மஹாராஷ்டிராவின் ஊழல் அரசியல்வாதிகளுக்கு சிம்ம சொப்பணமாகத் திகழ்ந்து வந்த அன்னா ஹசாரே, மத்திய அரசையும் கதிகலங்கச் செய்திருக்கிறார்.  ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா வரைவுக்குழுவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மட்டுமல்லாமல் குடிமக்களின் பிரதிநிதிகளையும் இடம் பெறச் செய்ய வேண்டும்; சட்டங்களை கடுமையாக்க வேண் டும் என்பதுதான் அன்னா ஹசாரேயின் கோரிக்கை. இதை வலியுறுத்தித்தான் 5 நாட்கள் தலைநகரில் இருந்து கொண்டு பட்டினிப் போராட்டம் நடத்தியிருக்கிறார் அன்னா.

ஊழல் முடை நாற்றம் வீசும் இந்தியாவில் அதனைத் தடுப்பதற்கான சட்டங்களைப் பலப்படுத்துமாறு போராட்டத்தில் ஈடுபட்ட அன்னாவிற்கு நாட்டின் படித்தவர்கள், பாமரர்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் என ஆதரவு பெருகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த மத்திய அரசு - லோக்பால் விவகாரம் அரபு நாடுகளைப்போல மக்கள் எழுச்சியாக மாறி விடுமோ என அஞ்சி, ஒரு வழியாக அன்னா ஹசாரேவின் கோரிக்கைகளை ஒப்புக் கொண்டுள்ளது.

பிரதமர், அமைச்சர்கள், மாநிலத்தின் முதல்வர்கள் என உயர் நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு எதிராக சாதாரண மக்களும் வழக்குகளைத் தொடுக்கும் வகையில் புதிய சட்டத் திருத்தங்கள் லோக்பால் மசோ தாவில் சேர்த்து அதை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும் என்ற அன்னாவின் கோரிக் கையை ஆரம்பத்தில் ஏற்க மறுத்த மத்திய அரசு, அன்னாவின் போர்க்குணம் மாறாத, சமரசத்திற்கு அடி பணியாத உறுதியின் காரணமாக வேறு வழியின்றி ஏற்றுக் கொண்டுள்ளது.

மத்திய அரசு ஏற்றுக் கொண்டு அமைக்கும் லோக்பால் மசோதா சட்டத் திருத்தக் கூட்டுக் குழு வில் அமைச்சர்கள் இடம் பெறுவதுபோல மக்கள் பிரதிநிதிகளும் சரிபாதி இடம் பெற வேண்டும் என்பதும் அன்னாவின் கோரிக்கை. அதனால்தான் லோக்பால் சட்டத்திருத்தக் குழுவின் தலைவராக பிரணாப் முகர்ஜி நியமிக்கப்பட்டிருந்தாலும் இணைத் தலைவராக ஊழலை எதிர்த்து குரல் கொடுத்து வருபவரும், உச்ச நீதிமன்றத்தின் 8 நீதிபதிகள் ஊழல்வாதிகளாக இருக்கிறார்கள் எனப் போட்டுடைத்த சட்ட நிபுணருமான சாந்தி பூஷன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளளார்.

மக்கள் பிரதிநிதிகளாக அன்னா ஹசாரே உள்பட முக்கிய பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் இக்குழுவில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். நாட்டில் அதிகரித்துள்ள ஊழல்களால் சாதாரண மக்கள் விரக்தியும், வெறுப்பும், கோபமும் அடைந்திருக்கும் நேரத்தில் அன்னா ஹசாரே களமிறங்கியது அவருக்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்துள்ளது. இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவில் அன்னாவின் போராட்டம் எடுத்துச் செல்லப்பட்டதும் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது.

"தகவல் அறியும் சட்டம் வெளியானதன் பின்புதான் 2ஜி அலைக்கற்றை, காமன்வெல்த், ஆதர்ஷ் வீட்டு வசதி ஊழல்கள் வெளிவரத் துவங்கின...'' எனக் கூறும் அன்னா ஹசாரேவின் ஆதங்கம் ஊழல்வாதிகளை சிறைக்கனுப்புவதோடு அவர்களைத் தூக்கில் போட வேண்டும் என்பதுதான்.

ஊழல் என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கக் கூடாது என்பதோடு அது குடிமக்கள் மீது நிகழ்த்தப்படும் அரசியல் சுரண்டல் ஆகும். இதற்கு எதிராக வலிமையான போராட்டத்தை முன்னெடுத்த அன்னா ஹசாரே பாராட்டுக்குரியவர்தான்.

வட இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பரபரப்பாக பேசப்பட்ட லோக்பால் உண்ணா விரதப் போராட்டம் குறித்த செய்திகளை வெளியிடாமல் ஒட்டு மொத்த தமிழக மீடியாக்களும் தலைநகரில் எதுவுமே நடக்காததுபோல நடந்து கொண்டன. அதிலும் கலைஞர் குடும்பத் தொலைக்காட்சிகள் இந்தச் செய்திகளை இருட்டடிப்பே செய்து விட்டன.

அன்னா ஹசாரேவின் ஐந்து நாள் போராட்டத்தை கண்டு கொள்ளாத தமிழக மீடியாக்கள் மத்திய அரசு பணிந்த செய்தியை மட்டும் ஃபிளாஷ் நியூசாக ஒளிபரப்பின. இதுவும் ஒரு வகையில் ஊழல்தானே?

லோக்பால் மசோதா : நாட்டு மக்களின் கனவு இது!

லோக்பால் என்பது சுதந்திரமாக செயல்படக் கூடிய அமைப்பு. ஊழல் வழக்குகளை இது விசாரிக்கும். ஒரு வருட காலத்திற்குள் அதன் விசாரணையை முடித்துக் கொண்டு, அடுத்த ஒரு வருடத்திற்குள் நீதிமன்ற விசாரணைகளை முடித்துக் கொண்டு ஊழல்வாதிகளை சிறைக்கனுப்பும் அமைப்பு இது!

இவ்வமைப்பிற்கான சட்ட வரைவை உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெட்ஜ், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், சமூக ஆர்வலரான அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் வடிவமைத்துள்ளனர். இவ்வமைப்பு அரசின் அனுமதியில்லாமலே அரசியல்வாதிகள், உயரதிகாரிகளின் ஊழல்களை விசாரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஊழலுக்கு எதிரான இந்தியா (ஐ.ஏ.சி.) என்கிற அமைப்பின் அங்கத்தினர்களாக இருக்கும் ஓய்வு பெற்ற பிரபல காவல்துறை அதிகாரியான கிரண் பேடி, சுவாமி அக்னிவேஷ் ஸ்ரீஸ்ரீ ரவிஷங்கர், அன்னா ஹசாரே, மல்லிகா சாராபாய் ஆகியோர் லோக்பால் மசோதாவை கொண்டு வருவதில் தீர்மானமாக இருக்கிறார்கள்.

இவ்வமைப்பின் இணைய தளம், "ஊழலுக்கு எதிரான கோபத்தை வெளிப்படுத்தும் தளமாக அமைந்துள்ளது. லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் ஊழல் முற்றிலும் ஒழிக்கப்படும் நிலை ஏற்படும் என்கின்றனர் இவ்வமைப்பினர்.

லோக்பால் மசோதா என்ன சொல்கிறது?

* தேசிய அளவில் லோக்பால் என்றும் மாநிலங்களளவில் லோகாயுக்தா என்றும் ஊழலுக்கு எதிரான அமைப்பாக இது நிறுவப்பட்டுள்ளது.

* உச்ச நீதிமன்றம், தேர்தல் ஆணையத்தைப் போன்றே இது சுதந்திரமான அமைப்பாக இருக்கும். அமைச்சர்களோ, பிரதமரோ இவ்வமைப்பின் விசாரணையில் தலையிட முடியாது.

* ஊழல்வாதிகளுக்கு எதிரான வழக்குகள் வருடக் கணக்கில் இழுத் துக் கொண்டிருக்காது. எந்த வழக்காக இருந்தாலும் ஒரு வருடத்தில் விசாரிக்கப்பட்டு அடுத்த வருடத்திற்குள் அந்த வழக்கு முடிக்கப்பட்டு, ஊழலில் ஈடுபட்ட அரசியல்வாதி, அதிகாரி, நீதிபதி போன்றவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள். 2 வருடங்களுக்குள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு விடும். அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய ஊழல்வாதியிடம் இருந்து இழப்பீடு பெறப்படும்.

* அரசு அலுவலகங்களில் குடிமகன் ஒருவரின் தேவை உரிய நேரத்தில் நிறைவேற்றப்படா விட்டால் அந்த அலுவலகத்தின் அதிகாரிகள் மீது லோக்பால் அமைப்பு அபராதம் விதிக்கும். அந்த அபராதத் தொகை புகார்தாரருக்கு நஷ்ட ஈட்டுத் தொகையாக வழங்கப்படும்.

* ரேஷன்கார்டு, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை உரிய நேரத்தில் கிடைக்கவில்லை என்றாலோ, புகாரைப் பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்தாலோ இதுபோன்று உரிய நேரத்தில் வேறு ஏதேனும் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை என்றாலோ லோக்பால் ஒரு சில மாதங்களுக்குள் நடவ டிக்கை எடுத்து தேவையை பூர்த்தி செய்து தரும்.

இன்னும் சொல்லப்போனால், ரேஷன் பொருட்கள் கிடைக்கவில்லை என்றாலோ, பழுதடைந்த சாலைகள் சீர் செய்யப்படவில்லை என்றாலோ, பஞ்சாயத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் செலவு செய்யப்படவில்லை என்றாலோ, ஒரே வருடத்தில் விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை லோக்பால் சிறைக்கு அனுப்பும்.

ஊழல்வாதிகளும், பலவீனமானவர்களும் லோக்பால் உறுப்பினர்களாக ஆக முடியாது. அரசாங்க அதிகாரிகளும் இதில் உறுப்பினர்களாக இடம் பெற முடியாது. இதற்கான உறுப்பினர்களை, நீதிபதிகள், மக்கள் பிரதிநிதிகள், சட்ட நிபுணர்கள்தான் தேர்ந்தெடுப்பார்கள்.

லோக்பால் / லோகாயுக்தா சுய அதி காரத்தோடு சுதந்திரமாக செயல்படும் அமைப்பு என்பதால்... குற்றம் செய்த அதிகாரியை விசாரித்து 2 மாதங்களுக் குள் அவரை பணி நீக்கம் செய்யும். தற்போது உள்ள ஊழல் தடுப்புத் துறை, விஜிலன்ஸ், சி.பி.ஐ. போன்றவை லோக்பாலோடு இணைந்து செயல்படுத்தப்படும். முற்றிலும் அதிகாரம் வாய்ந்த அமைப்பே லோக்பால். அதே சமயம், ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்போரை - அதிகாரத்தின் பிடியிலிருந்து பாதுகாக்கும் பொறுப்பையும் லோக்பால் மேற்கொள்ளும்.

ஆக, இப்படிப்பட்ட ஒரு அமைப்பு இந்திய மக்களின் கனவுகளில் உதித்திருக்கும் அல்லது சினிமாக்களில் காட்சிகளாக இருக்கக் கூடும். ஆனால் இது நிஜத் தில் சாத்தியமானால்... நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு இதுதானே!

Pin It