மிக நீண்ட நாட்களுக்குப்பிறகு, சமீபத்தில் இரண்டு திரைப்படங்களை திரையரங்கிலே போய்ப் பார்க்கும் சூழல் வாய்த்தது. வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்துக் கொள்ள விரும்பாததால் அரங்கிற்குச் சென்று படம் பார்ப்பது என்னளவில் ஒரு முக்கிய நிகழ்வு!

Anniyan

நான் பார்த்த இரண்டு திரைப்படங்களில் ஒன்று கொஞ்சம் பழையது. அந்நியன்! இன்னொன்று மிகவும் புதியது. பரமசிவன்! இரண்டு படங்களுமே ஏதோ ஒருவகையில் ‘நூலால்’ கட்டப்பட்ட கதைகள் தான். அந்நியன் இந்தியாவை முன்னேறவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் மனிதர்களைக் கொல்கிறான். பரமசிவன் இந்தியாவைச் சீர்குலைக்க முயலும் தீவிரவாதிகளைக் கொல்கிறான். இரண்டு பேருமே முடிந்து வைத்திருக்கும் குடுமியை விரித்துப் போட்டு சடைமுடியால் முகம் மறைத்துக் கொண்டு மனிதர்களைக் கொல்கிறார்கள்.

“அந்நியன்” அக்ரகாரத்திலிருந்து வருகின்ற அம்பி. “பரமசிவன்”, சுப்பிரமணிய சிவா என்று பெயரை வைத்துக் கொண்டு, பார்ப்பன அடையாளங்களோடு தெரிகிறவன். இந்த இருபடங்களைப் பற்றிய விமர்சனங்களும் வந்து, சில பேரால் விவாதிக்கப்பட்டு (குறிப்பாக அந்நியன் பற்றி) நாளாயிற்று தான். என்றாலும் இது ஒருவகையான மறுவாசிப்பு போன்ற ஒரு மறு அலசல் என்று நினைத்துக் கொள்ளலாம்.

நான் பார்த்த சில அயோக்கியத்தனமான படங்களில் முதல் நிலையில் நிற்பது, அதாவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனத்தில் இருப்பது அந்நியன் படம்.

படம் தொடங்கிய சில காட்சிகளிலேயே ஒரு குடிகாரன் என்னய்யா, சாரி, பூரி, கக்கூஸ்காரி என்று சொல்லிக் கொண்டு போகிறான். இந்த வசனத்தில் உறைந்திருக்கும் சாதிய கண்ணோட்டத்தினுடன் கூடிய கிண்டல், ஒவ்வாமை, வெறுப்பு, இளக்காரம் என் முகத்தில் அறைந்தது. அதற்குப்பிறகு அசூயையாகவே படம் முழுக்க உணர்ந்தேன். வசனம் சுஜாதாவால் எழுதப்பட்டது. விபத்தில் அடிபட்ட ஒருவனை காப்பாற்றாமல் போகிறதற்காகவும், தரமற்ற பொருளை உற்பத்தி செய்ததற்காகவும், சோம்பேறியாக குடித்துவிட்டு கிடந்ததற்காகவும் அம்பி ஆட்களைக் கொல்கிறான். கருட புராணத்தின்படி அவன் தண்டனைகள் அமைகின்றன. இப்படி கொலைகளை செய்கின்ற பார்ப்பனன், கொல்கின்ற ஆட்கள் எல்லோருமே பார்ப்பனர்கள் அல்லாதவர்கள்.

சங்கீத சபாவிலே தன் காதலி பாட்டு பாடுவதற்காக சபா தலைவரை கொலை செய்துவிடுவதாக மிரட்டி தன் காரியத்தை சாதித்துக் கொள்கிறான் அம்பி. மனுதர்மப்படி பார்ப்பனர்களை கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கக் கூடாது. இந்த விதியை மீறுவதில்லை அம்பி. ஆனால் மிரட்டி - காரியம் சாதிக்கிறான். அப்படி - சாதிப்பதும் குற்றம் தானே?. கையூட்டு தருவதன் எதிர்நிலை அது. தண்டனைக்குரியவரை கொல்லாமல் விடுவதன் மூலம் கருணையை கையூட்டாக்குவது. அம்பி காதலுக்காக குற்றம் இழைக்கிறான். இந்த சுயநலம் தான் அவனால் குற்றவாளிகளாக கருதப்படுகிறவர்களிடம் செயல்படுகிறது. இதை அம்பியின் மனம் புரிந்து கொள்வதில்லை. ஏனெனில் அது மனுதர்மப்படி இயங்குகிறது, கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அம்பியினால் கொல்லப்படுகின்றவர்கள் செய்கின்ற குற்றம் நம் சமூக கட்டமைப்பையும், இயங்கு நிலையையும் பொறுத்துப் பார்த்தால் சாதாரணமானவை. ஆனால் அதற்கு தரப்படுகின்ற தண்டனைகளோ அதிகபட்சமானவை. மிகக் கொடூரமானவை. குடித்துவிட்டு பூங்காவிலே சோம்பேறியாகப் படுத்திருக்கிறவனை அம்பி பாம்புகளை கடிக்கவிட்டுக் கொல்கிறான். சோம்பேறியாக என்பதன் நேர்ப்பொருள் உழைக்காமல் என்பதுதான். அப்படி பார்த்தால் இந்தியாவில் மேல்தட்டு மனிதர்கள் யாரும் உழைப்பதில்லை. அம்பியால் கொல்லப்படுகிறவனின் கட்டத்தினரே உழைக்கிறார்கள். மந்திரங்களை ஓதிவிட்டு, வேதகால நினைப்பின் மூலம் மனம் கொள்ளும் போதை நிலையில், உழைக்காமலேயே இருந்து கொண்டு சொகுசாக வாழ்கிறவர்கள் யார்? பரம்பரை பரம்பரையாய் வலிக்காமல் பெறப்படும் கோடிக்கணக்கான சொத்துக்களை அனுபவித்துக் கொண்டு உழைக்காமல் வாழ்பவர்கள் யார்? அம்பியின் கருத்துப்படி கொலை வாளின் முனை நீட்டப்பட வேண்டியது. அழுக்கடைந்த உடையுடன், படுக்க இடமின்றி, தின்னசோறின்றி கிடக்கும் மனிதனை நோக்கியல்லவே. அதற்கு நேர்மாறான நிலையில் உள்ளவர்களிடம் தானே?

ஜப்பானைப் போல, சிங்கப்பூரினைப் போல அம்பியின் ஆதங்கப்படி - இந்தியா வளராததற்குக் காரணம் என்ன? நிச்சயமாக ஏற்றத்தாழ்வினையுடைய சாதீய சமூக அமைப்புதான். எல்லா மனிதரும் கல்வி பெற, எல்லா மனிதரும் வீடு பெற, எலலா மனிதரும் வேலையும், உணவும் பெற எல்லா மனிதரும் உயர்வு பெற இந்தியாவிலே மறைமுகமாய் பெரும் தடையாக விளங்குவது சாதியன்றி வேறென்ன? ஒரு ஏழை தலித் தேநீர் கடை ஒன்றினை வைத்துக் கூட வாழ முடியாதபடி சமூகச் சூழலுள்ள நாட்டில் அவனும் அவன் சமூகமும் எப்படி முன்னேற முடியும்?

பிராமணிய கருத்தாக்கம் ஒரு தலித் பொருளாதார ரீதியாக முன்னேறியிருப்பதை விரும்புவதில்லை. செத்தவர்களுடைய ஆடைகளையே அவர்கள் தம் ஆடைகளாக உடுத்த வேண்டும். அவர்கள் தம் உணவினை உடைந்த சட்டிகளிலேயே சாப்பிட வேண்டும். துருப்பிடித்த இரும்பினாலான ஆபரணங்களையே அவர்கள் அணிதல் வேண்டும். எப்போதும் அவர்கள் இடம் விட்டு இடம் அலைந்து கொண்டேயிருக்க வேண்டும் என்று சொல்கிறது மனுதர்மம். 1930, 1931 ஆகிய இரண்டு வருடங்களிலும் ராமநாதபுரம் பகுதிகளில் ஆதிக்க சாதியினர் தலித் மக்கள் மீது விதித்த சமூகத்தடைகளை ஜே.எச். அட்டனின் இந்தியாவில் சாதி எனும் நூலினை மேற்கோள்காட்டி தனது பஞ்சமி நிலப்போர் எனும் நூலில் பட்டியலிடுகிறார் மாற்கு.

தலித்துகள் தங்க, வெள்ளி நகைகளை அணியக்கூடாது. ஒழுங்காக ஆடை உடுத்தக்கூடாது, படிக்கக்கூடாது, செருப்பணியக்கூடாது. நிலம் வைத்திருக்கவோ பயிரிடவோ கூடாது.அடி கூலிகளாக வேலை செய்ய வேண்டும். (மேற்படி நூல். பக்கம் -7) இந்த தடைகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இன்றளவும் தொடர்கிறது. இந்த நிலையை மீற நினைக்கிறவர்கள் தாக்கப்படுகிறார்கள். கொடியங்குளத்தில் தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும் அதன் காரணத்தையும் இந்த நாடே அறியும். ஒழுங்கான வருமானம் இல்லாத, உழைப்புக்கு ஏற்ற கூலியை பெற முடியாத ஒரு சமூகம் எப்படி நாகரீகம் அடைய முடியும்? அவர்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். அவர்கள் என்னவோ உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஷங்கர் அந்த மக்களை தான் கொல்ல சொல்கிறார்.

இந்தியா, ஜப்பானை போலவோ சிங்கப்பூரைப் போலவோ மாறாததற்கு காரணம் நிச்சயமாக இந்த மக்கள் அல்ல. அரசியல்வாதிகள், ஊழல் பேர்வழிகள், பெரும் தொழில் அதிபர்கள், சாதிய வெறிபிடித்தோர், மக்களை மாயையிலும், மூடத்தனத்திலும் வைத்திருக்கும் சனாதன போலி சாமியார்கள் போன்றவர்தான். ஏன் அந்நியனின் கோபம் இவர்கள் மீதெல்லாம் திரும்பவில்லை? ஏனென்றால் இந்தியாவின் ஆட்சி அதிகாரம், பொருளாதாரம், மத பீடங்கள் எல்லாமே இன்னும் பார்ப்பனர்கள் கையில் தான் இருக்கிறது. இதையெல்லாம் நினைக்கவோ, சிந்திக்கவோ விடாமல் கண் எதிரில் நடக்கும் அற்ப விசயங்களை காட்டி மக்களை ஏமாற்றுகிறார் ஷங்கர். இது அப்பட்டமான, அயோக்கியதனமான மூளைச் சலவையாகும்.

இந்தியாவின் பூர்வ குடிகளின் நம்பிக்கைகளும், மதங்களும், பௌத்தமும் அழித்தொழிக்கப்பட்டு பார்ப்பனியம் கோலோச்சிய நாளிலிருந்து கொடுமையான வருணாசிரமதர்மம் எத்தனை ஆயிரம் தலித்துகளை கொன்றொழித்திருக்கும். எத்தனை கோடி மக்களை விலங்கினும் கீழாய் நடத்தியிருக்கும். உணர்வாலும், உடலாலும், உள்ளத்தாலும், பலவீனப்படுத்தியிருக்கும் தலித்துகள் தவம் இயற்றினால், வேறு சாதியைச் சேர்ந்த பெண்ணை மணமுடித்தால், கட்டுமானங்களை மீறினால் கொல்வது. படித்தால், காதில் காய்ச்சிய உலோகத்தை ஊற்றுவது; நாவினை துண்டிப்பது கோயில் நுழைய முயன்றால் எரிப்பது. இப்படி எத்தனை எத்தனை தண்டனைகள்.

“வெண்மணி, மேலவளவு, காரணை, கொடியன்குளம், ஊஞ்சனை, திண்ணியம் என்று நவீன இந்தியாவின் தலை குனிவுகள் எத்தனை, எத்தனை.”

இவைகளுக்காகவெல்லாம் ஏன் யாரும் யாரையும் தண்டிக்க நினைப்பதில்லை. இவைகளையெல்லாம் தண்டனைக்குரிய குற்றமாக சமூகம் கருதவில்லையா? கருதவேண்டாம் என்கிறது அந்நியன். பல நூற்றாண்டுகளால் சாதிய கருத்தியலை கட்டிக்காத்து அதன் மூலம் பல ஆயிரம் மக்களை கொன்று வருகிறது பார்ப்பனியம். இந்தக் குற்றத்துக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை இருக்கிறது?

தம்மைத் தவிர்த்து வேறு யாருமே யோக்கியமானவர்கள் இல்லை என்ற மமதையின் மேல் நின்றபடி - பிற சமூகத்தை நோக்கி குற்றவாளிகளாக கை நீட்டுகிறது ஒரு சமூகம். சாதி ஒழியவேண்டும், தீண்டாமை குற்றம் என்று சட்டம் சொல்லும் இங்கே தான் குற்ற உணர்வற்று “அய்யங்காரு வீட்டு அழகே...” என்று பாடல்கள் வருவதும் நடக்கிறது. தேவர் மகன், சின்ன கவுண்டர் வரிசையில் இந்தப் பாடலையும் நாம் சேர்க்கலாம். தலித்துகளின் சாதிகளையோ, அவர்களின் அழகையோ பெருமிதம் கொள்கிற மாதிரி கருதிக் கொள்கிற சூழல் இங்கு உண்டா? அப்படியானதொரு சூழலை உருவாக்கும் கலைப் படைப்புகளை படைப்பது தானே புரட்சிகரமானதாய் கருதப்படும்.

தொடர்ச்சியாக பார்ப்பனியக் கருத்துக்களை தன் படங்களில் வெளிப்படையாக சொல்லிவரும் ஷங்கர் படங்கள் வெற்றிகரமான படங்களாக ஓடும் அவலம் இங்கே நடக்கிறது. எதிர் கருத்துக்களை ஊடகங்களில் சொல்லும் சூழல் இல்லை. இப்படியான படங்களின் மீது காத்திரமான விமரிசனங்களோ, இப்படங்களை நிராகரிக்கும் மனநிலையோ கூட இல்லை. நாம் நீண்ட நெடு நாட்களாக திராவிட இயக்கங்களால் ஆளப்பட்டு வருகிறோம் என்பதை நினைக்க வியப்பாய் இருக்கிறது.

நவீன சிந்தனைகள் மக்கள் சமூகத்தை அபரிமிதமான வழிகளில் பண்படுத்தி வருகின்றன. பெண் விடுதலை, மரண தண்டனை ஒழிப்பு போன்ற கருத்துக்கள் தொடர்ந்து பொது விவாதத்துக்குள்ளாக்கப்பட்டு சாதகமான கருத்துச் சூழலும் உருவாக்கப்பட்டுக் கொண்டு வருகிறது. ஆனால் சினிமாவோ படு கேவலமான சிந்தனை தளத்திலேயே இன்னும் நிற்கிறது. குற்றவாளிகளுக்கு திருந்துவதற்கான வாய்ப்பு தராமல் சகட்டுமேனிக்கு, கொடூரமாகக் கொன்றொழிக்கிறது. அபத்தமான கருத்துக்களையும் பொது கருத்தாக மாற்றும் வேலையைச் செய்கிறது.

**********

அடுத்ததாக பரமசிவன் என்னும் திரைப்படம் பரமசிவனில் ஒரு பெரிய அபத்தம் தேச பக்தி சரக்காக காட்டப்படுகிறது. வெளி நாட்டவர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை தடுக்க வேண்டும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை தடுக்கும் வழி அதுதான். இதற்கு நாடு முழுக்க குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதை தடுக்கலாம் என்று தீவிரவாதிகள் திட்டமிடுகிறார்களாம்! அதை ஒரு தேச பக்த மரண தண்டனைக் கைதி திறமையாக முறியடிக்கிறாராம்! - வடிவேலு, விவேக் ஆகியோரின் நகைச்சுவைக் காட்சிகளையே தோற்கடிக்கக் கூடியது இது!

குருவிக்காரர்கள் சுட்டதும் ஆரவாரத்துடன் கலைந்து பறக்கும் காக்கைகளல்ல அன்னிய முதலீட்டாளர்கள், கழுகுகள். எந்த வெடிச்சத்தத்துக்கு அசராமல் இங்கே வந்து முதலீடு செய்யும் அவை. அதற்குத் தேவையான அத்தனை வசதிகளையும் அரசு செய்து தரும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலுக்கெல்லாம் எந்த அன்னிய முதலீட்டுக் கம்பெனியும் பயப்படுவதில்லை. பாட்சா படத்தில் தனியார் மருத்துவக் கல்லூரி முதலாளி சொல்வது போல எல்லா ரவுடித்தனத்தையும் செய்துவிட்டுதான் தொழிலுக்கு வருகின்றன அக்கம்பெனிகள். தேவையேற்பட்டால் அவைகளே கூட ஆயுதக் குழுக்களை உருவாக்கி இயக்கவும் செய்கின்றன. ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இன்று எண்ணெய் வளத்தை சுரண்ட தனியார் கம்பெனிகள் இப்படித்தான் நடந்து வருகின்றன. அக்கம்பெனிகளின் அரசான அமெரிக்கா இதை செய்து வருகிறது. இக்கம்பெனிகள் மண்ணிறங்கும் நாடு சக்கையாய் உறிஞ்சப்படுகிறது.

அன்னிய முதலீடுகளால் (புதிய பொருளாதாரக் கொள்கையால்) ஒரு நாடு முன்னேறுவதைவிட சொந்த நாட்டின் தொழில் மற்றும் இதர துறை வளர்ச்சியே அதை முன்னேறச் செய்யும். இப்படி பார்த்தால் சுரண்டிக் கொழுக்க வரும் அன்னிய முதலீட்டாளர்களை விரட்டுவது கூட தேசபக்தி செயல்தான்! ஆனால் இது போன்ற புரிதல்கள் எதுவும் இல்லாததால் தீவிரவாதிகள், தேசபக்தி என்று படங்கள் வந்தபடியே உள்ளன. அன்னிய நாட்டு குளிர்பானக் கம்பெனிகள் உறிஞ்சும் நிலத்தடி நீரின் அளவால் வறட்சி உருவாகி இருக்கிறது என்று ஐ.நாவின் அறிக்கைகளே இப்போது ஒப்புக் கொள்கின்றன. பெப்சி, கோக் கோகோகோலா போன்ற பானங்களின் நுகர்வு அளவும் உயர்ந்துவிட்டிருக்கிறது. இந்த பிரச்சினையை மக்களிடம் கொண்டு போய் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும் வேளையில் அன்னிய முதலீடுகளை வரவேற்று அதற்கு எல்லா உதவிகளையும் வழங்கும்படியான கருத்தை உருவாக்கும் வகையில் ஒரு திரைப்படம் வந்திருக்கிறது.

வெகுசன கருத்தையும், சிந்தனையையும் வெகுசன சினிமாக்களின் தரத்தையும், தன்மையையும் கொண்டே அறிந்துக் கொள்ளலாம். நமது வெகுசன பொது கருத்து இப்படி இருக்கிறது. அப்படி - இருக்கவே ஊடகங்களும் விரும்பி வேலைகளைச் செய்கின்றன.
Pin It