கியூபப் புரட்சி என்றாலே நம் கண்முன் தோன்றுவது அர்ப்பணிப்பின் ஆளுருவாகவும், உலக இளைஞர்களின் எழுச்சிச் சின்னமாகவும் திகழும் சே குவெராவும், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு இறுதி வரை சிம்ம சொப்பனமாக இருந்த ஃபிடல் காஸ்ட்ரோவும்தான். புரட்சிப் பாதையில் தன்னைப் புதிய மனிதனாகச் செதுக்கிக் கொண்ட சே குவெராவை அறிந்தது போல் கியூபாவின் புதிய மனிதிகள் கியூபாவுக்கு வெளியே பெரும்பாலும் அறியப்படாமலே உள்ளனர். கியூபப் புரட்சியில் முக்கியப் பங்கேற்ற அந்தப் புரட்சிப் பெண்களை, புரட்சியில் தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்ட கியூபாவின் வீராங்கனைகளை அறிந்து கொள்வோம். எழுச்சிமிக்க அவர்களின் வாழ்விலிருந்தும் போராட்டத்திலிருந்தும் புது உத்வேகம் பெறுவோம், வாருங்கள்.

புரட்சியாளர் சிலியா சஞ்செஸ்:

கியூபப் புரட்சியின் முதல் பெண் கெரில்லா என்று அறியப்பட்ட சிலியா சஞ்செஸ் புரட்சியின் வெற்றிக்கும், புரட்சி அரசின் நிர்வாகத்திலும் பெரும் பங்காற்றியவர். சிலியா தோழர் சேவின் மிகச் சிறந்த நண்பர். சே தன் இறுதிப் பயணத்துக்காகப் புறப்பட்ட போது தனது தொப்பியை சிலியாவிடமே நினைவாக விட்டுச் சென்றார்.

castro and celia sanchezபுரட்சிக்கு முன் சிலியா:

சிலியா சஞ்செஸ் 1920 மே 9ஆம் நாள் ஓரியண்டெ எனப்படும் கியூபாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மெடியா லுனா எனும் கிராமத்தில் பிறந்தார். தாயார் அகாசியாவைத் தனது குழந்தைப் பருவத்திலேயே இழந்த அவர் ஆறாவது வயதிலே நியூரோசிஸ் நோயால் அவதிப்படத் தொடங்கினார். எட்டு குழந்தைகளில் ஒருவரான சிலியாவுக்கு நான்கு சகோதரிகள். தந்தை மானுவல் சஞ்செஸ் சில்வீரா தேசப்பற்றும் சமூக அக்கறையும் மிக்க மருத்துவர். மிகச் சிறந்த பண்பாளர். அவர் ஹவானாவில் அதிகப் பணம் சம்பாதிப்பதை விட கிராமப்புறங்களில் சேவை செய்வதையே விரும்பினார்.

தனது வீட்டுக்கு வந்த எவருக்கும் பணம் வாங்காமல் மருத்துவ உதவி செய்ததற்காகச் சமூகத்தில் நன்கு அறியப்பட்டு நேசிக்கப்பட்டவர். காலனியச் சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளை நேரடியாகக் கண்டவர். சமூக நீதிக்காகப் போராட வேண்டியதன் அவசியத்தைத் தன் புதல்விகளுக்கு உணத்தியவர். அவரிடமிருந்தே சிலியா தனது ஆரம்ப அரசியல் கல்வியையும், சமூக சேவையில் ஈடுபடும் ஆர்வத்தையும் பெற்றார். சர்வாதிகாரம் மற்றும் அநீதி மீதான வெறுப்பும், மக்களிடம் மரியாதை செலுத்தும் பண்பும் தந்தையிடமிருந்து வரப் பெற்றார்.

சிலியாவின் பதின்ம வயதில் தந்தை அவரை சியரோ மேஸ்ட்ரோவில் கியூபாவின் உயர்ந்த மலையான பிகொடர்கினோவிற்கு அழைத்துச் சென்றார், அதன் சிகரத்தில் கியூபாவின் புரட்சிக் கவிஞர் ஹொசே மார்த்தியின் சிலையை நிறுவினர். சிலியா தந்தையின் அற உணர்வையும், தேசிய உணர்வையும் தனதாக்கிக் கொண்டார். சமூகச் சீர்திருத்தத்தையும், ஊழலற்ற நிர்வாகத்தையும் முன்னிறுத்தி 1947ஆம் ஆண்டு உருவான கியூப மக்கள் பாரம்பரியக் கட்சியை அவரது குடும்பம் ஆதரித்தது.

சிலியா தனது ஆரம்பகால வாழ்க்கையின் பெரும்பகுதியைத் தந்தையின் மருத்துவ சேவைக்கு உதவி செய்வதிலேயே கழித்தார். 12 வயதிலிருந்தே தன் தந்தைக்காக வேலை செய்யத் தொடங்கியவர் பல்கலைக்கழகத்தில் சேரவில்லை. உயர்நிலைப் பள்ளிக் கல்விக்குப் பிறகு, பிடல் காஸ்ட்ரோவுடன் கியூபப் புரட்சியில் முழுமையாக ஈடுபடும் வரை சிலியா தனது தந்தையின் மருத்துவ சேவைக்குத் தொடர்ந்து உதவினார். நோயாளிகள் கொடிய வறுமையால் துன்புறுவதை உணர்ந்தார்.1940இல் சிலியா தந்தையுடன் பிலனுக்குக் குடிபெயர்ந்தார்.

முன்பதிவு இல்லாமல் சிகிச்சையகம் வரும் நோயாளிகளை அவர்களின் உடல்நிலையறிந்து உடனடி சிகிச்சை பெற வேண்டியவர்களுக்கு முன்னுரிமை அளித்து மற்றவர்களை அவர்களின் முறைக்குக் காக்க வைப்பது என்று அனைத்தையும் பொறுமையுடன் முறைப்படுத்தினார். சிலியா நோயாளிகளின் தனிப்பட்ட விவரங்களின் இரகசியத்தையும், இறைமையையும் பாதுகாத்தார். இப்பண்புகள் புரட்சி வேலையில் எளிய மக்களிடம் தொடர்பேற்படுத்தவும், புரட்சியின் இரகசியத்தை எதிரிகளிடமிருந்து பாதுகாக்கவும் அவருக்குப் பெரிதும் உதவியாய் இருந்தன.

தந்தையும் மகளும் அந்தப் பகுதி மக்களின் பிரியத்திற்குரியவர்களாக இருந்தனர். சிலியா ஒவ்வோராண்டும் ’மூன்று அரசர்கள்’ திருவிழாவிற்கு ஏழை, தொழிலாள வர்க்கக் குழந்தைகளுக்கு பொம்மைகள் அளித்தார். அதற்காக மேரியின் சேவகர்கள் என்ற கத்தோலிக்கத் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டினார். இது அவருக்கு நம்பிக்கையின் அடிப்படையில் ஒரு முழுச் சமூக வலைப் பின்னலைக் கட்டமைத்தது. அப்பகுதி மக்களுக்கு உதவிகள் செய்யப் பல முன்முயற்சிகள் மேற்கொண்டார். தனது சேவையால் அவர் பெற்ற பரந்துபட்ட தொடர்புகளின், வலையமைப்பு பின்னர் புரட்சிக்கு ஆதரவும் நிதியும் திரட்டுவதற்கும், புரட்சிப் படைகள் வெற்றி பெறுவதற்கான ஏற்பாட்டு நடவடிக்கைகள் எடுப்பதற்கும் பெரிதும் உறுதுணையாக அமைந்தது.

புரட்சியில் சிலியா:

1952 மார்ச்சில் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அமெரிக்காவின் கைப்பாவையான சர்வாதிகாரி ஃபுல்கென்சியோ பாத்திஸ்டா இரண்டாம் முறை ஆட்சிக்கு வந்த போது சிலியாவும் இலட்சக்கணக்கான கியூபர்களைப் போல் சீற்றங்கொண்டார். வரம்பற்ற அதிகாரத்தால் பாத்திஸ்டா அந்தத் தீவையே ஊழலிலும், வன்முறையிலும் உழலச் செய்தார். கியூபாவின் பெரும் விடுதிகளிலும், சூதாட்ட அரங்குகளிலும் அமெரிக்கப் பெரும் செல்வந்தர்கள் விவசாயிகளின் குழந்தைகளைப் பாலியல் அடிமைகளாக்கித் துன்புறுத்தினர். மரியா ஓச்சோவா என்ற 10 வயதுக் குழந்தை பாலியல் அடிமையாக்கிக் கொல்லப்பட்டதில் சிலியா பெருங்கோபம் கொண்டார். ஆயுதப் போராட்டத்தின் மூலமே இந்தச் சர்வாதிகாரத்தைத் தூக்கியெறிய முடியும் என்றுணர்ந்தவராய் கெரில்லாவாகி சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

புரட்சியின் ஆரம்ப ஆண்டுகளில் ஃபிராங்க்பைஸுடன் இணைந்து பணியாற்றினார் சிலியா. ஃபிராங்க்பைஸுடன் இணைந்து புரட்சியின் போர்ப் படையை உருவாக்கினார். (ஃபிராங்க்பைஸ் கைது செய்யப்பட்ட போது அவரின் வேலைகளையும் சிலியா ஏற்றுக் கொண்டார்.)

மன்சானிலோவிலும், ஓரியண்டெ மாகாணத்திலும் ஜூலை 26 இயக்கத்தின் நிறுவனராக சிலியா தலைமைப் பொறுப்பேற்றார். ஜூலை 26 இயக்கத்தின் தலைமறைவுப் பிரிவின் தலைவராகவும் செயல்பட்டார். போராட்டக் குழுவில் தன்னார்வலர்களையும் புதியவர்களையும் சேர்ப்பதற்கும், பயிற்சியளிப்பதற்கும், தங்க வைப்பதற்குமான ஊக்குவிப்பு மையத்தை சிலியா நிறுவினார். கெரில்லாக் குழுவின் முக்கியத் தூதராகவும் பணியாற்றினார். தன்னார்வலர்களை புரட்சியில் இணைத்தார். புரட்சியின் முக்கியத் தொடர்பாளராக இருந்தார்.

1953 ஜூலை 26 காஸ்ட்ரோவின் தலைமையிலான கெரில்லாப் படை பாத்திஸ்டாவைக் கவிழ்க்க மேற்கொண்ட முதல் முயற்சியின் போது சாண்டியகோவில் மன்கடா படைகள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பாத்திஸ்டா படைகளால் தோற்கடிக்கப்பட்டு போராளிகள் சிறை வைக்கப்பட்டனர் 1955ல் விடுவிக்கப்பட்ட ஃபிடல் மெக்சிகோ சென்று ஃபாத்திஸ்டாவை வீழ்த்துவதற்கான போராட்டக் குழுவைக் கட்டமைத்தார். சே குவெராவைச் சந்தித்து அவரையும் இணைத்துக் கொண்டார்.

1956 நவ 25 அன்று மெக்ஸிகோவிலிருந்து 82 கொரில்லாப் போராளிகளும் நெருக்கியடித்துக் கொண்டு கிரான்மா என்ற சிறு படகில் கியூபாவிற்குப் பயணமாயினர். கிரான்மா படகு கியூபாவின் தென்மேற்குக் கடற்கரைப் பகுதியின் எந்த இடத்தில் கரையேற வேண்டும் என்பதைத். தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சிலியா ஏற்றார். போராளிகள் கரையேறிய பின் அவர்களைப் பாதுகாப்பாக சியரா மேஸ்ட்ரா மலைகளுக்கு கொண்டுசெல்லும் பொறுப்பும் சிலியாவுக்குத் தரப்பட்டது. அதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் சிலியா மேற்கொண்டார், அவர் தனது குழுவிற்குக் கடலோர வட்டாரத்தின் வரைபடங்களை வழங்கியிருந்தார். உணவுக்கும் பிற தேவைகளுக்கும் ஆவன செய்தார். மேலும் கெரில்லாப் போராளிகளுக்கு உள்ளூர் விவசாயிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும் வகையில் ஒரு தொடர்பு வலையமைப்பை நிறுவினார். அவர்களில் பெரும்பாலோர் பாத்திஸ்டாவுக்கு எதிரானவர்கள். ஆனால் பாத்திஸ்டா படையின் ஹெலிகாப்டர் மெக்ஸிகோவிலிருந்து கெரில்லாக்கள் வருவதைக் கண்டுபிடித்து விட்டது. அந்த நெரிசலான படகு மூழ்கியதால், லாரி, ஜீப்புடன் சிலியாவும், அவர்களைப் பாதுகாக்கக்கூடிய கெரில்லாக் குழுவும் காத்திருந்த இடத்திலிருந்து பதினைந்து மைல் தூரத்தில் சதுப்பு நிலத்தில் அவர்கள் இறங்க நேரிட்டது. பாத்திஸ்டா இராணுவம் அவர்கள் மீது திடீர்த் தாக்குதல் தொடுத்தது. அவர்களுடன் பல நாட்கள் போராடி 12 கெரில்லாக்கள் மட்டுமே சியரா மேஸ்ட்ரா மலைகளை அடைந்தனர். மற்ற கெரில்லாக்கள் பயணத்திலும், போராட்டத்திலும் உயிரிழந்தனர்.

சிலியா தன் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் போராளிகளுடன் ஒரு சிக்கலான தகவல் தொடர்பு வலையைப் பின்னியிருந்ததால் நகரங்களிலிருந்தும் பாத்திஸ்டாவின் வசமிருந்த பகுதிகளிலிருந்தும் மலைகளில் இருந்த கெரில்லாக்களுக்குத் தொடர்ந்து திறம்படத் தகவல் அனுப்ப முடிந்தது.

சியரா மேஸ்ட்ரா மலைகளில் இராணுவத் தளம் அமைப்பதற்கு சிலியா பெரிதும் உதவினார். சியரா மேஸ்ட்ரா மலைகளில் ஆயுதமேந்திய முதல் பெண் கெரில்லாவாக சிலியா போற்றப்படுகிறார். கியூப விவசாயிகள் மற்றும் நிலக்காரர்களின் போர்ப் படையை சிலியா உருவாக்கினார், கெரில்லாப் படைகளுக்கு ஆயுதங்களும் உணவும் மருத்துவப் பொருட்களும் வழங்கினார்.

.சிலியா. தன் அரசியல் அறிவால், புரட்சிகர வலிமையால் அமைப்பாக்கத் திறனால், தியாகத்தால், அர்ப்பணிப்பு உணர்வால் பிடலின் முழு நம்பிக்கைக்குரியவரானார்.

புரட்சிகர இராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் போது சிலியா பெரும் ஆபத்துகளைச் சந்தித்தார். போராட்டப் படையில் சிலியாவின் முக்கியத்துவத்தைத் தெரிந்து கொண்ட பாத்திஸ்டா அரசு அவரைப் பிடித்தால் இயக்கத்தை பலவீனப்படுத்தலாம் என்று நம்பியது. அவரைக் கைது செய்யப் பிடியாணை பிறப்பித்தது. 1957இல் பாத்திஸ்டா அரசால் தீவிரமாகத் தேடப்படும் பெண்ணாக சிலியா அறிவிக்கப்பட்டார். சமவெளியில் வேலை செய்வது மிகவும் அபாயகரம் ஆன போது சியரா மேஸ்ட்ரா மலைகளில் மற்ற கெரில்லாக்களுடன் இணைந்து செயல்பட்டார்.

லா பிளாடாவில் தலைமைப் பொறுப்பில் இருந்த போதும் போராளிகளுக்குத் தேவையான, உணவு, உடை, ஆயுதங்களை ஒருங்கமைத்துக் கண்காணித்தார், போரிலும் பங்கேற்றார். 1957 மே மாதம் உவெரொவில்தான் சிலியா முதன் முதலாக பாத்திஸ்டா படைகளுடன் நேரடியாகப் போரிட்டார். சியராவில் பாத்திஸ்டாவின் படைகள் நிறைய விவசாயிகளைக் குண்டு போட்டுக் கொன்றனர். கிராமங்களில் வீடுகளை எரித்தனர். சிலியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் குடும்பங்களைப் பாதுகாப்பதும் அவராற்றிய பணிகளில் ஒன்றாக இருந்தது. கிழக்கு கியூபா மற்றும் சியரா மேஸ்ட்ராவின் ஞானத்தாயாக சிலியா அழைக்கப்பட்டார்.

சிலியாவின் சட்டைப் பைகளும், கை மடிப்புகளும் எப்பொழுதுமே முக்கியமான ஆவணங்களால் நிறைந்திருந்தன. சிலியா சியாரோ மேஸ்ட்ராவில் இருந்த காலத்தில், புரட்சியின் போது பயன்படுத்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பாதுகாத்தார். ஆவணங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்தவராய் சிலியா, எல்லாக் காகிதங்களையும், அவை நாபாம் குண்டுகளால் சேதப்பட்டிருந்தாலும் கூட சேமித்தார். ஒவ்வொரு துண்டுச் சீட்டையும் பாதுகாத்தார், பட்டாம்பூச்சி பூக்களிலும் கூட சிறிய தந்திகளை இரகசியமாகப் பாதுகாத்திருந்தார்.

புரட்சியின் முக்கிய ஆவணங்களைப் பாதுகாத்து வரலாற்றுக் களஞ்சியமாகச் சேமித்தார். போராளியிடமும் விவசாயியிடமும் பெறும் ஒவ்வொரு துண்டுத் தாளும் அதிமுக்கியமானது என்று கருதினார் சிலியா. இவ்வாறு ஒவ்வொரு நிகழ்வுக்குமான வரலாற்று ஆவணங்களைச் சேமித்திருந்தார். இந்தப் பணியை உளமார்ந்த விருப்பத்துடன் செய்தார். இதைச் செய்வதற்கு அசாதாரணத் துணிச்சலும், திறமையும் வேண்டும், சற்று கவனக்குறைவாக இருந்திருந்தால் கூட அது பாத்திஸ்டா சர்வாதிகாரச் சக்திகளிடம் சிக்கி, புரட்சிக்கு முடிவு கட்டி, கெரில்லாக்களுக்கு மரண தண்டனை வாங்கிக் கொடுத்திருக்கும்.

புரட்சியின் கைதிகள் (பாத்திஸ்டாவின் ஆட்கள்) வீட்டிற்குக் கடிதம் எழுதிய போது, சிலியா தான் சில பெசோக்களைச் சேர்த்து அனுப்பினார். கெரில்லாக்கள் ஒரு விவசாயியின் வீட்டில் சாப்பிட்டுப் புறப்படும் போது சிலியா அந்தக் குடும்பத்திற்கு ஒருசில பெசோக்களைக் அமைதியாக விட்டு செல்வார். சிலியாவின் அறிவுக்கூர்மையும், நடைமுறைச் செயல்பாடுகளில் நிபுணத்துவமும் புரட்சிக்கு வலிமை சேர்த்தன.

1958ஆம் ஆண்டில், சியரா மேஸ்ட்ராவில், சிலியாவும், ஃபிடல் காஸ்ட்ரோவும் முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட மரியானா கிராஜல்ஸ் என்ற படைப்பிரிவை உருவாக்கினர். மரியானா கிராஜல்ஸ் போர்ப்படை ஆயுதமேந்திய பாத்திஸ்டா படையினரை எதிர்த்து தீரத்துடன் போராடியது,

1958 டிசம்பர் 28இல் சே குவெராவின் படைகள் சாண்டகிளாராவைக் கைப்பற்றின.
1959 ஜனவரி முதல் நாள் புரட்சி வெற்றி பெற்றது.
பாத்திஸ்டா சில மணி நேரத்துக்கு முன்பே தப்பி ஓடிவிட்டார். காஸ்ட்ரோவும் அவரது கிளர்ச்சிப் படையும் வெற்றிகரமாக ஹவானாவுக்குள் நுழைந்தன.

புரட்சிக்குப் பின்:

சிலியா கியூபப் புரட்சியின் வெற்றிக்குப் பிறகு ஃபிடல் காஸ்ட்ரோ ஆட்சிக்கு வந்ததிலிருந்து தன் இறுதிக் காலம் வரை புரட்சி அரசின் நிர்வாகத்தில் முக்கியப் பங்காற்றினார். 1959 முதல் 1980 வரை அதிபர் மற்றும் அமைச்சர்கள் குழுவின் செயலாளராகவும், கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) மத்தியக் குழு உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். தேசியச் சட்டமன்றத்திலும் இடம் பெற்றார். இறக்கும் வரை மாநில கவுன்சிலின் சேவைத் துறையில் பணியாற்றினார்

சிலியா கியூபாவின் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதில் முழுக் கவனம் செலுத்தினார். கியூபப் பொருளாதாரத்தையும் மேம்படுத்தவும் திட்டங்கள் வகுத்தார். சிலியாவின் செயல்பாடுகள் வரம்பிட முடியாத படி விரிந்தன. கியூபர்களின் வாழ்வை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களில் முனைப்புடன் செயல்பட்டார். காஸ்ட்ரோ எதிர்ப்பு ஊடுருவல்காரர்களின் குடும்பங்களுக்கு மறுகல்வி அளிப்பதற்கான எழுத்தறிவு இயக்கத்தை ஏற்படுத்தினார்(1963), கல்வியறிவுத் திட்டங்கள், அரசுப் பூங்காக்கள் அமைத்தல், கோஹிபா சிகார் சுருட்டு வர்த்தகத்தை மேம்படுத்தல், கியூபர்களுக்கு ஐஸ்கிரிம் கிடைக்கச் செய்வதிலிருந்து அனைத்தையும் தன் பொறுப்பில் நடைமுறைப்படுத்தினார், ஒரு புதிய, சோசலிச சமுதாயத்தை உருவாக்க சிலியா தன்னை முழுமையாக ஒப்புக் கொடுத்தார்.

கியூபப் புரட்சியின் அதிகாரப்பூர்வக் காப்பகங்களை சிலியா கட்டமைத்தார். போர்களுக்கு முன்னும் பின்னும் கையால் எழுதப்பட்ட செய்திகள் உட்பட, புரட்சியின் பல்வேறு ஆவணங்கள், கடிதங்கள் மற்றும் குறிப்புகளை வருங்கால சந்ததியினருக்காகப் பாதுகாத்து வைத்தார். இவற்றை 1964ஆம் ஆண்டில் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கான ஓர் அமைப்பாக்கினார். கெரில்லா வீரர்களின் நேர்காணல்கள், கடிதங்கள், எழுத்துகள், புகைப்படங்கள் ஆகிய அனைத்தும் அதில் இடம்பெற்றுள்ளன. முதன்மையான ஆதாரங்களின் இந்தத் தொகுப்பு கியூபப் புரட்சி பற்றிய நாட்டின் அதிகாரப்பூர்வக் காப்பகமாக செயல்படுகிறது.. கியூப மக்களால், இந்தக் காப்பகம் எல் ஃபோண்டோ டி சிலியா என்று அழைக்கப்படுகிறது.

சிலியா புறநகர் ஹவானாவில் விரிவான லெனின் பூங்கா வளாகத்தை வடிவமைக்க உதவியதுடன், அருங்காட்சியகங்களையும் வரலாற்று ஆர்வமுள்ள இடங்களையும் ஒழுங்கமைக்க உதவினார். புரட்சி வரலாற்றின் பெரும்பகுதி வழக்கமாக எழுதப்படும் நூல்களில் இல்லை என்பதை உணர்ந்து அவர், போராட்டத்தின் நினைவுகளைப் பாதுகாக்க ஒரு விரிவான வாய்வழி வரலாற்று திட்டத்தை ஒழுங்கு செய்தார். புரட்சிக்குப் பிந்தைய கியூபாவின் வரலாற்றை அறிவியல் நோக்குடன் பதிவுசெய்வதில் முன்னோடியாக விளங்கினார்.

1980இல் இறக்கும் வரை அவர் தொடர்ந்து புரட்சிக்காகப் பணியாற்றினார். பெண்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் மே திட்டங்களுக்கும், ஹவானாவில் கொப்பெலியா ஐஸ்கிரீம் பார்லருக்கும் செலியா நன்கு பரிச்சயமானவர். ஏழைப் பெண்களின் பிரச்சினைகளைக் கேட்க அவர் எப்போதும் நேரம் ஒதுக்குவார். புரட்சியை ஆதரித்த இலட்சக்கணக்கான கியூபர்களுக்குப் புரட்சியின் மனிதநேய முகமாக சிலியா திகழ்ந்தார். குறிப்பாக அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டாலோ, ஏதேனும் குறை நேர்ந்தாலோ, அல்லது அநீதி தீர்க்கப்படாமல் இருந்தாலோ அவர்களை, அரவணைத்து ஆதரவாகச் செயல்பட்டார். எண்ணற்ற தருணங்களில், ஒரு தனிநபருக்கோ, ஒரு குடும்பத்துக்கோ, அல்லது ஒரு கிராமத்துக்கோ ஏற்பட்ட பிரச்சினையை உடனடியாக சரிசெய்வதற்கு சிவப்பு நாடா நடைமுறைகளை வெட்ட அவரால் முடிந்தது. காலங்கள் சென்ற போதும், புரட்சி நிர்வாகத்தை இறுகிப் போகாமல் தன் பேரன்பினால் நெகிழ்வுடன் வைக்க சிலியாவால் முடிந்தது. சியரா மேஸ்ட்ரா மலைகளில் போரிட்ட போது கொண்ட அதே இலட்சியங்களோடும் கொள்கை உறுதியோடும் அவர் இறுதி வரை செயல்பட்டார்.

சிலியா எந்தப் பணியிலும் உயர்வு தாழ்வு கருதவில்லை. இயல்பிலே கூச்ச சுபாவம் உள்ளவரான சிலியா தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் தன்மையற்றவராக இருந்தார். உயிருள்ள வரை தனிப்பட்ட கவனத்துக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொண்டார். தன்னை மெச்சிப் போற்றப் பரப்பப்படும் புனைவுகளைக் குறைக்க தினந்தோறும் தான் முயற்சிப்பதாகவும், பாராட்டுவது தன்னை சங்கடப் படுத்துவதாகவும், ஹைடி, டெடெ ஆகியோரே தம் நாயகிகள் என்றும் தோழி நொரா பீட்டர்ஸுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிடுகிறார். இருப்பினும் கியூப மக்களால் என்றென்றும் அவர் புரட்சியின் நாயகியாகப் போற்றப்படுகிறார். அனைவரையும் சமமாகக் கருதிய சிலியாவிற்கு தன் சக தோழர்களின் பணிகளைக் காட்டிலும் தன் பணிகள் எந்த விதத்திலும் தனிச்சிறப்பிற்கும், பாராட்டுக்கும் உரியதாகத் தெரியவில்லை. சியரா மேஸ்டிரோவில் தான் போராடிய நாட்களையே தன் வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நாட்களாக சிலியா பின்னர் நினைவுகூர்கிறார்.

1978இல் சிலியா நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. அதன் பிறகு நொரா பீட்டர்ஸுக்கு எழுதிய கடிதத்தில் தான் புற்றுநோய் குறித்துக் கவலைப்படவில்லை என்றும் தன்னால் முடிந்ததனைத்தையும் கியூபாவுக்குச் செய்ததால், கியூபாவில் தான் ஏற்படுத்திய தாக்கத்தால் அமைதியடைந்திருப்பதாகவும் எழுதியுள்ளார்.

1980 ஜனவரி 11இல் நுரையீரல் புற்றுநோயினால் சிலியா 59 வயதில் இறந்த போது கியூப மக்கள் துயரத்தில் ஆழ்ந்தனர். சிலியா சஞ்செஸ் மரணித்த பிறகு, பிடல் காஸ்ட்ரோ ஒரு மருத்துவமனையை செலியா சஞ்செஸுக்கு அர்ப்பணித்தார்,

“ஒரு கணம் கூட ஓய்வெடுக்காமல், ஒரு விவரத்தைக் கூட மறக்காமல் கடமைக்காகத் தன்னை அர்ப்பணித்த ஒருவருக்குச் செலுத்த வேண்டிய சிறந்த அஞ்சலி இது என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்; புரட்சிக்காகத் தன்னுயிர் தந்த ஒரு தோழருக்குக் கொடுக்கக்கூடிய மனம்நிறைந்த, ஆழ்ந்த, புரட்சிகர மரியாதை இது என்று நான் உண்மையாக நம்புகிறேன்.” இது ஃபிடல் காஸ்ட்ரோவின் புகழஞ்சலி.

கியூபப் புரட்சியின் நினைவுச் சின்னமாகப் போற்றப்படும்.சிலியா சஞ்செஸின் நினைவுக் கல்லறை லெனின் பூங்கா வளாகத்தில் உள்ளது. மான்சாலிலோவிலும் சிலியாவின் நினைவரங்கம் உள்ளது. இன்று எண்ணற்ற மருத்துவமனைகளும் பள்ளிகளும் அவரது பெயரில் செயல்படுகின்றன. 1985, 1990இல், அவரது நினைவாக 5 சென்டாவோ தபால் தலைகள் வெளியிடப்பட்டன. 1990இல் அவரை நினைவுகூரும் விதமாக 1 பெசோ மற்றும் 5 பெசோ நினைவு நாணயங்களும் வெளியிடப்பட்டன. சிலியாவின் முகம் கியூப பெசோ பணத் தாள்களிலும் அச்சிடப்பட்டுள்ளது.

சிறந்த அமைப்பாக்கும் திறனோடும், வரலாற்றுப் பார்வையோடும் எப்பொழுதும் துடிப்புடன் முன்வரிசையில் செயல்பட அணியமாயிருந்த சிலியாவின் போராட்ட வாழ்வும், அரசியல் செயல்பாடுகளும் என்றென்றும் நம்மை உத்வேகப்படுத்தி, புது நம்பிக்கையூட்டி வழிகாட்டட்டும். அர்ப்பணிப்பும், சாவஞ்சாத் துணிவும், சமூக மாற்றத்தில் தீராத விருப்பமும் கொண்ட புரட்சியாளர் சிலியாவை நம் சொல்லிலும், செயலிலும் என்றென்றும் போற்றிடுவோம்.

Pin It