தமிழ்க் காப்பிய இலக்கியங்களுள், மணி மேகலைக்குத் தனித்த ஓர் இடமுண்டு. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று, இரட்டைக் காப்பியங்களுள் ஒன்று என்கின்ற சிறப்புகளுக்கெல்லாம் அப்பால், மணிமேகலை என்கின்ற பெண்ணைக் காப்பியத்தின் தலைமைமாந்தராக அமைத்திருக்கின்றது. இதன் காரணமாக, பொதுவாகக் காப்பியங்களில் பின் பற்றப்படும் ஆடவர் வீரப்பண்புக்கு மாற்றாக மகளிர் வீரப்பண்புகளும் இக்காப்பியத்தில் விதந்தோதப்படுகின்றன. மட்டுமின்றி, வீரப்பண்பு என்பது, உடல் வலிமை சார்ந்த மறத்திற்கு மாறாக, ஆன்மவலிமை சார்ந்த அறப்பண்பாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், இக்காப்பியம் தன் கட்டமைப்பிலும் கருத்தியலிலும் புத்தசமயச் சார்புகொண்டு ஒரு சமயக் காப்பியமாகத் திகழ்கின்றது. மணிமேகலையில் இடம்பெறும் பௌத்த சமயக் கருத்தியல், ‘தேராவாத’ப் (ஹீனயானம்) பிரிவு சார்ந்ததா, ‘மகாயான’ப் பிரிவு சார்ந்ததா என்ற விவாதமும் இருக்கின்றது. மயிலை.சீனி.வேங்கடசாமி, தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் தேராவாதப் பௌத்தக் கருத்தியல்தான் மணிமேகலையில் இருக்கிறது என்று குறிப்பிட, எஸ்.வையாபுரிப்பிள்ளை அதில் இடம்பெறும் துடிதலோகம், எண்ணில் புத்தர்கள் ஆகிய கருத்து களைக்கொண்டு மகாயானம் என வரையறுக்கின்றார். இதனைத் தொடர்ந்து விவாதித்த பேராசிரியர் நா.வானமாமலை, தேராவாதம் நிலவிய காலத்தி லிருந்த மற்றொரு பௌத்தசமயப் பிரிவாகிய ‘மகா சங்கீதத்’தின் கருத்துகளும் இதில் இடம் பெற்று உள்ளனவேயன்றி, மகாயானப் பிரிவின் கருத்துகள் இதில் இடம்பெறவில்லை என்று குறிப்பிடுகின்றார்.

பிறப்பு, இறப்பு சார்ந்த உயிரின் பன்னிரு நிதானங்கள் (பேதைமை, செய்கை, உணர்வு, அருவுரு, வாயில் முதலியன), சார்புகளையறுத்து வீடுபேறு பெற துக்கம், துக்க உற்பத்தி, துக்க நிவாரணம், துக்க நிவாரண மார்க்கம் எனும் நால்வகை உண்மைகளை அறிதல் - அநித்தம், துக்கம், அநான்மா (ஆன்மா இன்மை), அசுசி (காமத்தைச் செறுத்தல்) ஆகிய நான்கினை உணர்ந்து பற்றறுத்தல் - புலனடக்கம், துறவு, வீடுபேறு முதலான புத்தமதத்தின் தத்துவ அடிப்படைகளுக்கு அப்பால், புத்தசமயத் தத்துவத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்ட அளவைவாதமும் மணிமேகலையில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மணிமேகலையில் பௌத்தசமயக் கருத்தியல்கள் பாத்திரப்படைப்பிலும் பிறர் கூற்றிலும் ஆங்காங்கே இடம்பெற்றிருந்தாலும், தத்துவ அடிப்படையில் மிக விரிவாக 29ஆம் காதையான ‘தவத்திறம்கொண்டு தருமம் கேட்ட காதை’யில் விரிவாகப் பேசப்பட்டுள்ளது. மேலும், 27ஆம் இயலாகிய ‘சமயக்கணக்கர்தம் திறம்கேட்ட காதை’யில் பிற சமயக் கருத்தியல்களோடு, பௌத்த சமயத்தின் அளவையியல் குறித்த விளக்கங்களும் விவாதங்களும் இடம்பெற்றுள்ளன.

அளவையியல் - விளக்கம்

அளவையியல் என்பது, அறிவைப்பற்றிப் பயிலும் ஓர் ஆய்வுத்துறை. இது அறிவுத்தோற்ற வியலின் (Epistemology) துணைப்பிரிவாகும். அளவையியல் தத்துவத்தின் எல்லாக்களங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது வாதிடலுடனும் விவாதத்துடனும் தொடர்புடையது. விவாதமே, ஒரு பொருளின் உண்மைப்பரப்புக்குள்ளும் உண்மை முடிவுக்கும் இட்டுச்செல்கின்றது. அளவையியல் சரியானவற்றை சரியல்லாதனவற்றிலிருந்து வேறு படுத்திக் காட்டுவதற்கான காரண - காரிய முறை களையும் சித்தாந்தங்களையும் தன்னுள் கொண்டு உள்ளது. எனவே, உண்மை மற்றும் தவறு குறித்த அடிப்படைத் தத்துவமாக இருக்கின்றது. “காரணம் (Reason) மட்டுமே அளவைவாதம் எனும் பெயர் பெறும் தகுதியுடையது. இது தீர்ப்புரையை சாராம்சமாகக் கொண்ட ஒரு கொள்கை” என்று ருசியநாட்டு அறிஞர் ஸ்த்செர்பட்ஸ்கி (Stcherbatsky) கூறுகின்றார். மேலும், இதனை ஊகம் (Inference) மற்றும் நேரியல் வாத முறை (Syllogism) சார்ந்த கொள்கை யெனவும் விளக்குகின்றார் (1994: ப.1). அளவை வாதம் கணிதம் உள்ளிட்ட அறிவியல் துறைகளிலும் மொழியியலிலும் தத்துவத்திலும் சிறப்பாகப் பயன் படுத்தப்படுகின்றது. பொதுவாக, அளவையியல் மேற்கத்திய மரபிலிருந்து உருவானதென்றும், அரிஸ்டாடிலின் அனுமானம், முடிவு என்பனவற்றை உள்ளடக்கிய ‘நேரியல்வாதமுறை’யே (Syllogism) இதன் தொடக்கப்புள்ளி என்றும் கூறுவர். மேலும், இந்திய அளவையியல் தத்துவமரபே அரிஸ்டாடிலின் தாக்கத்தால் என்று கூறுவோருமுளர். ஆயின், அரிஸ்டாடில் பயன்படுத்திய அளவையியல் குறித்த தத்துவக் கலைச்சொற்கள் யாதொன்றும் இந்திய அளவையியலில் இடம்பெறவில்லை. எனவே, மேற்கூறிய தீர்ப்பு தவறானதென்று கூறுவோருமுளர்.

பௌத்த அளவையியலின் வரலாறு

இந்திய அளவைவாதத்தின் வரலாறு கோதமரின் நியாயவாதம், அதன் சகோதர சிந்தனைப்பள்ளியான வைசேடிகம், அதன்பின்னர் புத்தம் என விரிந்து செல்கின்றது. புத்தத்திற்கு முந்தைய அளவைவாதம் பிராமணீய - வைதீகச்சார்பு கொண்டது. அளவையியல் பௌத்த சமயத்தின் அடிப்படைக் கருத்தியல்களுள் ஒன்றாகும். இந்த அளவையியல் புத்தரின் மறைவுக்குப் பிறகு, பௌத்த சமயத்தின் விரிவானதொரு தத்துவ மாக வளர்க்கப்பட்டுள்ளது. புத்த அளவைவாத மரபு வசுபந்து - திக்நாகர் - தர்மகீர்த்தி எனும் தொடர்ச்சி யான ஆசிரிய - மாணவர் பரம்பரை கொண்டது. திக்நாகர் (கி.பி.400 - 480) காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பார்ப்பனர்.

நாலந்தாவில் மகாயானப் பிரிவைச்சார்ந்த வசுபந்துவின் மாணவர். தர்மகீர்த்தி (கி.பி.600 - 660) சோழநாட்டுத் திருமல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்; திக்நாகரின் மாணவர்; ஈஸ்வரசேனரிடம் கல்வி பயின்றவர். இவர்களுக்கு முன்னதாக நாகார்ஜூனர் (கி.பி.2ஆம் நூற்றாண்டு) புத்த அளவைவாதத்தில் சிறப்பிடம் பெறுகிறார். தென்னகத்தைச் சார்ந்த வராகக் கருதப்படும் இவர், ‘மேல்பாதை’ எனக் கருதப்படும் மகாயானப்பிரிவில் ‘மாத்யமகா’ (நடுப்பாதை) தத்துவத்தை வலியுறுத்தியவர். ‘இந்தியாவின் காண்ட்’ என்று ‘ஸ்த்செர்பாட்ஸ்கி’யால் அழைக்கப்பட்ட ‘நாகார்ஜூனர்’, மகாயானத்தின் சூனியவாதக் கருத்தியலின் அடிப்படையில் புத்த சமயத்தின் அளவையியலை வளர்த்தெடுத்தார்.

சூனிய வாதத்தை முன்னிறுத்திய இவரது படைப்புகளுள் மூலமத்யமக காரிகா, யுக்திஷ் அஷ்டிகா, சூன்யதாஸப்ததி, விக்ரஹவ்யவர்த்தினி, வைதல்யப்ரகரணா என்பன குறிப்பிடத்தக்கவை. நாகார்ஜூனர் நியாயவாதத்தின் பஞ்சவயக் (5 உறுப்புகள் : பக்கம், ஏது, திட்டாந்தம், உபநயம், நிகமனம்) கொள்கைக்கு மாற்றாக ‘சதுஸ்கோடி’ (நான்கு மூலைகள்) கொள்கையை உருவாக்கியவர். உடன்படல், மறுத்தல், உடன் படலும் மறுத்தலும், உடன்படலுமில்லை மறுத்தலு மில்லை என்பனவற்றை வாதத்தினுடைய நான்கு எல்லைகளாகக் கட்டமைத்தார். தனக்கு முன்பிருந்த அளவைவாதிகள் கட்டமைத்த அளவைவாதத்தின் 16 கருத்து வகையினங்களையும் (பிரமாணா, பிரமேயா, ஸம்ஸயா, ப்ரயோஜனா, தர்கா, வாதா முதலியன) நாகார்ஜூனர் ‘வைதல்ய ப்ரகரணா’ நூலில் முற்றிலும் மறுத்து நிராகரிக்கிறார். திக்நாகரின் நூல்களுள் ஹேதுசக்ரதமரு, பிரமாணசமுச்யா ஆகிய இரண்டும் குறிப்பிடத்தக்கவை.

திக்நாகர் நியாயவாதி களின் ஐவகை உறுப்புக்கொள்கையை பிரத்யக்சம் (காட்சி) அனுமானம் என இரண்டாகச் சுருக்கினார். தர்மகீர்த்தியின் அளவையியல் நூல்களாக ஹேதுபிந்து, நியாயபிந்து, வாதநியாயா, பிரமாணவ வார்த்திகா என்பன குறிப்பிடப்படுகின்றன. இவற்றுள் நியாய பிந்து முதன்மையான நூல். தர்மகீர்த்தி, திக்நாகரின் இரு அளவை (பிரத்யக்சம், அனுமானம்) முறைகளையே வழிமொழிகிறார். அனுமானத்தை ஸ்வார்த்த அனுமானா, பரார்த்த அனுமானா என இரண்டாக வகைப்படுத்துகிறார். மேற்கூறிய புத்த அளவையியல் நூல்களெல்லாம் மகாயான புத்தப்பிரிவைச் சார்ந்தவை. இந்நூல்கள் பலவும் சமஸ்கிருத மொழியில் எழுதப் பட்டுப் பின்னர் திபெத்திய மொழியில் பெயர்க்கப் பட்டவை. திபெத்திய மொழிபெயர்ப்பின் வாயிலாகத் தான் இந்நூல்கள் பாதுகாக்கப்பட்டு மீட்டெடுக்கப்பட்டன. ஆயின், ஹீனயான புத்தப்பிரிவைச் சார்ந்த அளவை நூல்கள் நிச்சயமாக இருந்திருக்க வேண்டு மென செர்பட்ஸ்கி குறிப்பிடுகின்றார் (1994: ப.28).

இந்தியத் தத்துவமரபில் உலகாயதம், பௌத்தம், சாங்கியம், நியாயிகம், வைசேடிகம், மீமாம்சம் ஆகிய அறுசமயத்தவர் அளவையியலைப் பயன்படுத்தியதாக மணிமேகலையில் இடம்பெற்றுள்ள ‘சமயக்கணக்கர்தம் திறம்கேட்ட காதை’யின்வழி அறிகிறோம். ஆனால், இத்தத்துவங்களையெல்லாம் எடுத்துரைப்பவனாக, வைதீக மதத்து அளவைவாதியை மணிமேகலை குறிப்பிடுகின்றது. வைதீக மதத்து அளவைவாதிகள், நியாயவாதிகள் எனும் பொதுப்பெயரால் அழைக்கப் பட்டனர். பௌத்த சமயத்தில் அளவையியல் ஒரு தனிப்பிரிவாக உருவாவதற்கு முன்னர், வைதீக நியாயவாதிகளே இதனைத் தோற்றுவித்து வளர்த் தெடுத்துள்ளனர்.

புத்த அளவையியலும் வாத விதிமுறைகளும்

புத்த அளவைவாதம் வாதத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டிருக்கின்றது; வாத விதிகளை உருவாக்கியிருக்கின்றது; அஸங்கரின் ‘அபிதர்ம ஸமுச்சயா’ (கி.பி.4 ஆம் நூற்றாண்டு) வாதத்தின் விதிமுறைகளை விரிவாகப் பேசுகின்றது. வாதத்தை வாதம், ப்ரவாதம், விவாதம், அபவாதம், அனுவாதம், சுவவாதம் என வகைப்படுத்துகின்றது. மேலும், வாதம் நிகழும் இடங்களாக அரச இல்லம், அலுவலர் இல்லம், பொது சபை, துறவியர் - பிராமணர் முன்னர் என்பவற்றைக் குறிப்பிடுகின்றது. வாதத்தின் அடிப்படையும், வாதத்தின் அணிநலன்களும் (கிராமியமற்றது, எளிமை, ஆற்றல்மிக்க வெளிப்பாடு, தொடர்புடைமை, தொகுத்துரைத்தல்), வாதத்தில் தோற்கடிக்கப்படும் புள்ளிகளும் இந்நூலில் விரிவாகப் பேசப்பட்டுள்ளன (1999: பக்.3-41). தமிழ்க்காப்பிய வரலாற்றில் மணிமேகலை வாதத்திற்கான அடிப்

படைத் தத்துவங்களை, விதிமுறைகளைப் பேசுகிறது. நீலகேசியும் குண்டலகேசியும் அளவையியலின் அடிப்படையில் தம் சமயக்கருத்தியலைப் பிற சமயத்தாரோடு விவாதித்து உண்மையை நிறுவுகின்றன.

மணிமேகலையில் நியாயிக அளவையியல்

மணிமேகலையில் ‘சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை’யில், புத்த சமயத்திற்கு முன்பிருந்த நியாயவாதிகளின் அளவைவாதம் விளக்கப்பட்டிருக் கிறது (5-85 அடிகள்). அத்துடன் சைவம், வைணவம், ஆசீவகம், நிகண்டவாதம், சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய சமயப்பிரிவினரின் தத்துவ நிலைப்பாடுகளும் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. மாதவன் (துறவோன்) வடிவம்பூண்ட மணிமேகலை வஞ்சிமாநகரத்துக்குள் சென்று சமயவாதிகள் இருக்குமிடம் அடைந்து வைதீக மார்க்கத்து அளவைவாதியை முதலில் சந்திக்கின்றாள்.

“நவைஅறு நன்பொருள் உரைமினோ என

சமயக்கணக்கர் - தம்திறம் சார்ந்து

வைதிகமார்க்கத்து அளவைவாதியை

எய்தினள்”                                     (பாடலடிகள் 1-4)

வைதிக மார்க்கத்து அளவைவாதி, நியாய வாதத்தின் அளவையியலை விவரிக்கின்றார். அவை பத்துவகையான அளவைமுறைகளாக விளக்கம் பெறுகின்றன. வேதவியாதன், கிருதகோடி, சைமினி ஆகியோர் பொருளின் உண்மையை உணர்தற்கு முறையே 10,8,6 அளவை முறைகளைப் பகர்ந் துள்ளதாக விளக்குகிறார்.

 1. காண்டல் (பிரத்யக்ஷம்) - ஐம்புலன்களால் உரைக்கப்படுவது
 2. கருதல் (அனுமானம்) - பிளிறல் ஒலியைக் கேட்டு யானை என அறிதல் (அனுமானத்து அனுமேயத் தகைமை உணர்தல்)
 3. உவமை (திருஷ்டாந்தம்) - ‘பசுபோல் விலங்கு’ ஒப்புமை அளவை
 4. ஆகமம் - அறிவன் நூலால் ‘போகபுவனம்’ (மேல், கீழுலகு) உண்டெனப் புலங் கொளல்
 5. அருத்தாபத்தி - ஆயர்குடி கங்கையில் இருக்கிறது எனில் கரையில் இருக்குமென அறிதல்
 6. இயல்பு - யானைமேல் இருப்போனிடம் அதைக்கொடு என்றால் அங்குசத்தைக் கொடுத்தல்
 7. ஐதீகம் - உலகத்தார் உரை: ‘இம்மரத்தில் பேய்உண்டு’ எனல்
 8. அபாவம் - இன்மை; ஒருபொருள் அவ்விடத்து இல்லை எனல்
 9. ஒழிபு - இராமன் வென்றான் என்றால் இராவணன் தோற்றமை அறிதல்
 10. உள்ளநெறி (சம்பவம்) - இரும்புத்துண்டின் சுழற்சியால் காந்தம் கவர்கிறது என அறிதல்

இப்பத்தினையும் தனித்தனியே விளக்கிய பின்னர் அவற்றுக்கு எட்டு பிரமாணாபாசங்கள் (விலக்கப்பட்ட குற்றங்கள்) உள்ளன என்கிறார். அவை:

 1. சுட்டுணர்வு - உள்ளது எனும் உண்மையை மட்டுமறிதல்
 2. திரியக்கோடல் - சிப்பியை வெள்ளி என உணர்தல்
 3. ஐயம் - மரக்கட்டையா? மகனா? என சந்தேகப்படல்
 4. தேராது தெளிதல் - ஆராயாது மரக் கட்டையை மகனென்று உணர்தல்
 5. கண்டு உணராமை - புலி அருகில் வருவதைக்கண்டும் அறியாமை
 6. இல்வழக்கம் - முயற்கொம்பு போல் வருவன
 7. உணர்ந்ததை உணர்தல் - கடும்பனிக்கு நெருப்பு மருந்து என்பதை முன்பே அறிந்திருந்தும் திரும்ப உணர்தல்
 8. நினைப்பு - இவர் உனக்குத் தாய், தந்தையர் என்று பிறர் கூறியவழி ஆராயாது ஏற்றல்

இறுதியாக, பிருகஸ்பதி (உலகாயதம்), ஆதிசினன் (புத்தம்), கபிலன் (நியாயிகம்), அக்கபாதன் (சாங்கியன்), சணாதன் (வைசேடிகம்), சைமினி (மீமாஞ்சகம்) என அளவைமுறைகளை ஏற்றுக் கொண்ட அறுவகைச் சமயங்களையும் அச்சமயங்களின் ஆசிரியர்களையும் குறிப்பிடுகிறார். இவையெல்லாம் பிற சமயத்தாரின் ‘பரபக்க’க் (பிற சமயம்) கருத்து களாகவே எடுத்துரைப்புச் செய்யப்பட்டுள்ளன. மணிமேகலையில் பௌத்த அளவையியல், அளவை வாதம் பற்றிய புத்த சமயத்தின் ‘சுபக்க’க் (தற்சமயம்) கருத்துகள் ‘தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை’யில் விளக்கப்பட்டுள்ளன. அளவைவாதம் பற்றிய புத்த சமயத்தின் ‘சுபக்க’க் கருத்துகள் அறவணன் நோக்கு நிலையிலிருந்து விவரிக்கப்பட்டு உள்ளன. வேற்றுருக்கொண்டு ஐவகைச் சமயத்தாரின் கருத்துகளை வஞ்சியில் கேட்ட மணிமேகலை தனது சொந்த உருவில் புகாரில் புத்த சமயத்தின் அளவை வாதத்தைக் கேட்டறிகிறாள்.

அளவை இரண்டு

“நொடிகுவன், நங்காய்! நுண்ணிதின் கேள், நீ;

ஆதி சினேந்திரன் அளவை இரண்டே

ஏதமில் பிரத்தியம், கருத்து அளவு என்ன” 

(29: அடிகள் 46-48)

என்று அறவண அடிகள் புத்த அளவைவாதத்தில் அளவை முறைகள் இரண்டுதான். அவை: பிரத்தியம் (காட்சி), கருத்து (அனுமானம்) அளவைகளாகும் என விளக்குகிறார். இங்கு நியாயவாதத்தின் 10 அளவைமுறைகள் பிரத்தியக்ஷம், அனுமானம் என்ற இரண்டிற்குள் அடக்கப்பட்டுள்ளன. புத்த அளவை வாத ஆசிரியரான தர்மகீர்த்தி தனது ‘நியாய பிந்து’வில் இதே கருத்தினையே பின்வருமாறு விளக்குவதைக் காண்க.

“த்விதா4ம் ஸம்யக்3 ஞானம்

ப்ரத்யக்ஷம் அனுமானம் ச”

(பிரத்யக்ஷ: அடிகள் 2-3)

பிரத்தியக்கம் எனும் காட்சியளவை ஒரு பொருளின் நேர்த்தோற்றத்தை அறியும் சுட்டுணர்வு சார்ந்தது. அப்பொருளின் பெயர், சாதி, குணம், தொழில் முதலியவை அனுமானத்துள் அடங்கும்.

அனுமானம் எனும் கருத்து அளவையைச் சாத்தனாரின் அறவண அடிகள்,

 1. காரண அனுமானம்
 2. காரிய அனுமானம்
 3. சாமானிய அனுமானம்

என மூன்றாகப் பிரித்து விளக்குகின்றார். இம் மூன்றனுள் காரிய அனுமானம் மட்டுமே பிழை யில்லாதது (புகையிருக்குமிடத்தில் தீ இருக்கும்). ஏனைய அனுமானங்கள் பிழையுள்ளவை. மேகத்தைப் பார்த்தவுடன் மழை வரும் என்ற காரண அனுமானம் காற்று முதலிய காரணங்களால் பொய்க்கக்கூடும். அதேபோன்று காற்றில் எழும் பிளிறல் ஒலி, யானை இருக்கும் என்ற சாமானிய அனுமானம் (சாத்தியம்) காட்டில் இந்த இடத்தில் யானை இருக்கிறது என்பதை வரையறுத்துச் சொல்ல இயலாததால் இதுவும் பிழையாகும். அனுமானத்தைக் Ôகாரணம், காரியம், சாமானியம்Õ என மூவகைப் பாகுபாடு செய்தல் வடமொழியிலுள்ள அளவைவாத நூல்களில் இல்லை. திக்நாகரின் பிரமாண சமுக்சயா, அனுமானத்தை ஸ்வார்த்த அனுமானம் (தன் அனுமானம்), பரார்த்த அனுமானம் (பிறர் அனுமானம்) என இரண்டு வகையினதாகச் சுட்டுகின்றது.

அனுமானத்தின் ஐந்து உறுப்புகள்

அனுமானத்தை மூன்றாக விளக்கும் அறவண அடிகள் அனுமானத்தின் ஐந்து உறுப்புகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றார்.

 1. பக்கம் - இம்மலை நெருப்புடையது என்று கூறுதல்
 2. ஏது - புகையுடையது என்பதால்
 3. திட்டாந்தம் - அடுக்களையில் வரும் புகைபோல் என்பது எடுத்துக்காட்டு
 4. உபநயம் - இம்மலையும் புகையுடையது
 5. நிகமனம் - புகையிருப்பதால் நெருப் பிருக்கிறது என்பது

அனுமானத்தை இவ்வாறு ஐவகையாகப் பாகுபடுத்துவது நியாயவாதத் தத்துவத்தில் உண்டு. பிழையில்லாத காரிய அனுமானத்தினது ஐவகை உறுப்புகளின் விளக்கத்திற்குப் பின்னர், அவற்றின் உட்பிரிவுகளை அறவண அடிகள் மணிமேகலைக்கு எடுத்துரைக்கின்றார்.

பக்கத்தைச் சபக்கம், விபக்கம் எனவும், ஏதுவை அந்நுவயம் (உடன்பாட்டுப் பொருள்), எதிரேகம் (எதிர்மறைப் பொருள்) எனவும், திட்டாந்தம் எனும் எடுத்துக்காட்டைச் சாதன்மியம், வைதன்மியம் எனவும் மேலும் இரண்டிரண்டாகப் பிரிக்கிறார். அத்துடன் உபநயம், நிகமனம் ஆகிய இரண்டும் திட்டாந்தத்திற்குள் அடங்கும் எனக் குறிப்பிடு கின்றார். நியாயவாதத்தின் 5 உறுப்புகளைத் தவிர்க்க முடியாத மூன்று உறுப்புகளாகக் குறைத்துக் காட்டுவது திக்நாகரிடமும் காணப்படுகின்றது. பக்கம், ஏது, திட்டாந்தம் என்ற மூன்று உறுப்புகளின் அடிப்படையிலேயே திக்நாகர் தனது அளவை வாதத்தைக் (ஹேது வித்யா) கட்டமைக்கிறார்.

குடம்போல் செய்யப்படுகின்ற யாதொன்றும் அழியக்கூடியது (அநித்தம்) என்று சொல்வது சபக்கம். ஆகாயம்போல் செய்யப்படாத யாதொன்றும் அழியாதது (அநித்தமல்லாதது) என்று சொல்வது விபக்கம் ஆகும். சபக்கம் எனும் உடன்பாட்டுப் பிரமாண நெறியில்; பெறப்படுவது வெற்றிடத்தில் குடமில்லை. விபக்கம் எனும் எதிர்மறைப் பிரமாண நெறியில் பெறப்படுவது முயற்கொம்பு இன்மையால் பார்க்கவில்லை. தொடர்ச்சியில் இருக்கக்கூடியது கைநெல்லிபோல் வெளிப்படையாகத் தெரியும். தர்மகீர்த்தியின் நியாயபிந்துவிலும் குடம், ஆகாயம் என்பனவற்றை எடுத்துக்காட்டாகக் கூறும் இதே வழக்கம் காணப்படுகின்றது (சூத்திரங்கள் 9,13).

data 600பக்கம் என்பதை, உடன்பாடு (அந்நுவயம்), எதிர்மறை (எதிரேகம்) என இரண்டு தன்மைகள் கொண்டதாக விளக்கியதைப்போல, ஏதுவையும் உடன்பாடு, எதிர்மறை என்ற இரண்டு தன்மை யதாகப் பிரித்துக்காட்டுகின்றார். புகை தோன்று மிடத்தில் நெருப்பு இருக்கிறது என்பது அந்நுவய ஏது ஆகும். நெருப்பில்லாத இடத்தில் புகையில்லை என்பது எதிரேக ஏதுவாம். இவ்வாறு ஏது, இரு வகையில் பொருளைச் சாதிக்கிறது - நிறுவுகிறது.

பக்கம், ஏதுவைப்போன்று திட்டாந்தம் உடன் பாட்டு நெறி, எதிர்மறை நெறி என்ற அடிப்படையில் சாதன்மியம், வைதன்மியம் என்று இரு கூறுபடுத்தப் படுகின்றது. பிரமாண ஆபாசங்கள் பக்கம், ஏது, திட்டாந்தம் ஆகிய மூன்று உறுப்புகளின் விளக்கங் களைத் தொடர்ந்து, அறவண அடிகள் இம்மூன்றையும் நல்லவை, தீயவை எனப் பாகுபடுத்துகின்றார். நல்லவை என்பன, நன்பக்கம், நல்லேது, ஏதுமில் திட்டாந்தம் என்று கூறப்படுகின்றது. தீயவை, பக்கப்போலி, ஏதுப்போலி, திட்டாந்தப்போலி எனக் கூறப்படுகின்றது.

ஒரு கொள்கையைப் பிழையின்றி சாதிப்பதற்கு - நிறுவுவதற்கு நன்பக்கம், நல்லேது, நல்திட்டாந்தம் ஆகியவை துணைநிற்கும். ஓசை அழியக்கூடியது, அழியாதது (சத்தம் அநித்தம், நித்தம்) என்ற இரு கொள்கைகளில் ஏதாவதொன்றை எடுத்துக்கொண்டு நன்பக்கம், நல்லேது, நல்திட்டாந்தம் ஆகியவற்றின் வழி நிறுவலாம் என்று அறவண அடிகள் குறிப்பிடு கின்றார். அறவண அடிகள் போலி என்று குறிப் பிடுவது வடமொழியில் ஆபாசம் என்றழைக்கப் படுகின்றது. இது குற்றம் அல்லது பிழை எனும் பொருளுடையது. இதனை செர்பட்ஸ்கி, ‘அளவை வாதத் தவறுகள் (Logical Fallacies)’ என்று குறிப்பிடுவார். பிரமாண ஆபாசங்கள் எனும் அளவைவாதப் போலிகளை, ‘நியாயிகம்’ எட்டாகக் குறிப்பிடும். ஆனால் மணிமேகலையில், 33 வகையான போலிகள் குறிப்பிடப்படுகின்றன. பக்கப்போலிகள் பின்வரும் ஒன்பதாக, அறவண அடிகளால் வரையறுக்கப்படுகின்றன. அவை:

 1. பிரத்தியக்க விருத்தம் - புலனறிவுக்குத் தெரிந்ததை மாறுபடக்கூறுதல் (ஓசை செவிக்குப் புலப்படுவதில்லை)
 2. அனுமான விருத்தம் - அனுமானத்தால் துணிந்த முடிவைத் தவறாக எடுத்துக் கொள்ளல் - அழியும் குடத்தை அழியாதது என்று மாறுபடக்கூறுதல்
 3. சுவசன விருத்தம் - சொற்கள் ஒன்றுக் கொன்று மாறுபடுமாறு கூறுதல் (என் தாய் மலடி எனல்)
 4. உலக விருத்தம் - உலகத்தார் மரபாகக் கூறிவருவதை மாற்றிக்கூறுதல் (ஒளிவீசும் மதியை நிலவு அன்று என்பது)
 5. ஆகம விருத்தம் - தன் கொள்கைக்கு ஆதரவாக எடுத்துக்கொண்ட நூல்களின் கருத்துகளுக்கு மாறாகக் கூறுதல் (அநித்திய வாதியான வைசேடிகன், அநித்தியத்தை நித்தியம் எனக்கூறுதல்)
 6. அப்பிரசத்த விசேடணம் - தத்தம் எதிரிக்குச் சாதிக்கும் பொருள் அறியாமல் இருத்தல் (பௌத்தன் தன்; எதிரியான அபினாச வாதியான சாங்கியனிடம் ஓசை அழியக் கூடியது எனக்கூறுதல்)
 7. அப்பிரசித்த விசேடியம் - எதிரிக்கு வாதியின் பக்கவசனத்தின் எழுவாய் தெரியாமலிருத்தல் (சாங்கியன் எதிர்நின்ற அனான்மவாதியான பௌத்தனிடம் ஆன்மா உண்டு எனக் கூறுதல்)
 8. அப்பிரசித்த உபயம் - எதிரிக்குப் பக்க வசனத்தின் எழுவாயும் பயனிலையும் விளங்காமலிருத்தல் (வைசேடிகன் பௌத்தனிடம் சுகம், துக்கம் முதலான வற்றுக்குக் காரணம் ஆன்மா எனல்)
 9. அப்பிரசித்த சம்பந்தம் - எதிரிக்கு இசைந்த பொருளை வாதியே சாதித்தல் (பௌத்தனிடம் ஓசை அழிவுறுவது எனக்கூறினால் அதுவே அவனுடைய கொள்கையாகும் (சத்தம் அநித்தம்)).

ஏதுப்போலிகள்

பக்கப்போலியைப் போன்று ஏதுப்போலியும் அசித்தம், அனைகாந்திகம், விருத்தம் என மூன்று வகைப்படும். அசித்தம் என்பது, பொருந்தாத காரணத்தைக் கூறுவது. அனைகாந்திகம் என்பது, பல்வேறு முடிவுகளுக்குச் சாத்தியமாகக் கூறுவது. விருத்தம் என்பது, ஏது கருதிய பயனுக்கு மாறாக, முரணான பயனைச் சாதிப்பது.

இம்மூன்று ஏதுப்போலிகளையும் மேலும் பல உள்வகைகள் கொண்டதாக அறவண அடிகள் பாகுபடுத்தி விளக்குகின்றார். அசித்தப்போலியினை,

 1. உபய அசித்தம்
 2. அந்நியதாரா அசித்தம்
 3. சித்த அசித்தம்
 4. ஆசிரைய அசித்தம் என நான்காகப் பகுத்து விளக்குகின்றார்.

இதேபோன்று அனைகாந்திகம் என்னும் ஏதுப்போலியினை,

 1. சாதாரணம்
 2. அசாதாரணம்
 3. சபக்கைகதேச விருத்தி விபக்கவியாபி
 4. விபக்கைகதேச விருத்தி சபக்கவியாபி
 5. உபயைகதேச விருத்தி
 6. விருத்தவியபிசாரி என ஆறு வகையாகப் பகுக்கின்றார்.

விருத்தம் எனும் ஏதுப்போலியைத் திருத்தமாக உரைத்தால் அதுவும் கீழ்வரும் நான்கு வகையாகும் என்கிறார் அறவண அடிகள்.

 1. தன்மச் சொரூப விபரீத சாதனம்
 2. தன்ம விசேட விபரீத சாதனம்
 3. தன்மிச் சொரூப விபரீத சாதனம்
 4. தன்மி விசேட விபரீத சாதனம்

எடுத்துக்காட்டுப் போலிகள்

தீய பக்கம், தீய ஏது என்பவை பல்வேறு போலி வகைகளைக் கொண்டிருப்பதைப்போல, தீய எடுத்துக்காட்டும் பத்துவகையான போலிகளைப் (ஆபாசங்களைப்) பெற்றுள்ளதாக விளக்குகின்றார். திட்டாந்தத்தைச் சாதன்மியம், வைதன்மியம் என இருவகைப்படுத்தியிருப்பது முன்னரே கூறப்பட்டது. இவை ஒவ்வொன்றும் ஐந்து போலி வகைகளைப் பெற்றுள்ளன. சாதன்மியத் திட்டாந்தப் போலியானது,

 1. சாதன தன்ம விகலம்
 2. சாத்திய தன்ம விகலம்
 3. உபய தன்ம விகலம்
 4. அந்நுவயம்
 5. விபரீதாந்நுவயம் என ஐந்து வகைகளையும்

வைதன்மியத் திட்டாந்தப் போலியானது,

 1. சாத்தியா வியாவிருத்தி
 2. சாதனா வியாவிருத்தி
 3. உபயா வியாவிருத்தி
 4. அவ்வெதிரேகம்
 5. விபரீதவெதிரேகம் என ஐந்து வகை களையும் பெற்றுள்ளன.

இவ்வாறாக, தீய சாதனங்களால் காட்டப்படும் போலிக்கருத்துகளையும் உண்மையையும் பொய்யையும் அளவை விதிகளால் ஐயமின்றி அறிந்துகொள்வாயாக என்று அறவண அடிகள் மணிமேகலையிடம் கூறுகின்றார்.

“நாட்டிய இப்படி, தீயசா தனத்தால்

காட்டும் அனுமான ஆபா சத்தின்

மெய்யும் பொய்யும், இந்திர விதியால்

ஐயம் இன்றி அறிந்துகொள், ஆய்ந்து-என்”

(காதை 29, அடிகள் 469-472)

காட்சிப் போலிகளும் கருத்துப்போலிகளும்

அறவண அடிகள், பிரமாண ஆபாசத்தில் அனுமான ஆபாசத்தை மட்டுமே விளக்குகின்றார். பிரத்யக்ஷம் எனும் காட்சியில் பிழைகள், தவறுகள், குற்றங்கள் நேரா என அறவண அடிகள் கருது கின்றார். ஆனால், திக்நாகர் காட்சிப்போலிகளையும் (பிரத்யக்ஷ ஆபாசம்) விளக்குகிறார் (மேற்கோள் : செர்பட்ஸ்கி, 1994: ப.158). எனவே, வடமொழி யிலுள்ள பௌத்த அளவை நூல்கள் அனுமானத்தை சுவார்த்தம், பரார்த்தம் என இருவகைப்படுத்திய போது, அதிலிருந்து மாறுபட்டு அறவண அடிகள் காரணம், காரியம், சாமானியம் என மூவகைப் படுத்தியதைப்போல் இங்கு ஆபாசங்களின் வகைப் பாட்டில் வேறுபட்டு நிற்கின்றார்.

தமிழ் அளவையியல் மரபு

மணிமேகலையில் இடம்பெறும் ஆபாசங்களின் எண்ணிக்கையும் அவற்றைப்பற்றிய விளக்க முறையும் திக்நாகரிடமிருந்தும் தர்மகீர்த்தியிடமிருந்தும் மாறுபட்டே அமைகின்றன. காட்சி, கருத்து எனும் அடிப்படை அளவை முறைகளை விளக்குவதற்குப் பயன்படுத்துகின்ற முயற்கொம்பு, குடம், ஆகாயம், புகை, நெருப்பு, அடுக்களை போன்ற சில எடுத்துக் காட்டுகள் மணிமேகலைக்கும் வடமொழி புத்த அளவைவாத நூல்களுக்கும் பொதுவாக இருந்தாலும், பிற விளக்கங்களில் தமிழ்மரபு சார்ந்த எடுத்துக் காட்டுகள் பல மணிமேகலைப் பனுவலில் இடம் பெற்றுள்ளன. ஒலிகேட்டு யூகிக்கும் அனுமான விளக்கத்திற்கு நியாயபிந்துவில் மயிலின் அகவல் ஒலி இடம்பெற, மணிமேகலையில் யானையின் பிளிறல் ஒலி கூறப்படுகின்றது. இதேபோன்று, கை நெல்லி, கணிகை, கழுதைவால், நரிவால் போன்ற எடுத்துக்காட்டுகள் மணிமேகலையில் மட்டுமே இடம்பெறுகின்றன. ஆகவே, மணிமேகலையில் இடம்பெறும் அளவையியல் வடமொழி பௌத்த அளவைவாத நூல்களின் சில அடிப்படைக் கருத்து நிலைகளில் ஒன்றுபட்டிருந்தாலும் வகைப்பாடுகள், விளக்கங்களின் அடிப்படையில் தமிழ் மரபு சார்ந்ததாக அமைந்துள்ளது. எனவே, மணிமேகலையின் அளவையியல் தமிழ்ப் பௌத்த மரபு சார்ந்த அளவையியலாக அமைந்திருக்கின்றது.

அளவைவாதத்தின் அடிப்படையான விவாத முறைக்கு வினா கேட்கும் முறையும் விடையளிக்கும் முறையும் முதன்மையானவை. இவ்வினா-விடை மரபு தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குகின்றது. இவ்வினா-விடை மரபு, மணிமேகலையின் இறுதிக் காதையான பவத்திறம் அறுகென பாவைநோற்ற காதையின் இறுதியில் விவரிக்கப்படுகின்றது. வினாவிற்கு விடையளிக்கும் நான்கு முறைகளாகப் பின்வருவனவற்றைச் சாத்தனார் குறிப்பிடுகின்றார்.

 1. துணிந்து சொல்லல் - தோன்றியது கெடும்
 2. கூறிட்டு மொழிதல் - செத்தவனைக் காட்டி இவன் பிறப்பானா என்றால், இறந்தவன் பற்றுடையவனா, பற்றற்றவனா எனக் கேட்டு விடை கூறுதல்
 3. வினாவின் விடுத்தல் - விதை முந்தியதா பனை முந்தியதா என்ற கேள்விக்கு எவ் விதைக்கு எப்பனை என்று கேட்டல்
 4. வாய்வாளாமை (பேசாதிருத்தல்) - ஆகாயப் பூ பழையதா, புதியதா என வினவு பவனுக்கு விடையளிக்காமலிருத்தல்

மணிமேகலையில் இடம்பெறும் ஆகாயப்பூ, முயற்கொம்பு போன்ற உவமைகள் தொல்காப்பிய உரையாசிரியர்களால் எடுத்துக்காட்டப்பட்டிருப்பது, தமிழ் இலக்கணவாதிகளுக்கும் தத்துவவாதிகளுக் கிடையிலுமான இடையீட்டு உறவினை எடுத்துக் காட்டுகின்றன. மேலும் இது, தமிழ் அறிவுத் தோற்றவியலின் ஒரு பகுதியாகவும் விளங்குகின்றது. மணிமேகலையில் அறவண அடிகள் விளக்கும் அளவையியல் விவாதத்திற்குள் வாதியாக பௌத்தன் நிற்க, பிரதிவாதிகளாக வைசேடிகனும் சாங்கியனும் பெரிதும் நிற்கின்றனர். ஓரிடத்தில் மட்டும் மீமாஞ்சகனைப்பற்றிய குறிப்பும் வருகின்றது. எனவே, மணிமேகலைப் பனுவல் உருவான காலத்தில், பௌத்தத்திற்குப் பரபக்க சமயங்களாக சாங்கியமும் வைசேடிகமும் விவாதத்தளத்தில் நிலவியிருக்கின்றன என்பதை அறியமுடிகின்றது. இவை காலப்பழமையான சமயங்களாகும். மேலும், மகாயான பௌத்த அளவையியல் நூல்களின் கருத்து நிலைகளிலிருந்து மணிமேகலை வேறுபடுவதால், இது மகாயான பௌத்தம் சார்ந்த நூல் அன்று என்ற கருத்தும் வலுப்பெறுகின்றது.

துணைநூற் பட்டியல்

 1. சாமிநாதையர், உ.வே., - மணிமேகலை, டாக்டர் உ.வே.சா. நூல்நிலையம், சென்னை - 2008.
 2. Alex Wayman, - A Millennium of Buddhist Logic, Motilal Banarsidass Publishers, Delhi - 1999.
 3. Stcherbatsky,Th., - Buddhist Logic - Vol.1, Motilal Banarsidass Publishers, Delhi, Reprint 1994.
 4. Masaaki Hattori, - Dignaga’s Pramanasamuccaya, Chapter 1, www.oeaw.ac.at/ias/Mat Dignaga_PS_1.pdf, April 2005.
 5. Zheng Wei-hong, Prof., - “Dignaga and Dharmakirti - Two Summits of Indian Buddhist Logic”, Research Institute of Chinese Classics, Fudan University, Shanghai, China.
Pin It