பிரதமர் அலுவலகத்தையே மிரள வைத்திருக்கும் இந்த அன்னா ஹசாரே யார்? அன்னா ஹசாரே என்றழைக்கப்படும் முனைவர் கிசான் பாபுராவ் ஹசாரே, 1938ம் ஆண்டு ஜூன் 15ம் தேதியன்று மகராஷ்ட்ரா மாநிலத்தில் பிறந்தவர். தன்னை ஒரு "ஃபக்கிரி' என்றழைத்துக் கொள்ளும் அன்னா ஹசாரேவின் ஆரம்பக் கால வாழ்க்கை துயரம் மிகுந்ததாகவே இருந்தது.

நான் ஏன் வாழ வேண்டும், ஏன் இந்த வாழ்க்கை என வெறுப்பின் உச்சத்தில் ஒருமுறை தற்கொலை செய்யும் முடிவில், இரண்டுப் பக்கத்துக்குதான் ஏன் தற்கொலை செய்யப் போகின்றேன் என எழுதி வைத்து விட்டு தற்கொலைக்கு கூட முயன்றுள்ளார். ஆனால் அம்முயற்சி கைக்கூடவில்லை.

பின்னர் ஒருமுறை டெல்லி ரயில் நிலையத்துக்கு சென்றிருந்தபோது அவர் படித்த சுவாமி விவேகானந்தரின் புத்தகம்தான் அவரது வாழ்க்கையை புரட்டிப்போட்டது. போராடுவது அவருக்குப் புதிதல்ல. இந்திய இராணுவத்தில் 15 ஆண்டு காலம் எல்லையில் நின்றுப் போராடியவர்தான் அண்ணா ஹசாரே.

1962ல் இந்தோ # சீன யுத்தத்தில் இளைஞர்கள் பங்கேற்கும்படி அரசு விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி தம்மை இராணுவத்தில் இணைத்துக் கொண்டவர் அன்னா ஹசாரே. ஆனால் இராணுவத்தில் அவர் மனம் முழுமையாக ஈடுபடவில்லை. தமது வாழ்வின் நோக்கம் என்ன என்பதே தெரியாமல் இருந்த நிலையில், தானாகவே தமது இராணுவப் பணிக்கு விடை சொல்லிவிட்டு மகாராஷ்ட்ராவில் உள்ள தமது சொந்த ஊரான ராலேகாவன் சித்திக்கு 1978ம் ஆண்டு தனது 39வது வயதில் திரும்பினார்.

அப்போதுதான் தமது கிராம மக்கள் தமது வாழ்க்கையை வாழவே துன்பப்படுகின்றார்கள் என்பதை பார்த்து மனம் பதைபதைத்தார். அவர்களின் வாழ்வை மாற்ற, துன்பத்தைத் துடைக்க உலகிலேயே முன்மாதிரியான மழை நீர் சேகரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி பெரும் சாதனை புரிந்தார்.

அதனைத் தொடர்ந்து தமது கிராமத்து மக்களுக்காக அடிப்படை வசதிகளையும் அரசிடம் பெற்றுத் தர முயன்றார். ஆனால் ஆரம்பத்தில் அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. லஞ்சமும், ஊழலும் ஏழை எளியவர்களை துரத்தியது. அரசுக் கொடுக்கும் குறைந்தப்பட்ச உதவிகள் கூட மக்களுக்கு எட்டாக்கனியாக இருந்தது கண்டு வெகுண்டு எழுந்தார் ஹசாரே.

இப்போதுதான் முதன் முறையாக லஞ்சத்துக்கு எதிரான போராட்டத்தை ஹசாரே தொடங்கினார். இந்த லஞ்சம்தான் கிராமப்புற இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருந்தது என்பதை உணர்ந்த அவர் ஊழலுக்கு எதிரான மக்கள் போராட்டம் என்ற அமைப்பை நிறுவி போராட ஆரம்பித்தார். காந்திய வழிகளிலான அவரதுப் போராட்டம் உண்ணாவிரதம் இருப்பதும், அரசியல்வாதிகளை குறி வைப்பதுமாகவே இருந்தது.

மகாராஷ்ட்ராவில் அவரது போராட்டத்தைக் கண்டு மிரண்ட, அப்போது ஆட்சியில் இருந்த சிவசேனா# பா.ஜனதா கூட்டணி அரசு, அவருக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தன. ஆனாலும் அசாரத அவரது போராட்டத்தின் உக்கிரம் தாங்க முடியாமல், 1995 # 1996 ஆம் ஆண்டுகளில் ஊழல் செய்த சிவசேனா - பா.ஜனதா அமைச் சர்களை பதவி இறங்க வைத்தார்.

அத்தோடு நிற்காமல் 2003ம் ஆண்டு காங்கிரஸ் # தேசியவாத காங்கிரஸ் அரசின் நான்கு அமைச்சர்கள் செய்த ஊழலுக்கு எதிராக மாநில அரசை வைத்தே விசாரணைக் குழு ஒன்றை ஏற்பாடு செய்ய வைத்தார். இவரைக் கண்டு சிவசேனா தலைவர் பால்தாக்கரே மற்றும் மகாராஷ்ட்ராவை சேர்ந்த மத்திய அமைச்சர் ஷரத் பவார் போன்ற தலைவர்களே மிரண்டுபோனதுண்டு.

அவ்வளவு ஏன் தற்போது லோபால் மசோதா வரைவு குழுவுக்கான மத்திய அமைச்சர்கள் குழுவில், மகாராஷ்ட்ராவில் ஏகப்பட்ட நிலங்களை குவித்து வைத்திருக்கும் ஷரத் பவார் இடம்பெறக் கூடாது என்று ஹசாரே தெரிவித்த எதிர்ப்பு காரணமாக, பவார் அமைச்சர் குழுவிலிருந்தே ஓட்டம் பிடித்துவிட்டார்.

லோக்பால் கூட்டுக்குழுவினர்!

லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவின் (ஜெ.சி.டி.) தலைவராக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார். உயர்மட்டத்தில் இருப்போரின் ஊழலை விசாரிக்க மத்திய அரசு கொண்டுவரும் லோக்பால் மசோதா திருத்த கூட்டுக் குழுவில் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளும், மீதமுள்ளவர்கள் அரசுத் தரப்பிலிருந்தும் இடம்பெற வேண்டும் என்று கோரி சமூக சேவகர் அன்னா ஹஸôரே உண்ணாவிரதமிருந்தார்.

கடந்த 5 தினங்களாக அவர் மேற்கொண்ட உண்ணாவிரதத்தின் பலனாக, மத்திய அரசு பணிந்தது. லோக்பால் கூட்டுக் குழுவின் சரிபாதி மக்கள் பிரதிநிதிகளாக இருப்பார்கள் என்றும், மீதி 50 சதவீத உறுப்பினர்கள் அமைச்சர்களாக இருப்பார்கள் என்றும் அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

ஆனால் தலைவராக மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜிதான் இருப்பார் என்றும், இணைத் தலைவராக சமூகப் பிரதிநிதி ஒருவர் இருக்கலாம் என்றும் மத்திய அரசு கூறியதை ஹஸôரே ஏற்றுக் கொண்டுள்ளார். அரசு வெளியிட்ட கெஜட்டின்படி, லோக்பால் கூட்டுக் குழுவின் தலைவராக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இருப்பார். கெஜட் அறிவிப்பின்படி லோக்பால் குழுவில் அரசுத் தரப்பில் இடம் பெற்றுள்ளவர்கள்:

நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, மனிதவள மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சர் கபில் சிபல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்.

மக்கள் பிரதிநிதிகள்:

சமூக சேவகர் அன்னா ஹஸôரே, நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, சட்டநிபுணர் சாந்தி பூஷன், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் அரவிந்த் கேஜ்ரிவால், லோக்பால்.

சட்டத் திருத்தக் குழு தலைவர்: பிரணாப் முகர்ஜி, இணைத் தலைவர் : சாந்தி பூஷன், அமைப்பாளர்: வீரப்ப மொய்லி

வரும் ஜூன் 30#ம் தேதிக்குள் கூட்டுக்குழு தனது வரைவுப் பணிகளை முடித்து, அறிக்கையை சமர்ப்பிக்கும். இந்தக் குழுவுக்கு மத்திய அமைச்சர் யாரும் தலைவராக இருக்கக் கூடாது என்ற ஹசாரேவின் கருத்தை மத்திய அரசு ஏற்காதது ஹசாரேக்கு சின்ன பின்னடைவுதான்.

Pin It