அன்று தங்கள் ஒரே மகள் நிர்மலா அனுப்பிய மின்னஞ்சலைப் படித்ததும், அவளுடைய பெற்றோர்கள் பார்த்தசாரதியும், நாகலட்சுமியும் அதிர்ச்சி அடைந்தார்கள். அத்தனைக்கும் பார்த்தசாரதி பழைமையில் ஊறியவர் அல்ல. முற்போக்கு மனப்பான்மை கொண்டவர்தான். அதனால் தான், தன் நண்பர்களின், சுற்றத்தினரின் எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாது நிர்மலாவை மருத்துவப் படிப்பு படிக்க ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ  (Edinburg)  பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார்.

நிர்மலா மருத்துவப் படிப்பு படிப்பதற்கான முழுத் தகுதியைப் பெற்று இருந்தும் “நன்கொடை” அளிப்பதற்குப் போதிய பணம் இல்லாததின் காரணமாக, இங்கு, தமிழ்நாட்டிலும், இந்தியாவில் வேறு எங்கும் அவளுக்கு இடம் கிடைக்கவில்லை.

ஆனால் விளையாட்டாக விண்ணப்பம் செய்து வைத்த எடின்பரோ பல்கலைக்கழகத்தில், கல்வி உதவித் தொகையுடன் படிக்க இடம் கிடைத்தது. ஒரு பெண்ணைத் தனியாக மேல்நாட்டிற்குப் படிக்க அனுப்ப வேண்டாம் என்று சுற்றத்தினர் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்கள். மருத்துவக் கல்வியில் மகளின் ஆர்வத்தைக் கண்ட பார்த்தசாரதி, அனைவருடைய எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு அனுப்பி வைத்தார்.

அப்படிப்பட்டவர்தான், தன் மகள் அனுப்பிய மின்னஞ் சiலாப் படித்து அதிர்ச்சி அடைந்தார். ஒன்றுமில்லை, நிர்மலா தன்னுடன் படிக்கும் வின்சென்ட் பூலே  (Vincent Poole)  என்ற ஒரு ஆங்கிலேயனைத் திருமணம் செய்து கொள்ள உத்தேசித்து இருப்பதாக அந்த மின் னஞ்சலில் தெரிவித்து இருந்தாள். பையன் மிகவும் புத்திசாலி என்றும், பண்புள்ளவன் என்றும், இருவரும் சேர்ந்து பணியாற்றினால் பல சாதனைகளைச் செய்ய முடியும் என்றும் தெரிவித்து இருந்தாள்.

இணையதளத்தில்  இருந்து, தொலைப்பேசியில் பேசுவதற்குச் சிக்கனமான வழி ஏற்பட்ட பிறகு, மின் னஞ்சல் ஒரு வசதி குறைந்த சாதனமாக மாறிவிட்டது. ஆகவே அவர்கள் கணினி, தொலைப்பேசி வழியாகப் பேசுவதுதான் பழக்கம். ஆனால் இதுபோன்ற செய்தி களை நேருக்கு நேராகச் சொல்வதைவிட மின்னஞ் சல் மூலமாகத் தெரிவித்தால்தான், இடைமறிப்பு இல் லாமல் முழுமையான செய்திகளைத் தெரிவிக்க முடியும் என்று நினைத்து நிர்மலா தனது பெற்றோர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருந்தாள்.

முழுமையான செய்திகளைத் தெரிந்து கொண்ட நிர்மலாவின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலை நாட்டினர், ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பாட்டை அறியாதவர்கள் ஆயிற்றே! அப்படிப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவனைத் திருமணம் செய்து கொண்டால் தங்கள் மகளின் வாழ்விற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது என்று மிகவும் மருண்டு போனார்கள். அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு அவர்களுக்கு ஒரு நாள் பிடித்தது.

இதைப்பற்றி மற்றவர்களுடன் விவாதிக்க அஞ்சி னார்கள். பெண்ணைத் தனியாக மேல்நாட்டுக்கு அனுப்பாதே என்று சொன்னதைக் கேட்காததற்கு இந்த மூக்கறுப்பு வேண்டியதுதான் என்று கேலி செய்வதை எப்படி எதிர்கொள்வது என்று புரியாமல் திணறினார்கள்.

இவ்வாறு திணறிக்கொண்டு இருந்தபோதுதான் தங்களுடன் அன்பாகவும், தங்களுக்கு எப்போதும் ஆதரவாகவும் இருக்கும் வடிவழகியின் நினைவு வந்தது.

வடிவழகி நாகலட்சுமியின் தமக்கையின் மகள். நிர்மலாவைவிடப் பத்து வயது மூத்தவள். இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் போலவே பழகி வந்துள்ள னர். வடிவழகி திருமணமாகி இப்பொழுது அமெரிக்கா வில்h சிகாகோ நகரில் வாழ்ந்து வருகிறாள். அவளு டைய கணவர் வேல்முருகன் மென்பொருள் பொறி யாளராக வேலைக்குச் சேர்ந்தவர், இப்பொழுது தனியாக ஆலோசகராகத் (Consultant)  தொழில் செய்து கொண்டு இருக்கிறார். வடிவழகி கணவருக்குத் தொழிலில் சரிசமமாகப் பங்கு கொள்கிறாள். அவர் களுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவளிடம் இதைப் பற்றிப் பேசினால் தங்களுக்கும் நிர்மலாவிற்கும் நல்ல யோசனைகளைக் கூறுவாள் என்று தோன்றியது. உடனே இருவரும் வடிவழகியுடன் கணினி மூலம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டார்கள். விஷயம் முழுவதையும் கேட்டுக் கொண்ட வடிவழகி, தான் நிர்மலாவுடன் பேசி இரண்டு, மூன்று நாட்களில் விவரம் கூறுவதாகக் கூறினாள்.

அதன்படி வடிவழகி நிர்மலாவுடன் தொடர்பு கொண்டு விசாரித்தாள். நிர்மலா தன்னுடைய அறிவுத் தேடலுக்கு வின்சென்ட் பொருத்தமானவன்; துணை யாக இருப்பான் என்று கூறினாள். வடிவழகி “எல்லார் கிட்டேயும் சொல்ற மாதிரி எங்கிட்டேயும் சொல்லாதே. வேறெ காரணம் இல்லையா?” என்று கேட்கவும், “வேறெ காரணம்னா?” என்று எதிர் வினா தொடுத் தாள்.

“இல்லே! நீ நம்ம தமிழ்நாட்டு மக்களுக்கு சர்வீஸ் செய்யணும்னு சொல்லிட்டே இருப்பியே! அதுக்குத் தமிழ்நாட்டுக்காரனக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தானே முடியும்? இப்படி ஒரு வெள்ளைக்காரனைக் கல்யாணம் பண்ணிக்கிட்டா அது எப்படி முடியும்? அவனும் உன்னோட தமிழ்நாட்டிலே செட்டில் ஆகுறதுக்கு ஒத்துக்கிட்டானா?”

“இல்லே! தமிழ்நாட்டிலே மட்டும் இல்லே, இந்தியா பூராவுமே மெடிகல் ஃபீல்ட் வியாபாரமாய் போயிருச்சி. அதனாலெ அங்கே நாலெட்ஜை டெவலப் பண்ண முடியாது. இங்கே ஹெல்த் சர்வீ° பூராவும் ஃபிரீயா இருக்கு. அப்படி இருந்தாத்தான் மெடிக்கல் நாலெட்ஜை டெவலப் பண்ண முடியும். அதனாலெ நான் பிரிட்ட னை விட்டுவரமாட்டேன்.”

“அதுக்காக நீ ஒரு வெள்ளைக்காரனைத்தான் கல்யாணம் பண்ணிக்கணுமா? உங்க அப்பா, அம்மா ரொம்ப ஃபீல் பண்றாங்க. ஒரு தமிழனைக் கல்யா ணம் பண்ணிக்கிட்டாலும் பிரிட்டன்லேயே இருக்க லாமே? யாரு வேணாம்னு சொல்லப் போறாங்க?”

“வின்சென்ட் மாதிரி என்னோட அறிவுத்தேடலுக்கு ஒத்து வர்ற பையன் யாராச்சும் இருப்பாங்கன்னு எனக் குத் தோணலே. அதுவும் இல்லாம இந்தியாவிலே ஜெண்டர் பயஸ் ரொம்ப அதிகம். பெண்ணுன்னாலே எளக்காரமாப் பார்க்குறது எனக்குப் பிடிக்கவே இல்லே. இந்தியாவிலே இதைத் தடுக்க முடியாது.”

“சரி! நீ ஒரு தமிழனைக் கல்யாணம் பண்ணிக் கிட்டாலும் பிரிட்டன்லேயே இருந்தா என்ன பிரச்சினை வரப்போகுது?”

“அக்கா! நீ அமெரிக்காவிலே தானே இருக்கே? உனக்குப் பிரச்சினையே இல்லியா?”

“இல்லியே! இங்கே நான் சுதந்தரமா இருக்கேன். எங்க குழந்தையக் கூட நானும் அவரும் சமமாவே பாத்துக்குறோம். இந்தியாவிலே இருந்திருந்தா நான் மட்டும் தான் பார்த்துக்க வேண்டி இருந்திருக்கும். இங்கே அப்படி இல்லே.”

“அதனாலே எல்லாம் சரியா இருக்குன்னு சொல்றியா?”

“ஆமா!”

“சரி! நீ ஒரு தடவை ஒரு வாரம் ஷார்ட் விசிட்டா சென்னைக்கு வந்தியே! அப்போ அந்த ஒரு வாரத்திலே திருச்சியிலே இருக்குற உன் மாமனாரோட அம்மாவை ஏன் பார்க்கப் போகலன்னு பிரச்சினையைக் கிளம்பி னாங்க இல்லே?”

“ஆமா! அதுக்கு இப்ப என்னடி வந்தது?”

“சென்னையிலே இருக்கிற உன் மாமியாரோட அம்மாவை ஏன் பார்க்கலேன்னு யாராச்சும் கேட்டாங் களா?”

“என்னடி! சம்பந்த சம்பந்தம் இல்லாமெ உளர்றே?”

“ம்! நான் ஒண்ணும் உளறல்லே! உன் மாமி யாரையும் மாமனாரையும் சமநிலையிலே தானே பார்க்கணும்? அப்படி இருக்குறப்போ பக்கத்திலே இருக்குற மாமியாரோட அம்மாவை ஏன் பாக்க லேன்னு கேக்காதவங்க, முந்நூறு கிலோ மீட்டர் தாண்டி உள்ள மாமனாரோட அம்மாவ ஏன் பாக்க லேன்னு கேக்குறது ஆணாதிக்க மனோபாவம் இல்லே? ஆனா இது சர்வ சாதாரணமாத் தோணற அளவுக்கு நம்ம இரத்தத்திலே பெண்ணடிமைத்தனம் ஊறிப் போயிருக்குது. இது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலே. வின்சென்ட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டா இந்த மாதிரிப் பிரச்சனைங்க இருக்காது.”

“நானும் உன்னெ மாதிரிப் பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்கிறவ தான். ஆனா உன்னெ மாதிரி விசித்திரமா நான் நெனச்சுப் பார்க்கலே” என்று வடிவழகி கூறிக் கொண்டு இருக்கும் பொழுதே, நிர்மலா இடைமறித்து “சர்வ சாதாரணமாத் தோண வேண்டிய விஷயம் உனக்கு விசித்திரமாப்படுது. அதுவும் பெண்ணடிமைத் தனத்தை எதிர்க்கிறதா நெனச்சுக்கிற உனக்கே அப்படித் தோணுதுங்குறது தான் விசித்திரமே தவிர நான் சொல்ற துலே எந்த விசித்திரமும் இல்லே” என்று கூறினாள்.

தன்னுடைய பேச்சுக்குச் சரியான பதிலடி கொடுத்த தன் ஒன்றுவிட்ட தங்கையின் சாமர்த்தியத்தை எண்ணி ஒருபுறம் வியப்பும், இன்னொருபுறம் மகிழ்ச்சியும் அடைந்தாள். அவள் சிறிது இடைவெளிவிட்டு “சரி! நான் பேச வந்த விஷயம் திசைமாறி வேறு விஷயத் தைப் பேசிட்டு இருக்கேன். உங்க அப்பாவும் அம்மா வும் ரொம்ப ஷாக் ஆகி இருக்காங்க” என்று கூறிக் கொண்டு இருக்கும்போதே, “அக்கா! நீ அவங்களெ எப்படியாச்சும் கன்வின்° பண்ணுக்கா” என்று நிர்மலா கேட்டுக் கொண்டாள். வடிவழகியும் “சரிடி! பார்க்குறேன். இந்தியாவிலே இருக்கிற வரைக்கும் அவங்க மெண்டா லிடியெ மாத்த முடியாது. ஒரு ஆறு மாசம் இங்கே வந்து இருக்கச் சொல்றேன். இங்கே இருக்குற பழக்கவழக் கங்ளைப் பாத்த பெறகு அவங்க மனசை மாத்த ட்ரை பண்றேன். அதுவரையிலும் அவங்க மன அமைதிக் காக, படிப்பு முடிஞ்ச பிறகு கல்யாணத்தைப் பத்தி யோசிக்கலாம்னும், அதுவரைக்கும் அதைப் பத்தி யோசிக்க வேண்டாம்னு உனக்குச் சொல்லி இருக்குறதா சொல்லிடறேன். நீயும் அப்படியே அவங்களுக்கு ஒரு மெயில் அனுப்பிச்சிடு” என்று கூறினாள்.

படிப்பு முடித்த பின் திருமணம் பற்றி யோசிக்க லாம் என்ற செய்தியைத் தாங்கிய மின்னஞ்சலை வடிவழகியிடம் இருந்தும், நிர்மலாவிடம் இருந்தும் பெற்ற பார்த்தசாரதியும் நாகலட்சுமியும் முழு மன அமைதியை அடையவில்லை. மறுநாள் வடிவழகி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நிர்மலாவுக்குத் தகுந்த அறிவுரை கூறி இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாகத்தான் படிப்பு முடிந்த பிறகு, அன்றைய சூழ்நிலையைப் பொறுத்துத் திருமணம் பற்றிய முடிவு எடுப்பது என்றும் முடிவு எடுத்து இருப்பதாகவும் கூறினாள். வடிவழகியுடன் பேசிய பிறகு, பார்த்தசாரதி யும் நாகலட்சுமியும் சிறிது நம்பிக்கை அடைந்தார்கள். அவர்களுடைய மனம் சீக்கிரம் படிப்பு முடிந்து அவள் இந்தியாவிற்குத் திரும்பிவிட வேண்டும் என்று விரும்பியது.

ஒரு வாரம் கழித்து வடிவழகியும் வேல்முருகனும் நிர்மலாவின் பெற்றோர்களை ஸ்கைப் (Skype) மூலம் கணினியில், காணொளியில் (Video)  பேசினார்கள். சிறிது நேரப் பேச்சுக்குப் பின் அவர்களை அமெரிக்கா விற்கு வரும்படி அழைத்தார்கள். இந்த அழைப்பைச் சற்றும் எதிர்பாராத பார்த்தசாரதியும் நாகலட்சுமியும் சரியாக மறுமொழி அளிக்க முடியாமல் “என்ன விஷயம்?” “பரவாயில்லை” என்பதைப் போன்று ஒட்டுதல் இன்றிப் பேசினார்கள். ஆனால் வடிவழகியும் வேல்முருகனும் விடாமல், அவர்களுடைய மனம் அமைதி அடையும் என்றும், சுற்றுப்பயணம் செய்தாலும் வேற்று இடத்திற்குச் சென்றாலும் புத்துணர்ச்சி கிடைக்கும் என்றும் வற்புறுத்தியதின் பேரில் ஒப்புக் கொண்டார்கள். கடவுச்சீட்டு (Passport),  நுழைவு இசைவு (Visa) , பயணச்சீட்டு (Ticket) ஆகியவற்றைப் பெற அவர்களுக்கு நான்கு மாதங்கள் ஆனது. இந் நான்கு மாதங்களில் பயண ஆவணங்களைப் பெற அலைந்ததில் தங்கள் மகள் ஓர் ஆங்கிலேயனைத் திருமணம் செய்து கொள்ளப் போவதாகக் கூறிய செய்தி யை மறந்து மனச்சுமை குறைந்து இருந்தார்கள். பின் குறிப்பிட்ட நாளில் அவர்கள் விமானத்தின் மூலம் சிகாகோ நகரை அடைந்தார்கள். வேல்முருகனும் வடி வழகியும் விமான நிலையத்திற்கு வந்து அவர்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்கள். பயணக் களைப் பும் புவிச் சுழற்சிப் பின்னடைவும் (Jet lag)  தணியச் சில நாள்கள் ஓய்வு எடுத்துக் கொண்ட பின் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிகாகோ நகரைச் சுற்றிக் காண்பித்தார்கள். அது மட்டும் அல்லாமல் தங்களுடன் பணிபுரியும் அமெரிக்க நாட்டு மக்கள் மட்டும் அல்லாது, மற்ற நாட்டு மக்களுடைய வீடுகளுக்கு நட்பு முறை யில் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தி வைத் தார்கள். அதேபோல் அவர்களைத் தங்கள் வீட்டிற்கும் விருந்துக்கு அழைத்தார்கள்.

இவ்வாறு பிற நாட்டு மக்களுடன் நெருங்கிப் பழகிய போது, இதுவரைக்கும் ‘மேற்கத்திய நாட்டு மக்கள் பொதுவாக யாருடனும் பழகமாட்டார்கள்; தங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று இயந்திரத் தனமாகத் தான் செயல்படுவார்கள்’ என்று பார்த்த சாரதியும் நாகலட்சுமியும் எண்ணி இருந்த நினைப்பு, உண்மைக்கு மாறானது என்று தெரியவந்தது. அன்பு, கோபம், நகைச்சுவை, அழுகை, இழிவு, பெருமிதம், எளிமை, ஆடம்பரம் போன்ற அனைத்து உணர்வு களும் நம்மைப் போலவே அவர்களுக்கும் உண்டு என்று புரிந்து கொண்டார்கள். மேலும், எதிர்பாராத ஒரு நல்ல அதிர்ச்சிக்கு அவர்களை உள்ளாக்கிய விஷயம் ஒன்றும் அதில் அடங்கி இருந்தது.

மேற்கத்திய மக்கள் ஒரு கணவன், ஒரு மனைவி என்று வாழாமல் அடிக்கடி இணையர்களை மாற்றிக் கொண்டே இருப்பார்கள் என்றும், கணவன் மனைவிக் கும், மனைவி கணவனுக்கும் உண்மையாக இல்லா மல் வரைமுறையற்ற பாலியல் உறவில் ஈடுபடுவார் கள் என்றும், இந்திய அதிகார வர்க்கத்தினர் இந்தியா வில் ஒரு கருத்தைப் பரப்பி வைத்து இருக்கிறார்கள். இந்தக் கருத்தையே கொண்டிருந்த பார்த்தசாரதிக்கும் நாகலட்சுமிக்கும், உண்மை நிலை அவ்வாறு இல்லை என்பதை அறிய மிகவும் நல்லவிதமான ஒரு அதிர்ச் சியை அடைந்தார்கள். அவர்கள் சந்தித்த மிகப் ப்ல இணையர்கள் விவாகரத்து இல்லாமல் ஒருவன் - ஒருத்தி என்ற வகையில் நீண்டகாலமாக வசித்து வரு வதை அறிந்தார்கள். விவாகரத்து செய்தவர்களையும், இரண்டு மூன்று முறை இணையர்களை மாற்றிக் கொண்ட ஆண்களையும் பெண்களையும் அவர்கள் பார்க்கவே செய்தார்கள். ஆனால் அவர்களின் எண் ணிக்கை இவர்கள் நினைத்தது போல பூதாகாரமாக இல்லை.

சிகாகோ நகரில் நான்கு மாதப் பட்டறிவிற்குப் (அனுபவத்திற்குப்) பிறகு ஒரு நாள் பார்த்தசாரதி “மாப்பிள்ளே! வெ°டர்ன் பீபுல் கல்சர் பத்தி நான் தப்பா நெனச்சிட்டு இருந்தேன். ஆனா உண்மையிலே அவங்க நான் நெனச்ச அளவுக்கு மோசமா இல்லே” என்று வேல்முருகனிடம் கூறினார். வேல்முருகனும் “ஆமாங்க மாமா! நம்ம நாட்லெ தான் வெ°டர்ன் கல்சர் பத்தி இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, தவறான கருத்தெப் பிரச்சாரம் பண்ணி வச்சு இருக்காங்க” என்று விடையளித்தவுடன், பார்த்தசாரதி “ஆனாலும் டைவர்சும், மணவுறவு மீறிய உறவும் (Extra Marital Relationship)  இந்தியாவைக் கம்பேர் பண்றப்போ கொஞ்சம் அதிகம்தான்” என்று கூறினார். இதைக்கேட்ட வேல்முருகன் மெதுவாகப் புன்னகைத்தார்.

“எதை வைச்சு அப்படிச் சொல்றீங்க மாமா?”

“நாம பார்த்தவங்கள்லே தோராயமா ஒரு 20ரூ பேருங்க டைவர்°, எக்°ட்ரா மேரிடல் ரிலேஷன்ஷிப் உள்ளவங்களா இருக்கிறார்களே? இந்தியாவில் இவ்வளவு மோசம் இல்லையே?”

“இங்கே வர்றதுக்கு முன்னாலே என்ன நெனச் சிட்டு இருந்தீங்க? இங்கே எல்லாரும் மோசம்னு தானே?”

“ஆமா!”

“இப்போ எப்படி மனசு மாறினீங்க?”

“இங்கே வந்து நெறையப் பேரைப் பார்த்த பின்னாலே...”

“இதே மாதிரி இந்தியாவிலேயும் நெறையப் பேரைப் பார்த்தா மனசு மாறும் இல்லே?”

“என்ன மாப்பிள்ளே சொல்றீங்க?”

“சமீபத்திலே ரோஹித் சேகர் என்கிற பையன் தன்னுடைய ‘பயலாஜிகல் ஃபாதர் என்.டி. திவாரி தான்’இன்னு சொல்லி, கோர்ட்லே புரூஃப் பண்ணி னதைப் படிச்சிருப்பீங்க இல்லே?”

“ஆமா!”

“அவங்க இந்தியாவிலே தானே இருக்காங்க? இந்த மாதிரி எக்°ட்ரா மேரிடல் ரிலேஷனும் இந்தியா விலெ தானே நடந்திருக்கு?”

“ஆமா! ஆனா இங்கே மாதிரி நெறைய ஜனங்க அப்படி இல்லியே?”

“என்.டி. திவாரியெ விட்டுடுங்க. அதிகாரம் படைச்ச மத்தவங்களெயும், அவங்களைச் சுத்தி இருந்து அதி காரம் பண்றவங்களையும் பாருங்க. ஒழுக்கமா இருக்கிற வங்க எவ்வளவு பேர் இருக்காங்க?” என்று வேல் முருகன் கேட்டதும், பார்த்தசாரதி சிறிது நேரம் யோசித் தார். அதிகாரம் படைத்தவர்களில், ஆதிக்கவாதிகளில் மிகப் பலர் பாலியலில் முழு ஒழுக்கம் உள்ளவர்கள் என உறுதிகூற முடியாதவர்களாகவே இருந்தார்கள். குறைந்தபட்சம் சபல புத்தி உள்ளவர்களாகவே மிகப் பலர் இருந்தனர். இவ்வாறு யோசித்துக் கொண்டே “நீங்க சொல்றதும் சரிதான் மாப்பிள்ளே!” என்று மென்று விழுங்கிக் கொண்டே கூறினார்.

“அது மட்டும் இல்லே மாமா! கல்யாணம் பண்ணிக் காம இருந்தாலும் ரொம்பக் காலம் ஒருத்தனோட வாழ்ந்துட்டா அந்தப் பொண்ணுக்கு மனைவிங்கிற அந்தஸ்து கொடுக்கணும்னு மதுரை ஹைகோர்ட் பெஞ்ச், 2.7.2014-ந் தேதி தீர்ப்பு குடுத்திருக்கு. இதிலேருந்து என்ன தெரியுது? இந்த மாதிரி விஷயங்க எல்லாம் இந்தியாவிலேயும் நெறைய இருக்குன்னு தானே? இந்த விஷயத்திலே இங்கே உண்மையெ வெளிப்படையாப் பேசறாங்க. இந்தியாவிலே பொய் வேஷம் போடறாங்க. அவ்வளவுதான்” என்று வேல் முருகன் கூறியதைக் கேட்ட பார்த்தசாரதி, விஷயங் களை ஜீரணிக்க மிகவும் சிரமப்பட்டார். சிறிது நேரத் திற்குப் பின் மெதுவாக “அப்படீன்னா எய்ட்° ஏன் இங்கே அதிகமா இருக்கு?” என்று தாழ்ந்த குரலில் கேட்டார்.

வேல்முருகன் சிரித்துக் கொண்டே “யார் மாமா அப்படிச் சொன்னாங்க? இந்தியாவிலே தான் எய்ட்சும், மத்த செக்ஸுவல் டிஸீசும் அதிகமா இருக்கு. தஸ்லிமா நஸ்ரின் சொன்ன மாதிரி நடக்குற அநியாயங்களையும், இருக்கிற வியாதிகளையும் வெளியே சொல்ல முடியாத மவுனமான அடக்குமுறை அங்கே இருக்கு. அவ்வளவுதான்” என்று கூறி நிறுத்தினார்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டு இருந்த நாகலட்சுமியும் “மாப்பிள்ளே சொல்றது சரிதாங்க. இந்தியாவிலே பொம்பளெங்க தங்களுக்கு நடக்குற அநியாயங்களை வெளியே சொல்ல முடியாம ரொம்ப கஷ்டப்படறாங்க” என்று கூறினார். இதுவரைக்கும் இதுபோன்று பேசியிராத தன் மனைவி கூறியதைக் கேட்ட பார்த்தசாரதிக்கு ஒருவேளை தானே தன்னை யும் அறியாமல் தன் மனைவியின் மேல் அளவுக்கு மீறி ஆதிக்கம் செலுத்தி இருப்பேனோ என்று ஐயம் தோன்றியது.

சிறிது நேர அமைதிக்குப்பின், “எந்த ஒரு வெள்ளைக் காரனும் ஒரு மனைவியுடன் வாழமாட்டான் என்ற தவறான நம்பிக்கையில் தானே நிர்மலாவின் காதலை ஏற்கத் தயங்கினோம்? ஆனால் பண்பாட்டில் வெள்ளை யர்கள் ஒன்றும் கீழானவர்கள் அல்ல; சொல்லப் போனால் நம்மைவிட வெளிப்படையானவர்கள்; ஆகவே நம்மைவிட மேலானவர்கள் என்று இங்கு வந்த பார்த்த பிறகு அல்லவா புரிகிறது?” என்று நினைத்த வராய், வேல்முருகனிடம் நிர்மலாவின் காதலைப் பற்றிப் பேச எத்தனித்தார். உடனே தன் மனைவி யைக் கலக்காது அப்படிப் பேசுவது ஆணாதிக்க மனோபாவமே என்று மனதில் தோன்ற, நிர்மலாவின் காதலில் தவறு இல்லை என்று தனக்குப் படுவதாக நாகலட்சுமியிடம் கூறி, அவளுடைய கருத்தைக் கேட்டார். நாகலட்சுமியும் அதை ஆமோதிக்க, அதைக் கேட்டுக் கொண்டு இருந்த வடிவழகியும் வேல்முருகனும் கை தட்டியும், சிரித்தும் ஆமோதிப்பதையும், மகிழ்ச்சியை யும் தெரிவித்தார்கள். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட அடுத்த நாள் ஒரு சுற்றுலா  (Picnic)  செல்லலாம் என்று வடிவழகி கூற, அனைவரும் மகிழ்ச்சியில் குதூகலித்தார்கள்.

உடனே தன் மகளுடன் பேசி இம்மகிழ்ச்சியான செய்தியைக் கூறலாம் என முற்பட்ட பார்த்தசாரதியிடம் “இல்லே சித்தப்பா! இப்போ அவ தூங்கிட்டு இருப்பா. உடனே ஒரு மெயில் அனுப்பிச்சுடுவோம். நாளைக் குக் காலையிலே பிக்னிக்குக்குப் புறப்படறதுக்கு முன்னாடி அவளோட பேசிட்டுப் புறப்படலாம்” என்று வடிவழகி கூறிக்கொண்டே கணினியை நோக்கி நகர்ந்தாள்.

Pin It