தினமணியில் (9.10.2020, வெள்ளிக்கிழமை) கோதை சோதி லட்சுமி ‘ஆதி சங்கரரும் திராவிட மும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை வெளிவந்தது. அதைப் படித்த பின்னர் தான் ‘பூசி மெழுகு தல்’ என்பதற்கு எனக்குப் பொருள் விளங்கியது. ஆதிசங்கரரை - அவரின் பெருமையைப் பக்கம் பக்கமாக எழுதி வீதி வீதியாக - ஒலி பெருக்கி வழியாகக் குரல் வலிமையால் தொண்டை கிழியக் கத்திப் பரப்புரை செய்வதற்கு யாரும் தடை மடை இடமாட்டார்.
ஆனால், அங்கு திராவிடரை உடனழைத்துக் கொச்சைப்படுத்தும் போது திராவிடச் செருக்கு, ஆரியத் தருக்கைக் கண்டு வாய் பொத்திச் சும்மா இருக்குமா? என்ன?
ஆரியம் செவி பொத்திக் கொள்ளும் அளவுக்கு ஆரியப் புராணப் புளுகுகளையும் புரட்டுகளையும் எதிர் மொழியாகத் திராவிடம் கொடுக்காமலா இருக்கும்?
“பாரத நாட்டில் ஆன்மிகம் சார்ந்த சிந்தனைகளை முன்வைத்தவர்களுள் ‘சகத்குரு’ என்று கொண்டாடப் படும் ஆதிசங்கரர் முக்கியமானவர்; ‘அத்வைத’க் கோட்பாட்டை நிலைநிறுத்தியவர். இன்றளவும் அவரது தத்துவத்தை முறித்து மாற்றுச் சிந்தனையை நிறுவ எவராலும் இயலவில்லை” என்று கட்டுரையாளர் கூறுகிறார்.
ஆதிசங்கரர் கண்ட ‘அத்துவைத’க் கோட்பாடு என்பது என்ன?
அவர் உபநிடதங்களில் இருவகை நிலைகளைக் கண்டார். ஒன்று கீழ்நிலை; மற்றொன்று மேல் நிலை. கீழ் நிலையில் இந்து சமய நம்பிக்கையை அவரால் காண முடிந்தது. மேல்நிலையில் எதிலும் அவர் உண்மையை - எதார்த்தத்தைக் காணவில்லை. இறப்புக்குப் பிறகு ஆத்மா பரமாத்மாவுடன் இணைந்துவிடுகிறது; வேறாக இருப்ப தில்லை என்பது அவரது நிலைப்பாடு.
இது அவரின் சைவச் சமயத்துக் கோட்பாடு. வைணவச் சமயத்து யதிராச இராமானுசர், சங்கரரின் கோட்பாட்டிலிருந்து வேறுபட்டார். பரமாத்மா என ஒன்று இருந்தபோதிலும், தனிப் பட்ட ஆத்மாக்களும் பொருளும் உண்மையானவையே. அவை பரமாத்துமாவுடன் இணைவது என்பதில்லை. ஆனால், அவை தொடர்ந்து இன்பமயமான நிலையில் உள்ளன என்பது இராமானுசரின் நிலைப் பாடு. இந்த நிலையை அடைய இறைவழிபாடு செய்யவேண்டும்; கடவுளிடம் நம்பிக்கை வேண்டும் என்றார் அவர்.
இது ‘விசிட்டாத்துவைதம்’ ஆகும்.
இத்தகைய இரு தத்துவ வாதங்களுமே மக்களைப் பெருமளவில் கவர்ந்தன என்று கற்பனை செய்யக் கூட முடியாது என்று இந்திய சமூகவியல் ஆய்வாளர் டி.டி. கோசாம்பி, தம் ‘மாயையும் எதார்த்தமும்’ என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
“அன்றைய ஆதிசங்கரரின் வாழ்வும் கோட்பாடும் உண்மையில் இன்றைய திராவிடக் கோட்பாட்டுக்கு எதிர்நிலை கொண்டது” என்கிறார் கட்டுரையாளர். இது தன்னையும் அறியாமல் கட்டுரையாளர் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது மகிழ்ச்சிக்குரிய செய்தி.
சங்கரர், “இறந்த பிறகு ஆத்துமா பரமாத்துமாவில் இணையும் என்னும் ‘அத்துவைத’ சித்தாந்தத்தைப் பரப்பியவர் ஆவார். அது சரி. இறந்த பிறகு ஆத்துமா பரமாத்துமாவில் கலந்தால் என்ன? கலக்காவிட்டால் என்ன? விண்டவர் கண்டிலர்; கண்டவர் விண்டிலர் என்பது தானே ஒரு கருத்தாக்கமாக இங்கே நிலவுகிறது.
மனிதன் உயிரோடு இருக்கும்போதே இன்னொரு மனிதனோடு மனத்தால் - மானுடத்தால் கலந்து பழகிக் குமுகத்தில் பொதுமையை - சமநிலையைக் கூட்டுவித் தால், மண்ணில் இங்கேயே நல்லவண்ணம் வாழலாம் என்பதுதான் பெரியாரின் - திராவிடத்தின் பகுத்தறிவுக் கோட்பாடு. இஃது எதிர்நிலைச் சித்தாந்தமா? இதுதானே மானுடத்தின் உயர்நிலை - உயிர்நிலைச் சித்தாந்தம். கட்டுரையாளர் இதைக் கொள்வாராக.
“சங்கரரைச் ‘சகத்குரு’ என்று பெருமையாக இந்த வையகமே கொண்டாடுகிறது. இன்றைய இந்து சமயத்தின் மறுமலர்ச்சியை நிலைநிறுத்தியவர். பாரதத்தின் நான்கு திசைகளிலும் ஐந்து பீடங்களை நிறுவியவர்” என்று கூறுகிறார் கட்டுரையாளர்.
வேத வைதீக மதம் (இந்து மதம்) பிராமணர்களுக்கு மட்டும் ‘உயர்ந்தவர்கள்’ என்ற மணிமுடியைத் தலையில் சூட்டிவிட்டு ‘உழைப்பின் முதல்வர்களுக்கு’ இழிந்தவர்கள் ‘சூத்திரர்கள்’ என்ற பாறாங்கல்லைத் தலையில் சுமத்தி ஆயிரம் ஆண்டுகளாக - ஈராயிரம் ஆண்டுகளாக வேடிக்கை பார்த்து வந்தது. வருணம், சாதி என்ற வேறுபாட்டால் மக்கள் பிறப்பை இழிவுபடுத்தி ‘விதி’ என்ற பள்ளத்தில் வீழ்த்தி மேல்தட்டுப் பார்ப்பனர்களைக் கொழுக்க வைத்தது.
இருபதாம் நூற்றாண்டில் அக் கொடுமையைக் கண்டு விழித்தெழுந்தது ஒரு வேங்கை! கொதித்தெழுந்து பாய்ந்தது ஓர் அரிமா! கடவுளின் பேரால், மதத்தின் பேரால், புராணங்களின் பேரால் இக் குமுகத்தில் இவ்வளவு காலம் பாய்ந்துவந்த முடைநாற்றக் கழிசடைகளை அடித்துப் போக வந்து ஆரவாரித்தது ஒரு பகுத்தறிவு வெள்ளம்! இப் பிறப்பிலேயே ‘மனுவை’ அகற்றி மானுட அறத்தை நிலைநிறுத்தி வென்றது, ஒரு தன்மானத் தகரி (பீரங்கி).
‘திராவிட(ர்) கழகம்’ நிறுவி, ‘குடியரசு’, ‘விடுதலை’, ‘உண்மை’ இதழ்களை நடத்திக் குமுகத்தில் ஒரு புது மலர்ச்சியை - புரட்சியை உருவாக்கிக் கொள்கைகளை முழக்கியது ஓர் இனமான முரசு.
ஈரோடு வெ. இராமசாமி என்னும் அவர், மகளிர் மாநாட்டில் ‘பெரியார்’ என்று பாராட்டப் பெற்று பட்டம் வழங்கப் பெற்றார். அன்றும் இன்றும் என்றும் ‘பெரியார்’ என்றால் அவர் ஒருவரையே சுட்டும். ‘பெரியார்’ என்பதே அவர் இயற்பெயராக - சிறப்புப் பெயராக அமைந்து விட்டதை அறிவுலகம் அறிந்து இறும்பூது எய்துகிறது. கட்டுரையாளர் மட்டும் இதனை அறியாமலா போவார்? நெஞ்சில் நிறுத்திக்கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன்.
“ஆதிசங்கரரே ‘திராவிடம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இருக்கிறார். ரிக் வேதம் தொடங்கிப் பல இடங்களில் ‘திராவிடம்’ என்ற சொல் இருக்கிறது. காசுமீரத்தின் கல்கணர் எழுதிய ‘இராசதரங்கிணி’ என்ற சமசுகிருத வரலாற்று நூலில் திராவிடம் என்பது எது? திராவிடர் என்பவர் யார்? போன்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. அதனால் ‘திராவிடம்’ என்பது சமசுகிருதச் சொல் என்று திண்ணமாகக் கூறலாம்” எனக் கட்டுரை யாளர் கூறுகிறார்.
அதற்கு விடையாக, அறிஞர் இரணியன் கூறியதை இங்கே குறிப்பிடுகிறேன். “திராவிடம் என்பதைத் தமிழ் என்பதற்கு முரணான சொல்லாகக் காட்டவே ஆரியப் பார்ப்பனியம் முயல்கிறது. ‘தமிழ்’ என்னும் மொழியைக் குறித்த சொல்தான் ‘திராவிடம்’. இச் சொல் ஒரு காலத்தில் வடநூலாரால் பயன்படுத்தப்பட்டது.
இன்று, தமிழ் இன மொழிகளைக் குறிக்கவும் தமிழ் வழிக் கலைகள், தமிழ் வழிப் பண்பாடு, தமிழ் வழி மருத்துவம் போன்றவற்றைக் குறிக்கவும் ஒரு குறியீட்டுச் சொல்லாக உலகளாவிய அறிஞர்கள், சிந்தனையாளர்கள் இதனைக் கையாளுகிறார்கள். எனவே, தூய தமிழ் சார்ந்த ஒரு நிலையைக் குறிப்பிடுவதற்கே அறிவுலகம் ‘திராவிடம்’ என்னும் சொல்லைக் கையாளுகிறது என்பது தெளிந்த உண்மை!” என்று அறிஞர் இரணியன் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்.
‘ஆரியம்’ என்ற சொல்லைக்கூடத் தமிழ்வழிப் பிறந்தது என்று நான் ஆய்ந்து கூறுகிறேன்.
‘ஆர்’ + இயம் = ஆரியம். ‘ஆர்’ என்னும் பகுதியின் அடியாக = ஆர்வம், ஆர்ப்பு, ஆரவாரம், ஆர்ப்பாட்டம் என்னும் சொற்கள் இலக்கிய வழக்கில் - உலக வழக்கில் வழங்கப்படுகின்றன. ‘ஆர்’ என்பதற்கு நிறைய, அதிகம் என்று பொருள் கூறலாம்.
‘ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்’ என்பது குறுந்தொகையில் வரும் செய்யுள் அடி. “ஆர்ப்பினும் பெரிதே” (ஆரவாரத்தினும் பெரிதே) எனும் செய்யுள் அடியையும் காண்க. ‘ஆர்வம்’ என்னும் உலக வழக்கின் பொருளை யாரும் சொல்லாமலே அறிவோம். அதிக வர்க்க ஒலி அமைப்பை உடைய மொழி ‘ஆரியம்’ (சமசுகிருதம்) என்று வழங்கப்பட்டது என்பதற்கும் வழியுள்ளது.
பில்கணன் என்பவர் யார்? காசுமீரத்துப் பார்ப்பனர். அவர்கள் (பார்ப்பனர்கள்) உண்மை வரலாற்றைத் திரித்து எழுதும் கரவு மனம் உடையவர்கள் என்பதை அறிஞர் உலகம் நன்கு அறியும். சான்றுக்குச் சில நிகழ்வுகளை இங்கே சுட்ட விரும்புகிறேன்.
“அசோகன் ஓர் இந்து அரசன். இந்து தருமத்தை நாட்டில் பரப்பியவன். அவன் சிவனை வழிபாட்டான்” என்று பார்ப்பனர்கள் உண்மைக்குப் புறம்பான செய்தியை வலியுறுத்தக் காசுமீரத்துப் பார்ப்பனர் பில்கணன் எழுதி வைத்த ‘இராசதரங்கிணி’ என்னும் நூலினை ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
அப்படியே இருக்கட்டும். அதன்பிறகு அசோகன் உண்மையறிந்து மனம் மாறிப் பௌத்த மதத்தைப் பின் பற்றிப் புத்தரின் கொள்கைகளை நாடெங்கும், அயல் நாடெங்கும் பெருமளவில் பரப்பினான் என்று சொல்ல முடியாதோ?
அவனுக்கு முன்னோன் சந்திர குப்தன், சாணக்கியனின் வைதிகச் சமயத்தைச் சார்ந் திருந்தான். பின்னர், பத்திரபாகு முனிவரைப் பின்பற்றிச் சமண சமயத்தைச் சார்ந்து, முடி துறந்து தம் குருவுடன் மைசூருக்கு அருகிலுள்ள சிரவண பெலகோலாவில் வந்து தங்கினான். பத்திரபாகு முனிவர் தம் சீடர்களுடன் பட்டினி கிடந்து ‘சல்லேகணம்’ என்ற முறையில் உயிர்துறந்தார். சந்திரகுப்த மவுரியனும் அவ்வாறே பட்டினி நோன்பு கொண்டு உயிர் நீத்தான் என்று ‘அக்கினி புராணம்’ கூறுகிறது.
“நூற்றுக்கணக்கான பவுத்த நூல்களும், சாசனங்களும், கல்வெட்டுகள், வெளிநாட்டவர்கள் ஆதாரங்கள் ஆகி யவையும் அசோகனைப் பவுத்தன் என நிலைநாட்டி யிருக்க, பில்கணப் பார்ப்பனரின் நூலை வைத்து, ‘சிவப் பற்றாளன்’ என்று கூறும் இப் பார்ப்பனர்களிடம் என்ன நேர்மையை எதிர்பார்க்க முடியும்?” என்று புலவர் கோ. இமயவரம்பன் தன் ‘பார்ப்பனர்கள் சூழ்ச்சியும் மன்னர்கள் வீழ்ச்சியும்’ என்ற நூலில் இவைபோன்று பல நிகழ்ச்சி களை விரித்துரைத்திருக்கிறார்.
கௌதம புத்தரையே ‘திருமாலின் ஒன்பதாவது அவதாரம்’ என்று புனைந்து மயக்கிய பிராமணர்கள் வேறு எவையெல்லாம் - எவ்வாறெல்லாம் புனைந்திருப்பார்கள் என்பதை அனைவரும் அறிக.
“ஆதிசங்கரர் தம்மைத் ‘திராவிட சிசு’ என்று பெருமை யாகக் கூறிக்கொள்கிறார். அவர் இந்தச் சொல்லால் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டது நிலவியல் அடிப்படையில்தான்; தென்பகுதியைச் சேர்ந்தவர் என்ற பொருளில் தான்” என்று கட்டுரையாளர் குறிப்பிடுகிறார்.
அவர் (சங்கரர்) இந்தியாவின் வடபகுதியான ஆரிய வர்த்தத்தில்தான் வாழ்நாளின் பெரும்பகுதியைத் தம் அத்துவைதக் கொள்கையை நிலைநாட்டவும் வாதங்கள் புரியவும் செலவிட்டு வந்துள்ளார். அப்படியிருக்க, ‘ஆரிய சிசு’ என்று தம்மை அழைத்துக் கொள்ளாமல் ‘திராவிட சிசு’ என்று ஏன் குறிப்பிட்டுக் கொண்டார்? தாம் பிறந்த திராவிடப் பகுதிக்குப் பெருமை சேர்ப்பதற்குத் தான்; தம் தாய்நாட்டுப் பற்றைக் காட்டுவதற்காகத்தான்.
பிராமணரான, அசுவகோஷ் புத்த மதத்தைத் தழுவி, பௌத்த மடத்தில் வந்து தங்கி, பல நாடகங்களையும் பல காவியங்களையும் படைத்தார். சாரிபுத்திர பிரகரன், புத்தசரிதம், சவுந்தரியானந்தம் ஆகிய பல படைப்புகளில் ‘சாகேதத்தைச் சேர்ந்த ஆர்ய சொர்ணாட்சியின் புதல்வன் அஸ்வகோஷ் எழுதியது’ என்று தம் தாய்ப் பற்றுக்குப் பெருமை சேர்த்துள்ளார். அவ்வாறுதான் ஆதிசங்கரரும் திராவிடமாகிய தம் தாய்நாட்டுப் பற்றைக் காட்டுவதற்குத் ‘திராவிட சிசு’ என்று குறிப்பிட்டுக் கொள்கிறார்.
திராவிடத்தில் பிறந்து, திராவிடத்தில் வாழ்ந்து, திராவிடரின் (தமிழரின்) எழுச்சிக்கும் பகுத்தறிவுக்கும் தன்மானத்துக்கும் முன்னேற்றத்துக்கும் தொண்ணூற்றைந்து அகவை வரை யில் ஒவ்வொரு நொடியும் பாடுபட்ட திராவிடப் பெரியார் பெருமைக்கு உரியர் அல்லரோ?
“ஆதிசங்கரர் நாடbங்கும் நிலவி வந்த எழுபத்திரண்டு தத்துவங்களைத் தம் தருக்கத்தினால் வென்று தம் மெய் யியல் தத்துவமான அத்துவைதக் கோட்பாட்டை நிறுவி னார்” என்று சோதிலட்சுமி அக் கட்டுரையில் கூறுகிறார்.
சங்கரர் மற்றைய தத்துவங்களை வெல்வதற்கு என் னென்ன வழிமுறைகளைக் கையாண்டார் என மொத்த மாக அறியமுடியவில்லை. மீமாம்சக் கொள்கை சார்ந்த (கருமவாதம்) - நருமதை ஆற்றங்கரையில் மாகிஸ்மதி நகரத்தில் வாழ்ந்த ஒரு மிகப்பெரிய மீமாம்சகரை வெல்ல ஆதிசங்கரன் பின்பற்றிய ஒரு வழிமுறையை இங்கே குறிப்பிடுகிறேன்.
மீமாம்சகரான மண்டனமிச்ரரை வலிந்து வாதம் செய்ய அழைக்கிறார் சங்கரர். 21 நாட்கள் வாதம் நிகழ்கிறது. சங்கரர் அவ் வாதத்தில் வெல்லும் நிலை ஏற்படுகிறது. சங்கரர் வென்றுவிட்டால் மண்டனமிச்சரராகிய தன் கணவர், சங்கரர் பின்னே துறவியாகிச் சென்றுவிடுவார் என்று எண்ணிய மனைவி சரசவாணி, சங்கரரிடம் “நான் என் கணவரின் ஒரு பாதி ஆவேன். என்னையும் தாங்கள் வென்றால் அன்றோ முழு வெற்றி கொண்டீர் என்று கூற முடியும்” என்று கூறுகிறார்.
சங்கரரும் அதற்கு இசைகிறார். இருவருக்கும் வாதம் நிகழ்கிறது. ஒரு கட்டத்தில் சரசவாணி சங்கரரிடம் ஒரு வினா தொடுக்கிறார். “தங்களுக்கு உடலுறவு அடைவு உண்டா? அது எத்தகையது என்று தாங்கள் கூற வேண்டும்?” என்று கேட்கிறார்.
சங்கரர் அக் கேள்வியைச் செவியுற்றதும் மருண்டு விழிக்கிறார். “தங்களுக்கு ஒருமாதம் காலக்கெடு தருகிறேன். அப்போது விடைதெரிந்து வந்து கூறினால் போதும்” என்கிறார் சரசவாணி.
அதற்கு ஒப்புக்கொண்டு சங்கரர் ஒரு காட்டுக்கு வருகிறார். அக் காட்டில் ஒரு மன்னன் ‘அமருகன்’ இறந்து கிடக்கிறான். சங்கரருக்கு அப் பிணத்தைப் பார்த்ததும் ஒரு தகாத எண்ணம் தோன்றுகிறது. “மாண்டுவிட்ட அவ் வுடலில் கூடுவிட்டுக் கூடு பாய்தல் முறையில் (சித்து) தன் உயிரை அவ் வுடலில் புகுத்தி. உயிர்பெற்று மன்னனாக எழுந்து அரண்மனைக்குச் சென்று அரசியிடம் கலவி இன்பத்தில் ஈடுபட்டால், சரசவாணியின் கேள்விக்கு விடை கூறுவதற்கு வழியுண்டாகும்” என்று தம்முடன் வந்த சீடர் பத்மபாதரிடம் கூறுகிறார்.
அதற்கு அவர், “இது தகாத வழியாகாதோ? தங்களை இவ்வுலகம் திறனாய்வு (விமர்சனம்) செய்யுமே” என வினவுகிறார்.
“பத்மபாதரே! உடல் வேறு; ஆன்மா வேறு. சங்கரன் ஆன்மா என்றும் கறைபடாது. நான் திரும்பி வரும் வரை என்னுடலை மறைத்து வைத்துக் காக்க வேண்டும்” என்று சங்கரர் விடையிறுத்துத் தாம் எண்ணிய வண்ணம் தம் உயிரை அமருகன் உடலில் புகுத்தி, அரசனாக அரண் மனைக்குச் சென்று அரசியிடம் இன்பம் துய்க்கிறார்.
பின்னர், சங்கரர் சரசவாணியின் வினாவுக்கு விடை யிறுத்து வெல்கிறார். அவள் கணவன் துறவுபூண்டு சங்கரர் பின் செல்கிறார். (எழுத்தாளர் ஜெகதா - ‘அருளாளர்களின் சிலிர்க்க வைக்கும் அற்புதங்கள்’ நூல்).
இந் நிகழ்வை அறியக்கூடிய எவருக்கும் நெஞ்சில் எழக்கூடிய வினாக்கள் எவையாக இருக்கும்?
இந்தச் செயலை ஓர் அருளாளரின் அற்புதம் என்று ஏற்றுக்கொள்ளக்கூடுமா? இதுபோல் ஒரு துறவி செய்ய ஆகுமா? சட்டம் இன்று, உடல் வேறு; ஆன்மா வேறு என்பதை ஏற்றுக்கொள்ளுமா? இந்தியக் குற்றவியல் தண்டனைச் சட்டம் எத்தனைப் பிரிவுகளின்கீழ் துறவிமேல் வழக்குப் பதிவு செய்யும்? என்று கட்டுரையாளர் எண்ணுக.
இந்திரன், கௌதம முனிவரின் மனைவி அகலிகை யைத் துய்க்க விரும்பி, அம் முனிவரை வெளியே அனுப்பிவிட்டு, அவரின் வடிவமெடுத்து வந்து, அவளின் கணவன் தான்தான் என்று நம்ப வைத்து அகலிகையிடம் உறவுகொண்டு இன்பம் துய்த்தான். உண்மையான கௌதம முனிவர் அங்கு வந்து நிகழ்ந்ததை அறிந்து, இந்திரனையும் அகலிகையையும் சபித்தார்.
“பெண்ணின் எவ்வுறுப்பை நச்சி வந்து கள்ளம் புரிந்தாயோ, அவ்வுறுப்பு உன் உடலெங்கும் தோன்றுக” என்று முனிவர் இந்திரனைச் சபித்தார்; ‘கல்லாகுக’ என்று அகலிகையைச் சபித்தார். இந்திரனுக்கு எவ்வளவு அருவருப்பான தண்டனை கிடைத்தது? பாருங்கள்.
ஆதிசங்கரர் சரசவாணியை வெல்வதற்குக் கையாண்ட வழிமுறையை - இழிமுறையைச் சிறிது எண்ணிப் பாருங்கள். இந்திரனுக்கும் இவருக்கும் என்ன வேறுபாடு?
‘உடல் வேறு; ஆன்மா வேறு; எனவே, சங்கரன் ஆன்மா என்றும் கறைபடாது’ என்று சங்கரர் தப்பித்துக் கொள்வது சரியாகுமா? சரசவாணியிடம் தான் ஒரு துறவி; அவளுடைய அந்தக் கேள்விக்கு தன்னால் விடைகூற இயலாது என்று உண்மையைக் கூறியிருந்தால் என்ன வாகும்? ‘வாய்மையே வெல்லும்!’ என்பது நிறுவப்பட் டிருக்கும். அதைவிடுத்து, வெல்வதற்காகக் கீழ்மைச் செயலைக் கைக்கொள்ள வேண்டிய தேவை என்ன இருக்கிறது. இதுதான் பெரியோர் பெருமையா? கொள்வார் கொள்க. தள்ளுவார் தள்ளுக.
வானுலகில் இன்பவாழ்வுக்கு வழிகாட்டும் ஆன்மீகத்தை விட மண்ணுலகில் மானுடத்தின் மான - மதிப்பான வாழ்வுக்குப் பல்துறைகளில் வழிகாட்டும் திராவிடப் பெரியாரியப் பல்கலைக்கழகம் எத்துணை மாண்புமிக்கது! மாயைக்கும், மயக்கத்துக்கும், பொய்மைக்கும், புனை வுக்கும் காரணமாகிய ‘மதம்’ மக்களுக்கு அபின் என்றார் காரல் மார்க்சு. அந்த மதம் கற்பிக்கும் கடவுளையே ‘சுழியமாக்கினார்’ பெரியார்.
“இந்தியாவில் கி.மு (600) ஆறுநூறிலேயே, முதன் முதலில், ‘கடவுள் ஒருவர் இல்லை’ என்று கூறியவர் மகாவீரர். மகாவீரருக்கு முன்னே 23 தீர்த்தங்கரர்கள் தோன்றியிருந்தார்கள். முதல் தீர்த்தங்கரரான (இ)ரிசப தேவர் காலத்திலேயே ‘கடவுள் இல்லை’ என்ற கருத்து நிலைநிறுத்தப்பட்டு விட்டது” என்கிறார் முனைவர் க.ப. அறவாணன்.
இருபதாம் நூற்றாண்டில், “கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை. கடவுளைக் கற்பித் தவன் முட்டாள்; கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன்; கடவுளை வணங்குகிறவன் காட்டுமிராண்டி. கடவுளை மற! மனிதனை நினை!” என்று காட்டமாகத் தாக்கியவர் பெரியார்.
கடவுள், மதம், வருணம், சாதியம், சடங்கியம் எல்லாம் கலந்த வைதீகப் பார்ப்பனியத்தை அதிரடியாகத் தாக்கி அச்சுறுத்திக் கீழ்மட்டத்திலிருந்த மக்களை மேல் மட்டத்திற்கு வரவழைக்கப் பகுத்தறிவை வலியுறுத்திக் குமுகப் போராளியாக வாழ்நாள் முற்றும் வாழ்ந்த பெரியார் இன்றும் என்றும் தேவையாகிறார்.
மகாவீரர், கௌதம புத்தர், வைகுண்டர் ஐயா, நாராயண குரு, கன்ஃபூசியசு, பெட்ரன் ரசல், மகாத்மா சோதிராவ் புலே ஆகியோரின் ஆளுமைகள் அனைத்தையும் தன் மாட்டுத் தான் ஒருவரின் மொத்த ஆளுமையாக ஆக்கிக் கொண்டு குமுகத்தின் பற்பல முன்னேற்றத்திற்குத் துணிந்து முனைந்து பாடுபட்ட ஒரே தலைவர் தந்தை பெரியார்தான்.
அவர் தோற்றுவித்த திராவிடர் இயக்கக் கோட்பாடுகள் கி.பி. இருபதாம் நூற்றாண்டின் புரட்சி ஏற்பாடு.
இந்தப் புரட்சி ஏற்பாடு இன்னும் எத்துணையோ காலத்துக்குத் தமிழகத்தில் புதுப்பரணி பாடிக்கொண்டே இருக்கும்.
கட்டுரையாளர் சோதிலட்சுமி, திராவிடத்தை இனிப் பேதமையால் சீண்டமாட்டார் என்று நம்புகிறோம்.
- பேராசிரியர் இரா.சோதிவாணன்