தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் அறைகூவல்

தொழிலாளி வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து அது கடுமையாகப் போராடி வருகிறது. முதலாளி வர்க்கத்தின் அதிகபட்ச இலாபத்திற்கு உத்திரவாதமளிக்க, அரசாங்கம் சளைக்காமல் மேற்கொண்டுவரும் நடவடிக்கை கள் காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. இந்த விலையேற்றத்தின் காரணமாக, தொழிலாளர்களுடைய வாங்கும் சக்தியானது வீழ்ச்சியடைந்து வருகிறது.

ஆளும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கு சேவை செய்வதற்காக, தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக என்று கூறப்படும் காகித சட்டங்களைக்கூட பாராளுமன்றக் கட்சிகள் திருத்தி வருகின்றன. தங்களுக்குப் பிடித்த தொழிற் சங்கங்களை அமைக்கும் உரிமையைக் கூட முதலாளிகளும், அரசாங்கமும் மறுத்து வருகின்றனர். சுரண்டலை எதிர்ப்பதற்காக தொழிலாளர்கள் அணிதிரளும் போது, முதலாளி வர்க்க அரசியல் கட்சிகளால் ஊட்டி வளர்க்கப்படும் குண்டர்கள், மானேசரில் உள்ள மாருதி சுசுகி தொழிலாளர்களுடைய போராட்டத்தில் நடத்தியது போல, நம்முடைய போராட்டங்களை நசுக்க முயற்சிக்கிறார்கள். அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் (ESMA), போன்ற கருப்புச் சட்டங்கள் தொழிலாளர்களுடைய போராட்டங்களை நசுக்க ஏவப்படுகின்றன.

எட்டு மணி நேர வேலைக்கு பதிலாக, தொழிலாளர்கள் ஒவ்வொரு நாளும் 10-12 மணி நேரம் வேலை செய்யுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, இஎஸ்ஐ, போனசு மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு பயன்கள் மறுக்கப்படுகின்றன. ஒப்பந்தத் தொழில்முறை தனியார் நிறுவனங்களில் மட்டுமின்றி, அரசாங்கத்திலும், அரசு நிறுவனங்களிலும் பெருகி வருகிறது. இன்று நிலவும் சட்டத்திற்கு எதிரானவற்றை, சட்டரீதியாக ஆக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. தங்கள் உரிமைகள் தாக்கப்படுவதைக் கண்டு தொழிலாளர்கள் சும்மா இருக்கவில்லை. அரசாங்க மற்றும் முதலாளிகளின் தாக்குதல்களை எதிர்த்து ஒவ்வொரு நாளும் போராடி வருகிறார்கள்.

நமது நாடு மிகவும் செல்வச் செழிப்பான நாடாகும். டாட்டா, அம்பானிகள், பிர்லா, மித்தல், அடானி குழுமம் மற்றும் பிறர் தங்களுடைய மூலதனத்தை ஐரோப்பாவிலும், ஆப்கானிஸ்தானிலும், ஆப்ரிகாவிலும், ஆசியாவிலும், மற்றும் பிற இடங்களில் முதலீடு செய்து வருகிறார்கள். இந்த மூலதனமானது, நம்முடைய நாட்டையும், தொழிலாளர்களையும், நமது மக்களுடைய இயற்கை வளங்களையும் கொள்ளையடித்து, சுரண்டிச் சேர்க்கப்பட்டதாகும். இந்தியாவை ஒரு ஏகாதிபத்தியமாகவும், போர் வெறிபிடித்த நாடாகவும் நிறுவும் போக்கை ஆளும் வர்க்கங்கள் கடைபிடித்து வருகின்றனர். இன்று தொழிலாளி வர்க்கத்தை பல சவால்கள் எதிர் கொண்டுள்ளன. நமது நாட்டினுடைய ஒரு அரசியல் சக்தியாக தொழிலாளி வர்க்கம் மாறுவதற்கு பல தடைகள் இருக்கின்றன.

முதலாவதாக, சாதி அமைப்பின் அடிப்படையில் உருவாகும் கருத்துக்கள், திறமையற்ற அல்லது கடுமையான உடலுழைப்பில் ஈடுபட்டு, மிகக் குறைவான ஊதியம் பெறுபவர்கள் மட்டுமே தொழிலாளர்கள் என்ற மாயையைப் பரப்பப் பயன்படுத்தப்படுகிறது. படித்த திறமை வாய்ந்த தொழிலாளர்களெல்லாம் "நடுத்தட்டு வர்க்க"மென அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களின் பல்வேறு பிரிவினரை "நடுத்தட்டு வர்க்க"மென கூறுவதன் மூலம், படித்த, கணினிகளில் வேலை செய்யும், அல்லது அதிக ஊதியம் பெறும் பிரிவுகளைச் சேர்ந்த தொழிலாளி வர்க்கம், வர்க்கப் போராட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். எப்படி பொருள் மதிப்பு உருவாக்கப்படுகிறது என்பதையும். ஒரு பொருளை உற்பத்தி செய்வதில், சுத்தம் செய்பவர்களிலிருந்து, மேலாளர் வரை பங்காற்றும் பல்வேறு தரப்பட்ட மக்கள், வேலை பங்கீட்டு முறைத் தொழிலாளிகள் என்பதையும் நாம் அறிவோம். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய உழைப்பிற்கு ஊதியம் பெறுகின்றனர். தங்களுக்கென சொந்தமாக உற்பத்திக் கருவிகள் ஏதுமின்றி, அறிவு அல்லது உடல் உழைப்புச் சக்தியை விற்க வேண்டியிருக்கும் இவர்கள் அனைவருமே தொழிலாளிகள் ஆவர். தொழிலாளி வர்க்கத்தை பிளவுபடுத்தும் இப்படிப்பட்டக் கருத்துக்களை எதிர்த்து நாம் போராட வேண்டும்.

இரண்டாவதாக இந்த சனநாயகத்தையும், அரசியல் சட்டத்தையும், பாராளுமன்றத்தையும், நீதித் துறையையும், மற்ற நிறுவனங்களையும் தொழிலாளி வர்க்கத்தினிடையே உயர்வுபடுத்திக் காட்டும் எல்லா முயற்சிகளையும் நாம் புறக்கணிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தை இந்த அமைப்போடு கட்டிப்போட மேற்கொள்ளப்படும் எல்லா முயற்சிகளையும் நாம் முறியடிக்க வேண்டும். இந்த சனநாயகமும், அதனுடைய எல்லா நிறுவனங்களும் முதலாளி வர்க்க ஆட்சியைப் பாதுகாப்பதற்காக இருப்பவையாகும். குறிப்பாக, தொழிலாளி வர்க்கத்தின் கட்சிகளெனக் கூறிக் கொண்டு, இந்த சனநாயகத்தையும், அதனுடைய அரசியல் சட்டத்தையும் விசுவாசத்தோடு பாதுகாப்பதற்காக சூளுரைக்கும் கட்சிகளைப் பற்றி தொழிலாளர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

மூன்றாவதாக முதலாளி வர்க்கத்தின் கட்சிகளை எதிர்ப்பதோடு, முதலாளி வர்க்கத்தின் திட்டத்தைப் பற்றி மாயைகளைப் பரப்பி அதற்கு ஆதரவாக தொழிலாளர்களை அணிதிரட்டும் தொழிலாளி வர்க்க அரசியல் கட்சிகளையும் நாம் எதிர்க்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் தனிப்பட்ட திட்டத்தை உருவாக்குவதில் நம்முடைய முயற்சிகளை நாம் ஒருமுகப்படுத்த வேண்டும்.

நான்காவதாக அதிகார பதவிகளை வகிக்கவும், அரசாங்கத்திடமிருந்து அங்கீகாரம் பெறவும், தொழிற் சங்கங்களிடையே கடுமையான வெறுக்கத்தக்க போட்டி நிலவுகிறது. முதலாளித்துவ கட்சிகளுக்கிடையே நிலவும் கொலை பாதகமான போட்டியிலிருந்து இது எந்த வகையிலும் வேறுபட்டதல்ல. இதே போக்கை ஒரே தொழிற்சங்கத்திற்கு உள்ளேயே கூட காணலாம். தொழிற்சங்கத்தின் தலைமையைக் கைப்பற்றுவதற்காக, ஒரே தொழிற் சங்கத்தைச் சேர்ந்த குழுக்களிடையே மோசமான போட்டா போட்டி நிலவுகிறது. தொழிலாளி வர்க்கத்திற்கு பாதகமான இந்தச் சதிகளுக்கு எதிராக நாம் திட்டவட்டமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

தோழர்களே, இன்றைய சூழ்நிலையை மாற்றக்கூடிய திறமை தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே இருக்கிறது. மக்கள் தொகையில் நாம் தான் பெரும்பான்மையாக இருக்கிறோம். நம்மிடம் பல்வேறுபட்ட திறமைகள் குவிந்திருக்கின்றன. தொழிலாளி வர்க்கம் மேலும் விழிப்புணர்வடைந்து வருகிறது. இந்தப் பாராளுமன்றமும், இந்த சனநாயகமும், நீதித் துறையும், ஆளும் வர்க்கத்தின் அரசியல் கட்சிகளும் நாளுக்கு நாள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் வளமையையும், பாதுகாப்பையும் இன்றைய முதலாளித்துவ அரசியல் அமைப்பால் வழங்க முடியாதென தொழிலாளி வர்க்கம் உணர்ந்து வருகிறது.

சமுதாயத்தை நடத்தும் பொறுப்பை முதலாளி வர்க்க அரசியல் கட்சிகளிடம் விட்டுவிட்டால், தொழிலாளி வர்க்கத்திற்கு வளமையோ, பாதுகாப்போ கூட இருக்க முடியாது. நாம் வெறும் வாக்களிக்கும் மந்தைகளாக இருக்க முடியாது. உழைக்கும் மக்களை ஒன்று திரட்டி, சமுதாயத்தை புதிய அடித்தளங்களில் மீண்டும் கட்டியமைக்கும் வரலாற்றுக் கடமையை நிறைவேற்ற, நம்முடைய கூட்டு வலிமையை நாம் பயன்படுத்த வேண்டும். வேலை செய்யும் இடங்களிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் ஒற்றுமைக் குழுக்களை நிறுவுவதன் மூலம், நாம் ஒரு அரசியல் சக்தியாக நாடெங்கிலும் எழவேண்டும். தொழிலாளி வர்க்கத்தின் திட்டத்தை உருவாக்க இக்குழுக்களில் விவாதங்களை நாம் நடத்த வேண்டும். இந்தக் குழுக்களே எதிர்காலத்தில் தொழிலாளி வர்க்க ஆட்சியின் கருவிகளாக செயல்படும்.

எல்லா துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களுடைய எஃகு போன்ற போராட்ட ஒற்றுமைக் கட்ட வேண்டிய உடனடித் தேவை பற்றி விழிப்புணர்வை உருவாக்க, தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் பாடுபட்டு வருகிறது. தொழிலாளர்கள் நாம் பெரும்பான்மையாக இருக்கும்போது, நாம் ஏன் ஆட்சியாளர்களாக ஆகக் கூடாது? இன்றைய முதலாளித்துவ அரசியல் அமைப்பும், வழிமுறையும் தொழிலாளி வர்க்கம் சமுதாயத்தில் அதற்குரிய இடத்தை எடுத்துக் கொள்வதைத் தடுத்து வருகின்றன. அதை நாம் மாற்றியமைக்க வேண்டும். தொழிலாளி வர்க்க நகரமான மும்பையில், பாசிச மராட்டிய அத்தியாவசிய சேவைகள் பராமரிப்புச் சட்டத்தை (MESMA) எதிர்க்கவும், தொழிலாளர்கள் விரும்பும் சங்கங்களை அமைத்துக்கொள்ளும் உரிமைக்காகவும், வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்துவதற்காகவும் 18-க்கும் மேற்பட்ட தொழிற் சங்கங்களும், பெண்கள் அமைப்புக்களும், பல்வேறு உற்பத்தித் துறைகளிலும் வேலை செய்யும் பிற மக்கள் அமைப்புக்களும் ஒரு குழுவாக ஒருங்கிணைந்து போராடி வருகின்றனர்.

பொருளாதாரத்தைத் திருத்தியமைக்கவும், முழு சமுதாயத்திற்கு வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்யவும் தேவையான அனுபவமும், அறிவும், தொழில் நுட்பத் திறனும் தொழிலாளி வர்க்கத்திற்கு இருக்கிறதென தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கருதுகிறது. எல்லாத் துறைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், உழைக்கும் மக்களும் ஒரு வர்க்கமாக ஒன்றுபட்டு, பிப்ரவரி 20-21, 2013 அனைத்திந்திய பொது வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுமென தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் கேட்டுக் கொள்கிறது.

இன்குலாப் ஜிந்தாபாத்!

அரசியல் அதிகாரத்தை நாம் எடுத்துக் கொள்வதன் மூலம், ஒடுக்குமுறைக்கும், அநீதிக்கும் முடிவு கட்டுவோம்!

தொழிலாளி வர்க்க ஆட்சியை நிறுவுவதற்காக குழுக்களைக் கட்டியமைப்போம்!

நாட்டின் செல்வங்களை உருவாக்கும் நாமே நாட்டின் மன்னர்களாக ஆகுவோம்!

Pin It