நான் பிரதமர் ஆனவுடன் வெளிநாட்டில் பதுக்கியுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 இலட்ச ரூபாயைப் போட்டுவிடுவேன் - என்று முன்பு நாடகமாடினார் மோடி.

 என்னால் வெளிநாட்டுக் கருப்புப் பணத்தைக் கொண்டு வரமுடியவில்லை. ஒரே நாளில் கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்று 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாதவைகளாக அறிவித்தார் இன்று.

கருப்புப் பணம் என்பது பதுக்கி வைக்கப்படும் பணம் மட்டும் இல்லை. நிலம், தங்கம், அறக்கட்டளை, போதைப் பொருள் என வெவ்வேறு வடிவங்கள் அதற்கு உண்டு.

கார்ப்பரேட் முதலாளிகளின் நலம் காக்க, இவைகளில் கைவைக்காமல் 500-1000 ரூபாய்களைத் தடைசெய்து இருப்பது மோடியின் வேலைகளுள் ஒன்று.

இதன் விளைவு சிறு தொழில்கள், கடைகள், சிறு வணிகம், போன்றவைகளிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

500-1000 ரூபாய்களைத் தடைசெய்வதாக இருந்தால், மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முன்கூட்டியே அதற்கென ஒரு திட்டம் தயாரித்து நடைமுறைப் படுத்தியிருக்க வேண்டும்.

அதை விட்டுவிட்டுத் தடாலடியாகத் தடை செய்ததனால் மக்கள் படும் வேதனை செல்லி மாளாது.

செல்லாத பணத்தை மாற்ற வங்கிக்குச் சென்றால், அங்கு கூட்டம் அலைமோதிக்கொண்டு இருக்கிறது.

பல ஏ.டி.எம் இயந்திரங்களில் பணமே இல்லை.

ரிசர்வ் வங்கி பணம் கையிருப்பில் உள்ளது என்று அறிவிக்கிறது. போதிய பணம் வரவில்லை என வங்கி வட்டாரங்கள் சொல்கின்றன.

மொத்தப் பணத்தாளில் 85 விழுக்காடு 500 மற்றும் 1000 ரூபாய்கள். எஞ்சிய 15 விழுக்காடுதான் 10-20-100 ரூபாய்கள்.

பொதுவாக ஏ.டி.எம் இயந்திரத்தில் 500 மற்றும் 1000 ரூபாய்கள் என்றால் 20 இலட்சத்து 20 ஆயிரம் வரை நிரப்ப முடியும்.  

இப்போதைய பணத்தடையால் வெறும் 100 ரூபாய் நோட்டுக்கள் 2 இலட்சத்து 20 ஆயிரம் மட்டுமே நிரப்ப முடியும். இந்தத் தொகை மக்களுக்கு போதுமானதாக இல்லை.

அத்துடன் ஒரு அடையாள அட்டை காட்டி ஒரு நாளைக்கு 4000 ரூபாய் மட்டுமே புதிதாக மாற்ற முடியும் என்கிறது ரிசர்வ் வங்கி.

அப்படியானால் கூடுதலாக இருக்கும் செல்லாத பணத்தை எங்கே போய் மாற்றுவது? ஒவ்வொறு நாளும் பணத்தை மாற்றுவதற்கு அலைந்து கொண்டிருக்க முடியுமா-?

திடீரென 500-1000 ரூபாய்கள் செல்லாது என ஒரே இரவில் தடைசெய்ததால் விழிபிதுங்கிப் போனார்கள் மக்கள்.

திருநெல்வேலியில் 500-1000 ரூபாய்களை கையில் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூட வழியில்லாமல் கிடந்த கல்லூரி மாணவர்கள், கூலித்தொழிலாளர்கள் போன்றொருக்கு ஒரு உணவு விடுதி கருணை உணவாக இலவச உணவு கொடுத்திருக்கிறது. ஏறத்தாழ இதுவும் ஒரு கவுரவமான பிச்சைதான்.

ஆற்றாது அழுது வருகின்ற மக்களின் கண்ணீர் நெறியற்ற அரசை அழித்துவிடும் என்பதை இந்த கோமாளி துக்ளக் பா.ஜ.க - மோடி அரசு உணர வேண்டும்.

Pin It