசினுடைய தொழிலாளர்கள் எதிர்க்கத் தயாராகி வருகின்றனர். இரண்டாண்டுகளுக்கு முன்னர், ஜெட் ஏர்லயன்சினுடைய முதலாளி நாரிஷ் கோயல் நூற்றுக்கணக்கான விமான பணிப்பெண்களை வேலையிலிருந்து தூக்கி எறிந்தபோது, அது ஒரு தேசிய பிரச்சனையாக மாறியதை நாம் நினைவு கூற வேண்டும். அப்போது வேலையிலிருந்து தூக்கி எறிவதை தாற்காலிகமாக பின்வாங்கிக் கொண்ட கோயல், பின்னர் அதையே படிப்படியாக நடைமுறைப்படுத்தினார். கோயலை காப்பதற்காக கொண்டுவரப்படும் ஜெட்- எத்தாட் ஒப்பந்தத்தின் மூலம், தொழிலாளர்கள் தாக்கப்படுவார்களென ஜெட் தொழிலாளர்கள் அச்சப்படுவதில் நியாயம் இருக்கிறது.

முடிவுரை

இவையெல்லாம் எதைக் காட்டுகின்றன? முதலாளித்துவம் ஒரு அழிவு சக்தி என்பதை இவை காட்டுகின்றன. முதலாளித்துவம் ஒரு நெருக்கடியிலிருந்து இன்னொரு நெருக்கடிக்குச் செல்கிறது. இதில் தொழிலாளர்கள் தான் எப்போதுமே அடிவாங்குகிறார்கள். அண்மைக் காலத்தில் சில இடுபொருட்களின் விலைகள் உயர்ந்ததாலும், கடுமையான போட்டாபோட்டி நிலவுவதாலும், நிறுவனத்தைக் கொள்ளையடிக்கும் நிர்வாகத்தின் ஊழல் காரணமாகவும் பல்வேறு விமான நிறுவனங்கள் இழப்பைச் சந்தித்து வருகின்றன. நிலைமையிலிருந்து மீளவும், மீண்டும் அதிகபட்ச இலாபத்தைச் சம்பாதிக்கவும் அரசாங்கத்தின் கொள்கைகள் வழிவகுக்குமாறு செய்வதற்காக, இந்த விமான நிறுவனங்களுடைய முதலாளிகள் எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இழப்பின் சுமையை தொழிலாளி வர்க்கம் சுமக்குமாறு விடப்படுகிறது.

எனவே, விமானத் துறையில் உள்ள தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, தங்களுடைய வாழ்வாதார உரிமையைப் பாதுகாக்க அணிதிரள வேண்டும். முதலாளி வர்க்கம் அதிகபட்ச இலாபத்தை அடைய வேண்டுமென்ற குறுகிய நோக்கத்திற்கு பதிலாக பொருளாதாரம் இன்றைய மற்றும் எதிர்கால தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் சந்ததியர்களுடைய அதிகரிக்கும் தேவைகளை நிறைவு செய்யக் கூடியதாக மாற்றியமைக்க நாம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர்கள் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

Pin It