periyar with kid 720கதர் பிரசாரத்தின் பலனால் வேஷக்காரர்கள் டெம்பரரியாய் கதர் கட்ட ஆரம்பித்து எப்போதும் வழக்கமாய் கதர் கட்டி வந்தவர்களுக்கும் கதர் கிடைக்க வழி இல்லாமல் போய் வேறு துணி கட்ட நிர்பந்தப்படுத்தி விட்டது.

இது ஒரு புறமிருக்க கதர் வியாபாரிகள் இந்த சமயத்தில் அடிக்கின்ற கொள்ளைக்கு அளவில்லை. துணியோ சாணித்துணிக்கும் உதவாது. விலையோ டக்கா மசிலினுக்கு மேல் விற்கப்படுகின்றது.

பஞ்சு விலை கண்டி 1.க்கு 320 ரூபாயிலிருக்கும் போதும் நூற்புக் கூலியும் நெசவுக் கூலியும் அரிசி ரூ. க்கு இரண்டரை பட்டணம் படி விற்றுக் கொண்டும் இருந்த போது போட்ட விகிதப்படியே இப்போதும் விற்கின்றார்கள். இப்போது பஞ்சு பாரம் 150 முதல் 160ரூ. க்குள் மிக்க சவதமாக இருக்கின்றது. அரிசி ரூ. 4 பட்டணம் படிக்கு மேலாகவே விற்கின்றது.

520 ராத்தல் கொண்ட பாரம் பஞ்சு 160 ரூ. விலையானால் பவுன் ஒன்றுக்கு 8 அணாவே பஞ்சு விலை அடங்கும்.

10 கிராம் உள்ள 50 இஞ்சு பீசு 3 ராத்தல் அல்லது மூன்றேகால் ராத்தல் இடை இருக்கும். இந்த மூன்றேகால் ராத்தலுக்குக் கிரயம் ரூ 1 - 10 - 0 நூற்பு கூலி ரூ 1. நெசவு கூலி 1 - 14 ஆக 10 கஜத்திற்கு ரூ 4 - 8 - 0 ஆகும். சிலவும் லாபமும் 5 அணா சேர்த்தால் 4 - 14 - 0 க்கு விற்கவேண்டியது நியாயமாகும். இப்போது 10 கஜம் 6 ரூபாயிக்கு மேலாகவே விற்கப்படுகின்றது. ஈரோட்டில் 6-8-0க்கும் கூட கிடைப்பதில்லை.

ஆகவே தேசீய கிளர்ச்சியின் பயனாய் பல வியாபாரிகள் இன்சால் வென்டாகவும் பல வியாபாரிகள் கொள்ளையடிக்கவும்தான் வழியேற் படுவதைத் தவிர மற்றபடி உண்மையான பலன் ஒன்றையும் ஏழைகள் அனுபவித்ததாகத் தெரியவில்லை,

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 27.07.1930)

Pin It