Hindi Impositionஐயமே வேண்டாம், இந்தித் திணிப்பை எதிர்ப்பதைத்தான் இந்தியை எதிர்ப்பது என்று சொல்கிறோம். நம் தலையில் ஏறி உட்கார்ந்து நம்மை ஆள நினைக்காத எந்த மொழியையும் எதிர்க்க வேண்டிய தேவை நமக்கில்லை அல்லவா?

சரி, இந்தியை எதிர்ப்பது இந்தி எதிர்ப்பாளர்களாகத் தம்மைக் காட்டிக் கொள்கிறவர்களால் எப்படிப் புரிந்து கொள்ளப்படுகிறது? இந்திய அரசின் தேசியக் கல்விக் கொள்கை-2020 என்பதைத் தமிழ்நாட்டரசு எதிர்ப்பதாக முதலமைச்சர் சொல்கிறார். ஏனென்றால் மும்மொழிக் கொள்கையை ஒருபோதும் ஏற்க மாட்டோம் என்கிறார்.

அதாவது கல்வி நிலையங்களில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளோடு மூன்றாவது மொழியாக இந்தியும் கற்றுத் தரப்படுவதைத்தான் இந்தித் திணிப்பு என்று முதல்வர் புரிந்து கொள்கிறார். அவர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை எதிர்ப்பது என்றால் இந்தி படிப்பதை எதிர்ப்பது என்றுதான் பலரும் புரிந்து கொண்டுள்ளனர்.

மறுபுறம், இந்திக்கு ஆதரவானவர்களும் இந்தியைப் படித்தால் என்ன? என்றுதான் நயமாகக் கேட்கிறார்கள். ஆக இந்தி எதிர்ப்பு என்பதும் இந்தி ஆதரவு என்பதும் இந்தி மொழியைக் கற்பது பற்றிய விவாதமாகச் சுருங்கிக் கிடக்கிறது.

உண்மையில் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பும் அதற்கு எதிரான போராட்டமும் வரலாற்று வழியில் தொடங்கியது இந்தி கற்பது தொடர்பான சிக்கலை மையப்படுத்திதான். 1938ஆம் ஆண்டு இராஜகோபாலாச்சாரி தலைமையிலான சென்னை மாகாண அரசாங்கம் இந்திக் கல்வியை நுழைத்த போது அதற்கு எதிராகத் தமிழறிஞர்களும் தந்தை பெரியார் தலைமையிலான சுய மரியாதை இயக்கத்தாரும் நடத்திய போராட்டம்தான் முதல் மொழிப் போர் என்று போற்றப்படுகிறது.

இந்த மொழிப் போராட்டத்தின் உச்சத்தில்தான் 1939 செப்டெம்பர் 11ஆம் நாள் தந்தை பெரியாரும் மறைமலையடிகள், சோமசுந்தர பாரதியார் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களும் “தமிழ்நாடு தமிழருக்கே!” என்று முழக்கம் தந்தனர். இதன் பொருள் என்ன? மொழிப் போராட்டம் என்பது வெறும் பயில்மொழி (பாட மொழி) தொடர்பானது மட்டுமல்ல, அது மொத்தத்தில் மொழி தொடர்பானது மட்டுமல்ல. இறுதி நோக்கில் அது இனம் தொடர்பானது, தமிழ்க் காப்பு என்பதன் சாறம் தமிழின மீட்பு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எளிமையாகச் சொன்னால் இந்தித் திணிப்பை எதிர்த்துத் தமிழ்த் தேசிய இனத்தைக் காக்க வேண்டுமானால் தமிழ்த் தேசிய இறைமையை மீட்க வேண்டும்.

இரண்டாம் மொழிப் போர் என்று போற்றப்படும் 1965ஆம் ஆண்டின் மாணவர்-மக்கள் எழுச்சி இந்தி ஆட்சிமொழி ஆவது தொடர்பானதே தவிர இந்தி படிப்பது தொடர்பானதன்று. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 17ஆம் பகுதியில் உறுப்பு 343 இந்தியை இந்தியாவின் அலுவல் மொழி ஆக்குகிறது. அலுவல் மொழி ஆவதாலேயே இந்தி ஆட்சி மொழியும் ஆகி விடுகிறது.

இந்தச் சட்டபிரிவை எரிக்கும் போராட்டத்தை திமுக நடத்தியது, மாணவர் தலைவர்களும் அவ்வாறே செய்தனர். போராட்டம் நடைபெற்ற ஐம்பது நாளும் அரசின் கொடிய அடக்குமுறைக்குப் பலியாகி நூற்றுக்கணக்கானோர் மண்ணில் சாய்ந்த பொழுதுகளில் இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்றுதான் மாணவர்களும் மக்களும் முழங்கினார்கள்.

மொழியின் அதிகாரம் என்பது வெறும் மொழியின் அதிகாரம் மட்டுமன்று. மொழி ஒடுக்குமுறை என்பது வெறும் மொழி ஒடுக்குமுறை மட்டுமன்று, அது ஓர் இனத்தின் மீதான தேசிய ஒடுக்குமுறை ஆகும். இந்தியை அரியணை ஏற்றுவதற்கு எதிரான போராட்டம் என்பது இந்தியப் பேரரசின் தேசிய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமும், புறநிலையில் தமிழ்த் தேசிய இறைமை மீட்புக்கான போராட்டமும் ஆகும்.

இந்தியை ஏன் எதிர்க்க வேண்டும்? என்பதற்கு தமிழ்நாட்டின் முதல் இரு மொழிப் போர்களும் தந்த இந்த வரலாற்றுப் பாடத்தைக் கற்றுக் கொண்டோமா? நினைவிலாவது கொண்டோமா? மொழிப் போராட்டத்தின் அலைவிளிம்பில் ஏறி 1967 பொதுத் தேர்தலில் காங்கிரசையும் காமராசரையும் தோற்கடித்து ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக தலைவர் அறிஞர் அண்ணா கல்விக் கூடங்களில் இந்திப் பயில்மொழியை நீக்கினார், அதனைத் தன் ஆட்சியின் வெற்றியடைவுகளில் ஒன்றாகவும் கருதிக் கொண்டார்.

ஆனால் இந்திய அரசமைப்பின் 17ஆவது பகுதியை நீக்கவோ திருத்தவோ அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்தியையே ஆட்சிமொழியாக உறுதி செய்து ஆங்கிலம் துணை ஆட்சிமொழி என்ற தூண்டில் புழுவை வீசிய சவகர்லால் நேருவின் மோசடியான உறுதிமொழியை வலியுறுத்துவதோடு அண்ணா நின்று கொண்டார்.

1967 தொடங்கி இது வரை தமிழ்நாட்டை ’ஆள்வது’ திராவிடக் கட்சிகளே! இந்திய நடுவணரசிலும் அவை மாறி மாறிப் பங்கு வகித்துள்ளன. ஆனால் அரசமைப்புச் சட்டத்தின் இந்தித் திணிப்பு விதிகளை மாற்றவோ தளர்த்தவோ தணிக்கவோ அவை துரும்பையும் கிள்ளிப்போடவில்லை. இந்தித் திணிப்பு என்ற அடிப்படைச் சிக்கலை வெறும் இந்திப் படிப்புச் சிக்கலாகச் சுருக்கி மும்மொழி இருமொழி என்று பசப்பித் தமிழினத்தின் அடிமைநிலையை மறைக்கத்தான் இந்தக் கட்சிகள் பாடுபடுகின்றன.

எதிர்க் கோணத்திலிருந்து அணுகிப் பார்த்தால், இந்தியாவை ஆள்வோர் மும்மொழிக் கொள்கை என்கிறார்களே, அது என்ன? இனி இந்தியாவின் ஆட்சிமொழிகளாக மூன்று மொழிகள் இடம்பெறுமா? அதற்கேற்ப அரசமைப்புச் சட்டம் திருத்தப்படுமா? இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்பது ஒற்றை மொழிக் கொள்கை அல்லவா? ஆங்கிலத்தைத் துணைக்கு வைத்துக் கொண்டால் கூட இருமொழிக் கொள்கைதானே?

உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களிலும் ஆங்கிலம் மட்டும்தான் ஆட்சிமொழி என்று இந்திய அரசமைப்புச் சட்டம் சொல்கிறது. இனி ஆங்கிலத்தோடு இன்னும் இரு மொழிகளைச் சேர்த்து உயர் நீதித்துறையில் மும்மொழிக் கொள்கை கடைப்பிடிக்கப்படுமா? கல்வி மொழியையே எடுத்துக் கொண்டால், இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கழகம் (ஐஐஎம்). அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) போன்ற கல்விக் கழகங்களில் ஆங்கிலம் மட்டுமே பயிற்று மொழி என்ற நிலை ஒழிக்கப்பட்டு மூன்று பயிற்றுமொழிகள் அறிமுகம் செய்யப்படுமா? தொடக்கக் கல்வியில் தாய்மொழிக் கல்வி, அதுவும் இயன்றவிடத்தே என்பதுதான் தேசியக் கல்விக் கொள்கை – 2020.

எப்படிப் பார்த்தாலும் மும்மொழிக் கொள்கை என்பது ஒரு மோசடியே. ஏற்கெனவே கல்வித் துறையில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஆங்கிலத் திணிப்பை உறுதி செய்து, இந்தியையும் வருணதர்மப் பண்பாட்டின் கருவியான சமற்கிருதத்தையும் திணிப்பதுதான் மும்மொழிக் கொள்கையின் நோக்கம். தாய்மொழியை ஓரங்கட்டுவதன் மூலம் அதனை மட்டுமே நம்பியிருக்கும் உழைக்கும் மக்களை, ஒடுக்குண்ட மக்களை ஓரங்கட்டுவதுதான் மும்மொழிக் கொள்கையின் நிகர விளைவாக இருக்கும். இருமொழிக் கொள்கை ஏற்கெனவே இதைத்தான் செய்து கொண்டிருக்கிறது, மும்மொழிக் கொள்கை இன்னும் கூட முனைப்பாக இதையே செய்யும்.

ஒரு பேரம் பேசப்படுகிறது. தமிழர்கள் இந்தி படித்தால் வடவர்கள் தமிழ் அல்லது வேறொரு மொழி படிப்பார்களாம். தமிழர்களிடையே இந்தி படிக்கும் ஆர்வம் எழக் காரணம் உண்டு. ஏனென்றால் இந்தி இந்நாட்டின் ஆட்சிமொழி. ஆனால் இந்திக்காரர்கள் தமிழ் கற்க இப்படியொரு தூண்டுதல் இல்லை. ஏனென்றால் தமிழ் இந்தியாவின் ஆட்சிமொழியன்று.

தமிழ்நாட்டிலே கூட முழுமையான ஆட்சிமொழியன்று. இந்தியோ ஆங்கிலமோ படிக்க ஏற்படும் தூண்டுதல் தமிழ் படிக்க ஏற்படாது. சாஸ்திரி பவனில் மட்டுமல்ல, புனித ஜார்ஜ் கோட்டையிலும் கூட தமிழ் தெரியாமலே குப்பை கொட்ட முடியும் என்னும் போது தமிழரல்லாதவர் தமிழ் படிக்க வேண்டிய தேவை எழாது. தமிழர்களுக்கே கூட அந்தத் தேவை தேய்ந்து போய்க் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

கல்வித் துறையில் தொடக்க நிலையில் தமிழை ஒரு பயில்மொழியாகக் கொண்டாலே போதும் என்கிற அவலநிலைக்கு நாம் தள்ளி விடப்பட்டுள்ளோம். தமிழே தமிழ்நாட்டின் கல்வி மொழியாக இருக்க வேண்டும், அதுவே அனைத்து நிலைகளிலும் அனைத்து வகைப் படிப்புகளுக்கும் பயிற்றுமொழியாகவும் முதல் பயில்மொழியாகவும் இருக்க வேண்டும் என்ற குறிக்கோள் மெய்ப்படப் பெருந்தடையாக இருப்பது தமிழர்கள் மீதான தேசிய ஒடுக்குமுறையே.

இது எவ்வாறு சமூகநீதிக்கு வேட்டு வைக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள அண்மைய சான்று ஒன்றைக் காண்போம். மருத்துவக் கல்வியில் அனைத்திந்தியப் பங்கீடு (All India Quota) ஒன்றை உச்ச நீதிமன்றம் ஏற்படுத்தியது; அதில் பட்டியலின மக்களுக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படாதது தெரியவந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்காடினோம். தமிழ்நாட்டில் தமிழ்வழியில் மட்டுமே மருத்துவக் கல்வி பெற முடியும் என்ற நிலை இருந்திருக்குமானால் அனைத்திந்தியப் பங்கீடு என்ற ஒன்றே வந்திருக்காது அல்லவா? ஆங்கிலவழிக் கல்வியால் பறிபோனது தமிழ் நலன் மட்டுமன்று, சமூக நீதியும்தான்.

இந்தி தமிழ்நாட்டிலும் கூட நாடப்படுவதற்கு அடிப்படை அது ஆளும் மொழியாக இருப்பதே. தமிழ் தமிழ்நாட்டிலேயே கூட நாடப்படாமைக்கு அடிப்படை அது ஆளும் மொழியாக இல்லை என்பதுதான். எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கம் மெய்ப்பட வேண்டுமானால் தமிழ்நாட்டில் தமிழ்நாட்டரசு மட்டுமல்ல, இந்திய அரசும் தமிழில் இயங்கும் நிலை வேண்டும்.

கீழமை, மேலமை நீதிமன்றங்களில் மட்டுமல்ல, உச்ச நீதிமன்றம் வரை எல்லா நிலைகளிலும் தமிழ் நீதிமொழியாக வேண்டும், கல்வியில் ஆங்கிலமோ இந்தியோ ஆட்சி செய்யாமல் தமிழே ஆட்சி செய்ய வேண்டும். நம் தேவைக்கு ஏற்ப அயல்மொழியை இரண்டாம் பயில்மொழியாகக் கற்கலாம்.

என் மொழியே என்னை ஆளட்டும் என்பது யாருக்கேனும் கலக்கம் தருமானால் அவர்கள் எனக்கே தெரியாமல் என் தலையில் ஏறி அமர்ந்திருப்பவர்களாகத்தான் இருக்க வேண்டும். அவர்களை இறங்கச் சொல்வோம், இறங்க மறுத்தால் இறக்கி விட்டு மறு வேலை பார்ப்போம்.

இந்தியை எதிர்ப்பது, இந்தித் திணிப்பை எதிர்ப்பது ஒரு மொழியைப் படிப்பதற்கான எதிர்ப்பன்று. அது நம் தேசிய இனத்தை அடக்கியாளும் வல்லாளுமையை எதிர்ப்பதாகும். பறிபோன நம் தேசிய இறைமையை மீட்கப் போராடுவதாகும்.

- தியாகு

Pin It