[1939-1949 காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் ஏற்பட்ட நிகழ்ச்சிப்போக்குகள் குறித்து விரிவான ஆய்வுகள் மேற்கொண்ட சோவியத்து இந்தியவியலர்களில் முதன்மையானவர் ஏ.எம். தியாக்கோவ். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் 1952இல் சோவியத்து (குமுகியக் குடியரசுகள்) ஒன்றியத்தின் (USSR) கீழையியல் ஆய்வுக் கழகத்தால் வெளியிடப்பட்டன. இவற்றில் ஒன்றுதான் ”இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் தேசிய இனச் சிக்கல் பற்றி” தியாக்கோவ் எழுதிய கட்டுரை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலத்தில் இந்தியாவின் தேசிய இனச் சிக்கல் குறித்து அவர் செய்த முகன்மையான ஆய்வின் முடிவுகள் இந்தக் கட்டுரையில் இடம்பெறுகின்றன. தியாக்கோவின் கருத்துரைகளை இந்தியப் பொதுமை இயக்கம் பொருட்படுத்தாமல் விட்டு விட்டது. இப்போதும் கூட இந்தியத் துணைக்கண்டத்தில் தேசிய இனச்சிக்கலைப் புரிந்து கொள்ள தியாக்கோவின் பார்வைகள் துணை செய்யக் கூடியவை என்பதால் அவரது கட்டுரையை இங்கு தமிழாக்கம் செய்து வெளியிடுகிறோம். இந்தக் கட்டுரையின் முதல் பகுதியை 2021 நவம்பர் இதழில் வெளியிட்டோம். இதோ அதன் தொடர்ச்சி:]

இந்திய அரசமைப்புப் பேரவை பழைய காங்கிரசு வேலைத்திட்டத்தை மறுதலித்ததோடு நில்லாமல், அமெரிக்க அரசமைப்பை இந்திய அரசமைப்புக்கு உருக்காட்டாக (மாடல்) ஏற்று, குடியரசுத் தலைவருக்குச் சிறப்பதிகாரங்களும் மாநில ஆளுநர்களை நீக்கும் உரிமையும் வழங்கியது, இவ்வாறு இந்திய மாநிலங்களின் தன்னாட்சியை ஒன்றுமில்லாமற் செய்தது.

இந்தியப் பெருநிறுவனங்களும், முற்றுரிமைக் குழுமங்களும் வங்கிகளும் முகமையாக குசராத்தி, மார்வாரி மூலமுதலுக்குச் சொந்தமானவை, இந்தியப் பெருமுதலாளர்கள் தேசிய இன வகையில் குசராத்திகளும் மார்வாரிகளும் ஆவர் என்ற உண்மையை வைத்து, இந்தக் கூறுகள் குசராத்தி, மார்வாரி தேசியத்தின் ஏந்திகள் என்ற முடிவுக்கு வந்து விடலாகாது. மாறாக, இவர்களுக்கு குசராத்திகள், மார்வாரிகளின் தேசிய நலனில் அக்கறை இல்லை. 1917ஆம் ஆண்டிலேயே, குசராத்திய முதலாளர்கள், அறிவாளர்கள், நிலக்கிழார்கள் ஆகியாரின் பேராளர்கள் கலந்து கொண்ட குசராத் கல்வி மாநாட்டில் உரையாற்றிய காந்தியார் குசராத்தின் தேசியப் பண்பாட்டிலும் குசராத்தி மொழியிலும் அவர்கள் அக்கறையின்றி இருப்பதைக் கண்டித்தார், தெலுங்கர்கள் தமது தேசியப் பண்பாட்டில் கொண்டுள்ள பற்றினை அவர் எடுத்துக் காட்டினார்.

காந்தியாரே கூட இந்தியை இந்தியாவின் பொதுமொழியாக்கப் பரப்புரை செய்கிறவர்தாம் என்பதால் அவரின் இந்த உரை குறிப்பாகக் கருத்துக்குரியதாகும். அவருக்கே கூட குசராத்திய முதலாளர்கள் 1917இலேயே தம் சொந்த மக்களின் எதிர்காலம் தொடர்பாகக் காட்டிய பாராமுகமும் செயலின்மையும் படுமோசம் என்றும், அது வெகுமக்களிடையே அவர்களது செல்வாக்கைக் காப்பாற்றிக் கொள்வதில் குறுக்கிடக் கூடியது என்றும் தோன்றிற்று. மார்வாரி முதலாளர்கள் இராஜஸ்தானத்து மக்களின் நலன்கள் தொடர்பான பாராமுகத்தில் இன்னுங்கூட மோசமாக நடந்து கொண்டனர். இராசபுதனத்து இளவரசர்களோடும் ஜாகீர்தார்களோடும் மிக நெருக்கமாகப் பிணைந்திருந்த அவர்களுக்குத் தம் மக்களின் நலன்களில் கிஞ்சிற்றும் அக்கறை இல்லை. மார்வாரி முதலாளர்கள், இராஜஸ்தானத்தின் பல்வேறு திசைமொழிகளிலும், மார்வாரி மொழியிலேயே கூட, இலக்கியத்துக்குப் புத்துயிரளிக்க முயற்சியேதும் செய்தார்களில்லை.

பெருமுதல், குறிப்பாக முற்றுரிமை மூலமுதல் இயல்பிலேயே இனநலங்கருதாத ஒன்று. குசராத்தையும் மார்வாரையும் சேர்ந்த முதலாளர்கள் தமது உள்நாட்டு அரசியலிலும் பன்னாட்டு அரசியலிலும் இனநலங்கருதாமைக்கு எடுத்துகாட்டுகளாக உள்ளனர்.

குசராத்திகளும் மார்வாரிகளும் இந்திய மக்களினங்களில் நிலக்கிழாரியத்தின் எச்சங்களாலும், நூற்றுக்கணக்கான குறுநில சமஸ்தானங்களிடையே ஆள்புலம் கிழாரிய வழியில் பிரிந்து கிடப்பதாலும் கூடுதலாக அல்லலுற்றுக் கிடப்போரில் அடங்குவர். இப்படியான சூழல் அம்மக்களின் பண்பாட்டியல், பொருளியல் வளர்ச்சிக்கு மோசமான பெருந்தடையாக இருந்து வருகிறது. பொதுவாக குசராத் இந்தியாவில் பொருளியல் முன்னேற்றம் கண்ட வட்டாரங்களில் ஒன்று என்றால், இராஜஸ்தானம், குறிப்பாக மார்வார் மிகமிகப் பின்தங்கியவற்றில் ஒன்றாகும். குசராத்தி, மார்வாரிப் பெருமுதலாளர்களின் நலன்கள் குசராத்துக்கும் மார்வாருக்கும் வெளியே இருக்கும் தொழிற்புலங்களில் கிடக்கின்றன. பம்பாய் குசராத்திய மூலமுதலின் தளமாகும், மார்வாரி மூலமுதல் இனநலங்கருதாமை என்ற சொல்லின் முழுப்பொருளில் இனநலங்கருதாத ஒன்றாகும்.

இந்தியாவின் உள்நாட்டு அங்காடியில் தங்கள் நிலைகளை வலுவாக்கிக் கொள்வதில் கவனமாய் இருக்கும் குசராத்தி, மார்வாரிப் பெரு முதலாளர்கள், ஏனைய தேசங்களின் பெருமுதலாளர் போலவே, பெரும (அதிகபட்ச) மையப்படுத்தல் - கொள்கையின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். இந்தியானது தொழில், வணிகத் துறையில் ஏற்கெனவே ஓரளவுக்குப் பொதுவான இந்திய மொழி ஆகி விட்டதால் அம்மொழிக்கு அவர்கள் ஆதரவாக உள்ளனர். இந்தியாவின் தனித்தனி தேசிய இனங்களின் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறையில்லை என்பது மட்டுமன்று, தேசிய மொழிகளின் வளர்ச்சியை எதிர்க்கிறார்கள், மாறாக, வட்டாரத் தன்னாட்சியையும், இன்னுங்கூட இந்திய மக்களினங்களின் தன்தீர்வுரிமையையும் எதிர்க்கிறார்கள். பஞ்சாபிகள், வங்காளிகள் ஆகிய மக்களினங்களின் எதிர்காலமும் வளர்ச்சியும் இந்த முதலாளர் குழுவுக்கு அறவே அயலானவை என்பதால், குறிப்பாக அவர்கள் பஞ்சாபும் வங்காளமும் பிரிக்கப்பட்டதை மிக எளிதில் ஏற்றுக்கொண்டார்கள்.

துப்புரவான ‘ரொக்கப்பணப் பேராளர்கள்’ என்பதாலும், இந்தியாவில் ஒரு புரட்சி நடந்தால் தவிர்க்கவியலாமல் தாங்கள் காணாமற்போய் விடுவோம் என்பதால் அப்புரட்சி கண்டு வேறெவரை விடவும் அச்சப்படுகிறவர்கள் என்பதாலும், அவர்கள் பிரிட்டனுடனும் அமெரிக்காவுடனும் பன்னாட்டு முற்றுரிமைக் குழுக்களுடனும் நெருக்கமான உறவுகளை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்களாகவும் உள்ளனர். இந்தப் பொருளில் அவர்களுக்கும் நான்கு சீனக் குடும்பக் கும்பலுடன் கூடிய சீனத்து ‘அதிகார வர்க்க முதலுக்கும்’ பொதுவாக இருப்பது ஏராளம். அயல்முதலை இந்தியாவுக்குள் அழைக்க வேண்டும் என்றும், இந்தியாவைப் பொதுமைக்கு எதிராகப் போராடுவதற்கான தளமாக மாற்ற வேண்டும் என்றும், குடியாட்சிய இயக்கங்கள் அனைத்தையும் அடக்கியொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோருகின்றனர். முற்றுரிமைக் குழுக்களின் பேராளர்கள் என்ற முறையில், பிற்போக்கான அரசியல் சூழலையும், நிலக்கிழாரியத்தின் எச்சங்களையும் வலுவாக்குவதில் அக்கறை கொண்டுள்ளனர்.

இந்திய முதலாளர்களது இந்தக் குறிப்பான குழுவின் நலன்களை எடுத்தியம்பிடும் தேசியக் காங்கிரசு ஆசியாவில் இந்தியத் தலைமைப் பாத்திரம் என்னும் தேசியவெறிக் கருத்தை உருட்டிக் கொண்டிருக்கிறது, ஆசியாவில் ஜப்பானிய வல்லரசியத்தினது வீழ்ச்சியின் விளைவாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இந்தியா எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பரப்பி வரும் அதே நேரத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள், பிரிட்டன் ஆகிய அரசுகளின் குடைக்கீழ் ஒரு பன்னாட்டுக் கூட்டமைப்பைத் தோற்றுவிப்பதற்காகப் படாத பாடு பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் தேசங்களின் இறைமைக்கான, குறிப்பாக இந்தியாவின் இறைமைக்கான போராட்டத்தை மறுதலிக்கிறது.

இந்திய முற்றுரிமையாளர்கள், நிலக்கிழார்கள், குறுநில மன்னர்கள் ஆகியோரின் ஆட்சியாகிய இந்திய ஒன்றிய ஆட்சியானது மொழிவழி மாநிலங்கள் அமைப்பதை மறுதலித்திருப்பது மட்டுமன்று, இந்தியாவின் மொழிகளையும், ஆகவே தேசிய இனங்களையும் பாகுபடுத்தும் கொள்கையையும் தொடங்கியிருக்கிறது. ஒன்றுபட்ட பீகார் மாநிலத்தின் செய்தியேடுகளில், இந்தியாவெங்கும் இந்து மகாசபாவின் வெளியீடுகளில் இந்தி மொழி கட்டாய அரச மொழியாகப் பரப்பப்படுகிறது. முன்பே, 1948ஆம் ஆண்டிலேயே, சட்டப்பேரவையில் அரசமைப்பு பற்றிய விவாதம் தொடர்பாக, இந்தியையும் ஆங்கிலத்தையும் இந்தியாவின் அரச மொழிகளாக அறிவிக்கும் வரைவுச் சட்டம் கொண்டுவரப்பட்டது; விதிவிலக்கான நேர்வுகளில் மட்டுமே மாநிலங்களின் பேராளர்கள் தத்தமது தாய்மொழியில் பேச அனுமதியுண்டு. இந்த வரைவுச் சட்டம் இந்தி பேச்சுமொழியாகவோ இலக்கிய மொழியாகவோ இல்லாத மாநிலங்களின் காங்கிரசு வெளியீடுகளில் கூட கோபத்தை வரவழைத்துள்ளது.

’கல்கத்தா ரெவ்யூ’ என்ற ஏடு இந்த வரைவுச் சட்டத்தைக் கடுமையாகக் குறை கூறியதோடு, இந்தியாவின் அனைத்து மாநில மொழிகளையும் நிகர் என அறிவிக்கக் கோரியது. வங்காளத் தேசிய முதலாளர் இந்த வரைவுக்கு இப்படித்தான் எதிர்வினை ஆற்றினர். அச்சமுற்றுப் பின் வங்கப் பிரிவினைக்கு இணங்கிய வங்காளத் தேசிய முதலாளர்கள் மீண்டெழுந்து, பீகாரில் வங்காளிகள் பெரும்பான்மையாக உள்ள வட்டாரங்களையும், பிகாரிகள் அல்லது ஒரியர்களுக்கு நெருக்கம் என்பதைக் காட்டிலும் வங்காளிகளுக்கே கூடுதல் நெருக்கமான சந்தால், முண்டா ஆகிய இனக்குழுக்களையும் கூட மேற்கு வங்காளத்தில் இணைக்கும் படி கோரத் தொடங்கினார்கள். வங்காளத் தேசியர்கள் வங்காளிகள் மிகுதியாக உள்ள மாவட்டங்களை (கச்சார், லுஷாய், மணிப்பூர், திரிபுரா) அசாமிலிருந்து மாற்றித் தர வேண்டும் என்பதும், இந்த மாவட்டங்களைக் கொண்டு பூர்வாஞ்சல் பிரதேசம் என்ற தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பதும் கூட வங்காளத் தேசியரின் கோரிக்கைகள் ஆகும்.

1942ஆம் ஆண்டு கோர்சவான், சராய்கேலா, மயூர்பஞ்ச், ஆகிய சமஸ்தானங்களில் அவற்றை ஒரிசா மாநிலத்தில் சேர்ப்பதற்கு எதிராகக் கடும்போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்திய ’ஆதிவாசி சங்கம்’, அதாவது ’பழங்குடிகள் ஒன்றியம்’ இந்த சமஸ்தானங்களை பீகாரில் சோட்டா நாகபுரி மாவட்டத்தில் சேர்க்கக் கோரியது.

இந்த சமஸ்தானங்களையும் சிங்பூம், பீர்பூம், சந்தால் பர்கானா, பூர்ணியா மாவட்டங்களையும் மேற்கு வங்காளத்தில் சேர்க்க வேண்டும் என வங்காளத் தேசியர்கள் கோரினர்.

குறிப்பாகத் தென்னிந்தியாவில் இந்திய ஆட்சியாளர்களின் தேசிய இனக் கொள்கைக்கு எதிராக வலுவான கிளர்ச்சிகள் வெடித்தன.

மொழிவழி மாநிலங்கள் எனப்பட்டவற்றைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பெரிதும் மக்கள் ஆதரவு பெற்ற ஒன்று, பற்பல இந்தியத் தேசிய இனங்களின் முதலியக் (முதலாளித்துவக்) கூறுகளிடையே கூட பேராதரவு பெற்ற ஒன்று, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றத் தன் இறுதியான மறுப்பை வெளிப்படையாக அறிவிக்க இந்திய அரசு உடனே தீர்மானிக்கவில்லை. அது இந்த மறுப்பைத் தனக்கு எளிதாக்கிக் கொள்ளும் பொருட்டு நிர்வாகச் சீர்திருத்தங்களை அணியப்படுத்துவதற்கென்று சொல்லி 1948இல் ஒரு வினாப் பட்டியலை வழங்கியது.

மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றிய வினாவிற்குத் தெளிவான எதிர்விடை கிடைப்பதை உறுதி செய்யத் தோதாக இந்த வினாப் பட்டியல் கட்டமைக்கப்பட்டது. சான்றாக, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய காங்கிரசு செல்வாக்கு மிக்க (’மொழிவழி’) மாநிலங்களில் வழங்கப்பெற்ற வினாப் பட்டியலில், வெவ்வேறு பொருளியல் அமைப்புகளிடமும், முகமையாக குசராத்திகளும் மார்வாரிகளுமான தொழிலதிபர்களிடமும் கேட்கப்பட்ட வினா: இந்த மாநிலங்கள் பிரிந்து தனித்தனியானால் தமது நிதிநிலைகளைப் பற்றாக்குறையில் சிக்காமல் நேர்செய்ய முடியுமா? மாறாக, குசராத், தமிழ்நாடு ஆகிய காங்கிரசு செல்வாக்குள்ள மாநிலங்களில் மக்களிடையே கேட்கப்பட்ட வினா: ஆந்திரமும், கேரளமும், கர்நாடகமும், மகாராஷ்டிரமும் இந்த மாநிலங்களிலிருந்து பிரிக்கப்பட்டால் அவற்றின் (குசராத், தமிழ்நாடு ஆகியவற்றின்) மீது ஒரு நேர்நிறைத் தாக்கம் ஏற்படுமா? இப்படிச் செய்தால் அதன் தாக்கம் தொடர்பாக குசராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் முதலாளர்கள் எதிர்மறையாகவே விடையளிப்பார்கள் என்றும் கருதப்பட்டது.

இந்தத் தந்திரங்கள் எப்படிப்பட்டவை என்று ‘பீப்பிள்ஸ் ஏஜ்’ எழுதியது: “ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம் போன்ற புதிய மொழிவழி மாநிலங்களைத் தோற்றுவிப்பது போட்டியாளர் தொகையை, அதாவது அந்தந்த மாவட்டங்களின் முதலாளர் தொகையைக் கூடுதலாக்குவதாகும் என்பது பெருமுதலாளர் வகுப்பின் பார்வை. போட்டியாளர்களான இம்முதலாளர்கள் அந்தந்தத் தேசிய வட்டாரங்களின் தொழில்துறையும் அங்காடிகளும் வளர்ச்சி பெற உந்துவார்கள். எனவேதான் பெருமுதலாளர் வகுப்பு குறிப்பிட்ட கோரிக்கையை நிறைவேற்ற விடாமல் குழிபறித்து வருகிறது.

“காங்கிரசுத் தலைவர்களும் முதலாளர்களும் இந்த மாவட்டங்களின் மக்களினங்களிடம் இன்னுங்கூட அச்சப்படுகிறார்கள். தனி மாநிலங்கள் அமைக்கப்பட்டு விட்டால் முற்போக்கான குடியாட்சியக் கூறுகளின் செல்வாக்கு கருதத்தக்க அளவில் வலுப்பெறும், எப்போதும் அவர்களை சமாளிக்க இயலாமற்போகும் என்று அச்சப்படுகிறார்கள்.”

மேலும் அதே கட்டுரையில் ’பீப்பிள்ஸ் ஏஜ்’, தேசிய இன அமைப்புகளின் முதலியத் தலைமை இந்த இயக்கத்தை காங்கிரசு வேலைத்திட்டத்தின் கோரிக்கைகளுக்குள் குறுக்க விரும்புகிறது என்றும், உந்தி முன்செல்ல விரும்பவில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறது. அது மேலும் கூறியது: ‘ஆனால், இந்தத் தலைமையிடம் ஊசலாட்டங்களும் வாய்ப்பு வேட்டையும் (சந்தர்ப்பவாதமும்) இருந்தாலும், மொழிவழி மாநிலங்கள் எனப்படுகிறவற்றை அமைப்பதற்கான இயக்கத்தை ஆதரிக்க வேண்டும். ‘தேசிய இனங்களின் நிகர்மை என்பது உண்மையான குடியாட்சிய இந்தியாவின் நிறுவகக் கொள்கைகளில் ஒன்று; அதை நோக்கிப் பாதையமைத்துச் செல்லும் எந்த இயக்கத்துக்கும் ஆதரவு தர வேண்டும்; இந்தத் திசையில் சரியான பாதையில் நடையிடும் வகையில் ஆதரிக்க வேண்டும். எனவேதான் ஆந்திரத்திலும் கர்நாடகத்திலும் மகாராஷ்டிரத்திலும் ஏனைய மொழிவழி அமைப்புகளிலும் தனித்தனி மாநிலங்கள் அமைப்பதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மக்களினங்களின் கோரிக்கையை நாம் ஆதரிக்கிறோம்.’

இந்திய மக்களினங்களில் மிகப் பெரும்பான்மையின் கோரிக்கைகளைத் தன் ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்கும் கொள்கையென்று சொல்லி அவற்றுக்குக் குழிபறிக்கும் இந்திய அரசுக் கொள்கையை இந்தியப் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) கண்டிக்கின்றனர்: ‘தன்தீர்வுக்கும் நிகர்மைக்குமான கோரிக்கையை எதிர்ப்பவர்களே, இந்தியாவில் தேசிய இனங்கள் இருப்பதை மறுதலிப்பவர்களே இந்திய ஒருமைப்பாட்டைப் படுமோசமாக அழிப்போரும் அதன் பகைவர்களும் ஆவார்கள். அவர்களே இந்திய மக்களினங்கள் சேர்ந்து வாழவும், நிகர்மையின் அடிப்படையில் சேர்ந்து வாழவும் முடியாமற்செய்கின்றார்கள். தன்தீர்வுரிமைக்கும், இந்தியாவின் மெய்யான ஒற்றுமைக்கும் மக்களினங்களின் அதிகாரத்தின்கீழ் மட்டுமே வகை செய்ய முடியும்.

பம்பாய், சென்னை நகரங்களின் எதிர்காலம் குறித்தும் கடும் விவாதங்கள் எழுந்தன. பம்பாய் மகாராஷ்டிர ஆள்புலத்தில் அமைந்திருப்பதும், மக்கள்தொகையில் பெரும்பாலார் மராத்தியராக இருப்பதும் தெரிந்த செய்திகள். தொழிலாளர்களிலும் எழுத்தர்களிலும் அறிவாளர்களிலும் பெரும்பான்மை மராத்தியரே. ஆனால் தொழிலதிபர்களிலும் வணிகர்களிலும் வங்கியரிலும் பெரும்பான்மை குசராத்திகளே. கைவினைஞர்களிலும், சிறு வணிகர்களிலும் அறிவாளர்களிலும் தொழிலாளர்களிலும் குசராத்திகள் கணிசமாக உள்ளனர்.

பம்பாயை மகாராஷ்டிரத்தில் சேர்க்க வேண்டும் என்று மகாராஷ்டிர காங்கிரசு அமைப்பு கோரியது. காங்கிரசுத் தலைமை அதனை -- பம்பாய் மாநகரம் என்று – ஒரு சிறப்பு மாநிலம் ஆக்கியது – அது மகாராஷ்டிரத்திலோ குசராத்திலோ ஒரு பகுதியாகாது. மொழிவழி மாநிலங்கள் அமைப்பது பற்றிய வினா முன்னுக்கு வந்த போது நாட்டிலேயே வலிமையும் செல்வாக்கும் மிக்க பம்பாய் காங்கிரசுக் கிளை பம்பாயை வேறு எந்த மாநிலத்திலும் சேர்க்காமல் விடுமை நகரமாக (free city) அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. இந்த அடிப்படைகள் மீது, குசராத்தி, பார்சி முதலாளர்கள் ஆதிக்கம் வகித்த பம்பாய்க் காங்கிரசுக் குழுவிற்கும் மகாராஷ்டிர காங்கிரசு அமைப்புக்கும் நடுவில் கடும் பூசல் வெடித்தது.

பம்பாய்த் தொழிலாளர்கள் பெரும்படியாக மரத்தியர்களே ஆதலால் இந்த விவாதத்தில் பொதுமையர் (கம்யூனிஸ்டுகள்) மராத்தியரின் பக்கம் நின்றனர். மேற்கூறிய ’பீப்பிள்ஸ் ஏஜ்’ இதழ் இச்சிக்கல் தொடர்பாக எழுதியது: பம்பாய் மகாராஷ்டிரத்தின் பகுதியாதலால் மகாராஷ்டிரத்தில் பம்பாய் நகரத்தைச் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை நாமும் ஆதரிக்கிறோம். பம்பாயை ஒரு தன்னாட்சி மாநிலமாக்க வேண்டுமென்று முன்மொழியப்படுவதன் நோக்கம் குசராத்திய மற்றும் பிற முதலாளர்களை ஆற்றுப்படுத்த வேண்டும் என்பதே. இந்த நியாயப்படி பார்த்தால் ஒருசில மார்வாரி முதலாளர்களுக்காக வேண்டி கல்கத்தாவைத் தன்னாட்சி மாநிலமாக்க வேண்டியிருக்கும். காங்கிரசுக் கட்சி முதலாளர்களின் நலன்களுக்காக பம்பாய் மராத்தி மக்களை மராத்தியல்லாதாருக்கு எதிராக நிறுத்துகிறது.’

சென்னை (மதராஸ்) தொடர்பான சிக்கலையும் கூட இந்திய ஆட்சியாளர்கள் தென்னிந்தியாவில் மொழிவழி மாநிலங்கள் என்பவற்றை அமைப்பதில் ஒரு தடையாகக் காட்டி வந்தார்கள். சென்னை நகரம் தமிழர்களும் தெலுங்கர்களும் குடியிருக்கும் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளது. இரு சாராருமே சென்னை நகரத்தில் வசிக்கின்றனர். இந்த அடிப்படையில் தமிழ்நாடு, ஆந்திரம் ஆகிய தன்னாட்சி மாநிலங்கள் அமைக்கப்படுவது தவிர்க்கவியலாமலே சென்னையை ஒரு தன்னாட்சி மாநிலம் அல்லது ‘விடுமை நகரம்’ ஆக்குவதில் போய் முடியும் என்று அரசு அறிவித்தது.

தென்னிந்தியாவில் தேசிய இன இயக்கம் குறிப்பாகவும் சிறப்பாகவும் ஐதராபாத்தின் எதிர்காலம் தொடர்பாகத் தீவிரமடைந்தது. இந்தியப் பிரிவினைக்கு முன்பே கூட இந்த சமஸ்தான அரசின் காங்கிரசு அமைப்பு --– ஆந்திர மாநாடு, மகாராஷ்டிர மாநாடு, கர்நாடக மாநாடு ஆகிய --- மூன்று தேசிய இன அமைப்புகளைக் கொண்டதாய் இருந்தது. சமஸ்தான அரசில் சீர்திருத்தங்கள் செய்ய காங்கிரசுத் தலைமை தடுமாறிக் கொண்டிருந்த நேரத்தில் அதன் உறுப்புகளான தேசிய இன அமைப்புகள் அந்தந்த வட்டாரங்களின் தன்னாட்சி நோக்கியும், இறுதி நோக்கில் அவ்வட்டாரங்கள் அதே தேசிய இனம் வாழும் மாநிலங்களில் சேர்க்கப்படுவது நோக்கியும் நகர்ந்து கொண்டிருந்தன. இதற்கு ஐதராபாத் சமஸ்தான அரசைக் கலைக்காமல் வாய்ப்பில்லை.

அமெரிக்கச் செய்தியாளர் அண்ட்ரூ ரோட் அனுப்பிய செய்திகளில் கண்டுள்ளபடி, இவ்வரசில் காங்கிரசைச் சேர்ந்த முன்னணி ஆளுமைகளில் ஒருவரான பத்மஜா நாயுடு, இந்த சமஸ்தான அரசை தேசிய இன வட்டாரங்களாகப் பிரிப்பதை இங்குள்ள காங்கிரஸ் கட்சி ஆதரிக்குமானால் நைசாமால் அதிகாரத்தில் நீடிக்க முடியாது என்று கூறினார். ஆனால் நேருவிடமிருந்து இயல்வுக்குறி (சமிக்ஞை) வருவதற்காக காங்கிரஸ் காத்திருந்ததாகக் கருதப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, இந்த சமஸ்தான அரசின் முதலாளர் வகுப்பின் ஆகப் பெரும் செல்வாக்குள்ள ஆகப் பெரும் பிரிவினர், நைசாம் அரசுத் தொழில்முனைவுகளோடும் கொள்முதல்களோடும் தொடர்புடைய இப்பிரிவினர் சமஸ்தான அரசு பிரிக்கப்படுவதை விரும்பவில்லை. நேரு இந்தப் பிரிவினைக்கு இயல்வுக்குறி காட்டவே இல்லை என்பது நன்கு தெரிந்த செய்தி. ஏனென்றால் காங்கிரசாட்சி மொழிவழி மாநிலங்கள் அமைக்கும் கருத்தையே மறுதலித்தது. ஆனால் மொழிவழி மாநிலங்கள் அமைப்பதற்கான இயக்கம் நின்று போய் விட்டதென்று பொருளில்லை.

1948இல் இந்த இயக்கம் பரந்துபட்ட அளவில் விரிவடைந்து காங்கிரசின் ஒற்றுமைக்கே அச்சுறுத்தலாயிற்று. ஐதராபாத் ஆந்திர மாநாட்டை உறுப்பமைப்பாகக் கொண்ட ஆந்திர மகாசபை காங்கிரசுச் செல்வாக்குள்ள ஆந்திர மாகாணத்தில் பெருமளவு விரிவடைந்தது. ஆந்திர மகாசபையில் பொதுமையருக்கு வலுவான செல்வாக்கு இருந்தது. அது தெலங்கானாவில் நடந்த புரட்சிக் கலகத்தை ஆதரித்தது. இந்த அமைப்பு 1911இல் நிறுவப்பட்டது. தொடக்கத்தில் பண்பாட்டுக்கும் கல்விக்குமான கழகமாக இருந்தது. அதில் நிலக்கிழார்கள் முன்னணிப் பங்கு வகித்தார்கள். முதல் உலகப்போருக்குப் பிறகுதான், குறிப்பாக இரண்டாம் உலகப் போருக்குச் சற்று முன்னர் இந்தியாவில் தேசிய இனங்களின் தன்தீர்வுக்கான இயக்கம் தீவிரமடைந்து பெருந்திரள் தன்மையைப் பெற்ற போது ஆந்திர மகாசபை இன்னுங்கூட குடியாட்சியத் தன்மை கொண்ட அமைப்பாக மாறலாயிற்று. சிறுமுதலியக் கூறுகள் அதில் தலைமைப் பங்கு வகிக்கலாயின. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அது பெரும்படியாக உழவர் அமைப்பாக மாறியது. பொதுமையரின் செல்வாக்கு வளர்ந்தது. ஆந்திரப் பிரதேசத்து இந்தியத் தேசிய காங்கிரசு குறுகிய முதலியக் கட்சியாகி, வெகுமக்களிடையே பெருமளவுக்குச் செல்வாக்கிழந்தது.

1945இல், அதாவது மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் காலத்தில் மகாராஷ்டிர மாநாடு என்ற பெயரிலான அமைப்பு நிறுவப்பட்டது. அதன் தலைவர் அவ்வளவாக அறியப்படாத ஒரு மராத்திய வழக்குரைஞர். ஆயின் மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்படுவதற்கு இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போடத் தொடங்கிய போது இந்தியாவின் மராத்தி மாவட்டங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதைத் தன் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்த மகாராஷ்டிர மாநாடு மராத்தியர்களிடையே தன் நிலையை வலுவாக்கிக் கொண்டது. 1948 முடிவில் ஐதராபாத்தை இந்திய ஆய்தப்படைகள் கைப்பற்றிய பின் இந்த அமைப்பு ஐதராபாத்தின் ஒரு பகுதியை ஒன்றிணைந்த மகாராஷ்டிர மாநிலத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது.

1948 அக்டோபர் 16, 17 நாட்களில் மகாராஷ்டிர மாநாடு பம்பாயில் கூடி, மராத்திய ஆள்புலங்கள் அனைத்தையும், அவை இந்திய ஒன்றியத்துக்குச் சொந்தமானவை என்றாலும், சமஸ்தானங்களின் பகுதிகள் என்றாலும், மகாராஷ்டிரத்தில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தது. காங்கிரசு உறுப்பினர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்று, அதன் செல்வாக்கை வரம்புக்குட்படுத்தவும், குடியாட்சிய ஆற்றல்கள் அந்த அமைப்பில் நுழைவதை மேலும் கடினமாக்கவும் முயன்றார்கள். இதற்காக அவர்கள் 5 ரூபாய் நுழைவுக் கட்டணமும் 1 ரூபாய் ஆண்டுக் கட்டணமும் விதிக்க வேண்டும் என முன்மொழிந்தார்கள். மாநாடு இந்தக் கோரிக்கையை மறுதலித்து சமரசமாக 1 ரூபாய் நுழைவுக் கட்டணம் என்று தீர்மானித்தது.

மகாராஷ்டிர மாநாடு ஆந்திர மகாசபையை விடவும் கூடுதலான அளவுக்குப் பலபடித்தான அமைப்பாக விளங்கிற்று. சிறுமுதலாளர்கள், சிறுமுதலிய அறிவாளர்கள் மட்டுமல்லாமல், மராத்திய முதலாளர்களும் கூட, அதாவது பூனாவையும் பிற மகாராஷ்டிர நகரங்களையும் சேர்ந்த பலவிதமான சிறுமுதலாளர்களும் கூட அந்த அமைப்பில் இடம்பெற்றனர். பல சிக்கல்களில் இந்த அமைப்பு தேசியக் காங்கிரசை ஆதரித்த போதிலும் மொழிவழி மாநிலங்கள் அமைக்கும் சிக்கலில் காங்கிரசுத் தலைமை, இந்திய அரசு ஆகியவற்றின் கொள்கைக்கு இணக்கமற்ற எதிர்ப்பு நிலையெடுத்தது.

கேரளத்தில் காங்கிரசின் உள்ளூர் அமைப்புகள் திருவிதாங்கூர், கொச்சி குறுநில மன்னர்களோடு அணி சேர்ந்து கொண்டன. திருவிதாங்கூரையும் கொச்சியையும் ஒன்றிணைத்து ’கேரள ஒன்றியம்’ என்ற சமஸ்தான அரசை அமைப்பதன் ஊடாகத் தங்கள் அதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளும் குறுநில அரசர்களின் வேணவாக்களை ஆதரித்தன.

கூடுதலான குடியாட்சியத் தன்மை கொண்ட பிரிவினர் காங்கிரசிலிருந்து உடைந்து சென்று கேரள சோசலிசக் கட்சி என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கினர். இந்தக் கட்சி சமஸ்தான அரசைக் கலைத்து விட்டு, ஒன்றிணைந்த குடியாட்சியக் கேரளம் அமைக்க வேண்டும் என்ற பொதுமையரின் (கம்யூனிஸ்டுகளின்) கோரிக்கையை ஆதரித்தது. – மலையாள சமஸ்தான அரசுகள் மட்டுமல்லாமல், சென்னை மாநிலத்தின் மலையாள வட்டாரங்களும் இந்த ஒன்றிணைந்த கேரளத்தில் அடங்கும்.

தேசிய இன இயக்கம் தென்னிந்தியாவில் போல் வட இந்தியாவில் அவ்வளவு வலுவாக இல்லை. வங்காளிகளையும் குசராத்திகளையும் தவிர தென்னிந்தியாவில் போல் அவ்வளவாக முழுமை பெற்ற தேசங்கள் இல்லை என்ற உண்மையே பெருமளவுக்கு இதற்கான விளக்கமாகிறது. குசராத்தில் பெருமுதலாளர் வகுப்பு மிகவும் வலுவாக உள்ளது. அதற்கு இந்திய அங்காடியைத் தன் கட்டுக்குள் கொண்டுவருவதில் இருக்கும் அக்கறையின் அளவுக்குத் தன் தேசத்தின் பண்பாட்டு வளர்ச்சி பற்றியோ அதன் எதிர்காலம் பற்றியோ அக்றை இல்லை. அதனால்தான் குசராத்தைத் தனி மாநிலமாக்கி, குசராத்திய ஆள்புலங்கள் அனைத்தையும் அதன் எல்லைக்குள் ஒன்றுசேர்க்கும் கோரிக்கையை அது ஆதரிக்கவில்லை. ஆனால் ஒன்றுபட்ட குசராத் அமைப்பதற்கான இயக்கம் இருந்து வரத்தான் செய்கிறது.

வங்காளம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பாகப் பிரிவினை செய்யப்பட்டது வங்காளத்தில் தேசிய இயக்கத்துக்குப் பேரடியாக விழுந்தது. முசுலிம்களுக்கும் இந்துக்களுக்கும் நடுவில் பிரித்தானியர் விதைத்த கெடுநம்பிக்கை இன்னும் குறைந்த பாடில்லை. எனவேதான் வங்காளத்தை இந்திய ஒன்றியத்துக்குள்ளோ பாகிஸ்தானுக்குள்ளோ ஒன்றிணைக்க எந்த இயக்கத்தாலும் கோரிக்கை வைக்க முடியவில்லை. ஆனால் ஒன்றிணைய வேண்டுமென்ற ஏக்கம் வங்காளத்தின் இந்தியப் பகுதியில் போலவே பாகிஸ்தான் பகுதியிலும் வலுவாக உள்ளது. சான்றாக, மேற்கு வங்காளத்தின் முன்னாள் முதலமைச்சர் ராய் அவர்களே கூட --– இவரை மார்வாரிகளின் செல்லப்பிள்ளை என்று வங்காளி ஏடுகள் குறிப்பிட்ட போதிலும் --– வங்காள மக்களுக்கும் இந்திய ஆட்சியாளர்களுக்கும் இடையில் சாறமான வேறுபாடுகள் இருப்பதாகவும், வங்காளி மக்கள் ஒன்றுசேர ஆவல்கொண்டிருப்பதாகவும் அறிவித்தார். முன்னதாக, பிரிவினைக்கு முன் வங்காளத்தின் முதலமைச்சராக இருந்த சுராவர்தி பாகிஸ்தான் எல்லைகளுக்குள் வங்காளம் ஒன்றுசேர்வதை ஆதரித்தார். இந்த அரசியலாரின் அறிவிப்புகள் வங்க ஒன்றிணைப்பைச் சாதிக்க வேண்டும் எனும் வங்காள மக்களின் வேணவாக்களை எதிரொலித்தன என்ற பொருளில் கருத்துக்குரியன.

தெலுங்கு மக்களின் தேசிய இயக்கம் பெருவீச்சுடன் நடைபெற்றதால், 1949 நவம்பரில் சென்னை மாநிலத்தின் 11 மாவட்டங்களைக் கொண்டு ஆந்திர மாநிலம் அமைப்பதற்கு உடன்படுவதாக இந்திய அரசு அறிவிக்க வேண்டியதாயிற்று. ஆனால் 1950இல் இந்த முடிவு செயலாக்கம் பெறவில்லை. புதிய அரசமைப்புச் சட்டத்தில் இந்த மாநிலம் பற்றிய குறிப்பே இல்லை.

(தொடரும்)

- ஏ.எம்.தியாக்கோவ்

Pin It