மதுரை புத்தகத் திருவிழாவுக்கு ஏராளமான எழுத்தாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் வருகைதந்து பல்வேறு புத்தகங்களை வாங்கிச் செல்வதைக் காணமுடிந்தது. அதில் பிரபலமானவர்களைச் சந்தித்து அவர்களிடம் சமீபத்தில் படித்த, அவர்களுக்குப் பிடித்த புத்தகங்கள் குறித்துக் கேட்டபோது அவர்களது பதில்.
கே. சந்துரு, உயர் நீதிமன்ற நீதிபதி
திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் மகள் சிந்துராஜசேகரன் எழுதிய ‘கலை டாஸ்கோபிக் ரிப்ளெக்ஷன்ஸ்’ என்னும் நாவலை சமீபத்தில் படித்தேன். திருவனந்தபுரத்தில் வாழ்ந்த நடுத்தரக் குடும்பத்துப் பெண்ணையும், சென்னை, தஞ்சைப் பகுதியில் வாழ்ந்த அவளது உறவினர்களையும் வைத்து எழுதப்பட்ட இந்த நாவல் 1894 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரையில் கதைக்களமாக உள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சி முதல் மறைந்த பிரதமர் இந்திராகாந்தி ஆட்சி வரையில் உள்ள இந்திய நாட்டின் நிலையை விளக்கும் வகையில் உள்ள இந்தப் புத்தகத்தில் பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது சிறப்பாகும். இது போன்ற பதிவுகள் இளைய தலைமுறையினரின் மனதில் எழும் கேள்விகள், அதற்கான தீர்வு சிந்தனைகளை அறியும் வகையில் உள்ளன.
என். நன்மாறன், மதுரைகிழக்கு - சட்டப்பேரவை உறுப்பினர்
புத்தகக் கண்காட்சியில் பெரியார் நூல்களையும், உலக வரலாற்று நூல்களையும் வாங்கியுள்ளேன். சமீபத்தில் நெப்போலியன் வாழ்க்கை வரலாறாக என். சொக்கன் எழுதிய நூலைப் படித்தேன். அதேபோல, நடிகர் ராஜேஷ் எழுதிய உலகப் புகழ் பெற்ற திரைப்படங்கள் என்னும் நூலையும் படித்தேன்.
அந்நூலில் இந்தியத் திரைப்படங்கள், குறிப்பாக தமிழகத் திரைப்படங்கள் குறித்துக் கூறப்படாவிட்டாலும், அரிய பல தகவல்களைத் தொகுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இளசை சுந்தரம், முன்னாள் இயக்குநர், மதுரை வானொலி.
சமீபத்தில் வெ, இறையன்பு எழுதி ‘ஆற்றங்கரை’ என்னும் கவிதைத் தொகுப்பு நூலைப் படித்தேன். அதில் மேலைநாட்டு, இந்தியக் கவிஞர்களது கவிதைகள் தொகுக்கப்பட்டிருந்தன. அதேபோல அவரது ‘ஏழாவது அறிவு’ என்னும் நூலையும் சமீபத்தில் படித்தேன். அதில் தன்னம்பிக்கையை மேம்படுத்தும் வகையில் பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. பல கவிதை நூல்களை சமீபத்தில் படித்தபோது அதில் நம்பிக்கை தரும் கவிதைகள் இடம் பெற்றிருந்தன.
அவற்றில் ஒற்றைக்காலில் நிற்கும் செடிகள் கூட உயரத் துடிக்கும் போது, இரண்டு கால்களைக் கொண்ட இளைஞனே நீ முன்னேற வேண்டாமா? என்பன போன்ற கவிதைகள் மனதைக் கவர்வதாக இருந்தன.