மோடி குசராத்தில் முதல்வராக இருந்த போது 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் அயோத்தியிலிருந்து வந்த சபர்மதி விரைவுத் தொடர்வண்டி, குசராத் மாநிலம் கோத்ரா தொடர்வண்டி நிலையத்தில் தீ வைத்து எரிக்கப்பட்டது. அதில் 57 இந்து பக்தர்கள் தீயில் இறந்தனர். இந்த இரயில் எரிப்புச் சம்பவம் இசுலாமியர்களால் நடத்தப்பட்டது என்றுக்கூறி இந்து மதவெறி அமைப்பினர், இசுலாமியர்களுக்கு எதிரான மாபெரும் வன்முறைகளை அரங்கேற்றினர்.
இருபது ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர் வீடுகளும், கடைகளும் சூறையாடபபட்டன; இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்கள் படுகொலைச் செய்யப்பட்டனர்; தொடர்ந்து வன்முறைகள் அதிகரித்து வந்தச் சூழலில் இந்து வெறியர்களிடம் இருந்து தப்பி உயிர்பிழைப்பதற்காக பில்கிஸ்பானுவின் குடும்பத்தினர் 2002 மார்ச் மாதம் 3ஆம் நாள் தாகோடு மாவட்டம் ரன்திக்பூரிலிருந்து வெளியேறி அடுத்த ஊரை நோக்கிச் சென்றனர். அப்போது சுமார் 30 பேர் கொண்ட இந்து மதவெறிக் கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்தது. பில்கிஸ் பானுவுடன் சென்றவர்களில் பதினான்கு பேர் படுகொலைச் செய்யப்பட்டனர்.5 மாதம் கருவுற்றிருந்த பில்கிஸ்பானு அந்த மதவெறிகும்பலால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார். அவருடைய மற்ற நான்கு பெண்களும் கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டனர். அவர்கள் இறந்துவிட்டார்கள் என நினைத்து விட்டுச் சென்றனர். பில்கிஸ் பானுவின் மூன்று வயது மகள் சலேகாவை இவர் கண் எதிரிலேயே சுவற்றில் மோதி சாகடித்தனர்.
தப்பிப் பிழைத்த பில்கிஸ்பானுவும் அவருடைய கணவரும் பல முறை வீடு மாற வேண்டிய நிலையே ஏற்பட்டது. மனித உரிமை ஆணையத்தின் உதவியுடன் தொடர்ந்து போராடி, குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குத் தொடுத்தார்.
உச்சநீதி மன்றம் இந்த வழக்கை விசாரித்து ஒன்றிய அரசின் புலனாய்வுக்கு (CBI) மாற்றியது. குசராத்தில் வழக்கு நடைபெற்றால் தனக்கு நீதி கிடைக்காது என்ற பில்கிஸ் பானுவின் கோரிக்கையை ஏற்று வழக்கை மும்பைக்கு மாற்றியது உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதன்மைக் குற்றவாளிகள் 11 பேரை 2004 சனவரி 11 அன்று சி. பி. ஐ. சிறப்புக் காவல் துறையினர் கைது செய்தனர். மும்பை ஒன்றியப் புலனாய்வு சிறப்பு நீதி மன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
குற்றம் நிரூபிக்கப்பட்டு, 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் 21 ஆம் நாள் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் வாழ்நாள் தண்டனை அளிக்கப்பட்டது. குற்றவாளிகளின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து, உறுதி செய்தது 2017இல் மும்பை உயர்நீதி மன்றம்.
பில்கிஸ்பானு வழக்கில் தண்டனை அடைந்த ஜஸ்வந்த்பாய், கோவிந்த்பாய், ஷைலேஷ்பட், ராதேஷ்யாம்ஷா, பிபின்சந்திரா ஜோசி, கேசர் பாய், வோஹானியா, பிரதீப் மோர்த்தியா, பகபாய், வோஹானியா, ராஜ்பாய் சோனி, மிதேஷ்பட் மற்றும் ரமேஷ் ரூபபாய் ஆகிய 11 பேரும் சிறையில் அடைக்கப் பட்டனர்.
ரமேஷ்போய் என்பவர் 2013 ஆம் ஆண்டு தன்னை விடுதலைச் செய்ய வேண்டம் என்று மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்குத்தொடுத்தார். குசராத்து அரசு தான் இதைத் தீர்மானிக்க முடியும் என்று நீதி மன்றம் கூறிவிட்டது.
ரதிஷயாம் சா என்ற குற்றவாளி தன்னை விடுதலைச் செய்ய வேண்டும் குசராத்து உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். “உங்கள் வழக்கு விசாரணை மராட்டியத்தில் நடைபெற்றதால் நீங்கள் அங்குதான் இதற்கு தீர்வுகாண வேண்டும்” என்று தீர்ப்பளிக்கப்பட்டது. எனவே இவர் உச்சநீதி மன்றத்தை நாடினார். உச்சநீதி மன்றத்தில் இவருடை மனுவை இருவர் அமர்வு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டனர். குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறையில் கழித்து விட்டதால் குசராத்து அரசு ஒரு ஆய்வுக்குழுவை அமைத்து இவர்கள் விடுதலையை இரண்டு மாதத்தில் முடிவு செய்ய வேண்டும் என்று 22.05.2022 அன்று தீர்ப்புக் கூறியது.
குசராத்து அரசு 10 பேர் கொண்ட குழுவை அமைத்தது. அதில் 5 பேர் பா. ச. க. வைச் சேர்ந்தவர்கள், மற்றவர்கள் பா. ச. க. ஆதரவானவர்கள். குற்றவாளிகள் 14 ஆண்டுகள் சிறைத்தன்டனை அனுபவித்து விட்டனர். அவர்களின் நன்டைத்தையின் காரணமாக 1992ஆம் ஆண்டின் சிறைத் தண்டனைக் குறைப்புச் சட்டன்படி இவர்களை விடதலைச் செய்யலாம் என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் 15.8.2022 அன்று குற்றவாளிகள் 11 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
குசராத்து அரசின் இந்தச் செயல் மனித உரிமை ஆர்வலர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குற்றவாளிகள் அனைவரையும் மீண்டும் சிறையில் அடைக்க வேண்டும் என உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு கடிதங்கள் அனுப்பி உள்ளனர். ஓய்வு பெற்ற இ. ஆ. ப. , இ. கா. ப. அலுவலர்கள் 134 பேர் கூட்டாகக் கையொப்பமிட்டு உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதங்கள் எழுதி உள்ளனர்.
11 பேரின் விடுதலையை எதிர்த்து இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) மகளிர் அமைப்பு உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. சமூக ஆர்வலர் அபர்ணாபட் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில்சிபல் வழக்குத் தொடுத்துள்ளார். உச்சநீதி மன்றம் விசாரணைக் ஏற்று! ஒன்றிய அரசுக்கும், குசராத்து அரசுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளது.
குசாரத்து கோத்ரா தொகுதியின் பா. ச. க. சட்டமன்ற உறுப்பினர் சி. கே. ரவுல் ஜி, குற்றவாளிகள் விடுதலைக் குறித்து பேசியபோது “தண்டனை விதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள்; அவர்கள் நல்ல கலாச்சாரம் கொண்டவர்கள். அவர்கள், தவறான நோக்கங்களால் கூட தண்டனை பெற்றிருக்கலாம் என்று கூறினார். ” (பி. பி. சி. தமிழ் 21.08.2022) குற்றவாளிகளின் விடுதலையைக் கொண்டாடும் பா. ச. க. வினரை என்னவென்பது?
ஒரு கண்ணில் வெண்ணெயும் ஒரு கண்ணில் சுண்ணாம்பும்
இராசீவ் காந்தி கொலையில் தொடர்புடையவர்கள் ஒன்றிய அரசின் அனுமதியில்லாமல் விடுவிக்கக் கூடாது என்று நீதி மன்றங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் நளினி, முருகன், சாந்தன், இராபர்ட் பயஸ், செயகுமார், இரவிச்சந்திரன் ஆகிய ஆறு பேர் சிறையிலேயே உள்ளனர். பல்கிஸ்பானு வழக்கும் ஒன்றியப் புலணாய்வு சிறப்பு நீதி மன்றம் தான் தண்டனை வழங்கியது. குசராத்து கைதிகள் மட்டும் 14 ஆண்டுகள் முடிந்தவுடன் வெளியே வந்து விடலாமா? அவர்கள் பார்ப்பனர்கள் என்பதால்? தமிழ்நாட்டில் உள்ளவர்கள் பார்ப்பனரல்லாத தமிழர்கள் ஒன்றிய அரசின் புலனாய்வுக் குழுவால் தண்டனை வழங்கப்பட்டவர்கள்தானே?
- வாலாசா வல்லவன்