மைசூர்ப் புலி என்று போற்றப்படும் திப்பு சுல்தான் 1750ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தேவனஹள்ளி என்ற ஊரில் ஹைதர் அலிக்கும், பாக்ர்-உன்-நிசா அவர்களுக்கும் மகனாகப் பிறந்தார். ஹைதர் அலியும் இந்திய வரலாற்றில் முக்கிய இடம் பெற்றவர்.

இந்த ஹைதர் அலிதான் வேலு நாச்சியாருக்குப் படை கொடுத்து ஆங்கிலேயரை வெல்ல உதவியவர். ஹைதர் அலி எளிய குதிரைவீரராக இருந்து, படிப்படியாக உயர்ந்து, பிறகு மைசூர் அரசையே ஆளும் மன்னராக உயர்ந்தவர். இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வெற்றி கண்டவர். பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயரை எதிர்த்து வெற்றி வாகை சூடியவர்கள் ஒருசிலரே. அவர்களுள் தந்தை ஹைதர் அலியும் மகன் திப்பு சுல்தானும் அடங்குவர்.

1782ஆம் ஆண்டு தந்தை ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு, தனது 32ஆம் வயதில் மன்னராக அரியணை ஏறினார் திப்பு. 1782 முதல் 1799 வரை மைசூர் பகுதியை ஆட்சி செய்தார். ஆட்சித் தலைநகரமாக சீரங்கப்பட்டினம் இருந்தது. மைசூரின் மன்னராகப் பொறுப்பேற்ற திப்பு சுல்தான் தனக்குரிய அடையாளமாகப் புலிச் சின்னம் பொறித்த கொடியைப் பயன்படுத்தினார். ஹைதர் அலியைப் போலவே திப்புவும் ஆங்கிலேயருக்கு சிம்மசொப்பனமாக விளங்கி, கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்குப் பெரும் சவாலாக இருந்தார்.

திப்பு என்ற உருதுச் சொல்லுக்குப் புலி என்று பொருள். அவர் தனது பெயருக்கு ஏற்ப ஒரு மாவீரனாக வாழ்ந்து காட்டினார். "ஆடுகளைப் போல அடிமைகளாகப் பல ஆண்டுகள் பிழைப்பதை விட, புலியைப் போல இரண்டு நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என முழங்கி மக்களிடையே விடுதலை எழுச்சியை உருவாக்கினார். இன்று பலரும் புவிசார் அரசியல் பற்றிப் பேசி வருகிறார்கள். ஆனால் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கிலேயரின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்தியா விடுதலை பெற வேண்டி பிரெஞ்சு மாவீரன் நெப்போலியனுடன் இணைந்து செயல்பட முயற்சிகள் மேற்கொண்டார் திப்பு.

tippu sultan rocket[லோப்ஸ் தீவில் உள்ள நாசா வரவேற்பறையில் உள்ள ஓவியம் ஆங்கிலேய இராணுவத்திற்கு எதிராக திப்பு சுல்தான் ராக்கெட்டுகள் ஏவியதைச் சித்திரிக்கிறது].

கிழக்கிந்தியக் கம்பெனியார் அஞ்சும் அளவிற்கு திப்பு சுல்தான் மிகப் பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். வெடிமருந்து கொண்டு தயாரிக்கப்படும் ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்கியவர்கள் சீனர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும், இரும்பு கொண்டு செய்யப்படும் சக்தி வாய்ந்த ராக்கெட் தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தான் எனப் பல வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். பின்னாளில் இவரைப் பின்பற்றியே ஆங்கிலேயர் ராக்கெட் செய்தனர். இலண்டன் அருகில் ஊல்ரிச் எனும் ஊரில் உள்ள அருங்காட்சியகத்தில் திப்பு சுல்தான் பயன்படுத்திய ராக்கெட்டுகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இதுபோல, நாசாவின் வாலோபஸ் விமானதள அலுவலக அறையில் ஆங்கிலேயச் சிப்பாய்களை திப்புவின் ராக்கெட்கள் தாக்கும் ஓவியம் ஒன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு இவர் பயன்படுத்திய 30 ஆயுதங்கள் இலண்டனில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ஆறு மில்லியன் பவுண்டு ஸ்டெர்லிங் கிடைத்ததாம்.

திப்பு இசுலாமிய மதத்தில் முழு ஈடுபாடு கொண்டவராக இருந்தாலும், அவருடைய ஆட்சியில் இந்துக்கள் உள்ளிட்ட பிற மதத்தவரும் சுதந்திரமாகச் செயல்பட்டனர். மக்களிடையே அமைதியை மட்டும் விரும்பிய அவர், சகோதரத்துவத்தை இறுதி வரை கடைப்பிடித்தார். அவரது ஆட்சியில் ஒவ்வொரு மதத்தைப் பின்பற்றும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் அவரவர் வழிபாட்டுத் தலங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டன. திப்பு சுல்தான் சமய வேறுபாடுகள் களைந்தவராய், தனது அமைச்சரவையின் முக்கிய பொறுப்புகளில் பொருளாளராக கிருஷ்ணா ராவ், அஞ்சல் மற்றும் காவல்துறை அமைச்சராக சாமைய்யா ஐயங்கார், வருவாய்த்துறை அமைச்சராக பூர்ணையா – ஆகியோரை அமர்த்கியிருந்தார்.

முழுமையான மதுவிலக்கைக் கொண்டுவர, நாம் இன்றளவும் எத்தனையோ போராட்டங்கள் நடத்தித் தோல்வியையே கண்டு கொண்டிருக்கிறோம். ஆனால், திப்புவோ அவரது ஆட்சிக்குட்பட்ட பகுதியில் முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்திருந்தார். திப்பு சுல்தான் ஆட்சியில், பெண்களுக்கு மரியாதை கொடுத்தது மட்டுமல்லாமல், விலைமாதர் முறையையும் ஒழித்திருந்தார். திருவிதாங்கூர் பகுதியில் குறிப்பிட்ட சமூகப் பெண்கள் மேலாடை அணியத் தடை விதிக்கப்பட்ட நிலையில், இக்கொடுமையை எதிர்த்து ஆளுநருக்குக் கடிதம் எழுதினார்.

இன்று வரை விவசாயிகளுக்கு ஆதவரான மற்றும் எதிரான வேளாண் சட்டங்கள் காலந்தோறும் கலந்தே காணப்பட்டாலும், திப்புவின் ஆட்சி காலத்தில் விவசாயத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு மைசூர் மாகாணம் தன்னிறைவு பெற்றிருந்தது. சரியான நீர்ப்பாசன வசதி, உயர் தர விதைகள் பயன்பாடு, வேளாண்மை செய்யும் உழவர்களுக்கு நிலவுடைமை என வேளாண் புரட்சி செய்தவர் திப்பு.

anglo mysore war1766 முதல் 1799 வரை ஆங்கிலேயருக்கு எதிராக மொத்தம் நான்கு மைசூர்ப் போர்கள் நடைபெற்றன. இதில் இரண்டு, மூன்று மற்றும் நான்காம் மைசூர்ப் போர்கள் திப்பு தலைமையில் நடைபெற்றன. இரண்டாம் போரில் திப்பு வெற்றி பெற்றார். அதன் பிறகு 1789ஆம் ஆண்டு திப்பு சுல்தான் தலைமையில் ஆங்கிலேயருக்கு எதிராக நடைபெற்ற மூன்றாம் மைசூர்ப் போரில் மைசூருக்கு எதிரான கூட்டணியில் மராட்டியப் பேரரசும் ஐதராபாத் நிஜாமும் இடம் பெற்றிருந்தனர். இப்போரில் மைசூர் அரசு தோல்வியடைந்தது. சீரங்கப்பட்டினம் அமைதி ஒப்பந்தத்தின்படி தனது ஆட்சியின் கீழிருந்த பகுதிகளில் கிட்டத்தட்ட பாதியினைத் தனது எதிரிகளிடம் திப்பு சுல்தான் ஒப்படைக்க நேர்ந்தது. மேலும், திப்பு சுல்தானை தோற்கடித்த காரன் வாலீஸ் அதே சீரங்கப்பட்டின உடன்படிக்கையின் படி ரூபாய் மூன்று கோடி பணத்திற்காகத் திப்புவின் பத்து வயது அப்துல் காலிக் சுல்தான் மற்றும் எட்டு வயது மொய்சுதீன் சுல்தான் ஆகிய இரு மகன்களையும் பணயமாகப் பிடித்து வைத்துக் கொண்டான். காரன் வாலீஸ் நினைவாக வடிக்கப்பட்ட சிலை ஒன்றில் சரணடைந்த திப்புவின் மகன்களை காரன் வாலீஸ் தன்னுடன் வைத்துக் கொண்டிருக்கும் காட்சி சித்திரிக்கப்பட்டு சென்னையில் பொது இடத்தில் வைக்கப்பட்டது. துரோகத்தின் சின்னமாகக் கருதப்பட்ட இச்சிலை, பொதுமக்களின் எதிர்ப்பால், அப்பகுதியிலிருந்து அகற்றப்பட்டு, சென்னை ஜார்ஜ் கோட்டை அருங்காட்சியகத்தில் இப்போது வைக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் ஆங்கிலேய-மைசூர் போரில் கைது செய்த ஆங்கிலேயப் படைவீரர்களை விடுவிக்க திப்பு மறுத்து வந்தார். மேலும், கிழக்கிந்தியக் கம்பெனி விரிவாக்கத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வந்த திப்புவை போரில் வீழ்த்த முடியாது என்றெண்ணிய ஆங்கிலேயர்கள் திப்புவின் அமைச்சர்களை விலைபேசி, சூழ்ச்சி செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 1799ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் திடீரென திப்புவின் சீரங்கப்பட்டினக் கோட்டை தாக்கப்பட்டது. இதுவே இறுதியான நான்காம் மைசூர் போர். திப்புவின் நயவஞ்சக அமைச்சர்களால் கோட்டையின் தண்ணீர்க் கதவு ஆங்கிலேயர்களுக்குத் திறந்து விடப்பட்டது. உணவருந்திக் கொண்டிருந்த திப்பு, தப்பிச் செல்ல எத்தனையோ வழிகள் இருந்தும் எந்தக் கவச ஆடைகளும் அணியாமல் வீரர்களோடு வீரராய்த் துணிச்சலுடன் போரிட்டார். முடிவில் சூழ்ச்சி வென்றது; 1799ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் குண்டுக் காயங்களால் வீரச்சாவடைந்தார் திப்பு.

போரின் முடிவில் திப்பு சுல்தானின் மகன் பதே அலி நாடுகடத்தப்பட்டார். இப்போரில் திப்பு சுல்தானுக்கு மறைமுகமாக உதவிய ஆற்காடு நவாப் உம்தத் உல் உம்ராவை ஆங்கிலேயர்கள் பின்னர் நஞ்சூட்டிக் கொன்றதாகக் கருதப்படுகிறது. திப்புவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடம் இன்றும் சீரங்கப்பட்டினத்தில் இருக்கிறது.

திப்பு இறந்த பிறகு அவரது கோட்டையிலிருந்து ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்த பொன், பொருள், ஆயுதங்கள், கலைப் பொருட்கள், ஆடை, அணிகலன்கள் அனைத்தும் இங்கிலாந்துக்கு எடுத்துச்செல்லப்பட்டன. இப்பொருள்களில் சிலவற்றை இலண்டன் அருங்காட்சியகங்களில் வைத்துள்ளனர். சில அவ்வப்பொழுது ஏலம் விடப்பட்டு வருகின்றன. திப்புவின் அறிவியல் தொழில்நுட்ப அறிவிற்குச் சான்றாக இருந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவது திப்பு தனது இசைக்கருவிகள் கொண்ட அறையில் வைத்திருந்த புலிப் பொம்மை. இது புலி ஒன்று ஆங்கிலேயர் ஒருவரைக் கடிப்பதும், அப்பொழுது புலி உறுமுவதும், அந்த மனிதன் அலறும் சத்தமும் கொண்ட பொம்மையாகும். இப்போது இப்பொம்மை இலண்டன் விக்டோரியா ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் உள்ளது.

முன்னாள் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மதுபானத் தொழிலிலும் வானூர்தித் தொழிலிலும் பேர்போனவருமான விஜய் மல்லையா 2004ஆம் ஆண்டு இலண்டனில் நடைபெற்ற ஏலத்தில் திப்பு சுல்தானின் வாளை 175,000 பவுண்டுகள் கொடுத்து வாங்கினார் என்று ஒரு தகவல். அண்மையில் ஏலம் விடப்பட்ட ஒன்றரை மில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள தங்கத்தாலான புலி உருவம் கொண்ட திப்புவின் மகுடத்தை நாட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்ல இங்கிலாந்து அரசு தடை விதித்துள்ள செய்தியும் குறிப்பிடத்தக்கது.

இத்தகைய வீரமிக்க மாவீரனின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூர்ந்து அடுத்த தலைமுறைக்கும் எடுத்துரைப்போம்.

- கவிதா சோலையப்பன்

Pin It