கல்வி கரையில கற்பவர் நாட்சில

மெல்ல நினைகின் பிணிபல.

-     நாலடியார்

“உற்றுழியுதவி, யுமுறுபொருள் கொடுத்தும்

பிற்றை நிலை முனியாது கற்றனன்றே.....

வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்

கீழ்ப்பாலொருவன் கற்பின்

மேற்பாலொருவனு மவன்கட் படுமே”

-     புறநானூறு

கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு போன்ற பல விழுமிய கருத்துகள் தமிழ்நாட்டில் உலா வந்துள்ளன. சங்ககாலம் முதல் இக்காலம் வரை தமிழகத்தில் இருந்து வந்துள்ளது வர்க்க வருண சமுதாயமே.

இவையும் இவை போன்ற கருத்துகளும் சங்க இலக்கியங்களிலும் பின்னர் எழுந்த நீதி இலக்கியங்களிலும் வலியுறுத்தப் பெறுவது காணலாம். தமிழ்ச் சமுதாயம் இனக்குழுச் சமுதாயமாக இருந்ததன் பிற்பகுதியில் நால்வருணப் பாகுபாடு தமிழகத்தில் வலிமையாகக் கால்கொண்டது காணலாம். இனக்குழுக் காலத்தில் ஊர்தோறும் சென்று பாடியும், ஆடியும் பாடற்கலையையும் ஆடற்கலையையும் உருவாக்கிப் படைத்த பாணன், பாடினி, விறலி என்பார், வாய்மொழிப் பாடல்களாகவே பாடி ஆடி மக்களை மகிழ்வித்தனர். மன்னர்களின் ஆதரவு பெற்றனர். இனக்குழுச் சமுதாயம் உடைந்து நிலமானிய முறை தோன்றிய பின், வேந்தர், குறுநில மன்னர் ஆதிக்கம் அமைந்த காலத்தில் மேலோர் கீழோர், உடையார் இல்லாதார் என்னும் வேற்றுமை உடன்பிறப்பாக எழுந்தது. கற்றலுக்கு உரியார் மேற்குடி மக்களே.

கற்பிப்பதற்கு உரியவரும் மேற்குடி மக்களே என்னும் பாகுபாடு பையப் பையத் தமிழ்ச் சமுதாயத்தில் தோன்ற லாயிற்று. குறிப்பாகத் தமிழ்ச் சமுதாயம் ஆரியமய மாக்கப்பட்ட பின்புலத்தில் ஓதல் மேற்குலத்தாருக்கு (வேதம் ஓதுதல்) உரித்தானது என்னும் கருத்து உருவான காலத்தில் தமிழ்க் கல்வி - அதாவது, தாய்மொழிப் பயிற்சிமுறை கிராமப்புறத் திண்ணைகளுக்கு ஒதுக்கப் பட்டது. தேவதானங்களும், பிரம்மதேயங்களும் எழுச்சி பெற்ற காலத்தில் சமஸ்கிருதம் முதலிடம் பெற்றது. திருமணமுறைகள் ஆரியமயமாயின. அரசர்களும் நில உடைமையாளர்களும் சமஸ்கிருத வேதங்களையும், வியாகரணங்களையும் கற்பிப்பதற்குக் கல்லூரிகளையும், கடிகைகளையும் உருவாக்கித் தந்தனர் என வரலாறு கூறுகிறது. சமுதாய மாற்றப் பின்புலத்தில் அன்று தலை சாய்ந்த தமிழ் இன்றும் தலைக் குனிந்து நிற்பது தொடர்கிறது. விஜயநகர மன்னர் ஆட்சிக்காலம் வரை கல்வி என்பது ஒரு குலத்தினருக்கே உரித்தானது என்பதற்கு நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும், செப்புப் பட்டயங் களும் சான்று தருகின்றன. இக்காலத்தில் தமிழ் தலை சிறந்த இலக்கியங்களைப் படைத்துள்ளது எனின் அதற்கு அதனுயிராற்றல்தான் காரணம்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நிலை மாறத் தொடங்கிற்று. காரல் மார்க்ஸ் இந்தியாவில் ஏற்பட்ட பிரிட்டிஷ் ஆட்சி அந்நாடு கண்ட முதல் புரட்சி என்றார். ஒருபுறம் நாச வேலைகளும், அழிவுகளும், மலைபோலக் குவிந்திருந்தபோது இந்த அழிவு வேலைகளுக்குள் முன்னேற்றம் ஏற்படும் நாள் எந்நாளோ என்றார். ஆனால் அதேபோது மறுபுறம் பிரிட்டிஷ் முதலாளித்துவம் தன் வாணிபத் தொழிலையும் லாபத்தையும் ஈட்டிப் பெருக்கிக் கொள்வதற்காகச் சில ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாயிற்று என்றும் சுட்டிக் காட்டுகிறார். முதலில் இருப்புப் பாதைகள் போடுதல், இரண்டாவது அஞ்சல் தந்தி அமைப்பு, மூன்றாவது கல்வி என்னும் துறைகளில் சில மாற்றங்களைக் கொணரும் நிர்ப்பந்தத்துக்கு ஆளாயிற்று என்றார். குறிப்பாக, இந்திய நாட்டு வரலாற்றில் திறந்த பொதுக்கல்வித் திட்டம் (டீயீநn ழுநநேசயட ளுஉhடிடிட ளுலளவநஅ) தொடங்கப்பட்டது. எல்லா மக்களும் சாதி சமய வேறுபாடின்றிப் பள்ளிகளில் இலக்கியம், இலக்கணம், அறிவியல், வரலாற்றுப் பாடங்கள் கற்கலாம் என்னும் வரன்முறையை உருவாக்கி நடைமுறைப் படுத்தியது பிரிட்டிஷ் ஆட்சியே. பொருளா தாரத்தில் உயர்ந்திருந்தோர் (உயர்சாதியினர்)களே அக்கல்வியைப் பயின்றனர்.

பிளாசிப் போரிலிருந்து விடுதலை பெற்ற ஆகஸ்ட் 1947 வரை இருநூறு ஆண்டுக்கால மேலைநாட்டுக் கல்வி முறையும் அரசியல் பொருளாதார மெய்யியல், அறிவியல் கருத்துகளும் ஆங்கிலவழி இந்தியாவை வந்தடைந்தன. 19ஆம் நூற்றாண்டு மெக்காலே ஆங்கிலப் பயிற்சி மொழியைத் திணித்தார். அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு அவர் அனுப்பிய கல்வி அறிக்கையில் இந்திய நாட்டு இலக்கியங்கள் அனைத்தையும் தொகுத்துப் பார்க்கும் போது ஒரு அலமாரித் தட்டில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள ஆங்கில இலக்கியத்துக்கு ஈடாகா என்றும் ஆங்கில வழிக்கல்வி தந்து ஆங்கிலேயருக்கு அடிபணிந்து ஏவல் செய்யும் படித்த விசுவாசிகள் கூட்டம் ஒன்றை உருவாக்கி அக்கூட்டத்தைப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு நிரந்தர அடிமை களாக ஆக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட தாகவே அக்கல்விக் கொள்கை இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆங்கிலம் பயிற்று மொழியானதால் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்திய மக்களை நிரந்தர விசுவாசிகளாக்க வேண்டும் என்ற நோக்கத்துக்குப் பதிலாகப் படித்த இந்திய மக்களை விடுதலைக்காக ஒன்று திரள வேண்டும் என்ற வேட்கையையும் தேவையையும் உருவாக்கிவிட்டது. இது ஆங்கிலப் பயிற்று மொழியால் விளைந்த நற்பலன் எனலாம்.

அதே காலத்தில் இமயம் முதல் குமரி வரை ஆங்கில நாளேடுகளும் பருவ இதழ்களும் வெளிவரத் தொடங்கின. உலகம் எங்கும் வாழ்ந்த மக்கள் நல்வாழ்வுக்காக நடத்திவந்த போராட்டங்களும் அவற்றின் பலாபலன்களும் அந்நாட்டு மக்களுக்கு அறிமுகமாகி அவர்களை விழித்தெழச் செய்தன.

பிரிட்டிஷ் ஆட்சியின் பிறிதொரு நற்பலன் ஆங்கிலத்துக்கு அடிமை என்னும் நோக்கத்தினூடே பிரிட்டிஷ் ஐரோப்பிய அறிஞர்கள் இந்திய நாட்டின் இலக்கியங்களையும் மெய்யியல் சிந்தனைகளையும் கற்றதனால் வாரன் ஹேஸ்டிங்ஸ் கவர்னர் ஜெனரலாக இருந்தபோது “ஏசியாடிக் சொசைட்டி ஆஃப் பெங்கால்” என்னும் அமைப்பு பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் நீதிமன்றத் தலைவர் வில்லியம் ஜோன்ஸ் தலைமையில் அமைந்தது. ஏறத்தாழ அதே காலகட்டத்தில் தமிழ் மொழியும் மேலைய நாட்டுக்கு அறிமுகமாயிற்று. கிறித்துவம் பரப்ப வந்த இயேசு கிறித்து சபையார் தமிழுக்கு ஆற்றிய பணி அளவிடற்கரியது. இவ்வாறு அயல்நாடு களிலிருந்து இயேசு சபையினர் கான்ஸ்டான்டின் ஜோசப் பெஸ்கி என்ற இயற்பெயருடைய வீரமாமுனிவரும், திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த ஜி. யு. போப்பும், மொழி ஒப்பியல் இலக்கணத் துறையில் பெரும் புரட்சியைத் தோற்றுவித்த “திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்” என்னும் நூல் எழுதிய கால்டுவெல்லும் மிக முக்கியமானவர்கள். தமிழர்கள் இன்று தலைநிமிர்ந்து நிற்கத்தக்க பெருமிதத்தை உருவாக்கித் தந்தவர்கள் இப்பேரருளாளர்கள் ஆவர். மதராஸ், பம்பாய், கல்கத்தா என்னும் மூன்று பெரிய நகரங்களிலும் பல்கலைக் கழகங்கள் நிறுவப்பட்டன.

இதற்குமுன் உலகில் நடைபெற்ற சில முக்கிய மாற்றங்களை இங்குக் கருத்தில் கொள்ள வேண்டும். மத்திய காலங்களில் மறுமலர்ச்சி - சீர்திருத்த கால கட்டத்தில் ஐரோப்பாவில் விஞ்ஞானம் வளரத் தொடங்கியது. மூடக் கருத்துகளுக்கு எதிராகப் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் புதிய கொள்கைகளைக் கொணர்ந்தன. மக்களிடைப் புத்தொளியூட்டின. முதலாளித்துவ வர்க்கம் பிறந்தது. தொழிற்புரட்சியின் விளைவாகப் பழைய நிலப்பிரபுத்துவ சமூகம் நொறுங்கிப் போனது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என ஆரவாரித்து முதலாளித்துவம் வீறுகொண்டு எழுந்தது. ஸ்காட்லாந்தில் தொழில் அதிபராக வாழ்க்கையைத் தொடங்கி அனுபவவழி சோசலிஸ்டாக மாறிய இராபர்ட் ஓவன் தம்முடைய தொழிற்சாலையில் பணிபுரியும் ஈராயிரம் பணியாளர்கள் ஸ்காட்லாந்தில் மக்கள் எல்லோரும் அறுபதாண்டுகளில் நிறைவேற்றும் பணியை ஒரே நாளில் செய்து முடித்தனர் என்று மனம்விட்டுப் பாராட்டி எழுதினார். இவ்வாறு முதலாளித்துவம் வலிமை கொண்டு எழுச்சி பெற்றது. இதே முதலாளித்துவம் விளைவித்த தீங்குகளை எதிர்த்து 1830களில் பிரிட்டனில் சார்டிஸ்டு இயக்கம் தோன்றிற்று.

தேர்தல் வாக்குரிமை, ஆண்டு தோறும் பாராளுமன்றம் கூடுதல், குறைந்த வேலை நேரம், குடியிருப்பு என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்துப் போராடிற்று. இதற்குத் தலைமை வகித்தவர்களில் சிலர் கிறித்துவப் பாதிரிமார். சார்டிஸ்டுகளில் பலர் பிற்காலத்தில் கம்யூனிஸ்டுகள் ஆயினர் என்பது வரலாறு. 1789ஆம் ஆண்டு நடைபெற்ற பிரெஞ்சுப் புரட்சியும் சார்டிஸ்ட் இயக்கமும் சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்த மக்களை ஆர்த்தெழச் செய்தன. தொடர்மக்கள் போராட்டங்கள் மக்களுக்குச் சில உரிமைகளைப் பெற்றுத் தந்தன. முதன்முதலில் 1832ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பாராளுமன்றம் தேர்தல் வாக்குரிமையை ஒருசில பணக்கார வசதிபடைத்த உடைமை வர்க்கத்தினருக்கு மட்டுமே வழங்கிற்று. முதலாளித்துவ சமுதாயத்தில் போராட்டத்தில் உழைத்துப் பெரும்பங்காற்றிய தொழிலாளி வர்க்கம் என்றுமே முதலாளித்துவ வர்க்கத்தினால் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வந்துள்ளது என்பது வரலாறு காட்டும் உண்மை.

இருப்பினும் இந்தக் காலப் பகுதியில்தான் மனித உரிமைகள், அரசு கடமைகள் என்பன பற்றி விவாதிக்கப் பட்டன. அவற்றுக்காக இயக்கங்களும் நடைபெற்றன. முதன்முதலில் “மனித உரிமைகள்” என்னும் நூல் எழுதிய டாம் பெய்ன் நாடு கடத்தப்பட்டார். செய்தித் தாள்கள், பருவ இதழ்கள் உலகமெங்கினும் உள்ள மக்களைத் திரட்டுவதற்குக் கோரிக்கை வைத்துப் போராடுவதற்கு வழிகாட்டின. இது கொந்தளிப்பு மிகுந்த காலம். மார்க்சியம் பிறந்தது. வரலாறு காணாத சிந்தனைக் கருவூலமாக மிளிர்வதற்கு உழைக்கும் வர்க்கங்களைத் திரட்டி உரிமைகளுக்காகவும் புதிய சமுதாயத்துக்காகவும் போராட வழிமுறைகளை வகுத்துத் தந்தது. வரலாற்றுப் போக்கில் மார்க்சியத்தின் முன்னிருந்த சிந்தனையாளர்கள் மக்களுடைய நல்வாழ்வு, பொருளாதார மேம்பாடு, எல்லோருக்கும் கல்வி வழங்குதல், இதற்காக நிதிதிரட்டுதல் என்பன பற்றியெல்லாம் சிந்தித்தார்கள் பேசினார்கள். சோஷலிசக் கருத்துகள் பிறந்து பரவின. அரசின் கடமைகள் வரையறுக்கப்பட்டன. பிரிட்டனில் இவ்வாறுதான் செவ்வியல் பொருளாதாரம் தோன்றிற்று. சிறந்த முற்போக்கு மக்கள் நலக் கருத்துகளை - குறிப்பாக, அரசு பற்றிய உயரிய கருத்துகளை மார்க்சியம் வளர்த்தெடுத்தது. இதனை பிரடெரிக் ஏங்கெல்ஸ் படைப்புகளிலும் ‘லெனினின் அரசும் புரட்சியும்’ என்னும் நூலிலும் காணலாம். ஆனால் மார்க்சியக் கருத்துகள் இந்திய நாட்டில் அறியப்படுவதற்கு முன்னரே அரசியல், பொருளாதாரம் சமூகம் பற்றிய ஏகாதிபத்திய கருத்துகள் செய்தித் தாள்களின் மூலம் இந்தியாவை வந்தடைந்தன. இந்தப் பின்னணியில்தான் இந்தியாவில் அரசுப் பணிகளிலும், கல்வியிலும் ஆங்கிலம் நடைமுறைக்கு வந்தது.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எத்தகைய சீரழிவுகள் நேர்ந்திருந்தாலும் வேதனைகள் நிறைந் திருந்தாலும் கல்வியைப் பற்றி அரசு கொண்டிருந்த நிலைப்பாடு கடமை மிக்கதாகவும் பொறுப்புடைய தாகவும் இருந்தது. அக்காலக் கல்வித்துறை அறிக்கைகள் இதற்கு எடுத்துக்காட்டு. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒருசில கல்விச்சாலைகள் தவிர பிறவெல்லாம் அரசின் கீழ் இயங்கின. தேசிய இயக்கம் எல்லா மக்களுக்கும் குறைந்த செலவில் நிறைந்த கல்வி அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுப்பியதும் போராடியதும் நாடறிந்த செய்திகள். பிரிட்டன் நாட்டைவிட்டு அகன்றபோது மக்கள்தொகை முப்பது கோடி. வரும் மக்கள் கணக் கெடுப்பில் (2011) அது நான்கு மடங்காக உயர்ந்திருக்கும் என்பது உறுதி.

200 ஆண்டுக்கால இந்திய வரலாறு கண்ட கல்வி வளர்ச்சிப் போக்கை இந்திய அரசும், லாபவேட்கை உந்த ஆர்ப்பரித்துத் தறிகெட்டுத் தாறுமாறாக வளர்ந்து வரும் இந்திய முதலாளித்துவமும் தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டன.

அரசு நடத்திவந்த தொடக்கப் பள்ளிகளும், மழலையர் பள்ளிகளும் இன்று தனியார்மயமாகி வருகின்றன. இராஜாஜி, இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் என்ற போதிலும், அவருடைய அமைச்சரவை தாய்மொழிவழி தொடக்கக் கல்வி என்னும் கொள்கையை நடைமுறைப்படுத்தியது. ஆனால் இங்கிலீஷ் எவர் இந்தி நெவர் என்னும் கொள்கை நாளடைவில் நல்ல தமிழ் உள்ளங்களையும் சீர்கெடச் செய்தது. தாய்மொழிவழிக் கல்வி எனப் பேசிய பரம்பரையும் ஆங்கில மொழிவழிக் கல்வி பெறுவதையே கவுரவமாகவும், ஆங்கிலமே உலகைக் காணப் பலகணி எனவும் கருதுகின்றது.

“வீடுதோறும் கலையின் விளக்கம், வீதிதோறும் இரண்டொரு பள்ளி” எனப் பாரதி பாடினான். இன்று வீடுதோறும் தனியார் பள்ளியாக மாறிவிடுமோ என்னும் அச்சம் எழுகிறது. கடந்த அறுபதாண்டுக் காலத்தில் இந்திய நாடு பல துறைகளில் பல வழிகளில் முன்னேறி வந்துள்ளது என்பது உண்மை. ஆனால் இதில் தாய்மொழியின் பங்கு யாதென்பதை அறிவாராய்ச்சி உலகம் கணிக்கத் தவறி விட்டது. சில நாடுகளில் எல்லாக் கலைகளும் விஞ்ஞானமும் அறிவியலும் அந்தந்த நாட்டு மொழி களிலேயே, தாய் மொழியிலேயே கற்பிக்கப்படுகின்றன. இதனால் மொழியியல் வளம் பெருகுகிறது, மனிதனின் மனம் விரிவடைகிறது. ஆனால் இந்தியாவிலோ மொழி குறுகுகிறது. தனிமனித வருமானம் பெருகுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் சென்று இன்று பணம் ஈட்டுவோர் எண்ணிக்கை கூடுவதனால் எனலாம்.

இந்தியச் சமுதாயம் அளிக்கும் உதவி வெளி நாட்டினருக்குப் பயன்பட்டு தனிமனிதர்களின் சட்டைப் பையை நிரப்புகிறது. நாடு விடுதலை பெறுவதற்குமுன் இந்நாட்டில் ஒருசில பல்கலைக்கழகங்கள் இயங்கி வந்தன. அவையெல்லாம் கல்வித் தரத்துக்கு முன்னுரிமை தந்தன; கல்வி பெற்றோர் தரப்பாட்டை உயர்த்தின. இன்று எத்தனை மாவட்டங்கள் உள்ளனவோ அத்தனை மாவட்டங்களுக்குத் தனித்தனிப் பல்கலைக்கழகம். பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களாம். ஒப்பந்த அடிப் படையில் ஆசிரியர் பணிகளில் அமர்த்தப்படுவதனால் மிக உயர்ந்த சம்பளம் வாங்குவதாகக் கையெழுத்திட்டு உண்மையில் அவர்கள் பெறுவதோ நான்கில் ஒரு பங்காக இருக்கலாம். அவர்களுக்கு வரவேண்டிய எஞ்சிய மிகை ஊதியம் கல்வி நிலையங்களை நடத்தும் முதலை கருப்புப் பணப்பெட்டியில் சேர்கிறது. இது ஒருபுறமிருக்க, பெற்றோர்களோ தம் மக்கள் கற்று முன்னேற வேண்டும் என்னும் அவா மிகுவதனால் எதை வேண்டுமானாலும் செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதனால் அந்தப் பலவீனத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு மாணவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தைப் பன்மடங்கு பெருக்கிக் கொண்டாலும் கொள்ளை லாபம் ஈட்டும் தனியார் பள்ளி நிறுவனங்கள் இன்று பல்கிப் பெருகிவிட்டன. சரியான புள்ளிவிவரங்கள் கிட்டவில்லை. தமிழ்நாடு மாநில அரசு நிர்ணயித்த கட்டணத்தை ஏற்க மாட்டோம் என நிகர் நிலைப் பல்கலைக்கழகங்கள் திட்டமிட்டுப் போர்க்கொடி ஏற்றிருப்பது புதிதாக எழுச்சி பெற்றுவரும் கல்வித்துறை முதலாளித்துவம் எதற்கும் அஞ்சாது, அடங்காது என்பதனை எடுத்துக்காட்டுகிறது. ஆராய்ச்சித்துறை என்பது எதுவானாலும் அங்குக் கையூட்டும் ஊழலும் வஞ்சகமும் சூதும் வாதும் நிரம்பி வழிகின்றன என்பதனை உணர முடிகிறது. இவையெல்லாம் இந்திய முதலாளித்துவம், தறிகெட்டுத் தரமிழந்து வளரத் துடிக்கிறது என்பதையே எடுத்துக்காட்டுகிறது.

அண்மையில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களே இதுபற்றிக் கடுமையாகப் பேசியுள்ளார். மாணவர்கள் படிப்பதற்காக மத்திய அரசின் வங்கிக்கடன் திட்டம் என்று ஒன்றுள்ளது. கடன் வாங்குபவர்களில் பலர் தரநிலை பெற்று அதிக மதிப்பெண் பெற்றுத் தேறி வருகின்றனர். பலர் ஏழைகள்; வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் வறிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள். இவர்கள் படிக்கும்போது வாங்கிய கடனை வட்டியுடன் படித்து முடித்து வேலைக்குச் சென்றபின் செலுத்திவிடலாம் என்றும் சொல்லப்படுகிறது. வேலை யில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடும்போது படித்தவர்கள் எல்லோருக்குமே வேலை கிடைத்துவிடும் என்றோ, அந்த வேலை கடனைத் திருப்பித் தரக்கூடிய வழியை, சாத்தியப்பாட்டை உருவாக்கித் தரும் என்றோ உறுதியாகச் சொல்ல முடியாது. கடன் வாங்கியவன் குடும்ப சமூகத் தளைகளிலிருந்து கடமைகளிலிருந்து விடுபட்டுக் கடனைத் திருப்பித் தருவது பற்றிச் சிந்திக்கத்தக்க நிலைமையில் இருக்கமாட்டான்.

நாட்டில் கல்வியின் பேரால் நடைபெற்று வரும் ஒவ்வாத நிகழ்ச்சிகளையும் போக்குகளையும் நீண்டதொரு வரலாற்றுப் பின்னணியுடன் எடுத்துச் சொல்லி யுள்ளோம். இந்தப் பிரச்சினைக்கு உரிய வழி அரசாங்கமே மக்களுக்குக் கல்வி வழங்கும் பொறுப்பேற்க வேண்டும். தொழில் உற்பத்திக் கூடங்கள் பெருக வேண்டும். அதற்காக மத்திய மாநில அரசுகள் அதிகம் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நியூ செஞ்சுரியின் “உங்கள் நூலகம்” வலியுறுத்தும்போதே சோசலிசமே சிறந்தவழி என் பதனையும் சுட்டிக்காட்ட விழைகிறது. கியூபா இதற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது. கியூபா அரசு கல்வியை இலவசமாக தமது மக்களுக்கு அளிப்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Pin It