பொதுவாக அரசியல் தலைவர்கள் சிலர் தோல்வி பயத்தின் காரணமாகவோ, பகட்டின் காரணமாகவோ ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இவ்வாறு ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு, போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் வெற்றி பெரும்பட்சத்தில் ஏதேனும் ஒரு தொகுதியை இவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையெனில் வெற்றி பெற்ற 2 தொகுதிகளின் பதவியும் பறிபோய்விடும். எனவே ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்வர். அந்த தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.
இப்படித்தான் புதுவை சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் ரங்கசாமி இந்திராநகர், கதிர்காமம் ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். அவர் 2 தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றார். முதலமைச்சர் ரங்கசாமி தனது இந்திராநகர் தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதையடுத்து இந்திராநகர் தொகுதிக்கு விரைவில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் வெற்றி பெற்ற உறுப்பினர் மரணித்து விட்டாலும் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கு சமீபத்தில் மறைந்த அமைச்சர் மரியம் பிச்சையின் தொகுதியை எடுத்துக் கொள்ளலாம். அதேபோல் ஒரு தொகுதின் பிரதிநிதிதான் அங்கம் வகித்த கட்சியில் இருந்து வேறு கட்சிக்கு மாற நாடி, தான் வகித்த எம்.எல்.ஏ அல்லது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தால் அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்னும் சில அரசியல்வாதிகள் பரபரப்பிற்காக ராஜினமா செய்வதால் அவர்களது தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெறுவதும் வாடிக்கையாக உள்ளது.
உதாரணமாக தெலுங்கானாவுக்கு ஆதரவாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.எல். ஏக்கள் 11 பேரும், பாரதீய ஜனதாவை சேர்ந்த ஒரு எம்.எல்.ஏ.வும் ராஜினாமா செய்தனர். இந்த பன்னிரண்டு தொகுதிகளுக்கும் நடந்த இடைத்தேர்தலில், ராஜினாமா செய்தவர்களே போட்டியிட்டு மீண்டும் அவர்களே வெற்றி பெற்றனர். அதாவது அவர்களது ஆசனத்தில் மீண்டும் அவர்களே அமர்ந்துள்ளனர். இவர்களின் இந்த அரசியல் விளையாட்டுக்கு மக்களின் வரிப் பணம் பாழானதுதான் மிச்சம்.
இவ்வாறான திணிக்கப்பட்ட இடைத் தேர்தல்கள் மூலம் மக்களின் வரிப் பணம் கோடிக்கணக்கில் விரைய மாகிறது. இதை தடுக்கும் கடமை அரசுக்கும் தேர்தல் கமிஷனுக்கும் உண்டு. அதற்கான தீர்வை ஆராய வேண்டும். இடைத்தேர்தல் விஷயத்தில் ஒரு மாற்றம் வேண்டும். அதாவது ஒரு தொகுதியின் உறுப்பினர் மரணித்து விட்டால் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தாமல், இறந்தவர் எந்தக் கட்சியை சேர்ந்தவரோ அக்கட்சியின் சார்பாக மாற்று உறுப்பினரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் மற்ற கட்சிகள் விட்டுக் கொடுக்க வேண்டும்.
ஒரு தொகுதியின் உறுப்பினர் மாற்று கட்சியில் சேர்வதற்காக தனது பதவியை ராஜினாமா செய்தால், ராஜினாமா செய்தவர் எந்த கட்சி சார்பாக தேர்ந்தேடுக்கப்பட்டாரோ அக்கட்சிக்கே மாற்று உறுப்பினரை தேர்ந்தெடுக்கும் வகையில் அத்தொகுதியை விட்டுக் கொடுக்க அனைத்து கட்சிகளும் முன்வர வேண்டும் அங்கு இடைத் தேர்தல் நடத்தக் கூடாது.
ஒரு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக உள்ள ஒருவர் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிட அனுமதிக்கக் கூடாது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளவர் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு போட்டியிட அனுமதிக்கும் பட்சத்தில் அவர் ராஜினாமா செய்த தொகுதியில் மறு தேர்தல் நடத்தாமல் அவர் சார்ந்த கட்சியே மாற்று உறுப்பினரை தேர்ந்தெடுக்க அனுமதிக்க வேண்டும்.
ஒருவர் ஒன்றிற்கும் மேற்பட்ட தொகுதியில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது. அவ்வாறு அனுமதிக்கும்பட்சத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்த தொகுதிக்கு நடைபெறும் மறு தேர்தல் செலவை அந்த நபரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சட்டமியற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் இடைத்தேர்தலும் இருக்காது. மக்களுக்கு இன்னலும் இருக்காது. மக்களின் வரிப்பணமும் பாழாகாது. தேர்தல் கமிஷனும் அரசியல் கட்சிகளும் பரிசீலிக்குமா?
- முகவையார்