enalankilli 350நம் தமிழ்ப் பெற்றோர்கள் திடீர்க் கல்வியாளர்களாகி உதிர்க்கும் அறிவு முத்துக்கள் பல. தமிழ் மண்ணில் தப்பித் தவறி குழந்தைகளைத் தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்கும் பெற்றோர் எவரையும் பார்த்து இந்தக் கல்வியாளர்கள் உடனடியாகக் கேட்கும் கேள்வி:

“உங்க புள்ளைக்கு இங்கிலீஷ் எப்படி வரும்?” தமிழ் தெரியாமல் போனால்தான் ஆங்கிலம் குழந்தைகளின் நாக்கில் நன்கு தவழும் என்பது இவர்களின் உறுதியான கருத்து. இது எவ்வளவு மோசமான குருட்டு நம்பிக்கை என்பதை இரு அமெரிக்க ஆய்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.

அமெரிக்கக் கல்வித் துறை ரமிரெஸ் எட் அல் 1991 (ramirez et al 1991)  என்ற பெயரில் பெரும் பொருட்செலவில் சுமார் 8 ஆண்டுகள் ஸ்பானியத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களிடம் ஆய்வொன்றை மேற்கொண்டது. அம்மாணவர்களுக்குச் சிறந்த பயிற்று மொழி ஆங்கிலமா? ஸ்பானியமா?

எனக் கண்டறிவதே ஆய்வின் நோக்கம். இந்த ஆய்வில் 2,342 மாணவர்கள் 3 குழுக்களாகக் கலந்து கொண்டனர். முதல் குழுவினர் ஆரம்பம் முதல் எல்லாப் பாடங்களையும் ஆங்கிலவழியில் மட்டுமே பயின்றனர்.

இரண்டாம் குழுவினர் முதல் ஓரிரண்டு ஆண்டுகள் ஸ்பானிய மொழியில் பயின்று விட்டு, பிறகு ஆங்கிலவழிக் கல்விக்கு மாறினர்.

மூன்றாவது குழுவினர் முதல் 4 அல்லது 6 ஆண்டுகள் அனைத்தையும் ஸ்பானிய மொழியில் மட்டுமே பயின்றாலும், ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாக மட்டும் கற்றுக் கொண்டனர். அதன் பிறகு அவர்கள் ஆங்கிலவழிக்கு மாறினர்.

சில ஆண்டு கழிந்து மூன்று குழு மாணவர்களிடமும் அறிவுத்திறன், ஆங்கில ஆற்றல் குறித்த சோதனைகள் நடந்தேறின, பின்னர் முடிவுகள் வெளியாயின.

தொடக்கத்திலேயே ஆங்கிலவழியில் பயின்ற மாணவர்களின் மூளையில் இங்கிலீஷ் பொங்கி வழியும் என நம் தமிழ்ப் பெற்றோர்கள் கண்ணை மூடிக் கொண்டு சொல்லி விடுவார்கள், அல்லவா?

ஆனால் கிடைத்த முடிவுகளோ வேறு. அனைத்தையும் தாய்மொழி ஸ்பானியத்தில் மட்டுமே பயின்ற 3ஆம் குழுவினர் அறிவுத்திறத்தில் மட்டுமல்லாது, ஆங்கில ஆற்றலிலும் முதலிடம் பிடித்தனர். அனைத்தையும் ஆங்கிலத்தில் பயின்ற முதல் குழுவினருக்கோ மூன்றாம் இடந்தான் கிடைத்தது.

இதே அடிப்படையில் தாமஸ், & கால்லியர் ஆய்வு அமெரிக்கக் கல்விதுறையின் நிதியுதவியுடன் 6 ஆண்டு (1996-2001) நடைபெற்றது. ஆனால் இப்போது அந்த 3 குழுக்களில் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். மொழிச் சிறுபான்மையினருக்காக இன்றுவரை உலகில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் மிகப் பெரியது இது. இப்போதுங்கூட தாய்மொழியில் பயின்ற ஸ்பானிய மாணவர்களே அறிவுத் திறனிலும் ஆங்கிலப் புலமையிலும் ஓங்கி நின்றனர்.

ஒரு மாணவர் தாய்மொழி தமிழில் எந்தளவுக்கு வலுவாக இருக்கிறாரோ, அவர் அந்தளவுக்கு ஆங்கிலம் உள்ளிட்ட உலகின் எந்த மொழியையும் எளிதில் கற்கலாம் என்றும், உலகின் எந்த அறிவைப் பயிலவும் தாய்மொழி தமிழே சிறந்தது என்றும் தமிழ்க் கல்வியாளர்கள் நீண்ட நாள் கூறி வரும் கூற்றுகளுக்கு இவ்விரு அமெரிக்க ஆய்வுகளே சான்றாகின்றன. நம் தமிழர்களுக்கு நம் தமிழறிஞர்களின் பேச்சுதான் காதில் விழாது. அவர்களே வியந்து நோக்கும் இந்த அமெரிக்கர்களின் பார்வையேனும் காதில் விழுமா?

Pin It