தமிழக மக்கள் உரிமைக் கழக சார்பில் ஜனவரி 1 ஆம் தேதி சென்னை தியாகராயர் நகர் சி.டி.நாயகம் மேல்நிலைப் பள்ளியில் பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட் டதைக் கண்டித்து வழக்கறிஞர் பா. புகழேந்தி தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி)
பினாயக் சென், உச்சநீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்த போது, பிணை வழங்கக் கூடாது என்று சத்தீஸ்கர் காவல்துறை எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவில், கல்கத்தா தொழிலதிபர் பியுஷ்குகாவை (அவரிடமிருந்து தான் கடிதங்கள் கைப்பற்றப்பட்டதாக வழக்கு) மகேந்திரா என்ற ஓட்டலில்தான் கைது செய்ததாக காவல்துறை உண்மையைக் கூறியது. குகா தந்த வாக்குமூலமும்கூட அதுதான். “2007 மே ஒன்றாம் தேதி மகேந்திரா எனும் ஓட்டலில் என்னைக் கைது செய்து, கண்களைக் கட்டி, 6 நாள் சட்ட விரோதக் காவலில் வைத்து மே 7 ஆம் தேதி நீதிபதி முன் கொண்டு போய் நிறுத்தினர்” என்பதே குகா தந்த வாக்கு மூலம். குகா தன்னை சட்ட விரோதக் காவலில் வைத்திருந்தார்கள் என்று கூறிய வாக்கு மூலத்தின் அடிப் படையில் அது குறித்து விசாரணை நடத்தியிருக்க வேண் டும். ஆனால், அப்படி காவல் துறை விசாரணை எதும் நடத்தவில்லை.
அதே சத்தீஸ்கர் காவல்துறை ரெய்ப்பூர் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், குகாவை மகேந்திரா ஓட்டலில் கைது செய்ததாகக் கூறவில்லை. மாறாக ‘ஸ்டேஷன் ரோடு’ என்ற சாலையில் சென்றபோது வழியில் மடக்கி கைது செய்ததாகவும், அப்போது அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது கடிதங்கள் கிடைத்தன என்றும் கூறியது. இந்த முரண்பாட்டுக்கு ‘டைப்’ செய்வதில் பிழை ஏற்பட்டுவிட்டதாக காவல்துறை சமாதானம் கூறி விட்டது. சாலையில் குகா கைது செய்யப்பட்டார் என்பதற்கு ஒரே ஒருவர் மட்டும் சாட்சியாகக் கொண்டு வந்து நிறுத்தப்பட்டார். அவர், அனில்குமார் சிங் என்ற துணி வியாபாரி. பினாயக்சென் சிறையில் நக்சலைட் தலைவர் நாரயண் சன்யாலை அடிக்கடி சந்திப்பார் என்றும், அவரிடமிருந்து கடிதங்களைப் பெற்று குகாவிடம் கொடுத்தார் என்றும் சாட்சியமளித்தார்.
மற்றொரு கடிதத்தை பினாயக் சென் வீட்டில் கைப்பற்றப் பட்டதாகக் காவல்துறை கூறியது. கைப்பட எழுதிய கடிதமாக இருந்திருந்தால் சோதனைக்கு உட்படுத்தி விசாரணை நடத்தியிருக்க முடியும். அத்தகைய சோதனைகள் ஏதும் நடப்பதை காவல்துறை விரும்ப வில்லை. எனவே ‘டைப்’ செய்த கடிதமாக “உருவாக்கி” விட்டார்கள். கீழே கையெழுத்தும் இல்லை. அது மட்டுமல்ல, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் காவல்துறை ஆய்வாளர் கையெழுத்திட்டு பட்டியலிட வேண்டும் என்பது சட்ட நடைமுறை. அப்படி கைப்பற்றப்பட்டதாக பட்டியலிடப்பட்டு காவல்துறை சாட்சிக்கு வைத்த ஆவணங்களில் இந்த கடிதம் இடம் பெறவில்லை. எனவே இது மோசடியாக பிறகு வழக்கில் இணைக்கப்பட்டிருக்கிறது என்பது தெளிவா கிறது. நியாயமாக நீதிமன்றம் இந்தக் கடிதத்தை ஏற்காமல், நிராகரித்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றம், கடிதத்தை சாட்சியாக ஏற்றுக் கொண்டு விட்டது.
சாட்சியங்களின் சட்டத்தின்படி, காதில் கேட்டதாக கூறு வதை மட்டும் சாட்சியமாக நீதிமன்றம் ஏற்க முடியாது. உதாரணமாக, ராமன் என்பவன், முருகனிடம், “நான் கிருஷ்ணன் தலையை வெட்டிய கத்தியை பக்கத்திலுள்ள கிணற்றில் புதைத்துள்ளேன்” என்று கூறினால், கிணற்றைத் தோண்டி, கத்தியை எடுத்து அதை வழக்குக்கு சாட்சியமாக பயன்படுத்தலாம். ராமன் முருகனிடம் கூறிய ‘வாய் மொழி’யை சாட்சியாக நீதிமன்றம் ஏற்க முடியாது. ஆனால், அனில்குமார் என்ற ஒருவர் தந்த வாய்மொழி சாட்சியத்தை மட்டுமே ஏற்று, நீதிமன்றம் சென்னுக்கு ஆயுள் தண்டனை வழங்கிவிட்டது.
அப்படியே கடிதத்தை பினாயக் சென்தான் கொண்டு வந்து கொடுத்தார் என்று ஒப்புக் கொண்டாலும்கூட கடிதத்தின் உள்ளடக்கம் என்ன என்பதைப் பார்க்க வேண்டும். ஏதேனும் வன்முறைகளை நடத்துவதற்கான கருத்து அதில் இடம் பெற்றிருந்தால்தான் குற்றம். இல்லையேல் அதை சட்ட விரோத சதிச் செயலாகக் கருத முடியாது. இதை உச்சநீதிமன்றமே தீர்ப்புகளில் தெளிவு படுத்தியுள்ளது. பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்பட்டு சமூக ஒழுங்கை சீர்குலைத்தால் மட்டுமே தேச விரோத செயலாகக் கருத வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.
உதாரணமாக 1984 ஆம் ஆண்டு, இந்திரா துப்பாக்கி யால் சுடப்பட்ட சில மணி நேரங்களில் சண்டிகரில் திரையரங்குக்கு வெளியே இரண்டு மாநில கல்வித்துறை அதிகாரிகள் காலிஸ்தான் தனிநாட்டுக்கு ஆதரவாகவும் இந்துத் தீவிரவாதத்துக்கு எதிராகவும் முழக்கமிட்டனர். பல்வந்த் சிங், பிபுந்தர்சிங் என்ற அந்த இரண்டு கல்வி அதிகாரிகளையும் கைது செய்து அவர்கள் மீது தேசவிரோதம் மற்றும் (124ஏ), இரு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல் (153ஏ) என்ற குற்றச்சாட்டு களை சுமத்தி கைது செய்தார்கள். நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனையும் வழங்கியது. இந்திரா கொலை சம்பவம் உருவாக்கிய பதட்டம்; பஞ்சாபில் ஆயுதப் போராட்டம் மேலோங்கியிருந்த அந்த சூழலில் கூட இந்தக் “குற்றத் துக்கு” ஓராண்டு தண்டனை மட்டுமே வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது. உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல் முறையீட்டுக்கு வந்தபோது, இந்த வழக்கு ‘தேசத் துரோக’ குற்றச்சாட்டின் கீழ் வராது என்று உச்சநீதிமன்றம் 1995 ஆம் ஆண்டில் தள்ளுபடி செய்து விட்டது. “பிரிவினை முழக்கங்கள் எழுப்பப்பட்டாலும் அதன் காரணமாக எந்த வன்முறையும் நிகழ்ந்து விடவில்லை. அப்படி, எந்த நிகழ்வு களும் நடத்திடாமல், முழக்கங்கள் மட்டுமே எழுப்பும்போது அதை தேசத் துரோகத்தின் கீழ் குற்றமாகக் கருதிட முடியாது” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. (1995(3) SCC 214)
2009 ஆம் ஆண்டு, ஏப்ரல் 9 ஆம் தேதி உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.வி.ரவீந்திரன் மற்றும் மார்க்கண்டே கட்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய ஒரு தீர்ப்பில், தேசத் துரோகக் குற்றச்சாட்டை நிபந்தனைக்குட்பட்டுத்தான் பயன்படுத்தவேண்டும். கருத்துச் சுதந்திர உரிமையின் கழுத்தை நெறிப்பதற்காக, அதைப் பயன்படுத்தக் கூடாது என்று சுட்டிக் காட்டியது. 1962 ஆம் ஆண்டு பீகார் அரசுக்கும் கேதார் நாத்துக்கும் இடையே நடந்த வழக்கில் இதே கருத்தை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி யிருப்பதையும், நீதிபதிகள் மேலே சுட்டிக்காட்டிய தங்கள் தீர்ப்பில் எடுத்துக் காட்டியிருந்தனர்.
ஆக, குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்ட கடிதங்களும் முறையான ஏற்கத்தக்க ஆதாரங்களாக இல்லை. கடிதங்கள் கைப்பற்றப்பட்டதற்கு முன் வைத்த தகவல்களிலும் முரண்பாடுகள். சாட்சியாக நிறுத்தப்பட்ட வரின் வாய்மொழி சாட்சியும் சட்டப்படி ஏற்கவியலாத ஒன்று. இவ்வளவுக்கும் மேலாக கடிதங்கள் உண்மை என்று ஒப்புக் கொண்டாலும் அதை பினாயக் சென் தான். வெளியே கொண்டு வந்தார், கொடுத்தார் என்ற ஒப்புக் கொண்டாலும், கடிதத்தின் உள்ளடக்கம் - தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் வர முடியாது என்ற நிலையில், சென்னுக்கு ஆயுள் சிறை வழங்கப்பட்டுள்ளது. சில ஆபத்தான நக்சலைட் தலைவர்களுக்கு சென் வாடகைக்கு வீடு பார்த்து தந்தார் என்றும், நக்சலைட்டுகளின் மத்திய குழு கூட்டத்தில் சென், சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொள்வது வழக்கம் என்றும், எந்த ஆவணைச் சான்று மில்லாமல் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் அளித்த சாட்சி யத்தையும் நீதிமன்றம் சென்னுக்கு எதிராகப் பயன்படுத்தியுள்ளது.
காவல்துறை அடிக்கடி பயன்படுத்தும் ‘ஆபத்தான நக்சலைட்டுகள்’ (Hardcore Naxelites) என்ற சொற் றொடர் சட்டப் புத்தகத்திலே இடம் பெறாத ஒரு புதிராகவே இருக்கிறது. தனி மனிதர்கள் மீது வழக்குகள் தொடர்ந்து அந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டிக்கப்படும் வரை, எவருமே குற்றமற்றவர்தான். ஆனால், குற்றங்களோ, வழக்குகளோ ஏதுமின்றி தண்டனை பெறாத ஒருவரை ‘ஆபத்தான நக்சலைட்டுகள்’ என்ற பெயரை சூட்டி குற்றப் பத்திரிகைகளில் காவல்துறை அப்படி எழுதிக் கொண் டிருப்பதுதான் வியப்பானது. நீதிபதிகளும் இந்த சொற் றொடரைப் படித்தவுடனேயே அவர்கள் வழக்கில் நடுநிலைப் பார்வையைத் தவறி ஆபத்தான மனிதர்கள் பற்றிய வழக்கு என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்கள்.
‘தேச பக்தி’ என்ற சொற்றொடர் மக்களை அச்சுறுத்து வதற்காகவே பயன்படுத்தி மாற்றுக் குரல்களை ஊமை யாக்கி விடுகிறார்கள். ஜனநாயகத்தின் அளவுகோல் தேர்தல்களை நடத்துவது மட்டுமல்ல, மாற்றுக் கருத்து களுக்கு உரிய கவுரவம் வழங்கப்படுகிறதா என்பதும், ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். இந்தியாவின் ஜனநாயகம் பார்ப்பன நாயகமாகவே இருப்பதால், ஜன நாயகத்தின் உண்மையான உள்ளடக்கம் சாகடிக்கப்பட்டு, மேல் பூச்சு மட்டுமே வெளிப்பட்டு நிற்கிறது. பெரும்பான்மை யினரின் கருத்துகள் என்ற பெயரில் மாற்றுக் குரலை நசுக்கி விட்டால், அரசு என்ற அமைப்பு மேலும் எதேச்சாதி காரமாகவே மாறி நிற்கும்! இந்திரா காந்தி, 1975-77 இல் பிறப்பித்த அவசர நிலை பிரகடன காலம், அப்படித்தான் இருந்தது. மாற்றுக் கருத்துகளே முடக்கப்பட்டன. அப்படி அடக்கப்பட்ட, முடக்கப்பட்ட கருத்துகளே மக்களுக்கு “அவசர நிலை” அடக்குமுறையிலிருந்து விடியலைத் தேடித் தந்ததை மறந்துவிடக் கூடாது அரசிடமிருந்து மாறுபட்ட வர்களும், அதனடிப்படை யில் நிகழும் செயல்பாடுகளுமே ஜனநாயகத்தை இயக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த ஜனநாயக நாட்டில் ஒரு குடிமகனாக இருப்பவர், அத்தகைய குடிமகனாக நான் இருக்க விரும்பவில்லை என்று கருத்தைக் கூறும் உரிமை வழங்கப்படும் போதுதான் அது ஜன நாயகம்; அப்படிப் பேசுவதே தேசத் துரோகக் குற்றம் என்றால் அதற்குப் பெயர் பார்ப்பன நாயகம். மாற்றுக் குரல்களுக்குத்தான் கூடுதலான பாதுகாப்புகள் வழங்கப் பட வேண்டும். ஆனால் பார்ப்பன நாயகம் - அதை அனுமதிப்பதில்லை.
பார்ப்பனர்களின் வேத மதத்தை - ஒட்டு மொத்த சமூகத்தின் இந்து மதம் என்ற பெயரால் பார்ப்பனர்கள் திணித்தார்கள்; எதிர்த்தால் ‘மத வேஷம்’ தேச விரோதம் என்கிறார்கள். இதே அணுகுமுறைதான் ஜனநாயகத்திலும் தேசபக்தி என்ற பெயரில் பின்பற்றப்படுகிறது.
பினாயக் சென் தனது செயலாலும், பேச்சாலும், மாறுபாடுகளை வெளிப்படுத்தினார். திணிக்கப்பட்ட பொதுப் புத்தியிலிருந்து விலகி நின்றார். அவர் தான் உண்மை ஜனநாயகத்தின் அடையாளம். பார்ப்பன நாயகத்தின் எதிரி. பினாயக் சென்னைக் காப்பாற்ற வேண்டும் என்பது, ஜனநாயகத்தைக் காப்பது ஆகும். ‘மவுனப்படுத்தி’, ‘முடக்கி’ சிறையிலடைப்பது பார்ப்பனி யத்தின் செயல் வடிவமாகும்.
பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி மக்கள் வேட்டையாடப்பட்டபோது, ‘சல்வா ஜுடும்’ என்ற பெயரில் அரசின் கூலிப் படை ராணுவத்தோடு சேர்ந்து கொண்டு, மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளை நேரில் சென்று அறிந்து, அசைக்க முடியாத ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வந்தார். அதுவே அவர் மீது பார்ப்பனிய அரசு வெறுப்பைக் கக்குவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
பினாயக் சென் இப்படி எல்லாம் எதிர்ப்பை வெளிப் படுத்தாமல் இருந்தால் அவர் பாதுகாப்பாக இருந்திருக் கலாம். தேச பக்தியுள்ள டாக்டராக அவர் கருதப்பட்டிருப் பார். நமது நாட்டில் தேச பக்திக்கான அடையாளங்களும் வெளிப்பாடுகளும் எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?
காஷ்மீர் மக்களின் தன்னாட்சி உரிமையை அங்கீ கரிக்க வேண்டும் என்றால், அவர்கள் தேச விரோதிகள். காஷ்மீர், இந்தியாவின் ஒரு பகுதி தான் என்று பொய் பேசினால், அவன் தேச பக்தன்!
இந்து மதம் என்றாலே அது பார்ப்பன மதம். இந்துக்களின் தேசம் என்ற பெயரில் பார்ப்பனர்களின் தேசமாக்குகிறார்கள் என்றால் அது தேச விரோதம். இந்தியா புண்ணிய பூமி; வேதங்களைக் கொண்ட பெருமைக்குரிய தேசம். நாம் அதன் புதல்வர் என்று பேசினால் அது தேச பக்தி.
இராணுவத்தாலும், சட்டங்களாலும் ஒற்றுமையை செயற்கையாகத் திணிக்க முடியாது. மக்களிடமிருந்து ஒற்றுமை உணர்வு அரும்ப வேண்டும் என்று கூறினால், அது தேச விரோதம். எந்த விலை கொடுத்தாவது ஒருமைப் பாட்டைக் காப்போம் என்று முழங்கினால், அது தேச பக்தி.
விவசாயத் துறையில் வளர்ந்திருக்கிறோம் என்று கூறிக் கொண்டு, பல்லாயிரக் கணக்கான விவசாயிகளின் தற்கொலையை மறைத்தால் அது தேச பக்தி.
22000 மக்கள் போபாலில் பலியான பிறகும், 26 ஆண்டுகளாக அதற்குக் காரணமான யூனியன் கார்பைடு அதிகாரி ஆண்டர்சன், தண்டிக்கப்படாததை சுட்டிக் காட்டினால் அவன் தேச விரோதி! ஆசியாவிலேயே மக்கள் நலன் பேணும் ஜனநாயக ஆட்சி, இந்தியாவில் தான் நடக்கிறது என்று பொய் பேசினால் அது தேச பக்தி!
இறுதியாக ஒரு கருத்தை சுட்டிக் காட்ட வேண்டும். பினாயக் சென்னுக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா தீர்ப்பைக் கண்டிக்கிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகளும், நோபல் பரிசு பெற்றவர்களும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுக்கின்றன. வரவேற்க வேண்டியதுதான். மகிழ்ச்சி தான். ஆனால், இதே அடக்குமுறை சட்டங்களுக்கு உள்ளாக்கப்பட்டு, ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட கொளத்தூர் மணி, பழ. நெடுமாறன், வை.கோ. போன்றவர்களுக்கு ஆதரவாக, ஏன், இந்தக் கண்டனக் குரல் எழவில்லை?
தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால், தமிழ்நாட்டில் வாழும் சிங்கள மாணவர்கள் கதி என்னவாகும் என்று, ஒரு எச்சரிக்கைக்காகவே கருத்தை வெளியிட்ட சீமான், 5 மாத காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாரே; அதை எதிர்த்து ஏன், இந்த ‘இந்து’ பார்ப்பனர்கள், மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கவில்லை? அவர் பேசியதற்குப் பிறகு எந்த ஒரு சிங்களவருக்காவது எந்த ஒரு சிறு ஆபத்தாவது தமிழ்நாட்டில் நடந்ததா? ஆனால், தமிழக மீனவர்கள் மீதான சிங்களர் தாக்குதல் மட்டும் தொடருகிறதே! விடுதலைப் புலிகளை என்றும் ஆதரிப்போம் என்று நாடாளுமன்றத்தில் வைகோ பேசியதற்கு எந்தத் தண்டனையும் இல்லை. அதே கருத்தை மதுரை திருமங்கலத்தில் மக்கள் மன்றத்தில் பேசியதற்காக ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி ஒன்றரை ஆண்டுகாலம் அவரை சிறையில் தள்ளியது. அந்தக் கூட்டத்தில் 5 நிமிடம் - அய்ந்தே அய்ந்து நிமிடம் நன்றி கூறியவரைக் கூட ஜெயலலிதா பார்ப்பன ஆட்சி ஒன்றரை ஆண்டுகாலம் சிறையில் தள்ளியது.
தமிழ்நாட்டில் சென்னையில் பினாயக் சென்னுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்த பெரியார் திராவிடர் கழகமும் காஞ்சி மக்கள் மன்றமும் அனுமதி கேட்டபோது அது ‘நீதித் துறையில் குறுக்கிடும் நடவடிக்கை’ என்று காவல்துறை அனுமதி மறுத்திருக்கிறது.
2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருக்கும் போதே தி.மு.க. தாங்கள் குற்றமற்றவர்கள் என்று கூட்டங்கள் போட்டு பேசுகிறார்களே; அதை மட்டும் எப்படி அனுமதித்தீர்கள்? மருத்துவக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியதற்காக அதை எதிர்க்காமல் இருந்து விட முடியுமா? தமிழக அரசே எதிர்ப்பு தெரிவித்துள்ளதே? காவல் துறையின் பார்வையில் இவை எல்லாம் நீதித் துறையில் குறுக்கிடும் நடவடிக்கை தானா?
‘இந்து’ போன்ற பார்ப்பன ஊடகங்கள் மனித உரிமைப் பிரச்சினையை குறியீடாக மாற்றி, பினாயக் சென்னுக்கு மட்டும் ஆதரவு தெரிவித்து, முற்போக்கான முகத்தைக் காட்டிக் கொள்ளும் அதே நேரத்தில், ஈழத் தமிழினப் படுகொலை உட்பட பல்வேறு மனித உரிமை மீறல்களை நியாயப்படுத்தி எழுதுகின்றன; மனித உரிமையிலும் இவர்களின் மனுநீதிப் பார்வையைத் தானே காட்டுகிறது. இந்த பார்ப்பன வஞ்சகத்தையும் நாம் அம்பலப்படுத்த வேண்டும். நம்முடைய மனித உரிமைக்கான குரல் குறியீடுகளோடு முடங்கி விட்டால் அது ஜனநாயகக் குரல் அல்ல; பார்ப்பன நாயகக் குரல். இந்த மனித உரிமைக் குரல் கொளத்தூர் மணிக்கும், சீமானுக்கும், லோகு அய்யப்பனுக்கும் விரிவாகும் போதுதான் அது ஜனநாயகத்துக்கான குரல்