தமிழ் நாட்டின் பல மாவட்டங்களிலிருந்து, வேலை நிமித்தமாகவும், விவசாய நலிவு காரணமாகப் பிழைப்பு தேடியும், சமூக ஒடுக்குமுறை காரணமாகவும், வியாபாரம் தொடர்பாகவும் தமிழர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தில்லியில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர். தில்லி மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி சுமார் பதிமூன்று லட்சம் தமிழர்கள் தில்லியில் வாழ்கிறார்கள்.
தில்லியிலுள்ள கரோல் பாக், பகாட் கஞ்ச், சக்குர்பூர், ஆஸ்ரம், கல்யாண்புரி, திர்லோக்புரி, இந்தர்புரி, தக்ஷிண்புரி, மயூர்விகார், பப்பன்கிலா, தமிழர் என்க்லேவ், ஜனக்புரி, முனீர்க்கா, ஆர்.கே.புரம் முதலான பகுதிகளில் தமிழர்கள் பரவி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தில்லியின் துணை நகரமான துவாரகாவிலும், காஜியாபாத், நொய்டா, குர்கான், ஃபரிதாபாத் ஆகிய தலைநகர் மண்டலப் பகுதிகளிலும் தமிழர்கள் குடியேறி வாழத் தலைப்பட்டுள்ளனர். தில்லியில் தமிழர்களின் குடியேற்றம் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
தமிழர்களில் ஒரு பகுதியினர் தில்லி மாநில அரசு மற்றும் மத்திய அரசு அலுவகங்களில் தங்களின் கல்வித் தகுதிகளுக்கேற்ப, IAS, IPS முதலான உயர்பதவிகளும், நடுத்தர மற்றும் நான்காம்தர வேலைகளும் செய்து வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை முடித்த முதல் தலைமுறையினர் தற்போது கௌரவமான பணிகளில் சேர்ந்துள்ளனர். பள்ளி, கல்லூரி ஆசிரியர்களாகவும், வங்கி அதிகரிகளாகவும், கணினி நிபுணர்களாகவும் திகழ்கின்றனர்.
கல்வி அறிவு பெறாத பாமர மக்களில் பெண்கள் வீட்டு வேலைகளும், ஆண்கள் கூலி வேலைகளும் செய்து வருகின்றனர். ஓரளவு கல்வி அறிவு பெற்ற தமிழர்கள் சொந்தமாகச் சிறுதொழில்கள் நடத்தியும், சிறு கடைகள் வைத்து வியாபாரம் செய்தும் வருகின்றனர். இன்னும் சிலர் தொழில் முனைவோர்களாகவும், ஹோட்டல்களில் தொழிலாளிகளாகவும், சிறுதொழில் முதலாளிகளாகவும் உள்ளனர்.
தில்லியில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பான்மையோர் நடுத்தர வசதிபடைத்தவர்களாகவும் ஏழைகளாகவும் உள்ளனர். இவர்களின் பிள்ளைகள் படிப்பதற்குத் தில்லியில், தில்லித் தமிழ் கல்விக் கழகப் (Delhi Tamil Education Association-DTEA) பள்ளிகள் இருக்கின்றன. இங்குத் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை தமிழ் மொழி கற்பிக்கப்பட்டு வருகிறது. தில்லி நகராட்சிப் (Municipal Corporation of Delhi) பள்ளிகள் ஒன்றிரண்டில் தமிழ் மொழி தொடக்கக் கல்வி நிலையில் பாடமாக உள்ளது.
தேசிய அளவில் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான், ஆந்திரா, தமிழ்நாடு, மற்றும் தெலங்கானா ஆகிய ஏழு மாநிலங்களில் தான் அதிகளவில் கல்லூரிகள் உள்ளன என்றும்; நாடு முழுவதும் பள்ளிப்படிப்பை முடித்து மூன்று கோடிமாணவர்கள் கல்லூரிப் படிப்புக்குச் செல்கின்றனர் என்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சக ஆண்டறிக்கை (2014-2015) குறிப்பிடுகின்றது.
தில்லியிலுள்ள தமிழ்ப் பள்ளிகள் மற்றும் நகராட்சிப் பள்ளிகளிலிருந்து ஆண்டுதோறும் பள்ளி இறுதிப் படிப்பை (+2) முடித்து வெளியில் வரும் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் தில்லிப் பல்கலைக்கழகக் கலை-அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை (B.A/B.Sc./B.Com) வகுப்புகளில் சேர்ந்து படிக்க வேண்டியதுள்ளது. தில்லியிலுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சென்று உயர்கல்வி பயிலவும், இந்தியக் குடிமைப் பணித் தேர்விற்கான(Indian Civil Services) பயிற்சி பெறவும் பல்வேறு கனவுகளுடன் தமிழ்நாட்டிலிருந்து தில்லிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
ஆனால், தமிழ் மாணவர்கள் சேர்ந்து படிக்கத் தலைநகர் தில்லியில் தமிழர்களுக்கான கல்லூரி எதுவும் இல்லை. (தமிழ்மொழியை ஒரு பாடமாகப் படிப்பதற்கு ஸ்ரீவெங்கடேஸ்வரா கல்லூரி, தயாள்சிங் கல்லூரி ஆகிய இரண்டு கல்லூரிகள் மட்டுமே தில்லிப் பல்கலைக்கழகத்தில் உள்ளன). தில்லி பள்ளிகளில் பயின்ற தமிழ் மாணவர்கள் பெரும்பாலோருக்கும் தில்லியிலுள்ள கல்லூரிகளில் இடம் கிடைத்துச் சேருவது என்பது சற்றுக் கடினமாகவே உள்ளது. காரணம், தில்லியில் அனைத்துப் பள்ளிகளிலும் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டமே இருப்பதால், இம்மாணவர்கள் தனியார் கான்வென்ட் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்களோடு போட்டி போட வேண்டிய நிலையில் உள்ளனர்.
தில்லியில் இந்தி மொழிச் சூழலில் வளர்ந்து வரும் தமிழ் மாணவர்கள் பெரும்பாலோரால் தில்லியிலுள்ள சிறந்த கல்லூரிகளில் சேர முடிவதில்லை. ஒவ்வோர் ஆண்டும் நிர்ணயிக்கப்படும் உயர்ந்த கட்-ஆப்(98%) மதிப்பெண்களைத் தமிழ் மாணவர்களால் எட்ட முடிவதில்லை. தனியார் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மற்றும் பொது சமூக மாணவர்களோடு தமிழ் மாணவர்கள் ஈடு கொடுக்க முடியாமல் திணறுகின்றனர். இதனால் தில்லியிலுள்ள கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் நூற்றுக்கணக்கான தமிழ் மாணவர்கள் திண்டாடுகின்றனர். உயர் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலோ விளையாட்டு, சங்கீதம், மற்றும் பாட்டுப் போட்டி போன்ற இதர தகுதி (Extracurricular Activities) அடிப்படையிலோ இடம் கிடைப்பதும் அரிதாகவே உள்ளது.
தில்லிப் பல்கலைக்குட்பட்ட 61கலை-அறிவியல் கல்லூரிகள் உள்ளன. மொத்தமுள்ள 54,000 இளங்கலைப் பிரிவு இடங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜூன்மாதம் மாணவர் சேர்க்கைக்கான பதிவு நடைபெறும். தில்லிப் பல்கலைக்குட்பட்ட ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி மற்றும் தயாள்சிங் கல்லூரிகளில் தமிழ்மொழிக்கான ஒதுக்கீடு காணப்படுகிறது. உயர்ந்த கட்-ஆப் (98%) மதிப்பெண்களை எதிர்கொள்ள முடியாத மாணவர்களில் மொத்தம் 10-15 தமிழ் மாணவர்களுக்கு மட்டுமே தமிழ் ஒதுக்கீட்டின்(TamilQuota) கீழ் இடம் கிடைக்கிறது. தகுதி அடிப்படையில் குறைந்த பட்சம் 60% வரை மதிப்பெண்கள் பெற்ற தமிழ் மாணவர்கள் தமிழ் மொழி ஒதுக்கீட்டின் கீழ் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.
இவர்களில் பெரும்பாலோர் டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் என்னும் அமைப்பின்கீழ் செயல்படும் தமிழ்ப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள். தமிழ் நாட்டில் மேல்நிலைக் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றவர்களில் ஒன்றிரண்டு மாணவர்கள் ஒவ்வோராண்டும் தில்லியிலுள்ள கல்லூரிகளில் சேர வருவதுண்டு. தில்லிப் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் சேரும் மாணவ மாணவிகளுக்கு மதிப்பெண் தகுதி அடிப்படையில் தரமான விடுதி வசதிகளும் உள்ளன. தில்லியில் வந்து தங்கி, இந்தியக் குடிமைப் பணித் தேர்வுகளில் பங்குபெற விரும்பும் தமிழக மாணவர்கள் இத்தகைய அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கடந்த கல்வி ஆண்டு (2015-2016)முதல் தில்லிப் பல்கலைக்கழகம் Choice Based Credit System (CBCS) என்னும் விருப்ப அடிப்படையிலான மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் பிற துறை மற்றும் பிற மொழியைச் சேர்ந்த மாணவர்களும் தமிழை ஒரு விருப்பப் பாடமாக தேர்வு செய்து கற்கும் வாய்ப்பு உள்ளது. தமிழை மொழிப்பாடமாகவும் (Language Course), முக்கிய விருப்பப் பாடமாகவும் (Discipline Course) தேர்வு செய்து கற்கும் நடைமுறை தற்போதைய CBCS மூலம் நிறைவேறியுள்ளது. தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழுக்கும், தமிழ்மொழி பயிற்றுவித்தலுக்கும் கிடைத்த மிகப் பெரிய அங்கீகாரம் இது. தமிழ் ஒதுக்கீட்டின் கீழ் இடம் கிடைக்கும் மாணவர்கள் மொழிப்பாடத்தோடு தமிழை விருப்பப் பாடமாகவும் தேர்வு செய்து படிக்கலாம்.
இந்தியக் குடிமைப்பணித் தேர்வுப் பாடத்திட்டத்தில் தமிழும் ஒரு பாடமாக இருப்பதால் தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.ஏ தமிழ் இலக்கியப் பிரிவில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளாகத் தமிழகக் கல்லூரிகளில் இளங்கலை தமிழ் இலக்கியப் பிரிவில் இடம் கிடைப்பது கடினமான ஒன்றாக உள்ளது என்பதை இவ்விடத்தில் மாணவர்கள் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஃபில் மற்றும் பிஎச்.டி உயர் ஆய்வுப் படிப்புகளும், தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ் எம்.ஏ.,எம். ஃபில் மற்றும் பிஎச்.டி ஆகிய உயர் ஆய்வுப் படிப்புகளும் நடைபெற்று வருகின்றன.
தில்லியிலுள்ள மிராண்டா ஹவுஸ், லேடி ஸ்ரீராம் ஆகிய இரண்டு மகளிர் கல்லூரிகளிலும் தமிழ்த் துறை செயல்பட்டு வந்தது. ஒவ்வோர்ஆண்டும் தமிழ் மாணவிகள் சேர்ந்து தமிழ் பயின்று பயன் பெற்று வந்தனர். அங்குப் பணியாற்றி வந்த பேராசிரியைகள் ஓய்வு பெற்ற பின்னர் அப்பதவிகள் நிரப்பப்படாமல் இரண்டு கல்லூரிகளிலும் தமிழ்த் துறை பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டுவிட்டது. இதனால் அக்கல்லூரிகளில் தமிழ் பயில மாணவிகளுக்கு இப்போது இடம் வழங்கப்படுவதில்லை. அரை நூற்றாண்டு காலமாகத் தமிழ் மாணவிகள் தமிழ் பயில்வதற்குக் கிடைத்துவந்த வாய்ப்புப் பறிக்கப்பட்டுவிட்டது. தில்லிவாழ் தமிழர்களுக்கு இது மிகப்பெரிய இழப்பே.
தில்லியில் கலை அறிவியல் கல்லூரிகளில் இடம் கிடைக்காத, பள்ளிப் படிப்பை முடித்த இதர நூற்றுக்கும் மேற்பட்ட முதல் தலைமுறை தமிழ் மாணவர்கள், வேறு வழியில்லாமல் கடைசி வாய்ப்பாக திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தில் (School of Open Learning) சேர்ந்து படிக்கின்றனர். சில மாணவர்கள் தில்லியில் பெற்றோரைப் பிரிந்து தமிழ் நாட்டில் சென்று தங்கள் உயர் கல்வியைத் தொடர்கின்றனர். கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்காமல் பள்ளிப்படிப்போடு கல்வியை முடித்துக் கொள்ளும் அவல நிலையும் சில மாணவர்களுக்கு ஏற்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் படிக்கும்போதே சிறிய வேலைகளில் சேரும் கட்டாயத்திற்கும் ஆளாகின்றனர்.
தமிழ் மாணவ-மாணவிகள் தில்லியிலுள்ள கல்லூரிகளில் சேர்ந்து படிக்க இடம் கிடைக்காமல் திண்டாடுவது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. தங்கள் பிள்ளைகளுக்காக ஒவ்வொரு கல்லூரியாக ஏறி இறங்கி இடம் கிடைக்காமல் பரிதவிக்கும் பெற்றோர்களை ஒவ்வோர் ஆண்டும் காண நேரிடுகிறது. ஆண்டுதோறும் இது தொடர்கதையாக உள்ளது. மொத்தத்தில் தில்லிவாழ் தமிழர்களுக்குக் கல்லூரிப் படிப்பு என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
ஆந்திரம், கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப் போன்ற மாநிலங்களின் மொழி சார்ந்த அமைப்புகள் டில்லியில் தங்களுக்கெனக் கல்வி நிறுவனங்களை நிறுவிக் கல்விச் சேவை புரிந்து வருகின்றன. இதேபோலத் தமிழர்களுக்காகத் தில்லியில் ஒரு கல்லூரி நிறுவப்பட வேண்டும். தில்லிவாழ் தமிழர்களுக்காகத் தில்லித் தமிழ்ச் சங்கம், தில்லித் தமிழ்க் கல்விக் கழகம்(DTEA) போன்ற தமிழ் அமைப்புகள் டில்லியில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். தமிழ் அமைப்புகள் சார்பில் தமிழர்களுக்கெனத் தில்லியில் ஒரு கலை- அறிவியல் கல்லூரி இருப்பின் தமிழ் மாணவ மாணவியர் 70 -75 சதவீதம் பேருக்கு இடம் கிடைத்து கல்வி பயில வாய்ப்பு உள்ளது.
தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்துப் பெற்றுள்ள நிலையில் டில்லியில் தமிழ் உயர் ஆய்வு மையம் அமையவும், தில்லியிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் தமிழ் மாணவர்கள் பி.எஸ்சி, பி.காம் ஆகிய பிரிவுகளிலும் தமிழை ஒரு பாடமாக எடுத்துப் படிக்கவும், தமிழ் மாணவர்களுக்குத் தில்லியிலுள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 2 முதல் 3 சதவீதம் வரை மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு வழங்கவும், தில்லிப் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும், மிராண்டா ஹவுஸ், லேடி ஸ்ரீராம் ஆகிய இரண்டு மகளிர் கல்லூரிகளில் பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தமிழ்த் துறைகளை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவும் தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள், அமைப்புகள் மற்றும்தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பது தில்லிவாழ் தமிழர்கள் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- முனைவர் ச.சீனிவாசன், தமிழ் இனைப்பேராசிரியர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரி, தில்லிப் பல்கலைக்கழகம், புது தில்லி- 110 021