குயூபாவின் ஹவானாவில் படிப்பை முடித்த பின்னர் காஸ்ட்ரோ வழக்கறிஞராக ஹவானாவில் பணியாற்றத் துவங்கினார். வழக்குகளுக்கான கூலியை கொடுக்க முடியாத ஏழைகளுக்கு வழக்கறிஞராக பணியாற்றியதால் காஸ்ட்ரோவுக்கு அடிக்கடி பணப்பற்றாக்குறை ஏற்பட்டது. ஏழைகள் படுகிற அவலங்களை வழக்குகளுக்காக வருபவர்களிடமிருந்து நேரடியாக தெரிந்து கொள்ள முடிந்தது. ஒரு சிலருக்கு மட்டுமே பயன்படுகிற விதத்தில் நாட்டின் திட்டங்களும், அரசும் செயல்படுவதை காஸ்ட்ரோ புரிந்துகொண்டார்.

Fidel Castroகுயூபாவில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை பற்றிய அறிவை காஸ்ட்ரோவுக்கு வழக்கறிஞரான அனுபவம் வழங்கியது. எல்லா குயூபா மக்களையும் போல அமெரிக்க வர்த்தகர்களின் பொருளாதார ஆதிக்கத்தையும் அதன் விளைவாக குயூபா அடிமையாவதையும் கண்ட காஸ்ட்ரோ வேதனையடைந்தார். இந்த அனுபவங்கள் காஸ்ட்ரோவை அரசியல் அரங்கில் அடியெடுக்க வைத்தது. அரசியல் பார்வை விரியப்பெற்ற காஸ்ட்ரோவுக்கு மக்களுக்காக பணிசெய்ய தூண்டிய அரசியல் தேடலில் குயூபா மக்கள் கட்சியின் செயல்பாடு அதிகமாக பிடித்தது.

1947 ல் குயூபா மக்கள் கட்சியில் இணைந்தார் காஸ்ட்ரோ. ஊழல், அநீதி, வறுமை, வேலையின்மை மற்றும் குறைந்த கூலிக்கு எதிராக குயூபா மக்கள் கட்சியினர் போராடி வந்தது காஸ்ட்ரோவை அதிகமாக கட்சிப் பணியில் ஈடுபடவைத்தது. அரசில் பங்காற்றிய அமைச்சர்கள் லஞ்சம் வாங்கி அமெரிக்க வர்த்தக நிறுவனங்களுக்கு குயூபாவை அடிமையாக்குவதாக குயூபா மக்கள் கட்சி குற்றம் சாட்டியது. குயூபா மக்கள் கட்சியில் காஸ்ட்ரோவின் ஈடுபாடு அவரை மேலும் கட்சியின் பொறுப்புகளில் வளர்த்தெடுத்தது. மிக அருமையான பேச்சாளரான காஸ்ட்ரோவுக்கு இளைஞர்களை கவர்வது எளிதான விடயாமாக இருந்தது. காஸ்ட்ரோவால் கவரப்பட்ட இளையோர் குயூபா மக்கள் கட்சியில் அதிகமான எண்ணிக்கையில் இணைந்தனர்.

1952ல் குயூபாவில் அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் இளம் வயது காஸ்ட்ரோ வேட்பாளராக போட்டியிட்டார். குயூபா மக்கள் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே மிகவும் வலுவாக இருந்தது. தேர்தலில் குயூபா மக்கள் கட்சி வெற்றி பெற இருந்த சூழலில் தேர்தலை நடத்த விடாமல் பாடிஸ்டா இராணுவத்தின் துணையுடன் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்றினார். இதன் விளைவு குயூபாவின் வரலாற்றை மாற்ற வைத்தது.

******

அர்ஜெண்டினாவில் 4, ஜனவரி 1952ல் புத்தாண்டு கொண்டாட்டம் ஓய்ந்த அந்த வேளை புயனெஸ் எயர்ஸ்லிருந்து ல பேதரோஸ் என்ற 500 சி.சி நார்ட்டன் வகை மோட்டார் வாகனத்தில் ஏர்னெஸ்டோவும் அவரது நண்பர் ஆல்பர்டோ கிரனேடோவும் நீண்ட பயணத்தை துவங்கினர். பயணத்திற்கு முன்னர் நண்பர்களும் குடும்பத்தினரும் கலந்து கொண்ட விருந்து நடந்தது. பயணம் புறப்பட்ட வேளையில் ஏர்னெஸ்டோவின் அன்னையார் சிசிலி அரவணைத்து தழுவி விடை கொடுத்தார். தாயும் மகனும் பிரியும் வேளை பாசத்தின் வெளிப்பாடாய் இருவரின் கண்களின் ஓரமாய் ஈரம் கசிந்த கண்ணீர். விடை பெற்று வீறிட்டுக் கிளம்பி காட்சியிலிருந்து மறையும் புள்ளியான வண்டியை பார்க்கையில் ஏர்னெஸ்டோவின் தாயார் மனதில் பல விதமான எண்ணங்கள். எப்போதும் அருகே வைத்து கவனமாக தன்னம்பிக்கையுடன் வளர்க்கப்பட்ட ஏர்னெஸ்டோ தொலைதூர பயணம் செல்கையில் தான் தெரிந்தது; அருகே இருந்த வேளைகளில் அன்னைக்கு ஆதரவாக இருந்த நேரங்களின் அருமை. பிரிவில் தானே சேர்ந்திருந்த வேளைகளின் சிறப்பு தெரியும், இது தானே மானிட வாழ்வின் எதார்த்தம்.

ஏர்னெஸ்டோவைப் போல ஆல்பர்டோவும் வாலிபத்தின் வேகமும், தேடலும் நிறைந்தவர். தென் அமெரிக்காவின் சிலி, பெரு, கொலம்பியா, வெனெசுவேலா நாடுகளுக்கும் அதன் பின்னர் வட அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்தனர். ஏர்னெஸ்டோ கல்லூரியிலிருந்து ஒரு வருடம் விடுமுறை பெற்றிருந்தார். முறையான திட்டமிடல் இல்லாமல், மிகவும் குறுகிய தகவல்களுடன் பயணம் துவங்கியது.

Che Guevaraஏர்னெஸ்டோவும் ஆல்பர்டோவும் பயணம் செய்த மோட்டார் வண்டி வேகமாக மனிதர்கள், மரங்கள், புல்வெளிகள், அழுத்தமான காற்று என காற்றில் பறக்கும் புரவியாக புயனெஸ் ஏர்ஸ் கடந்து சென்றது. காட்சிகளுக்கு ஏற்ப கவிதை, சிந்தனை என ஏர்னெஸ்டோவின் மனம் சிறகடித்தது. அட்லாண்டிக் கடற்கரையோரமாக வண்டி காற்றை துளைத்து இதமாக சென்ற வேளை, ஏனெஸ்டோவின் மனதை இயற்கை அழகை அள்ளி தனக்குள் மறைத்து வைத்திருக்கும் பெரும் சமுத்திரம் பல விதமான எண்ணங்களை மீட்டியது.

ஏர்னெஸ்டோவுக்கு ஒரு காதலி இருந்தார். அவர் பெயர் சிசினா. சிசினா மீது அளவு கடந்த காதல் கொண்டிருந்தார் ஏர்னெஸ்டோ. சிசினா விடுமுறையில் தனது பெற்றோருடன் கழிக்க சென்றிருந்தார். பயணம் போகிற பாதையில் சிசினாவை பார்த்து 2 நாட்கள் செலவிட்டு செல்ல திட்டமிட்டிருந்தனர். சிசினாவுக்கு நாய்க்குட்டி என்றால் நல்ல விருப்பம் ஆகவே மனம் கவர்ந்த காதலிக்கு பரிசளிக்க ஒரு நாய்க்குட்டியையும் தன்னோடு எடுத்து சென்றார் ஏர்னெஸ்டோ.

நீண்ட பயணங்களுக்கிடையே இளைப்பாறிய பின்னர் 1200 கிலோமீட்டர் தொலைவு கடந்த பின்னர் மார் டெல் பிலாட்டாவிலுள்ள, தனது மாமாவின் கெசெல் வில்லா என்கிற வீட்டில் இளைப்பாறினார்கள். சுவையான உணவுடன் போதிய ஓய்வும் பயணத்தின் களைப்பை போக்கிய பின்னர் பயணம் மீண்டும் தொடர்ந்தது. அவர்கள் சென்ற மோட்டார் வண்டியும் பொருட்களுமாக சற்று கனமாக இருந்ததால் மேடு பள்ளங்களில் செல்லுகிற வேளைகளில் மோட்டார் வாகனத்தின் திசையை கட்டுப்படுத்துவது இருவருக்கும் எளிதாக இல்லை.

ஏர்னெஸ்டோவின் காதலி சிசினா தங்கியிருந்த வீட்டை அடைந்த போது மீண்டும் புன்னகை தவழ இருவருக்கும் இனிய நேரங்கள் கிடைத்தன. ஆடலும், அரவணைப்பும், விருந்தும் கலகலப்பும் என 2 நாட்கள் தங்கிச் செல்ல திட்டமிட்டது 7 நாட்களாக நீண்டது. காதலியுடன் செலவிட்ட நேரங்களில் ஏர்னெஸ்டோ சந்தோசமடைந்தார். விடைபெறும் வேளையில் ஏக்கமும், வலியும் இரு காதலர்களின் கண்களை மட்டுமல்ல இதயங்களையும் தான் ஈரமாக்கியது. பயணமா? காதலா? என்ற மனப்போராட்டத்தில் பயணம் தொடர்ந்தது.

(வரலாறு வளரும்)

-திரு