2014 ஆகஸ்ட் 15ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற விடுதலை நாள் விழாவில், இந்திய நாட்டின் தலைமை அமைச்சர் பல கருத்துகளை முன்மொழிந்துள்ளார். அவற்றுள் ஒன்று, நடுவண் அரசின் திட்டக்குழுவை மாநில அரசுகள் பங்களிப்புச் செய்யும் வகையில் மாற்றியமைப்பேன் என்று சூளுரைத்திருக்கிறார். இதுவரை திரு.மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு, காங்கிரசுச் கட்சி சென்ற பொருளாதாரப் பாதை யிலேயே செல்கிறது என்று பல அரசியல் தலைவர்களும், ஊடக இயலாளர்களும் குறிப்பிடுகிறார்கள். இச்சூழலில் திட்டக்குழுவை எவ்வாறு மாற்றியமைக்கப் போகிறார் என்பதை எல்லோரும் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள்,

இந்தியா விடுதலைப் பெறுவதற்கு முன்பு பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு அமைச்சரவைத் தூதுக்குழு  (Cabinet Mission) இந்திய அரசியல் கட்சிகளிடம் பல கருத்து களைக் கேட்டுப் பெற்றது. அக்காலக்கட்டத்தில் திட்ட மிடல் கொள்கையை மத்திய அரசின் பட்டியலில் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று காங்கிரசுத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். மூன்று முறை இக்கோரிக்கையை அமைச்சரவைத் தூதுக்குழு ஏற்க மறுத்தது.

 1947ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றும் அவையில் திட்டமிடல் கொள்கையைப் பற்றி விரிவான முறையில் கருத்து கள் வைக்கப்படவில்லை. நடுவண் அரசும், மாநில அரசுகளும் தங்கள் பங்கினைச் செலுத்தும் வகையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சமூக, பொருளாதார திட்டமிடல் கொள்கை (Economic and Social Planning)  பொதுப் பட்டியலில் 20வது இனத்தில்தான் இணைக் கப்பட்டது. இன்றும் இந்நிலைதான் தொடருகிறது. எனவேதான் பெரும்பாலான மாநிலங்களில் இன்றும் திட்ட ஆணையம் செயல்பட்டு வருகிறது.

இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாகத் தமிழ்நாட்டில் தான் கலைஞர் ஆட்சியில் 1971ஆம் ஆண்டு திட்ட ஆணையம் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகிறது. இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் நேதாஜி, நேரு போன்ற தலைவர்கள் விடுதலைக்குப் பின் சோசலிசத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்ட ஆணையத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

1930ஆம் ஆண்டில் தனது தந்தை மோதிலால் நேருவுடன் சோவியத் பயணம் மேற்கொண்ட ஜவகர் லால் நேரு, திட்டமிடல் கொள்கை சோவியத் ஒன்றி யத்தில் வெற்றி பெற்று வருவதை அறிந்து, இக்கொள் கையை இந்தியாவில் பின்பற்ற வேண்டுமென விரும்பி னார். இதே நிலையில், இந்திய முதலாளிகளும் பல திட்ட அறிக்கைகளைக் கருத்துப் பரிமாற்றங்களுக்காக ‘மும்பைத் திட்டம்’  (Bombay Plan)  என்ற பெயரில் முன்வைத்தனர். இத்தகைய பல்வேறு மாறுபட்ட கருத்துகள், திட்டமிடல் கொள்கை பற்றி 1930-லிருந்து 1950 வரை தொடர்ந்த வண்ணம் இருந்தன. இத்தகைய பின்னணியில்தான் 1950ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பிரதமர் நேரு நடுவண் அரசின் திட்டக்குழுவை நாடாளுமன்றச் சட்டம் வழியாக உருவாக்கினார்.

வேளாண்மை, தொழில், கட்டமைப்புத் துறை, அறிவியல் தகவல் துறை, சாலை, கப்பல், வானூர்தி துறைகளில் வளர்ச்சி இலக்குகளை இந்தியா எட்டு வதற்குப் பொதுத்துறை வழிகாட்டுதலோடு பொருளா தாரக் கொள்கைகள் வகுக்கப்பட்டன.

இதனடிப்படையில்தான் நேரு காலத்தில் முதல் மூன்று ஐந்தாண்டுத் திட்டங்கள் 1951-56, 1956-61, 1961-66 ஆகிய ஆண்டுகளுக்கு முன்மொழியப் பட்டன. முதலாம் ஐந்தாண்டுத் திட்டம் வேளாண்மை, நீர்ப்பாசனம், கட்டமைப்புத் துறைகளுக்கு முன்னுரிமை அளித்தது. இரண்டாம் ஐந்தாண்டுத் திட்டம் கனரகத் தொழில்களுக்கும், பொதுத் துறை சார்ந்த பெருந் தொழில்களுக்கும் முன்னுரிமை அளித்தது.

மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டம் முடிவதற்கு முன்பே நேரு மறைந்துவிட்டார். 1964-65ஆம் ஆண்டுகளில் இந்தியா கடும் வறட்சியையும், உணவுப் பஞ்சத்தை யும் எதிர்நோக்கியது. ஐந்தாண்டுத் திட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. பின்பு ஆண்டுத் திட்டங்களாக (Annual Plans)  அறிவிக்கப்பட்டன. வேளாண் தொழிலையும், ஊரகத் தொழில்களையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல் போனதால் மூன்றாம், நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலங்களில் உணவுப் பற்றாக் குறையும், வறுமையும் தலைதூக்கின.

இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பெரும் பின்னடைவை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு உள்ளானது. நேரு வின் மறைவிற்குப் பிறகு, நடுவண் அரசுத் திட்டமிடல் கொள்கையை முன்னிலைப்படுத்தாமல் மறைமுக மாகப் பின்னுக்குத் தள்ளியது. 

மேலும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்களுக்கும், ஓய்வுப் பெற்ற உயர் அலுவலர்களுக்கும், அரசுக்கு ஆலவட்டம் சுற்றும் பொருளாதார வல்லுநர்களுக்கும் வாய்ப்பளிக்கும் ஒரு கருவியாகத் திட்டக்குழுவை மாற்றிவிட்டது என்று பல ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும் 1969ஆம் ஆண்டு வரை நடுவண் அரசின் திட்டக்குழு எவ்விதப் பொருளாதார சமூக அளவுகோல்களையும் (Criteria)  கடைப்பிடிக்காமல் தன்னிச்சையாக மாநில அரசு களுக்கு நிதியைக் கொடுக்கும் மேலாதிக்க நிதி அமைப் பாக மாறத் தொடங்கியது.

மும்பைப் பல்கலைக்கழகப் பொருளாதாரப் பேரா சிரியர் காட்கில், மாநில நிதி ஒதுக்கீடு செய்யும் முறை யில் நெறிகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, திட்டக்குழு அரசியல் சார்பாக மாறிவருகிறது என்று விமர்சனம் செய்தார், 1969ஆம் ஆண்டிற்குப் பிறகு 60 விழுக் காடு மக்கள் தொகை அடிப்படையிலும், மற்ற 40 விழுக்காடு மக்கள் தொகை மாநிலங்களில் காணப் படும் பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாநிலங் களுக்கு நிதி உதவி, அளிக்கப்பட்டது. இம்முறையைத் தான் காட்கில் அளவுகோல் முறை (Gadgil Formula)  என்று குறிப்பிடுகிறார்கள்,

திட்டம் சார்ந்த அறிவுரைகளையும் பரிந்துரைக ளையும் அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டக்குழு, அரசமைப்புச் சட்ட விதியின்படி இயங்கும் நிதிக்குழு வின் அதிகாரத்தில் மெல்ல, மெல்ல நுழைந்தது. மேலும் திட்ட உதவி என்ற பெயரில் (Plan Assistance)  மாநிலங் களுக்கு நடுவண் அரசு 80 விழுக்காடு கடனகாவும், 20 விழுக்காடு மானியமாகவும் திட்டக்குழு பரிந்துரை யின் அடிப்படையில் வழங்கியது. 2010ஆம் ஆண்டில் கடன் 70 விழுக்காடாகவும், மானியம் 30 விழுக்காடா கவும் மாறியது.

இதன் காரணமாக 5வது, 6வது திட்டக்காலங்களில் மாநிலங்களைக் கடன்காரர்களாகத் திட்டக்குழு மாற்றிவிட்டது. வட்டிச் சுமையைத் தாங்க முடியாத பீகார், ஒரிசா, இராஜஸ்தான் போன்ற மாநி லங்கள் நிதிக்குழுவிடம் முறையிட்டன.

6வது, 7வது நிதிக்குழுக்களின் பரிந்துரைகளில் மாநிலங்களின் நிதிநிலைமைகளுக்கு ஏற்ப வட்டி வீதம் குறைக்கப்பட்டது; அல்லது முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டது. நடுவண் அரசின் திட்டக்குழு எத்த கைய நெறியற்ற, முறையற்ற செயலைக் கடை பிடித்தது என்பதற்கு இது ஒரு சான்றாகும்,  நடுவண் அரசின் இரண்டு குழுக்கள் மாநிலங்களுக்குக் கொடுப் பதும், மற்றொரு அமைப்பு வட்டியைத் தள்ளுபடி செய் யும் நிதி திருவிளையாடல்களைச் செய்து, கூட்டாட்சி நிதியத்தைக் (Federal Finance)  கேவலப்படுத்தியது.

2011ஆம் ஆண்டிற்குப் பிறகு சந்தையில் கடனை வாங்கிக் கொள்ளுங்கள் என்று மாநில அரசுகளுக்குத் திட்டக்குழுக் கூறிவிட்டது. 2011ஆம் ஆண்டிற்குப் பிறகு 30 விழுக்காடு மானியத்தை மட்டும்தான் திட்டக்குழு வழங்கி வருகிறது.

1950ஆம் ஆண்டிலிருந்து நடுவண் அரசின் நிதியா தாரங்களை மாநில அரசுகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் நிதி ஆணையம் (Finance Commission) இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 280ன்படி அமைக் கப்பட்டு இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவதால் நல்ல வேளையாக நிதிக்குழுவுக்கு விடுமுறையை நடுவண் அரசு இதுவரை அறிவிக்கவில்லை.

1951 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நிதிக்குழு செயல்படு வதால் தான், 12ஆம் ஐந்தாண்டுத் திட்டம் தற்போது நடைமுறையில் இருக்கும்போது, 14ஆவது நிதிக்குழு ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ஒய்.வி. ரெட்டி தலைமையில் பணிகள் தொடங்கப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.

மேற்கூறிய உண்மைகள் திட்டக்குழு அவ்வப் போது முடக்கப்பட்டு செயலிழந்த நிலையைச் சுட்டுகிறது. குறிப்பாக நேரு காலத்திலேயே தனது எல்லையை மீறி, வரம்பை மீறிச் செயல்படத் தொடங்கியது. குறிப்பாக, அரசமைப்புச் சட்டத்தின்படி அமைக் கப்பட்ட நிதிக்குழுவின் எல்லைக்குள் புகுந்து மாநில அரசுகளுக்கு நிதிப்பகிர்வை அளிக்கும் அதிகாரத்தைத் தன்னிச்சையாக எடுத்துக்கொண்டது. இதை இரண்டாவது நிதிக்குழுவின் தலைவராக இருந்த கே. சந்தானம் மிகக் கடுமையான முறையில் தனது அறிக்கையில் விமர்சனம் செய்தார்.

1991க்குப் பிறகு தனியார்மயம், தாராளமயம், உலகமயத் திட்டங்களை இந்தியா ஏற்றுக்கொண்ட பிறகு திட்டக்குழு ஒப்புக்குச் சப்பாணி ஆட்டத்தைத் தொடங்கியது. 2004, மன்மோகன் சிங்காலத்தில் திட்டக்குழுவின் துணை ஆலோசனைக் குழுவில் வெளிநாட்டு முதலாளித்துவ முகவர்களும் இடம்பெற்றார்கள். இதை இடதுசாரிக் கட்சிகள் கடுமை யான முறையில் எதிர்த்ததால் திட்டக்குழுவின் தலைவர் மன்மோகன் சிங் கைவிட்டுவிட்டார். ஆனால் திட்டக் குழுவின் துணைத் தலைவர் அலுவாலியா முதலாளித் துவத்தின் முகவராகவே செயல்பட்டார்.

நேரு காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டக்குழு நிறம் மாறி முதலாளித்துவத்தின் கைப்பாவையாகச் செயல்படத் தொடங்கியது.  திட்டக்குழுவின் முதன்மையான பணி களில் ஒன்று, மாநில அரசுகளின் ஆண்டுத் திட்டங் களைப் பிரதமர் தலைமையில் கூடி முதல்வர்கள் முன்னிலையில் ஒப்புதல் அளிக்கும் நிகழ்வாகும்.

குறிப்பாக, 1983இல் என்.டி. ராமராவ் ஆந்திர மாநிலத் தின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு, தேசிய வளர்ச்சிக்குழு கூட்டத்திற்குச் சென்றார். ஐந்தாண்டுத் திட்டங்கள் பற்றிய விவாதங்கள் நடந்தபோது, இதில் ஒன்றும் புதுமை இல்லை என்று அதிர்ச்சியுற்றார். மாநில அரசு, நடுவண் அரசின் உயர் அலுவலர்கள் கூடி நடுவண் அரசின் தலைமை அமைச்சர், மாநில முதல்வர்களின் முன்னிலையில் நடத்தும் புள்ளிவிவர விளையாட்டு என்று கருதினாரோ என்னவோ? உடனடியாக இந்திராகாந்தியைப் பார்த்துத் திட்டக்குழுவினு டைய 33 ஆண்டுகாலச் செயல்பாடுகளும், நடை முறைகளும் ஏழை மக்களுக்கு எள்ளளவும் பயன் அளிக்கவில்லை என்று கூறி ‘பாம்பும் சாகவில்லை; கொம்பும் முறியவில்லை’ என்று குறிப்பிட்டார்.

இதன் விளைவு, அடுத்து ஒரு மாதத்திலேயே ஆந்திர முதல்வர் பதவியிலிருந்து என்.டி.ஆர். விலக்கப்பட்டார். 7 உறுப்பினர்களைக் கொண்ட போட்டி தெலுங்குதேசக் கட்சியை உருவாக்கி, பா°கர் ராவ் என்கிற போலி முதலமைச்சரைiயும் சில நாள்களுக்கு உருவாக்கி னார், காங்கிரசு அரசின் மக்கள் விரோத சாதனை களில் இது ஒன்றாகும்.

திட்டக்குழு மாநிலங்களுக்கு நிதியுதவி என்ற பெயரில் கடனுதவியைத்தான் அதிகமாக அளித்து வருகிறது. குறிப்பாக மானியங்களைத் திட்டக்குழு மாநில அரசுகளுக்கு வழங்குவதற்கு அரசமைப்புச் சட்ட விதிப்படி அதிகாரம் இல்லை என்று சிலர் சுட்டிய போது, அரசமைப்புச் சட்டத்தின் 282வது பிரிவைத் தனக்குச் சாதகமாக்கி மானியங்களை வழங்கத் தொடங்கியது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 282வது பிரிவு, வெள்ளம், வறட்சி, இயற்கைப் பேரிடர்கள் தோன்றும்போது, நடுவண் அரசு, மாநில அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள் உடனடித் துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடுவதற்கு நிதியை மானியமாக அளிப் பதற்கு உருவாக்கப்பட்ட நிதி நிர்வாக முறையாகும். இங்கு அரசு என்பது மேற்கூறிய மூன்று அரசு களையும் குறிக்கிறது என்று அரசமைப்புச் சட்ட அறிஞர் டி.டி. பாசு குறிப்பிட்டுள்ளார். ஆனால், நடுவண் அரசு இந்த விதியைத் தன்னிச்சையாக எடுத்துக் கொண்டு கூட்டாட்சி இயலைப் புதைகுழிக்குள் தள்ளியது.

மேலும், நடுவண் அரசு, மாநில அதிகாரப் பட்டிய லில் உள்ள பல திட்டங்களை மறைமுகமாகப் பறித்துக் கொண்டு அவற்றை நடுவண் அரசின் அமைச்சகத் திட்டங்களாக 1967ஆம் ஆண்டு முதல் அறிவிக்கத் தொடங்கி, இன்று 195 திட்டங்களாக உயர்ந்துள்ளது. இதனால் நிதியாதாரங்கள் வீணடிக்கப்படுகின்றன. முதன்மையான திட்டங்களுக்கு நடுவண் அரசின் அமைச்சகம் நிதி அளித்தால் போதும் என்று நடுவண் அரசின் உயர் அலுவலர் சதுர்வேதி தலைமையில் செப்டம்பர் 2011ஆம் ஆண்டு அமைந்த குழு ஒரு அறிக்கையையும் அளித்துள்ளது.

புஜங்கராவ் என்ற பொருளாதார வல்லுநர் 2007ஆம் ஆண்டு புள்ளி விவரங்களை ஆய்வு செய்து நிதிக்குழு வழியாகவும், திட்டக்குழுவின் வழியாகவும் நடுவண் அரசின் அமைச்ச கங்கள் மாநில அரசுகளுக்குத் தனது திட்டங்கள் வழியாக அளிக்கப்படும் நிதி அளவைக் கணக்கிட்டுள்ளார். மொத்த உற்பத்தியில் மாநில அரசுகளுக்கு 2.33 விழுக்காடு நிதியாதாரங்களை நடுவண் அரசு அளிக்கிறது என்ற உண்மையை வெளிக்கொணர்ந்தார். இவ்வாறு குறைந்த நிதியை மாநிலங்களுக்கு அளிப் பதற்காக நடுவண் அரசின் பெரிய நிர்வாகச் செலவு மூலம் விரயம் செய்யப்படுகிறது. கட்சிகளுக்கு அப்பால் எல்லா மாநில அரசுகளும் நடுவண் அரசு கடைப் பிடிக்கும் மேற்கூறிய அளவுகோல்களை முழுமையாக எதிர்க்கின்றன.

1977இல் மொரார்ஜி தேசாய் தலைமையில் நடுவண் அரசு அமைந்தபோது திட்டக்குழுவிற்குத் துணைத்தலைவைராகப் பேராசிரியர் லக்டவாலா என்பவரை நியமித்தார். சிறந்த அறிஞரான லக்ட வாலா 1950-1977 வரை கலப்புப் பொருளாதாரம் என்ற அடிப்படையில் பொதுத்துறையும், தனியார் துறையும் இயங்கினாலும், தனியார் துறை சமூகப் பொறுப்புணர்வோடு செயல்படவில்லை என்பதை 6வது ஐந்தாண்டுத் திட்டத்தின் அறிக்கையில் கோடிட் டுக் காட்டினார். நகர்ப்புறம் சார்ந்தவர்களுக்கே திட்டத் தின் பலன்கள் எட்டுவதால், ஊர்ப்புறங்களில் வாழும் மக்கள் பலன்கள் பெறும் வகையில் திட்டங்களை வடிவமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

1980இல் மீண்டும் இந்தியத் தலைமை அமைச்சர் பொறுப்பை ஏற்ற இந்திராகாந்தி, சனதா ஆட்சியில் உருவாக்கிய ஆறாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையை முழுமை யாகப் புறந்தள்ளினார். 1980லிருந்து 1985ஆம் ஆண்டு வரைக் மற்றொரு 6வது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கையை உருவாக்கினார். ஒரே ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் இரண்டு திட்ட அறிக்கைகளை உரு வாக்கியது பெருமையா? அல்லது தேசியத் திட்ட விளையாட்டா? பொருளாதார அடிப்படையை மாற்றக் கூடிய ஒரு நிறுவனத்தை இதுபோன்று அவமானப் படுத்திய நிகழ்வை எந்த நாட்டின் நிர்வாகத்திலும் காண இயலாது.

கடந்த 11ஆம் ஐந்தாண்டுத் திட்டக்காலத்தில் (2007-12) தமிழ்நாடு செய்த திட்டச் செலவு 92 ஆயிரம் கோடி ரூபாயாகும். இதில் நடுவண் அரசின் பங்கு 10 விழுக்காட்டிற்கும் குறைவே. இந்த 10 விழுக் காட்டுக் குறைந்த அளவு நிதியைப் பெறுவதற்காக தில்லிக்கு நமது மாநில உயர் அலுவலர்கள் எத்தனை முறை விமானப் பயணம் செய்திருப்பார்கள் என்ற புள்ளிவிவரத்தை எடுத்தால், இந்தத் திட்ட உதவி அவசியம்தானா என்பது புலப்படும். மேலும், நடுவண் அரசின் ஐந்தாண்டுத் திட்டங்கள் உருமாற்றம் பெற்று வருகின்றன.

சோசலிச சமுதாயம் அமைப்பதற்கு உருவாக்கப்பட்ட திட்ட அமைப்பு இக்காலக்கட்டத்தில் முதலாளித்துவத்திற்குப் பணிபுரியும், துணைபுரியும் அமைப்பாகவும் மாற்றப்பட்டுவிட்டது. நடுவண் அரசு - மாநில அரசுகள் அமைத்த பல வல்லுநர் குழுக்கள், நடுவண் அரசு - மாநில அரசு உறவுகளில் ஆக்கப் பூர்வமான மாற்றங்கள் உருவாவதற்குப் பல பரிந்து ரைகளை வழங்கியுள்ளன. மாநில அரசுகளின் உணர்வுகளையும் பெரும்பான்மையான ஏழை மக்களின் தேவைகளையும் உணர்ந்து செயல்படும் ஒரு புதிய அமைப்பு உருவாகுமா?

நேரு காலத்தில் திட்டக்குழு விரைந்து ஓடியது. இந்திராகாந்தி காலத்தில் விரைந்து நடந்தது. ராஜிவ் காந்தி காலத்தில் திட்டக்குழு மெதுவாக நடைபோடத் தொடங்கியது. நரசிம்மராவ் காலத்தில் ஆழ்நிலை உறக்கத்திற்குச் சென்று விட்டது. எனவே தலைமை அமைச்சர் நரேந்திர மோடி திட்டக்குழுவைக் கல்லறைக்கு எடுத்துச் செல்ல விரும்புகிறார்.

Pin It