பாட்டாளி வர்க்கப் போராட்டநாள் இக்கால கட்டத்தில் ஆளும் கும்பலாலும், முதலாளிகளாலும் சலுகையாகக் கொடுக்கும் விடுமுறை நாளாக மாறியிருக்கிறது. 1890ம் ஆண்டு இரண்டாவது அகிலம் அமெரிக்க தொழிலாளர்கள் போராடியதை முன் மாதிரியாகக் கொண்டு, அவர்கள் குறித்துப் போராடிய அதே மே ஒன்றில் உலகப் பாட்டாளி வர்க்கம் எட்டு மணி வேலை நேரத்தை சட்டப்பூர்வமாக்க உலகம் தழுவிய போராட்டத்தை கட்டியமைக்க வேண்டும் என்று அறிவித்தது.

அவ்வண்ணமே மே 1 உலக தொழிலாளர்கள் தினமாக மாறியது. 1917ல் ரஷ்யப் புரட்சியின் தாக்கத்தால் மூன்றாம் உலக நாடுகளிலும் மார்க்சியத் தத்துவம் பரவியது. அதன்காரணமாக உளுத்துப் போன சமரச தலைவர்களுக்கு மாற்றாக தமிழகத்திலும் இளம் இடதுசாரி தலைவர்கள் உருவானார்கள். 1922ல் இந்தியத் துணைக் கண்டத்தில் முதன் முறையாக தோழர் சிங்காரவேலு மே தினம் கொண்டாடினார். ஆனால் வரலாற்று சக்கரம் இப்போது பின்னோக்கிச் சுற்றிக் கொண்டிருக்கிறது.

எண்ணற்றப் போராட்டம், உயிர்ப்பலி ஒற்றுமை தியாகத்தால், பெறப்பட்ட சட்டங்கள் அதாவது தொழில் தகராறு சட்டம், தொழிற் சங்க உரிமைச் சட்டம் 1921, தொழிற்சாலை விநியோகச் சட்டம் 1948, குறைந்த ஊதிய சட்டம் 1948, ஊதிய பகிர்வுச் சட்டம் 1936, வார இறுதி விடுமுறைச் சட்டம், தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923, இதுபோன்ற எண்ணற்ற பாதுகாப்பு உரிமை இங்கு நீத்துப் போய்க் கொண்டி ருக்கிறது.

இந்த நெருக்கடியானச் சூழலில் வரலாற்றை நாம் பின்னோக்கி பார்க்க வேண்டியிருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் தொழிற்துறை தொழிலாளர் தோற்றம், வளர்ச்சி பிரிட்டிஷ் காலத்தில் நான்கு சட்டங்களாகப் பிரிக்கலாம்.

1. 1890 லிருந்து 1900 வரை தொழிற் துறையின் துவக்கம், 2. 1900லிருந்து 1917 வரை தொழிற்சாங் கத்திற்கான தயாரிப்புக் கூட்டம், 3. 1914லிருந்து 1935 வரை ஒருங்கிணைந்ததொழிற் சங்கத்தின் போராட்டம், 4. 1935லிருந்து 1947 வரை அதிகாரம் மாற்றத்தின் கீழ் தொழிலாளர் போராட்டம். முதல் கட்டத்தில் முதலாளித் துவ தொழிற்துறை வளர்ச்சி என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் ஐரோப் பாவில் நிகழ்ந்தது போல் இல்லாமல் அதாவது நிலப் பிரபுத்துவத்தின் அழிவிலிருந்து தோன் றாமல் கிராமப்புற நெருக்கடி தாங்காமல் விரட்டப்பட்ட விவசாயிகளைக் கொண்டு அந்நிய மூலதனத்தின் வீரியத்தில் உருவாக்கப்பட்டது. ஆதலால் துவக்கம் முதலே கீழ்த்தர கிராமப் பண்பாடு பாட்டாளி வர்க்கத்தில் நீடித்தது.

இதனால்பழைய சாதிய நிலவுடைமை கலைந்து முற்போக்கானவர்க்கமாக உருப்பெருவது சிக்கலாகவே அமைந்தது. இக்காலக்கட்டத்தில் இரயில்வே சேவை அறிமுகம் துணை தொழிற்துறை துவங்க அடிக்கோலாகி விட்டது. தொழிலாளர் பணி அமர்த்தம் பொருத்தவரையில் மிகவும் மனிதநேய மற்ற வகையிலே அமைந்திருந்தது. விவசாய கூலிகளுக்கும், இவர்களுக்கும் ஊதியத்தில் எந்தவித வித்தியாசமும் இருக்கவில்லை. கிராமத்திலிருந்து விரட்டப்பட்ட இந்த தொழிலாளர்கள் தங்குமிடம் போதியவசதி ஏதும் இல்லாமலே இருந்தது.

வரன்முறை இல்லாமல் அதிக நேரம் உழைக்க நேரிட்டது. மேலும் உள்ளூரிலிருந்து தொழிலாளர் களைத் திரட்டி வருவதற்குஇடைத் தரகர்கள் உதவி வந்தனர். இந்த இடைத் தரகர்களின் சுரண்டல் மிகக் கொடூரமாக அமைந்தது. எந்தவிதமான ஒருங் கிணைந்த தலைமை இல்லாமல் இக்காலக் கட்டத்தில் வேலைநேரக் குறைப்பு, பாதுகாப்பு, தன்மானம் போன்ற கோரிக்கைகளுக்கு தொழிலாளர்கள் தன்னிச்சையாகவே போராடினார்கள்.

20ம் நூற்றாண்டின் துவக்கம் என்பது உலக அளவிலும் இந்தியத் துணைக்கண்டத்திலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டிருந்தது. அதாவது முதல் உலகப் போர் அதனால் ஏற்பட்ட விளைவு, முதல் பாட்டாளி வர்க்கப் புரட்சி, உலகப் பொருளாதார பெருமந்தம், இந்தியாவில் வங்காள பிரிவினை 1905, இரட்டையாட்சி அறிமுகம் முதல் என்.ஜி.ஓ. திரு. காந்தியின் வருகை குறிப்பாக இந்தியத் துணைக் கண்டத்தில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 9,50,973 ஆக உயர்ந்தது.

மேலும் இந்திய தேசிய காங்கிரசில் ஏற்பட்ட தலைமை மாற்றம் இவையனைத்தும் ஒருங்கே இணைந்து தொழிலாளர் இயக்கத்தில் பிரதிபலித்தது. தமிழகத்தில் முதன் முறையாக 1905ல் தூத்துக்குடியில் அம்பாசமுத்திரம் பஞ்சாலையில் வ.உ.சிதம்பரநாத னாரால் தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது. இத் தொழிற்சங்கம் ஊதிய உயர்வு, தொழில் பாதுகாப்பு, நேரக் குறைப்பு போன்ற கோரிக்கைகளுக்கு போராடியது.

வா.உ.சி. கைதையொட்டி இத்தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர்.இதுவே முதல்முறையாக இந்தியாவில் தொழிலாளர் அரசியல் காரணத்திற்காகப் போராடியது.

முதல் உலகப் போர் காலகட்டத்தில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி என்பது அதிகரித்தது. ஆனால் மறுபுறம் அதிக வரி, விலைவாசி உயர்வு அதிகப் படியான சுரண்டல் தொழிலாளர்கள் மீது சுமத்தப் பட்டது. இவைகளை எதிர்த்து தொழிலாளர்கள் ஒன்று திரண்டு போராட ஆரம்பித்தனர். 1911ம் ஆண்டில் சென்னையில் உள்ள பக்கிங்காம் கண்ணாடி மில்லில் (பின்னி) இந்தியாவிலேயே முதலில் ஒருங்கிணைந்த தொழிற்சங்கம் அமைக்கப்பட்டது.

ஆனால் முன்னரே சொன்னபடி தொழிலாளர்கள் சாதிய நிலவுடைமையிலிருந்து மீளாமல் இருந்ததால் மனம் உகந்து தங்கள் தலைவர்களை ஆதிக்கச் சாதியிலிருந்து தேர்ந்தெடுத்தார்கள். இதே நிலைமை இந்தியா முழுவதும் நீடித்தது. தமிழகத்திலும் அன்னி பெசன்ட்டின் சீடர்கள், வாடியா, திரு.வி.க. போன்ற தலைவர்கள் தொழிற்சங்கம் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

பல்வேறு இடங்களில் இந்த சாதியநிலவுடைமை தொழிலாளர் வர்க்க ஒற்றுமைக்கு குந்தகம் விளை வித்தது. தாராள வாதம் என்ற முகமூடியணிந்த இந்த முதலாளித்துவ தொழிற்சங்க தலைவர்களைத் தாண்டி தொழிலாளர்கள் போராடினார்கள். “தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைக்குத் தானாகவே போராடுவார்கள். அவர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் வெளியி லிருந்து உறுதிமிக்க அரசியல் வழிக்காட்டுதல்களே''. ஆனால் இதற்கு வக்கற்ற நிலை யில் காங்கிரஸ், ஜஸ்டிஸ் பார்ட்டி, அன்னிபெசன்ட் தலைமையிலான ஹோம் ரூல் இயக்கம் இருந் தது. தொழிற்சங்க தலைவர்கள் பல நேரங்களில் வேலை நிறுத் தத்தை மறுத்த நிலையில் தொழிலாளர்கள் தானாகவே ஒருங் கிணைந்து தங்கள் உரிமைக்காகப் போராடினார்கள். வேறு வழியில் லாமல் தலைவர்கள் ஆதரித்ததும் பின்னர் காட்டிக் கொடுத்ததும் வரலாற்றில் காண முடிகிறது.

வேலை நிறுத்தக் காலகட்டங்களில் அரசு உதவியுடன் தலைவர்கள் மேற்பார்வையில் தொழில் நிறுவனங்கள் கருங்காலிகளை வேலையில் அமர்த்தியதை எதிர்த்து தொழிலாளர்கள் போராடி இறந்ததைக் காண முடிகிறது. இடிதாங்கித் தலைவர் காந்தி, இந்தியாவில் நடந்த பல போராட்டங்களில் வழிகாட்டுதலாக இருந்தது சோகத்திலும், சோகம். அதேபோல் காந்தியால் ஒருங்கிணைக்கப்பட்ட அகமதாபாத் பஞ்சாலை தொழிற்சங்கமும் அதன் நடைமுறையும் இன்றளவும் இந்தியத்துணைக் கண்டம் முழுவதும் தொழிற்சங்கங்களில் பிரதி பலிக்கிறது.

அதாவது பாட்டாளி வர்க்கப் போராட்டம் மறைக்கப்பட்டு சமரசம் சரணாகதி என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது. இதுகாறும் நடுவர் குழு அமைக்கப்பட்டு தொழிலாளருக்கும், முதலாளிக்கு மான பிரச்சினைகளைத் தீர்ப்பது என்பது பிரபல மாயிற்று. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இந்நடுவர் குழு ஆளும் கும்பலுக்கே சாதகமாக அமைந்தது என்பதில் வியப்பொன்றும் இல்லை.

 1917ல் இரஷ்யாவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி உலக அளவில் பரவியது. அதில் உந்தப்பட்ட அறிவு ஜீவிகளும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும், முற்போக்கு கருத்தை ஏற்று தமிழகத்தில் மார்க்சிய கருத்துக்களைப் பரப்பினர். அதில் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர்கள் தோழர் சிங்காரவேலரும், கானும், சிங்காரவேலர் பல்வேறு தொழிற்சங்க செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகித்தார். உண்மையான வர்க்க உணர்வு வெகுவாக தொழிலாளர்களுக்கு ஊட்டப்பட்டது. இடதுசாரிகள் தொழிலாளர் மத்தியில் இயக்கம் தொடங்கிய பிறகு பல்வேறு அடக்குமுறைகளை சந்திக்க நேரிட்டது. மீரட், கான்பூர் போன்ற பல சதிவழக்குகளில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் சிக்க வைக்கப்பட்டனர். தாராளவாத தொழிற்சங்கத் தலைவர்கள் இடதுசாரி தலைவர்களை வெறுத்தனர். அரசின் ஆதரவும் சந்தர்ப்பவாத தொழிற்சங்கங்களுக்கு அளிக்கப்பட்டது.

முதல் உலக யுத்தம் முடிந்த பிறகு, ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியும், போல்ஷ்விக் புரட்சி யினால் தாக்கம் ஏற்பட்டு உலகம் எங்கும் வேகமாக வளர்ந்த புரட்சிகர இயக்கங்களினாலும் ஏகாதிபத்தி யத்திற்கு நெருக்கடி ஏற்பட்டது.

அதை எதிர் கொள்ளும் வண்ணமாக போல்ஷ்விக் தொழிலாளர் எழுச்சிக்கு மாற்றாக ஏகாதிபத்தியம் உலக தொழிலாளர் இயக்கம் (ஐஎல்ஓ) தோற்றுவித்தது. அதன் முதன்மை நோக்கம் தொழிலாளர் பாதுகாப்பு (பணியமர்வு) வேலை நேரம், தொழிலாளர் காப்பீடு போன்றவற்றுக்கு உலகம் தழுவிய அளவில் நெறிமுறை அமைப்பது, பிரிட்டிஷாரின் மேற்பார்வை யில் காலனிய இந்தியாவும் நிறுவன உறுப்பினராக சேர்க்கப்பட்டது.

அவ்வியக்கத்தில் இந்தியாவின் செய்லபாடு பிரிட்டிஷார் நலனைச் சார்ந்தே இயங்கியது. தொழிலாளர், முதலாளிகள் அரசு பிரதி நிதிகளைக் கொண்டு இவ்வியக்கம் செயல்பட்டது. ஐ.எல்.ஓ.வின் முதல் மாநாட்டிற்கு தொழிலாளர்களின் பிரதிநிதியாக பி.பி. வாடியாவை அரசு நியமித்தது.

ஐ.எல்.ஓ. வில் பிரதிநிதித்துவம், பெருகுவதை யொட்டி பல்வேறு சர்ச்சைகள் தொழிற்சங்க தலைவர்கள் மத்தியில் ஏற்பட்டது. அதன் உச்சகட்டத்தில் 1920 ஆகஸ்டு 22ந் தேதி ஏ.ஐ.டி.யு.சி. உருவாக்கப்பட்டது. இதில் சோசலிஸ்ட் காங்கிரஸ், மிதவாதிகள், கம்யூனிஸ்டுகள், காங்கிரஸ்காரர்கள், இந்திய தரகு முதலாளிகளின் ஒரு பிரிவினர் ஒருங்கே அங்கம் வகித்தனர்.

ஆனால் காந்திமட்டும் அகில இந்திய அளவில் தொழிலாளர் ஒருங்கிணைப்பதை ஏற்றுக் கொள்ள வில்லை. ஏனெனில் தொழிலாளர் ஒருங்கிணைப்பு என்பது புரட்சிகர மாற்றத்தை விரும்பும் என்று கருதினார். ஐ.எல்.ஓ. நிகழ்ச்சி நிரலுக்கு வந்த பின்னும் தொழிலாளர் போராட்டத்தின் விளைவாகவும், போல்ஸ்விக், அரசியல் இந்தியா முழுவதும் பரவியதன் விளைவாகவும் பல்வேறு தொழிலாளர் நலச் சட்டம் நிறைவேற்ற வேண்டிய நிர்ப்பந்தம் அரசிற்கு ஏற்பட்டது.

அக்காலக் கட்டத்தில் தொழிலாளர்கள் எழுச்சியைக் கண்டு காங்கிரஸ் முதல் ஜஸ்டிஸ் பார்ட்டி வரை நடுங்கிப் போனார்கள். ஜஸ்டி பார்ட்டி தனது அறிக்கையில் தொழிலாளர்கள் போல்ஸ்விக் மயமாகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆகையால் அரசு ஏதாவது செய்தாக வேண்டும் என்று வற்புறுத்தியது. அப்போது நிறைவேற்றப்பட்ட முக்கியமானச் சட்டம், இந்தியத் தொழிற்சங்க உரிமை சட்டம் 1926, இந்திய தொழிற்சாலைச் சட்டம் 1922, தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் 1923 ஆகும். 1926ல் இயற்றப்பட்ட தொழிற்சங்க சட்டத்தின் விளைவாக முடங்கிக் கிடந்த பல்வேறு தொழிற்சங்கங்கள் உயிர்ப்பிக்கத் தொடங்கின.

மேலும் தேர்தலை மையமாக வைத்து சில தொழிற்சங்க தலைவர்கள் செயல்படத் தொடங்கினர். உலகம் மழுவதும் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்திய தொழிற் துறையிலும் பிரதிபலித்தது. காந்தியடிகளால் துவங்கப்பட்ட போலிப் போராட்டங்கள் அவர் கைமீறி மக்கள் போராட்டமாக மாறியதையொட்டி சைமன் கமிஷன் அமைக்கப்பட்டது. முறையே மூன்று வட்டமேசை மாநாடு நடைபெற்றது.

இம்மாநாட்டின் ஐ.எல்.ஓ.வின் நெறிமுறைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. அதாவது ஐ.எல்.ஓ. வகுத்தளித்த தொழிலாளர் பாதுகாப்பு, பணி நேரம், பணி கொடை போன்ற நெறிமுறைகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. 1935ல் புதிய அரசியலமைப்பு சட்டம் உருப் பெற்றது. 1938ல் காங்கிரஸ் மீதான தடை நீக்கப்பட்டது.

ஆனால் கம்யூனிஸ்டுகள் மீதான தடை நீடித்தது. பெரியார் 1932ல் சோவியத் ரஷ்யா சென்று வந்தபின் சுயமரியாதை இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்பட்டது. ஈரோட்டுப் பாதை என்ற புதிய செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இச் செயல்திட்டத்தில் சிங்கார வேலரும் ஜீவானந்தமும் தீவிரமாகச் செயல்பட்டனர். மறுபுறம் அரசின் அடக்குமுறை கொடூரமானதை யொட்டி பெரியார் மீது அரசுக்கு எதிராக கட்டுரை வெளியிட்டார் என்று கூறி ஒன்பதுமாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

1934ல் கம்யூனிஸ்டின் முன்னணி இயக்கங்கள் தடை செய்யப்பட்டதை ஒட்டி சுய மரியாதை இயக்கம் தடை செய்யப்படும் என்று அஞ்சி அரசுக்கு எதிரான நடவடிக்கையை பெரியார் கைவிட்டார். வருகின்ற தேர்தலில் ஜஸ்டிஸ் பார்ட்டியை ஆதரிப்பது என்று முடிவு செய்தார். காங்கிரஸ் ஆட்சியை விட ஏகாதி பத்திய ஆட்சி சிறந்தது என்று அறிவித்தார். ஆனால் இங்கு குறிப்பிட வேண்டியது என்னவெனில் ஏகாதி பத்திய மூலதனமே தொழிலாளர்களை வாட்டியது.

இரண்டாம் உலகப் போர் 1939 1945 இந்திய துணைக் கண்டத்தில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்தது. யுத்தம் துவங்கிய முதல் நாள் முதலே தன் சர்வாதிகாரத்தை இந்தியாவில் நிலைநாட்டியது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1935, 95வது பிரிவைப் பயன்படுத்தி நிர்வாகத்தை கவர்னரிடம் அளித்தது. இதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் கட்டியமைக்கப்பட்டது.

1942ல் காந்தி இயற்றிய வெள்ளையனேவெளியேறு என்ற தீர்மானத்திற்கு பின்னால் இருந்த அரசியல் சூழலை தனியாகக் கவனிக்க வேண்டிய பகுதி ஆனால் உண்மையான பொருளாதார விடுதலையை நேசித்தவர்கள் இந்த முழக்கத்தைபற்றிக் கொண்டனர்.

 யுத்த நெருக்கடியில் இருந்த பிரிடிடஷ் விடுதலை வாக்குறுதியினை அள்ளி வீசத் தொடங்கியது. பிறகு நாசி படைகள் சோவியத்தை தாக்கத் தொடங்கிய வுடன் இதுவரையில் யுத்தத்தை எதிர்த்த கம்யூனிஸ்டுகள் உட்பட ஒத்துழைப்பது என்ற நிலைப்பாட்டை எடுத்தனர். இந்தியத் துணைக் கண்டத்தின் புரட்சித் தனிமை பற்றி புரிதல் இல்லாத இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்திய தரகு முதலாளிகளின் வாலாக மாறியது.

1947ல் போலி விடுதலைக்குப் பிறகு தமிழகத் தொழிலாளர்கள் புதிய சவாலை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஏ.ஐ.டி.யு.சி.க்கு மாற்றாக காங்கிரஸ் ஐ.என்.டி.யு.சி யை துவக்கியது. ஒப்பீட்டளவு தொழிலாளர் எண்ணிக்கை பெருகியது.

ஏனெனில் இதுவரை பிரிட்டிஷ் மூலதனத்திற்கு சேவை செய்த தரகு முதலாளிகள் பல்வேறு ஏகாதிபத்திய மூலதனங்களை ஈர்க்க, உட்கட்டுமான வசதி தொழிற்துறையை மேம்படுத்த வேண்டி யிருந்தது. மறுபுறம் இந்திய தரகு முதலாளிகளால் வஞ்சிக்கப்பட்ட தேசிய இனப் போராட்டம் வீரியம் கொள்ள ஆரம்பித்தது. இது தொழிலாளர் போராட் டத்திற்கு திருப்புமுனையாக அமைந்தது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை திரிபுவாதி என்று குற்றஞ்சாட்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோன்றியது. சிறிது காலத்திலே அக்கட்சி அரசு அடக்குமுறையை சந்திக்க நேரிட்டது. உடனடியாக அக்கட்சி தன்னை நவீன திரிபுவாதியாக மாற்றிக் கொண்டது.

இதற்கு மாற்றாக எழுந்த எம்.எல். இயக்க எழுச்சி குறிப்பிடத்தக்க அளவு தொழிலாளர் இயக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது. பல்வேறு காரணங்களால் தேர்தலை மையமாகக் கொண்டு புதிய புதிய கட்சிகள் முளைக்க ஆரம்பித்தது.

இது தொழிற்சங்க பிளவுகளையும் பிரதிபலித்தது. பொதுத் துறைகளை கட்டியமைத்த போலி சோசலிச நேருவின் பொருளாதாரக் கொள்கை நெருக்கடியை சந்தித்தது. இந் நெருக்கடி ஏழை எளிய தொழிலாள, விவசாயிகள் மீது சுமத்தப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 1970ல் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இறுதியாக 1976ல் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவித்தார். அனைத்து ஜனநாயக எல்லையும் மூடப்பட்டது. இதை எதிர்த்து நடந்த தொழிலாளர்கள் போராட்டம் சாலச் சிறந்தது.

1985ல் ராஜீவ்காந்தி பொறுப்பேற்றவுடன் பொருளாதார கொள்கைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. அடுத்தடுத்தாக ஆட்சி அமைத்த அனைத்து அரசாங்கங்களும் இதே கொள்கையை வீரியத்துடன் பின்பற்றுகிறது.

உலக மயம், தனியார் மயம், தாராளமயம் நிகழ்ச்சி நிரலுக்கு வந்தபிறகு அனைத்துத் துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. தொழிலாளருக்கு பணிப் பாதுகாப்பு கொடுத்த அனைத்து பொதுத் துறை நிறுவனங்களும் தனியார் வசம் போய்க் கொண்டி ருக்கிறது. இதுவரைப் பெறப்பட்டஅனைத்து உரிமைகளும் மீண்டும் ஏகாதிபத்திய கைகளுக்கு திரும்பிக் கொண்டிருக்கிறது.

மூலதனம் ஒருபுறம் உலகமயச்சூழலில் தொழி லாளர்கள் மட்டும் உள்ளூர் சந்தையில் கட்டி வைக்கப்படுகின்றன. உலக தொழில் நிறுவனம் ஆணைக்கிணங்க தொழிலாளர் பாதுகாப்பு நலச் சட்டம் திருத்தி அமைக்கப்படுகிறது. அதில் முக்கியமானவை:

தொழிற்சங்க சட்டத்தில் ஏற்பட்டிருக்கும் திருத்தம் அதாவது ஏழு பேர் இருந்தால் தொழிற்சங்கம் அமைக்கலாம் என்பதில் இருந்து நூறு பேர் இருக்க வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அடுத்ததாக தொழில் தகராறு சட்டத்தில் ஏற்பட்டி ருக்கும் திருத்தம் அதாவது நூறு பேர் கொண்ட தொழிற்சாலை மூடுவதென்றால் அரசு அனுமதி பெற வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி ஆயிரம் பேர் கொண்ட தொழிற்சாலையில் மட்டும் அனுமதி வாங்க வேண்டும் என்று மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

மறுபுறம் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி வெளியேற்றம் வெகுவாக கடைப்பிடிக்கப்படுகிறது. உதிரி பாகங்கள் உற்பத்திமட்டும் வெளியேற் றம் செய்யும் நிலை மாறி இறுதி உற்பத்தியும் வெளியேற்றம் செய்யப்படுகிறது. இந்த வெளி யேற்ற முறையால் தொழிலாளர்கள் பிரதான மாக சந்திக்கும் பிரச்சினை என்னவெனில் உற்பத்தி வெளியேற்றம் செய்யப்பட்ட தொழில் நிறுவனங்கள் சிறிய அளவு இருப்பதால் தொழிலாளர் நலச் சட்டங் களை அந்நிறுவனங்களில் செயலற்றுப் போகிறது. ஒப்பந்த தொழிலாளர் முறையும், தினக்கூலி முறையும் அதிகரித்துக் கொண்டே போகிறது. தொழிற்சாலை களில் முக்கியமான இருதய பிரிவுகள் கூட ஒப்பந்த முறையின் கீழ் வருவது கவனிக்கப்பட வேண்டும்.

பொதுவாக ஒப்பந்த நிறுவனங்கள் பதிவு செய்யப் படாத நிலையில் அவர்களைக் கண்காணிக்க போது மான சட்ட வரையறைகள் இல்லாத நிலையில் ஒப்பந்த தொழிலாளர் ஒழிப்புச் சட்டம் நிறைவேற்று வது சிக்கலாகிறது. மேலும் பாட்டாளி வர்க்கத்திடம் ஏற்பட்டு இருக்கும் வர்க்கப் பிளவு அதாவது நிரந்தர தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் சமூகப் பாதுகாப்பு, ஊதியம், பணிப் பாதுகாப்பு, கூட்டு பேரம் இவைகள் அனைத்தும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மறுக்கப்படுகிறது.

ஆதலால் நிரந்தர தொழிலாளர்கள் ஒப்பந்த தொழிலாளர்களை விட மேலானவர்களாக கருதுவது முதலாளி வர்க்க நலனிற்கு துணையாக அமைந்து விடுகிறது. தொழில் போட்டி காரணமாகவும் இறக்கு மதியில் போதுமான கட்டுப்பாடுகள் இல்லாததாலும் நவீனங்கள் தொழில் துறையில் புகுத்தப்படுவதால், கட்டாய ஓய்வின் கீழ் தொழிலாளர்கள் விரட்டப் படுவது வாடிக்கையாகி விட்டது.

புதிதாக உருவாகும் அனைத்து தொழில் துறை நிறுவனங்கள் சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் வருவதால் அங்கே தொழிலாளர் நலச் சட்டங்களை நிறைவேற்றுவது சிக்கலாகி விடுகிறது.

விவசாயிகள், தொழிலாளர்கள், விளம்பு நிலை மக்களின் வாழ்க்கை அழித்து உருவாக்கப்பட்டு இருக்கும், சேவை துறை மற்றும் மென் பொருள் துறைகளில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் நிரந்தரத் தன்மை வாய்ந்ததாக இல்லை. அந்நிறுவனங்களில் ஏற்பட்டுஇருக்கும் பொருளாதார வளர்ச்சி, ஊதிய பலூன் போன்றதே. உலகச் சந்தையில் தமிழர்களைக் காட்டிலும் குறைந்த விலையில் மென் பொருள் பொறியாளர்கள் கிடைத்தால் இம் மூலதனம் தமிழகத்தைவிட்டு வெளியேறுவது உறுதி.

இந்நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பெரும் அளவில் தொழிற் சங்கம் வடிவம் இல்லாததால் வர இருக்கும் நெருக்கடியைச் சந்திப்பது கடினம். தமிழகத்தைப் பொறுத்தவரை முதன்மையான சந்திக்கும் சிக்கல்கள் பின்வருமாறு:

1.     விவசாய உற்பத்தி முழுவதும் ஏற்றுமதிக்கே முதன்மை தரப்படுகிறது. இதனால் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2.     விவசாயி நிலங்கள் பறிக்கப்பட்டு தொழில் மயமாவது வாடிக்கையாகி விட்டது.

3.     விவசாயிக் கூலிகள் சிற்×ர்களை விட்டு நகரத்தை நோக்கி கட்டிடத் தொழிலாளர்கள், மற்றும் பல்வேறு விளம்பு நிலை வேலைகளை நோக்கி நகர்வது இயல்பானதாகி விட்டது.

4.     தொழில் துறை அனைத்தும் அன்னிய மூலதனத்தை நம்பி இருப்பதால் பணி அமர்வில் உத்தரவாதம் இல்லாதநிலை நீடிக்கிறது.

5.     சிறப்புப் பொருளாதார மண்டலம் அதிகம் அமைவதால் சனநாயக எல்லை குறுக்கப்படுகிறது. அண்மையில் இந்திய அரசு வேலை இல்லை இல்லாதோர் எண்ணிக்கை 2% என அறிவித்துள்ளது. இது உண்மையும் கூட. ஏனெனில் குறைந்த தனி நபர் வருமானம் 30 ரூபாய் என்று நிர்ணயித்து இருப்பதால்.

தமிழக தொழிற்சங்க எல்லை மற்றும் வருங்கால செயல்பாடுகளைப் புரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், கீழ்க்கண்டவற்றைக் கவனித்தே ஆக வேண்டும்.

தமிழக உழைப்புச் சக்திகளின் பகிர்வுகள் கீழ்க் கண்டவாறு பிரிந்து இருக்கிறது.

துறை     தொழிலாளர்கள்

       எண்ணிக்கை (லட்சம்)

1.விவசாயத் தொழில்  126.42

2. சுரங்கம், கல் உடைப்பு    1.05

3. உற்பத்தி நிறுவனங்கள்   64.90

4. மின்சாரம் மற்றும் தண்ணீர் பகிர்வு   0.83

6. வர்த்தகம், விடுதி, கேளிக்கை

 நிறுவனங்களில் 40.16

7. போக்குவரத்து மற்றும்

 தொலைத் தொடர்பு நிறுவனங்கள்     40.16

8. வங்கி, காப்பீட்டு நிறுவனங்களில்     10.16

தமிழக உழைப்புச் சக்தியில் 10 சதவீதம் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர்கள். அதிலும் 1990 களில் இருந்து தனியார் நிறுவனங்களில் மட்டுமே ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

உலக மயச் சூழலுக்குப் பிறகு அதிகரிக்கப்படும் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் எண்ணிக்கை அதிகரிப்பது தொழிற்சங்கங்களுக்கு சவாலாக அமைகிறது.

அரசு இத் தொழிலாளர்களை ஏமாற்றும் விதமாக பல்வேறுசட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அதாவது ஒவ்வொரு துறையிலும் வாரியம் அமைப்பது போன்ற நடவடிக்கை தொழிலளார் போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்கின்றதே தவிர வேறு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

குறிப்பாக 2008ல் இந்திய அரசு கொண்டு வந்து இருக்கும் ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர் களுக்கு 2 சட்டங்கள் கொண்டு வந்திருப்பது கவனிக்கத்தக்கது. பொதுவாக ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாக அறியப்படுபவர்கள், காவல் பணி புரிபவர்கள், விடுதியில் வேலை செய்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், வணிக நிறுவனங்களில் வேலை செய்பவர்கள், பொதுவாகப் புரிந்து கொள்ள வேண்டும் எனில், நேரடியாக உற்பத்தியில் ஈடுபடாத வர்களே.

நேரடி உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களையும், ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களாகக் கருதுவது கண்டனத்துக்குரியது. ஏனெனில் நிரந்தர தொழிலாளர் மத்தியில் மட்டும் செயல்படும் தொழிற் சங்கம் சந்தா வசூலித்து வெறும் தரகர்களாக மாறி இருப்பது இதற்குக் காரணம். இவைகள் தாண்டி நேரிட உற்பத்தியில் ஈடுபடும் ஒப்பந்தத் தொழிலாளர்களை ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைத்துகூட்டுப் பேரம், பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், பணி காப்பீடு போன்ற உரிமைக்காகப் போராடுவது இன்றியமையாதது.

விடுதி ஊழியர்கள், வணிக நிறுவஙன்களில் வேலை செய்பவர்கள், உற்பத்தி வெளியேற்றத்தின் அதிகளவில் சிறு தொழில் நிறுவனங்கள் வேலை செய்யும் தொழிலாளர்களை ஒரு தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து, பணி நேரக் குறைப்பு, சிறந்த பாதுகாப்பான வாழ்க்கையை மேற்கொள்ளும் அளவிற்கு குறைந்த பட்சம் ஊதியத்தை அரசை நிர்ணயிக்கக் கோரியும் அதைக் கண்காணிக்க சட்ட பாதுகாப்புக்காகவும் போராடுவது கட்டாயமானது. நிரந்தர தொழிலாளர்களைத் திரட்டி உற்பத்தி வெளியேற்றம் ஒப்பந்த முறை, தின கூலி முறைக்கு எதிராகப் போராட வேண்டியது இன்று தேவையாகிறது.

ஆக மேற்சொன்ன மூன்று பிரிவுகளாக பிரித்து தொழிற் சங்கத்தில் வேலை செய்ய வேண்டியுள்ளது.

இம்மூன்று பிரிவுகளை ஒருங்கிணைக்கத் தமிழகம் தழுவிய தொழிற்சங்கம் அமைத்திட வேண்டும். ஏனெனில் உலக மயச் சூழலுக்கு பின் தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைக்குள் சுருங்கி நிற்கின்றன. இதை அரசால் மற்றும் தொழில் நிறுவனங்களால் ஊக்குவிக்கப்படுகிறது.

தமிழக அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒருங்கிணைக்கப்படாத, நிரந்தர தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயித்துள்ளது பல அரசு ஆணைகள் மூலமாக, தமிழகத்தில் உழைப்பு சக்தி விலை அதிகமாக இருப்பதாக கூறி பல சிறு தொழில் நிறுவனங்கள் வேறு மாநிலங்களுக்கு இடம் மாறுகிறது. இதில் தமிழக முதலாளிகளும் அடங்குவர்.

தொழிலாளர் துறை பொதுப் பட்டியலில் இருப்பதால் மாநில அரசு மூலதனத்தை ஈர்க்கப் போட்டி போட்டுக் கொண்டு தொழிலாளர் நலனுக்கு எதிராகச் செயல்படுகின்றன. எட்டு மணி நேர வேலை என்பது 90% தமிழக மக்களுக்கு எட்டாதக் கனியாக இருக்கிறது.

ஆகையால் மே 1 போல் நாமும் ஒருபோராட்ட நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். தொழிற்சங்கப் பணி என்பது சந்தர்ப்பவாத செயல்பாடு என்று ஒதுங்கி நின்று, குறைந்த தொழிலாளர் கொண்ட புரட்சிகர இயக்கத்தைக் கட்டமைப்பது வாய் வீச்சாக அமைந்து விடும். தமிழக மக்களின் வாழ்க்கையைச் சுரண்டும் இந்திய தரகு மூலதனத்தையும் வல்லரசு மூலதனத் திற்கு எதிராக தமிழக உழைக்கும் மக்களை ஒன்று திரட்டுவோம்.

Pin It