இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தின் நான்கு மூத்த நீதிபதிகள், பத்திரிக்கையாளர்களை சந்தித்தது, பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இந்த சர்ச்சைகள் அடங்க வெகு நாட்களாகலாம். இந்த நான்கு நீதிபதிகளின் நடவடிக்கைகள் ஜனநாயகத்தை பாதுகாக்கும் ஒரு செயல் என்று ஒரு புறமும், நான்கு நீதிபதிகள் மரபை மீறி, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்து விட்டார்கள் என்றும் வாதப் பிரதிவாதங்கள் நடைபெறுகின்றன.
இதில் உள்ள நியாயங்களை அலசுவதற்கு முன்னால் நாம் அடிப்படையாக ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும். லார்ட்ஷிப் என்று என்னதான் நாம் அழைத்தாலும், அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்களே என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எல்லா மனிதர்களுக்கும் இருக்கக் கூடிய ஆசா பாசங்கள், அபிலாஷைகள், விருப்பு வெறுப்புகள், பேராசைகள் ஆகிய அனைத்தும் இந்த நீதிபதிகளுக்கும் இருக்கும்.
ஒரு முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் உள்ள சூழலை நாம் அலசிப் பார்த்தால், அரசியல், நிர்வாகம், ஊடகம், அதிகார மையம் என்று அனைத்து தரப்பிலும் நேர்மையானவர்களின் சதவிகிதம் அதிகமாக இருந்தது. ஊழல் பேர்வழிகள் சிறுபான்மையினராக, லஞ்சம் வாங்குவதை குற்ற உணர்ச்சியோடு செய்து கொண்டிருந்தார்கள். இன்று 2018இல் உள்ள சூழல் எப்படி உள்ளது என்பதை விளக்க வேண்டியது இல்லை.
இதே போலத்தான் நீதித்துறையும். சமூகத்தில் மற்ற பிரிவுகளில் ஏற்பட்ட சீரழிவு நீதித்துறையையும் பீடிக்கத்தான் செய்தது. இந்த சமூகத்திலிருந்துதானே நீதிபதிகளும் உருவாகிறார்கள்? அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள், ஏன் பத்திரிக்கையாளர்கள் ஊழலைக் கூட நம்மால் வெளியிட முடியும். அம்பலப்படுத்த முடியும். எழுத முடியும். எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்த முடியும். விசாரணை கோரி புலனாய்வு அமைப்புகளிடம் மனுத் தாக்கல் செய்ய முடியும். நடவடிக்கை எடுக்கப் படவில்லை என்றால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியும்.
ஆனால் நீதிபதிகளின் ஊழல்களைக் குறித்து வாயே திறக்க முடியாமல், பேசக் கூட முடியாத ஒரு நிலைதான் இன்று உள்ளது. உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்களிடம் பேசினால், நீதிபதிகளின் ஊழல்கள் குறித்து கதை கதையாய் சொல்வார்கள். ஆனால், அவர்களாலும் இது குறித்து பேசவோ எழுதவோ முடியாது.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிக்கிய ஜெயலலிதாவை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்தவர் நீதிபதி குமாரசாமி. அந்த தீர்ப்பில் இருந்த கணக்குப் பிழைகளை அனைத்து ஊடகங்களும் அம்பலப் படுத்தின. அந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய குமாரசாமி லஞ்சம் பெற்றாரா என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அது குறித்து விசாரணை நடத்தப்பட்டிருக்க வேண்டுமா இல்லையா ? ஆனால் எந்த விசாரணையும் நடைபெறவில்லை. குமாரசாமி நிம்மதியாக பணி ஒய்வு பெற்று சென்று விட்டார். இது போல பல நேர்வுகளை சுட்டிக் காட்ட முடியும்.
ஆனால் எந்த விசாரணைகளையும் நடத்து வதற்கு சட்டத்தில் இடமில்லை. நீதிபதிகளுக்கு அவ்வளவு பெரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதிகளை பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால், மாநிலங்களவையும் 75 எம்பிக்களுக்கு குறையாமல் கையெழுத்திட்ட மனுவை அளித்து, அதை மாநிலங்களவை தலைவர் ஒப்புக் கொண்டு, அதை உச்சநீதி மன்றத்துக்கு அனுப்பி, அதன் பிறகு விசாரணை நடத்தி, இறுதியாக பாராளுமன்றத்தில் விசாரணை நடந்து, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையோடே ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய முடியும். இதெல்லாம் நடக்கும் காரியமா ? இதனால்தான் இந்திய வரலாற்றில், ராமசாமி, பிடி.தினகரன் மற்றும் சவுமித்ரா சென் என்ற மூன்றே மூன்று நீதிபதிகள் மீது மட்டுமே இது வரை பதவி நீக்க நடவடிக்கை பாராளு மன்றத்தால் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நடவடிக்கைகளுமே தோல்வியில் முடிந்தன.
இராமசாமி மீதான நடவடிக்கை பெரும் பான்மை இல்லாமல் தோல்வியில் முடிந்தது. அவரும் ராஜினாமா செய்து விட்டார். மீதம் உள்ள இருவரும், பாதி நடவடிக்கை எடுக்கப் படுகையிலேயே ராஜினாமா செய்து விட்டனர்.
இந்த சூழலில்தான் இப்போது உச்சநீதி மன்றத்தில் பெரும் கலகம் வெடித்தது. இந்த கலகத்துக்கான மையப்புள்ளியாக இருப்பவர், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இவரைச் சுற்றித்தான் இன்று சூறாவளி வீசிக் கொண்டிருக்கிறது.
தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியான போதே சர்ச்சை எழுந்தது. ஒடிஷா மாநிலத்தில் தீவனப் பண்ணை வைப்பதற்காக 2 ஏக்கர் நிலம் வேண்டுமென்று 1979ம் ஆண்டு தீபக் மிஸ்ரா அரசிடம் விண்ணப்பிக்கிறார். அப்போது தனது பெயரில் எந்த நிலமும் இல்லை என்று தெரிவிக்கிறார். அவரது குடும்பத்தின் பெயரில் 10 ஏக்கர் நிலம் இருந்ததையும் மறைத்து விட்டார். பின்னாளில், 1985ம் ஆண்டு நடந்த விசாரணையில், தீபக் மிஸ்ரா தவறான தகவலை அளித்து நிலத்தை பெற்றது தெரிய வந்ததும், அந்த நில ஒதுக்கீடு ரத்து செய்யப்படுகிறது. ஆனால் ரத்து செய்யப்பட்ட இந்த ஒதுக்கீடு கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படவில்லை.
2009ம் ஆண்டு, இந்த நில விவகாரம் குறித்து பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது. அந்த சிபிஐ விசாரணையில்தான் தவறான நில ஒதுக்கீடு நடந்தது உறுதி செய்யப்படுகிறது. இதையடுத்து, 2013ம் ஆண்டு, வருவாய்த் துறை நில ஒதுக்கீட்டை ரத்து செய்து உத்தரவிடுகிறது. அது வரை, ஏழைகளுக்காக ஒதுக்கப்பட வேண்டிய 2 ஏக்கர் நிலம், தீபக் மிஸ்ராவிடம் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிஷா உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதிகள் மொகாந்தி மற்றும் சங்கம் குமார் சாஹு ஆகியோருக்கு எதிராக அப்போதைய தலைமை நீதிபதி தாக்கூர் மூன்று நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவிடுகிறார். அந்த விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதும், அவர் நில ஒதுக்கீடு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியின் பெயர் வந்ததும், அந்த விசாரணை அப்படியே கை விடப்படுகிறது.
இதுதான் தீபக் மிஸ்ராவின் பின்புலம். இதன் பிறகும் தீபக் மிஸ்ராவின் மீது தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டுதான் இருந்தன. அருணாச்சல பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்த காலிக்கோ புல் என்பவரின் அரசு மத்திய அரசால் கலைக்கப்பட்டது. அந்த கலைப்பு சரியா இல்லையா என்ற வழக்கு உச்சநீதி மன்றத்தில் இருந்தது. காலிக்கோ புல், ஒரு 60 பக்க தற்கொலை கடிதத்தை எழுதி, ஒவ்வொரு பக்கத்திலும் கையெழுத்திட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
அந்த கடிதத்தில் அவருக்கு சாதகமாக தீர்ப்பளிக்க, அந்த வழக்கை விசாரிக்க உள்ள இரண்டு மூத்த நீதிபதிகளான, கேஹர் அவர்களின் மகன் வீரேந்திர கேஹர் பெயரைக் கூறி, 49 கோடியும், மற்றொரு நீதிபதியான தீபக் மிஸ்ராவின் சகோதரர் ஆதித்ய மிஸ்ரா பெயரைக் கூறி 37 கோடியும் லஞ்சம் கேட்டதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. அது தொடர்பாக விசாரணை வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த காலிக்கோ புல்லின் மனைவி தங்விம்சாய் புல், என்ன காரணத்தாலோ அவர் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டார். அதன் பிறகும் பல்வேறு வழக்குகளில் தீபக் மிஸ்ராவின் பெயர் தவறான முறையில் உச்சநீதிமன்றத்தில் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இந்த நிலையில் தான் நான்கு கதாநாயகர்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக கலகக் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
தற்போது வெளிப்படையாக பத்திரிக்கை யாளர்களை சந்திப்பதற்கான காரணம் என்று நான்கு நீதிபதிகள் கூறியது, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, தன் விருப்பம் போல, வழக்குகளை, மரபுகளை மீறி, இளைய நீதிபதிகளிடம் ஒப்படைக்கிறார் என்பதே. எந்த வழக்கு 4 நீதிபதிகளையும் பத்திரிக்கையாளர்களை சந்திக்கத் தூண்டியது? மர்மமான முறையில் இறந்து போன மராட்டிய மாநில மாவட்ட நீதிபதி லோயாவின் மரணம் குறித்து விசாரணை செய்ய வேண்டிய பொது நல வழக்குக்கான விசாரணை அமர்வை தீபக் மிஸ்ரா நியமனம் செய்ததில் தான் பிரச்சினை எழுந்தது. (இந்த நீதிபதி அமீத்ஷா வழக்கை விசாரித்தவர்)
எல்லா வழக்குகளையும் என் விருப்பத் துக்கு விசாரிக்கும் அமர்வுகளை நியமிப்பேன் என்ற அதிகாரத்தைத் தானே எப்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா சுவீகரித்துக் கொண்டார் என்பதற்கும் பின்னணி உண்டு.
ஒடிஷா மாநிலத்தில் உள்ள பிரசாத் மெடிக்கல் ட்ரஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரியின் அனுமதியை மருத்துவக் கவுன்சில் ரத்து செய்ததற்கு எதிராக தொடரப் பட்ட வழக்கை உச்சநீதிமன்றத்தில் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. அப்போது உச்சநீதின்றத்தை சேர்ந்த நீதிபதிகள் மற்றும் ஒடிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு லஞ்சம் தர முயற்சித்த தகவல் சிபிஐக்கு தெரிய வர, சிபிஐ ஒரு பூர்வாங்க விசாரணையை பதிவு செய்கிறது. அந்த பூர்வாங்க விசாரணையில் ஒடிஷா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தப்பட் டிருப்பது தெரிய வந்ததும், முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்கிறது.
இந்த விபரங்கள் ஊடகங்களில் வெளி யானதும், மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும், காமினி ஜெய்ஸ்வாலும், இரு வழக்குகளை உச்சநீதின்றத்தில் தாக்கல் செய்கின்றனர். பூஷண் வழக்கு ஒரு அமர்வில் இருக்கையில், மறுநாள் இரண்டாவது மூத்த நீதிபதி செல்லமேசுவர் முன்னிலையில் காமினி ஜெய்ஸ்வால் இந்த வழக்கை எடுத்துக் கொள்கிறார். செல்லமேசுவர், உடனடியாக இந்த வழக்கை, உச்சநீதிமன்றத்தின் மூத்த ஐந்து நீதிபதிகள் விசாரிக்க வேண்டும் என்றும், இந்த வழக்கு நீதித்துறையின் எதிர்காலம் தொடர் பானது என்றும் உத்தரவிடுகிறார்.
இந்த உத்தரவு வெளியானதும், அது வரை வேறு வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த தீபக் மிஸ்ரா, உடனடியாக நீதிமன்றத்தை விட்டு எழுந்து சென்றார். பிற்பகல் மூன்று மணிக்கு மூத்த நீதிபதி தீபக் மிஸ்ரா, ஆர்கே.அகர்வால், அருண் மிஸ்ரா, அமித்தவ ராய், மற்றும் கன்வாலிக்கர் அடங்கிய அமர்வு அவசரமாக கூடியது. இந்த அமர்வில் அமர்ந்த மீதமுள்ள நான்கு நீதிபதிகளின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். தீபக் மிஸ்ரா ஒதுக்கும் எல்லா வழக்குகளும் இந்த நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்குத்தான் செல்லும்.
தீபக் மிஸ்ரா தலைமையிலான அந்த அமர்வு, எந்த வழக்கை யாருக்கு ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம், முழுக்க முழுக்க தலைமை நீதிபதிக்கு மட்டுமே. வேறு எந்த நீதிபதியும் அதை செய்ய முடியாது என்று தீர்ப்பளித்தது.
மறு நாள், ஆர்கே.அகர்வால், அருண் மிஸ்ரா, மற்றும் கன்வாலிக்கர் அடங்கிய மூவர் அடங்கிய அமர்வு, மருத்துவக் கல்லூரி ஊழல் தொடர்பாக உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற மனுவை தள்ளுபடி செய்தது. தள்ளுபடி செய்ததோடு அந்த அமர்வு நிற்கவில்லை. வழக்கு தொடர்ந்த பிரசாந்த் பூஷணின் அமைப்புக்கு 25 லட்சம் அபராதத்தையும் விதித்தது. வழக்கை தள்ளுபடி செய்வதை ஒரு புறம் விட்டு விடுவோம். 25 லட்சம் அபராதம் விதித்ததன் நோக்கம் என்ன ? இனி வேறு யாரும் இது போன்ற வழக்குகள் குறித்து பேசவும் கூடாது. எழுதவும் கூடாது என்பது மட்டும் தானே ?
ஆர்கே அகர்வால், அருண் மிஸ்ரா மற்றும் ஏஎம்.கன்வாலிக்கர் ஆகிய மூவரையும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் “சம்ச்சா” நீதிபதிகள் என்றே அழைக்கின்றனர்.
வழக்கமாக சமூக, அரசியல் மற்றும் அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் உச்சநீதிமன்ற அமர்வில், உச்சநீதிமன்றத்தின் முதல் மூத்த நீதிபதிகள் ஐவரில், ஒருவர் இரு நபர் அமர்வில் மூத்த நீதிபதியாக இருப்பார். இரண்டாவது நீதிபதியாக இளைய நீதிபதி ஒருவர் இருப்பார்.
உச்சநீதிமன்றம் அடுத்தடுத்து விசாரிக்க இருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளான, நீதிபதி லோயாவின் மர்ம மரணம் தொடர்பான வழக்கு, ஆதார் கட்டாயம் என்ற வழக்கு, பாப்ரி மசூதி தொடர்பான வழக்கு ஆகிய எதிலுமே தீபக் மிஸ்ராவைத் தவிர, அடுத்த நான்கு சீனியர் நீதிபதிகள் இல்லை.
சரி, ஒடிசா மருத்துவக் கல்லூரி அனுமதி விவகாரத்தில் ஊழல் நடைபெறவேயில்லையா ? அதில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சம்பந்தப்பட வில்லையா? இது தொடர்பாக சிபிஐ பதிவு செய்த பூர்வாங்க விசாரணையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வில் தற்போது பணியில் உள்ள நீதிபதியான நாராயண சுக்லாவும், ஒடிஷா நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியான குத்தூசியும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்பதை, விரிவான விசாரணை நடத்தி ஒரு அறிக்கையாக 8 செப்டம்பர் 2017 அன்று சிபிஐ தயார் செய்கிறது.
பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதியை விசாரணை செய்யவும், அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி யின் அனுமதி இல்லாமல் செய்ய முடியாது. 6 செப்டம்பர் 2017 அன்று, சிபிஐ அதிகாரிகள், இந்த அறிக்கையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவிடம் அளித்து, வழக்கு பதிவு செய்வதற்கான அனுமதியை கோரு கின்றனர்.
ஆனால், இதை நாங்களே விசாரித்துக் கொள்கிறோம் என்று சிபிஐ அதிகாரிகளிடம் தெரிவித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, எந்த விசாரணைக்கும் உத்தரவிடவில்லை.
வழக்குகளை புலனாய்வு செய்யவும், கைது நடவடிக்கைகளில் ஈடுபடவும், சோதனைகள் நடத்தவும், ஏராளமான அனுபவமும், வாய்ப்பு வசதிகளும் உள்ள ஒரு அமைப்பு சிபிஐ. ஆனால் அந்த சிபிஐ விசாரிக்கக் கூடாது, டெல்லியில் உள்ள உச்சநீதிமன்றத்தில் உள்ள நான்கு நீதிபதிகள் சேர்ந்து விசாரித்துக் கொள்கிறோம் என்று தீபக் மிஸ்ரா முடிவெடுப்பது இந்த ஊழலை மூடி மறைக்கும் செயலா இல்லையா ?
மேலும், உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்துவதையும் தடுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு, இந்த ஊழலில் பங்கு இல்லை என்று எப்படி உறுதியாக கூற முடியும்?
நீதித்துறையில் அப்பட்டமாக நடந்துள்ள இந்த ஊழலை மூடி மறைக்கவும், விசாரணையை நடத்த விடாமல் தடுக்கவும் முயற்சி செய்யும் தீபக் மிஸ்ரா போன்ற ஒரு நீதிபதி இந்தியாவின் உச்சபட்ச நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாக இந்தியா முழுக்க உள்ள நீதித்துறையை கட்டுப்படுத்தும் அதிகாரத்தை பெற்றவராகவும் இருந்தால், இது ஜனநாயகத்துக்கு எப்படிப் பட்ட ஆபத்து ?
நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர் களை சந்தித்தற்கு இதுவும் முக்கிய காரண மில்லை.
ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வழக்கறிஞர்களின் பெயர் பரிசீலிக்கப்பட்டு, இறுதியாக ஒரு பட்டியல் உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அந்தப் பட்டியலில் எப்படியும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் பரிந்துரையில் ஒன்றிரண்டு பெயர்கள் இருக்கும். இந்த பெயர்கள் போக, மீதம் உள்ள பெயர்களை, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதிகள், பலரை கலந்தாலோசித்து, உரிய பரிசீலனைக்கு பின்னரே உச்சநீதிமன்றத்துக்கு அனுப்புவார்கள்.
அதில் ஒன்றிரண்டு பிழையாவதும் உண்டு. இருப்பினும் பெரும்பாலும், ஓரளவு சரியான பெயர்களாகவே இருக்கும். ஒவ்வொரு உயர்நீதிமன்றத்துக்கும் பிற மாநிலத்தைச் சேர்ந்த நீதிபதி ஒருவரை, தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கான பின்னணி இதுதான். அதாவது வேறு மாநிலத்தைச் சேர்ந்த நபர் தலைமை நீதிபதியாக இருந்தால், விருப்பு வெறுப்பின்றி, காய்தல் உவத்தலின்றி தேர்ந்தெடுப்பார்கள் என்ற நம்பிக்கையே இதற்கு காரணம்.
தீபக் மிஸ்ரா தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஆகஸ்ட் 2017க்கு பிறகு, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி காலியிடங்களுக்கான பரிந்துரைகள் அனைத்தையும் செய்வது தீபக் மிஸ்ரா மட்டுமே. ஒவ்வொரு மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையும் அழைத்து, அந்த உயர்நீதி மன்றங்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு நான் சொல்லும் பட்டியலை அனுப்புங்கள் என்று சொல்லி, அந்தப் பட்டியலே உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு வருகிறது.
இது மட்டுமல்ல. இந்த பட்டியலை தீபக் மிஸ்ராவிடம் அளிப்பது, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் என்பதுதான் கூடுதல் தகவல்.
சற்றே நினைத்துப் பாருங்கள். இன்றும் பத்தாண்டுகளில், இந்தியாவில் உள்ள அனைத்து உயர்நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும், ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ள காவிகள் நீதிபதிகளாக நீக்கமற நிறைந்திருந்தால், இந்தியாவின் ஜனநாயகம் என்ன ஆகும் ?
இதுதான் நான்கு நீதிபதிகள் பத்திரிக்கையாளர்களை சந்தித்தற்கான உண்மையான பின்னணி. பத்திரிக்கையாளர்களை சந்தித்த நான்கு நீதிபதிகள் பேசியதன் உள்ளர்த்தத்தை கவனித்தால், இது நன்கு புரியும்.
“இந்த அமைப்பு காப்பாற்றப் படாவிட்டால், நாட்டில் ஜனநாயகம் இருக்காது. மிகுந்த வேதனையோடே பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறோம். நிலைமை மோசமாக உள்ளது. தேவையான நடவடிக்கைகளை எடுத்து, இதை சீர்படுத்துங்கள் என்று தலைமை நீதிபதிக்கு நாங்கள் விடுத்த கோரிக்கை செவிமடுக்கப்படவில்லை. எங்கள் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
நாங்கள் நாலு பேரும், நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குள்ளாக்கப் பட்டுள்ளது என்பதில் உறுதியாக உள்ளோம். கடந்த சில காலமாக நடந்த சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இந்த தேசத்துக்கு நாங்கள் ஆற்ற வேண்டிய கடமை உள்ளது”
என்று அந்த நான்கு நீதிபதிகளும் வேதனை யோடு தெரிவிப்பது இதுதான்.
வெளியியுலகுக்கு தெரியாத பல்வேறு தகவல்களும் இந்த நீதிபதிகளுக்கு தெரியும் என்பதுதான் அவர்களின் வேதனையின் பின்னணி.