பெறுநர்
மானமிகு திரு. வே. ஆனைமுத்து அவர்கள்
பதிப்பாசிரியர்
பெரியார் சிந்தனைகள், சென்னை-53.

அன்புமிக்க ஐயா அவர்களுக்கு,

வணக்கம். வாழிய நலம்.

உங்களின் அரும்பணியை அறிமுகப்படுத்தியமைக்காக மார்க்சிய-பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் வேலூர் மாவட்ட ஒன்றியச் செயலாளர் திரு. ரவி அவர்களுக்கு, நானும் என் இளவல் ரவி தமிழ்வாணனும் நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வது எங்கள் கடமை.

20 தொகுதிகளையும் கண்டும், உணர்ந்தும், புரட்டிப் பார்த்தும் பிரமிப்பில் ஆழ்ந்துபோனேன். இவை உங்களது 85-ஆவது வயதில் பதிப்பிக்கப் பட்டவை என எண்ணும்போதே அப்படி ஒரு வியப்பு மேலிடுகிறது. எப்போது எழுத்திலிருந்தும், பதிப்புப் பணியிலிருந்தும் விடுபடலாம் என்று நான் சிந்திக்கத் துவங்கிய இவ்வேளையில், உங்கள் இப்பதிப்புச் செல்வங்கள் என்னை மறுபரிசீலனை செய்ய வைத்து விட்டன. பதிப்புலகின் மிகச்சிறந்த முன்னுதாரண மனிதர் நீங்கள் என்கிற முடிவிற்கு நான் வந்திருக்கிறேன்.

தந்தை பெரியார் அவர்களின் அனைத்து ஏடுகளையும், பேச்சுப் பதிவுகளையும் தனி மனிதப் போராளியாகச் சரி பார்த்து, எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, ஒருமை பன்மை மயக்கம், கூறியது கூறலை நீக்கல் என அனைத்தையும் ஒருசேரச் சரிபார்த்திருக்கிறீர்கள்!

பெரியார் அவர்களின் பேச்சை ஒலிநாடாவில் கேட்டவன் என்ற முறையில், அவர்கள் மொழியலங்காரத்துடன் பேச மாட்டார்கள்; கருத்திலேதான் அவர்களது கவனம் என்பதை நான் அறிவேன். இவை அனைத்தையும் எழுத்துருவிற்கு மாற்றுவது சற்றும் எளிதல்ல. கடுமையாக வேலை வாங்கி யிருக்கும். அசராமல் செய்திருக்கிறீர்கள்! ஐயா சில நேரங்களில் கடுமையான சொற்களைப் பயன்படுத்துவார்கள். அச்சிலேற் றும்போது இவை அவசியமில்லை. அவை ஐயாவுக்குப் பெருமை சேர்க்கா என்பதையும் நீங்கள் கவனத்தில் கொண்டு பதிப்பித்திருக்கிறீர்கள்.

திராவிட இயக்கம் சார்ந்த அமைப்புகள் ஏராளமாக இருந்தும், 1973 வரை ஐயாவின் சிந்தனைகளை எந்த அமைப்பும் பெரிய அளவில் தொகுத்து வெளியிடவில்லை. சிறு, சிறு கையேடுகளாகவே இவை வலம் வந்தன.

இந்நிலையில் 1972 முதல் இதற்கான களத்தில் இறங்கி, ஐயாவின் சிந்தனைகளுக்கு நிரந்தர வடிவம் கொடுக்கும் உங்கள் சிந்தனையே அருமை என்பேன். பலருக்கும் கடிதம் எழுதி, குருவி தானியம் சேர்த்த கதையாய் சிறுகச் சிறுகத் திரட்டி முதல் நிலைச் சான்றுகள் மற்றும் இரண்டாம் நிலைச் சான்றுகளாகக் கிடைத்த உதிரிப் பூக்களை மாலையாக்கிய திறத்தை என்னென்பேன்!

இப்படிப்பட்ட தொகுப்பைப் பொறுத்தவரை முன்மாதிரிப் பதிப்புகள் ஏதும் இல்லாத நிலையில் ஆழ்ந்து சிந்தித்து, நன்கும் சுயமாகவும் தெளிவடைந்து, பொருள்வாரியாக, காலவாரியாக, 71 பெருந் தலைப்புகளுள் இவற்றை உள்ளடக்கிய அழகு இருக்கிறதே, இன்றைக்கெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கலாம்.

பொருளடக்கமும் பெயர்ச்சொல் அடைவுகளும் பக்கங் களை அடைக்கிற விஷயம் எனப் பலரும் விலக்கி விடுவர். இல்லை. இவை அவசியம் வேண்டும். இதுவே தலைப்பு வாரியாக, நபர் வாரியாகத் தேடுவோர்க்கு இந்த 20 தொகுதிக் கடலில் இத்தேடலை எளிதாக்கும் என்பதை நன்கு உணர்ந்து, உறுதி காட்டிப் பதிப்பித்ததும் மிக நல்ல யோசனை என்பேன்.

ஐயாவின் வைர வரிகளைத் தங்கத்திற்குள்தான் பதிக்க வேண்டும் என்பதைi நன்கு உணர்ந்தவராய் நூல்களின் அட்டைகளில் தங்க நிறத்தைப் பயன்படுத்தியது அற்புதம். சாதாரண முறையில் ஏனோ தானோ வெளியீடாக இது அமைந்துவிடக்கூடாது என்று முடிவு செய்து, பின்லாந்திலிருந்து அட்டைகளைக் கப்பலில் வரவழைத்த முயற்சி என்பது, இள வயதினரே தயங்குகிற விஷயம். இதையுமல்லவா நிவர்த்தி செய்து நேர்த்தி காட்டிவிட்டீர்கள்! ஒவ்வொன்றிலும் எவ்வளவு அக்கறை!

ஈரோடு நகராட்சி அலுவலகத்திற்கு நீங்களே நேரில் போய் அங்கேயே அமர்ந்து, திரட்டப்பட்ட ஐயாவின் கையெழுத்தை ஒளிப்படி எடுத்து வந்தது மிக அரிய செல்வம். ஐயாவின் கையெழுத்தைக் கண்டு களித்தேன்.

நன்றிக்குரியோர் ஒருவரைக்கூட விடாமல், நூற்றுக் கணக்கானரைக் குறிப்பிட்டு, அவர்களையும் அங்கீகரித்த உங்கள் பண்பை மிக விரும்பினேன்.

காலமும், கரையானும் அழித்து ஒழித்து விட்டிருக்கக் கூடிய இந்த அரிய சொத்திற்கு நல்வடிவம் தந்து. தமிழா! பிடிடா உன் சொத்தை! எனத் தந்திருக்கிற உங்களது சேவை நூறு ஆண்டுகள் கடந்தும் போற்றப்படும் என்பது உறுதி.

இன்னும் உங்களுக்குள் உலவும் இலட்சியங்களை, அணிந்துரையிலும் பதிப்புக் குறிப்புகளிலும் கண்டேன். அவற்றையும் ஈடேற்ற உங்களுக்கு நல்ல உடல்நலமும், நீண்ட ஆயுளும் வாய்க்க வேண்டும் என மனப்பூர்வமாக விரும்புகிறேன்.

பணிவன்புடன்

எழுத்துச்செல்வர் முனைவர் லேனா தமிழ்வாணன்
தலைவர் மணிமேகலைப் பிரசுரம், சென்னை-17.

நகல் :

திரு. த. ரவி அவர்கள், வேலூர்
திரு. சா. குப்பன் அவர்கள், வேலூர்

Pin It