kashmir protest

உலக அரங்கில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று இந்தியா தன்னை சொல்லிக் கொண்டிருக்கின்றது. 18 வயது உடைய ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் ஓட்டுரிமையை அது வழங்கியுள்ளது. பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமைகளை அது வழங்கியுள்ளதாக பெருமைபட்டுக் கொள்கின்றது. ஆனால் உண்மை நிலவரம் என்பது இது அனைத்தும் வரம்புக்குட்பட்டது என்பதுதான். ஆளும் வர்க்கத்தை எதிர்த்து எழுதப்படும் எழுத்துக்களும், பேச்சுக்களும், செயல்பாடுகளும் இங்கு ஜனநாயக விரோதமாகவும், தேசத்திற்கு எதிரானதாகவும் பார்க்கப்படுகின்றது. அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மிகக் கடுமையான அடக்குமுறைக்கு இந்திய ஆளும் வர்க்கத்தால் உட்படுத்தப்படுகின்றார்கள். இது இந்தியாவுக்கு மட்டுமே உரித்தான தனிப்பண்பு என்று நாம் சொல்லிவிட முடியாது. உலகில் ஜனநாயகம் பேசும் எல்லா நாடுகளுமே அப்படித்தான் இருக்கின்றன. அவர்கள் சொல்லும் ஜனநாயகம் என்பது ஆளும் வர்க்கத்தின் செயல்திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு ஆபத்து ஏற்படாமல் செயல்படுவதுதான். அதை மீறும் போது நீங்கள் ஆளும் வர்க்கத்தின் எதிரியாக, தேசப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிப்பவர்களாக அடையாளப்படுத்தப்பட்டு ஒழித்துக் கட்டப்படுவீர்கள்.

 காஷ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை இந்திய அரசின் செயல்பாடுகளைப் பார்த்தோம் என்றாலே ஜனநாயகம் பற்றிய இந்திய அரசின் நிலைப்பாடு எந்த அளவிற்கு போலியானது என்பதும் கீழ்த்தரமானது என்பதும் நமக்கு எளிதில் புரிந்துவிடும். ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் மூலம் அவை செய்து கொண்டிருக்கும் படுகொலைகளும், பாலியல் வன்முறைகளும் ஒரு சராசரி இந்தியனுக்குப் புரிந்து கொள்ள முடியாதவை. காரணம் இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் தேசவெறி ஏற்றப்பட்டு, மதவெறி சக்திகளின் பின்னால் அணி திரட்டப்பட்டவர்களாக இருக்கின்றனர். ஒருவேளை சோற்றுக்கு வழியில்லை என்றாலும் அவர்கள் அம்பானியையும், அதானியையும் ஆதரிப்பவர்களாக, பாகிஸ்தானை ஒழித்துக் கட்ட வேண்டும், பிரிவினை கோரிக்கையை எழுப்புவர்களை சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற இயல்பான சிந்தனை உடையவர்களாய் உள்ளனர்.

 இந்திய அரசால் வலுக்கட்டாயமாக பிடித்து வைக்கப்பட்டிக்கும் வடகிழக்கு மாநிலங்களின் வரலாறுகள் பற்றியோ, காஷ்மீர் மக்களுக்கு இந்திய அரசு இழைத்த மனிதத் தன்மையற்ற கொடூரங்கள் பற்றியோ ஒரு சராசரி இந்தியன் எப்போதுமே தெரிந்து கொள்ள விரும்புவது கிடையாது. அவனைப் பொறுத்தவரை அது தேவையற்றதும் ஆகும். இப்படி இந்திய மக்களின் பொதுபுத்தியில் ஆழமாக விதைக்கப்பட்ட நச்சுக்கருத்துக்கள் தான் இன்று இந்திய அரசு காஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் செய்யும் அனைத்து அத்துமீறல்களுக்கும் மறைமுக ஒப்புதலைக் கொடுத்துக் கொண்டுள்ளது.

 ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பின் கமாண்டராக இருந்த புர்கான் வானி என்ற 22 வயது இளைஞன் ஜூலை மாதம் 8 ஆம் தேதி பாதுகாப்பு படையினரால் என்கவுன்டர் செய்யப்பட்டதில் இருந்து இன்று வரை காஷ்மீர் மக்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. காஷ்மீரிகள் அனைவரும் தெருவுக்கு வந்து கொலைகார இந்திய இராணுவத்துக்கு எதிராக கற்களை வீசிக்கொண்டு இருக்கின்றார்கள். இது ஏதோ புர்கான் வானி என்ற ஒரு இளைஞனின் மரணத்தால் மட்டும் ஏற்பட்டதல்ல; இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து தொடர்ச்சியாக இந்திய இராணுவம் காஷ்மீரில் நிகழ்த்திக் கொண்டு இருக்கும் படுகொலைகளுக்கு எதிரான ஒன்று திரண்ட மன எழுச்சியின் வெளிப்பாடு அவை. உலகில் மிகப்பெரும் ராணுவத்தையும், அணு ஆயுதங்களையும், நவீன ரக ஆயுதங்களையும் வைத்திருக்கும் ஒரு ராணுவத்துக்கு எதிரான எளிய மக்களின் போராட்டம் அது. பெல்லட் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு அச்சுறுத்தும் ஒரு இராணுவ வீரனின் மன வலிமையைவிட கற்களை வைத்துக்கொண்டு இராணுவ வீரர்களை தாக்கும் ஒரு ஐந்து வயது சிறுவனின் மனவலிமை அசாத்தியமானது. அது காஷ்மீரின் சுதந்திர வேட்கையில் இருந்து பிறப்பது. அதை ஒரு போதும் இந்திய ஆளும் வர்க்கத்தால் ஒழித்துக்கட்ட முடியாது.

 பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதை பற்றி மறுபரிசிலனை செய்யப்படும் என ராஜ்நாத் சிங் இப்போது சொல்கின்றார். புர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதில் இருந்து இது வரை நடந்த வன்முறையில் 82க்கும் மேற்பட்ட அப்பாவி காஷ்மீர் மக்கள் பெல்லட் குண்டுகளுக்கு பலியாகி உள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மக்களின் கண்பார்வை பறிபோய் உள்ளது. இதுதான் இந்திய அரசு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டும் அழகு. ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு இந்திய அரசுக்கு என்ன தகுதிகள் இருக்கின்றது? மோடியோ கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் காஷ்மீரில் அப்பாவி இளைஞகளை பாகிஸ்தான் தான் தூண்டிவிடுவதாக மான் கி பாத் நிகழ்ச்சியில் சொல்கின்றார். இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அந்த 83 அப்பாவி மக்களைப் பற்றி வாய் திறக்காத மோடி, யூரி தாக்குதலில் பலியான 17 இராணுவ வீரர்களுக்கு மட்டும் அஞ்சலி செலுத்துகின்றார்.

கொல்லப்பட்ட 83 அப்பாவி காஷ்மீரிகள் மட்டுமல்ல, தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதாக சொல்லப்படும் இராணுவ வீரர்களின் மரணத்துக்கும் இந்திய ஆளும்வர்க்கம் தான் பொறுப்பு. காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையைக் காலில் போட்டு மிதித்துப் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஐநாசபையில் கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்ட மானங்கெட்ட இந்திய ஆளும் வர்க்கம் தான் அதற்கு முழு பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் காஷ்மீரில் தினம் தினம் தீவிரவாதிகளை உருவாக்கிக் கொண்டு இருக்கின்றது. புர்கான் வானி ஹிஸ்புல் முஜாஹிதின் அமைப்பில் சேரும்போது அவனுக்கு வயது 15. அவன் ஒன்றும் ஒருவேளை சோற்றுக்கு கையேந்தும் நிலையில் இருந்த ஏழை இஸ்லாமிய இளைஞன் அல்ல. அவனது அப்பா ஒரு பள்ளியின் முதல்வர். அனைத்து வசதிகளும் இருக்கும் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்தவன். அவனை தீவிரவாத அமைப்பின் பின்னால் 15 வயதில் ஓட வைத்தது காஷ்மீரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களை தெருநாய்களை போல சுட்டுக் கொன்ற இந்திய ராணுவத்தின் மிருகத்தனமான செயல்பாடுகள்தான்.

காஷ்மீர் மக்களை ஒடுக்குவதில், அவர்களை சுட்டுக் கொல்வதில் இந்தியாவின் இரண்டு பெரிய அரசியல் கட்சிகளான காங்கிரசுக்கும், பார்ப்பன பி.ஜே.பிக்கும் எப்போதும் பெரிய வேறுபாடு இருந்தது கிடையாது. இன்று இந்திய இராணுவம் காஷ்மீர் மக்களை கொல்ல பயன்படுத்தும் பெல்லட் துப்பாக்கிகளை அறிமுகப்படுத்தியதே காங்கிரஸ் அரசுதான். 2010 ஆண்டு 4/5 ரக பெல்லட் துப்பாக்கிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்து 110 அப்பாவி காஷ்மீர் மக்களை கொன்றுபோட்டது காங்கிரஸ் அரசு. பின்பு அதற்குப் பதிலாக 8/9 வகை பெல்லட் துப்பாக்கிகள் இப்போது பயன்படுத்துகின்றனர். காஷ்மீர் மக்கள் மீது பயன்படுத்தப்பட்டு வந்த ஆயுதங்களில் மட்டுமே சுதந்திரம் அடைந்ததில் இருந்து இன்றுவரை மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளதே அன்றி இந்திய அரசின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்பட்டது கிடையாது.

kashmir agitation 1

 காஷ்மீர் மக்களின் விடுதலையைத் தேர்தல் பாதையில் பங்கெடுக்கும் அரசியல் கட்சிகளால் ஒருபோதும் சாதிக்க முடியாது என்பதைத்தான் நடப்பு நிலைமைகள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது. ஜம்மு- காஷ்மீரில் ஏறக்குறைய 75 சதவீதம் இருக்கும் முஸ்லீம் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த அரசியல் கட்சியும் அங்கு கிடையாது. அங்கு இருக்கும் முஸ்லீம்களை பிரதிநிதித்துவம் செய்வதாய் சொல்லிக் கொள்ளும் அனைவரும் இந்திய ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகள் என்பதுதான் உண்மை. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தற்போது காஷ்மீரின் முதல்வராக இருக்கும் மெகபூபா முக்தி. மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெகபூபா காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்தை அளிக்கும் 370 வது பிரிவை நீக்காமல் விடமாட்டோம் என கங்கணம் கட்டிக் கொண்டு அழையும் பி.ஜே.பியுடன் கூட்டணி வைத்திருக்கின்றார். இதைவிட வேறு பிழைப்புவாதமும், அடிமைத்தனமும் என்ன இருக்க முடியும்? ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்களை இனப்படுகொலை செய்த மோடி, காஷ்மீர் முஸ்லீம்கள் குறித்து கவலை கொண்டுள்ளாராம். மோடி தலைமையிலான ஆட்சியில் காஷ்மீர் பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படவில்லை என்றால் இனி எப்போதுமே தீர்வு ஏற்படாது என மெகபூபா முக்தி சத்தியம் செய்கின்றார். இதுதான் காஷ்மீர் மக்கள் மீது அங்குள்ள அரசியல் கட்சிகளின் உண்மையான நிலைப்பாடு.

 இந்திய ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களைப் பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் கிடையாது. காஷ்மீரில் இருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்பது பற்றியோ, குற்றச் செயலில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பற்றியோ பெரிய அளவில் அவை ஈடுபாடு காட்டுவது கிடையாது. காஷ்மீரில் இருக்கும் அரசு இயந்திரம் முழுவதும் இந்திய ஆளும் வர்க்கத்தின் கூலிப்படையாக மாற்றப்பட்டிருக்கின்றது. அது காஷ்மீரில் நடைபெறும் அனைத்து வகையான அத்துமீறல்களுக்கும் ஆதரவாக இருக்கின்றது.

 பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று காஷ்மீர் உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் தொடர்ந்த வழக்கை காஷ்மீர் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கின்றது. காஷ்மீரில் தெருவுக்குத் தெரு வன்முறைகள் நீடிக்கும்வரை, பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க முடியாது எனவும், நிலைமை கட்டுப்பாட்டில் இல்லாதபோது வன்முறை கும்பலை ஒடுக்க பலத்தை பிரயோகிப்பது தவிர்க்க இயலாதது எனவும் கூறியுள்ளது. காஷ்மீரில் விடுதலைக்காகப் போராடும் மக்கள் நீதிமன்றத்துக்கு வன்முறை கும்பலாக தெரிகின்றார்கள் என்றால் காஷ்மீரில் இயங்கிக் கொண்டு இருக்கும் அரசு கட்டுமானங்களின் நிலைமையையும் அதன்மூலம் அந்த மக்களுக்கு என்ன வகையான நீதி கிடைக்கும் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

 அதனால் காஷ்மீர் மக்களின் விடுதலை என்பது காஷ்மீரில் இயங்கிக் கொண்டு இருக்கும் தேர்தல் அரசியல் கட்சிகளை சார்ந்தது அல்ல. அது காஷ்மீர் மக்களின் போராட்டத்தால் மட்டுமே சாதிக்கப்பட முடியும். இந்திய அரசு பெல்லட் குண்டுகளை பயன்படுத்தி மட்டும் அல்ல வேறு எந்த குண்டுகளைப் பயன்படுத்தியும் அவர்களின் போராட்டத்தை ஒடுக்க முடியாது. நிச்சயம் ஒரு நாள் அவர்களின் போராட்டம் வென்றே தீரும். இந்திய அரசின் கொடுங்கரங்களில் இருந்து விடுதலை பெற்ற ஒரு சுதந்திர காஷ்மீரை அந்த மக்கள் அடையத்தான் போகின்றார்கள்.

-       செ.கார்கி

Pin It