தொடர்புடைய படைப்புகள்

(அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்பின் பொருளாதாரம் என்ற பொருண்மையின் (தொகுதிகள் 28 முதல் 33 வரை) அறிமுகக் கட்டுரை)

அண்ணல் அம்பேத்கர் தனது முதுகலைப் பட்டப் படிப்பு, முனைவர் பட்டப் படிப்பு ஆகியவற்றின் பகுதிகளாக பொருளாதார ஆய்வுகளை மேற்கொண்டார். பொருளாதாரம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிட்டார். அமெரிக்காவின் கொலம்பியாப் பல்கலைக்கழகம், பிரித்தானியாவில் உள்ள இலண்டன் பொருளாதாரப் பள்ளி, ஜெர்மனியின் பான் பல்கலைக்கழகம் ஆகியவற்றோடு அவருக்கிருந்த தொடர்பு காரணமாக பொருளாதாரத் துறையில் அவருக்கு விரிவான பயிற்சி இருந்தது. அதைப் பயன்படுத்தி இந்தியப் பொருளாதார நிலைமைகளை ஆய்வு செய்வதற்கு அவர் முயற்சிகளை மேற்கொண்டார். அந்தப் பின்புலத்தில் அவர் நிகழ்த்திய ஆய்வுகளைப் பின்கண்டவாறு நாம் தொகுத்துக் கொள்ளலாம்.

- இந்திய வரலாறு பற்றிய குறிப்புகள் இந்தியாவின் அரசியல் பொருளாதார வரலாற்றின் பல்வேறு காலகட்டங்கள் குறித்த அம்பேத்கரின் கையெழுத்துப் படிகள் ஆகும். இந்தியப் பொருளாதாரத்தை வரலாற்றுப் பின்னணியோடு புரிந்து கொள்வதற்கான அடித்தளத்தை இ்வை வழங்குகின்றன.

- பொருளாதாரத் துறையில் அண்ணல் அம்பேத்கரின் அறிவுப் பயணம் பண்டைக்கால இந்திய வணிகம் குறித்த ஆய்விலிருந்து தொடங்குகிறது. பண்டைக்கால இந்திய வணிகம் என்பது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அண்ணல் அம்பேத்கர் தமது முதுகலைப் பட்டத்திற்காக (1913-15) வழங்கத் திட்டமிட்டிருந்த ஆய்வுக் கட்டுரை. இக்கட்டுரை பொது ஆண்டுக்கு முந்தைய காலத்திலிருந்து ஐரோப்பியர்கள் இந்தியாவுக்குக் கடல்வழிப் பயணம் மேற்கொண்டது வரையிலான இந்தியாவின் வணிகத் தொடர்புகளை விரிவாக ஆராய்கின்றது.

- கிழக்கிந்தியக் கம்பெனி: நிருவாகத்துறை - நிதித்துறை என்பது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்திற்காக அண்ணல் அம்பேத்கர் மே 15, 1915 அன்று வழங்கிய ஆய்வறிக்கை. இது பிரித்தானியக் காலனிய ஆட்சியின் தொடக்கக் கால நிருவாக முறையையும் நிதி மேலாண்மையையும் பகுப்பாய்வு செய்கிறது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி எவ்வாறு இந்தியாவின் செல்வங்களைக் கொள்ளையிட்டுச் சென்று இந்திய மக்களை எவ்வாறு “பொருளாதாரத் துயரத்துக்கு” உள்ளாக்கியது என்பதை இது காட்டுகிறது.

இந்த மூன்று ஆக்கங்களும் இம்மக்கள் பதிப்பில் தொகுதி 28 இல் இடம்பெறுகின்றன.

- பிரித்தானிய இந்தியாவில் மாகாண நிதி ஆதாரங்களின் பரிணாம வளர்ச்சி (தொகுதி 29, தொகுதி 30) என்பது 1925ஆம் ஆண்டு புத்தகமாக வெளியிடப்பட்டது. பிரித்தானியப் பேரரசு இந்தியாவில், மாகாண நிதி அமைப்பு எவ்வாறு மையப்படுத்தப்பட்ட முறையிலிருந்து அதிகாரப் பகிர்வு முறையை நோக்கி நகர்ந்தது என்பதை இது விளக்குகிறது.

- இந்திய ரூபாய் பற்றிய சிக்கல்: அதன் தோற்றம் - அதற்கான தீர்வு (தொகுதிகள் 31-33) 1923 ஆம் ஆண்டு முதன்முதலில் இலண்டனில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை இந்திய நாணய முறையின் பரிணாம வளர்ச்சியையும் அதன் நிலைத் தன்மை குறித்த தீர்வுகளையும் முன்வைக்கிறது.

- இந்தியாவில் சிறு நிலஉடைமைகள் - அவற்றுக்கான தீர்வுகள் (தொகுதி 28) என்ற ஆய்வுக் கட்டுரை 1918இல் இந்தியப் பொருளாதாரக் கழகத்தின் இதழில் முதன்முதலில் வெளியானது. இதில் இந்திய வேளாண் பொருளாதாரத்தில் நிலவுடைமைகளின் அளவைப் பற்றியும் உற்பத்தித்திறனைக் குறித்தும் ஒரு பகுப்பாய்வை அண்ணல் அம்பேத்கர் செய்துள்ளார்.

- 1924-25 காலப்பகுதியில் இந்திய நாணயம் மற்றும் நிதி குறித்த முடியரசு ஆணையத்தின் முன் அண்ணல் அம்பேத்கர் அளித்த விரிவான சாட்சியங்களும் நிதி தொடர்பான பிற கட்டுரைகளும்.ambedkar in london economic school

(இலண்ட பொருளாதாரப் பள்ளியில் பேராசிரியர்களுடனும், நண்பர்களுடனும் திரு. பி.ஆர். அம்பேத்கர் 1920. அம்பேத்கர் இரண்டாவது வலப்புறத்தில் இரண்டாவதாக உள்ளார்.)

பண்டைய இந்திய வணிகம்

ஐரோப்பாவில் தொழிற்புரட்சி ஏற்படும் வரை இந்தியா உலகத்தின் ‘தொழிற்கூடம்’ ஆகத் திகழ்ந்தது. ரோமானியர்கள் பார்த்தியர்களிடம் வரி செலுத்துவதைத் தவிர்க்க இந்தியாவுடன் நேரடி கடல் வணிகத்தை ஊக்குவித்தனர். இந்தியப் பொருட்கள் ரோமானியப் பேரரசின் செல்வத்தை ஈர்த்தன. வாசனைப் பொருட்கள், உலோகங்கள், விலையுயர்ந்த மரங்கள், முத்துக்கள், பட்டு, பருத்தி ஆடைகள், அவுரி முதலியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாக இருந்தன.

“இந்தியாவின் பண்டைக்காலத்தில் உள்நாட்டு வணிகமும் வெளிநாட்டு வணிகமும் முதன்மை பெற்றிருந்தன; புத்த ஜாதகக் கதைகளில் வணிகர் குழுக்களின் தலைவர்களது கூட்டுக்காப்புக் கழகம் பற்றிக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். காரவான் தலைவன் பாலி மொழியில் சத்தரவாகன் என அழைக்கப்படுகிறான். வணிகக் குழுவின் பயணத்துக்கு இவன்தான் வழிகாட்டுகிறான்; எங்கு தங்க வேண்டும், எந்தெந்த இடங்களில் தண்ணீர் கிடைக்கும், எந்த வழியாகச் செல்ல வேண்டும், ஆறுகளை எப்படிக் கடந்துசெல்ல வேண்டும் போன்றவற்றை முடிவு செய்கிறான்.” (தொ. 28: பக். 66)

இந்திய வணிகத்தில் திராவிடர்களும் தமிழ்நாடும் வகித்த முதன்மைப் பாத்திரத்தைப் பற்றிய குறிப்புகளை அம்பேத்கர் பதிவு செய்கிறார்.

“தமிழ்ப் புலவர்கள் சிலர் தென்னிந்தியாவின் சில வணிகத் துறைமுகங்களையும் நகரங்களையும் மிக அழகாக விவரித்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பின்வருமாறு கூறுகிறார்: “யவனர்களின் எழில்மிகு மாபெரும் நாவாய்கள் தங்கத்தை ஏற்றிக்கொண்டு, கேரளக் கடற்பரப்பில் பொங்கும் வெண்நுரை நாலா பக்கங்களிலும் தெறிக்க, வளம்கொழிக்கும் முசிறிக்கு வருகின்றன; பிறகு, மிளகை ஏற்றிக் கொண்டு அங்கிருந்து திரும்புகின்றன.” (தொ. 28 பக். 99)

அரிசி, இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை போன்ற பொருட்களுக்கான கிரேக்கப் பெயர்கள் தமிழ் மொழியிலிருந்தே பெறப்பட்டன (எடுத்துக்காட்டு: அரிசி - Oryza). எபிரேய மொழியில் மயில், அகில் போன்றவற்றுக்கு வழங்கப்படும் பெயர்கள் தமிழ்-மலையாளச் சொற்களின் திரிபுகளே.

அண்ணல் அம்பேத்கர் பண்டைய இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான வணிகப் பாதைகளை நிலவழிப் பாதைகள், கடல்வழிப் பாதைகள் எனப் பிரிக்கிறார். பொ.ஆ. ஏழாம் நூற்றாண்டில் சாரசென் அரேபியர்கள் இந்தோ-சிரியப் பாதையைக் கைப்பற்றியதால் நிலவழி வணிகம் பாதிக்கப்பட்டது. பதினொன்றாம் நூற்றாண்டில் மத்தியப் பாதை சிலுவைப் போர்களால் முடக்கப்பட்டது. 1453 இல் கான்ஸ்டான்டிநோபிள் துருக்கியர்களிடம் வீழ்ந்ததும், மங்கோலியர்களின் ஆக்கிரமிப்புகளும் வடக்கு, மத்திய நிலப் பாதைகளை முழுமையாக மூடின. 1516இல் எகிப்து துருக்கியர்களால் கைப்பற்றப்பட்டபோது, தெற்குப் பாதையும் அடைபட்டது.

இந்திய வணிகத்தின் மீதான ஆர்வமும் பழைய பாதைகள் முடக்கப்பட்ட அரசியல் காரணங்களும், போர்த்துகீசியர்கள், ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள் முதலியோர் நன்னம்பிக்கை முனை வழியாகப் புதிய கடல் பாதையைத் தேடக் காரணமாக அமைந்தன. இந்தியாவுக்கு வணிகம் செய்வதற்கு வந்த ஐரோப்பிய வணிகர்கள், இந்தியாவில் நிலவிய அரசியல் குழப்பத்தையும் பிளவுண்ட நிலையையும் பயன்படுத்தினார்கள். பிரித்தானிய (1600), டச்சு (1602), பிரெஞ்சு (1664), டேனிஷ் (1616) கிழக்கிந்தியக் கம்பெனிகளுக்கிடையே மேலாதிக்கத்துக்கான போட்டி நிகழ்ந்தது. ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் நடந்த போர்களில் வெற்றி பெற்ற பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனி பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பெரும்பகுதியைத் தனது ஆட்சிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் நிதி, நிருவாக அமைப்பு - இந்தியா மீதான சுரண்டல்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனியின் நிருவாகமும் நிதி மேலாண்மையும் இந்திய மக்களை எவ்வாறு சுரண்டின, செல்வத்தை எவ்வாறு இங்கிலாந்திற்குக் கடத்தின என்பது அம்பேத்கரின் ஆய்வில் வெளிப்படுகிறது. கிழக்கிந்தியக் கம்பெனி ஒரு வணிக அமைப்பாகத் தொடங்கி, பின்னர் இந்தியா மீதான அரசியல் அரசுரிமையைக் கைப்பற்றியது. இந்த இரட்டைப் பாத்திரத்தின் மூலம் அது இந்தியாவின் செல்வத்தை இங்கிலாந்திற்குக் கடத்தியது.

கம்பெனியின் நிருவாகத்தில் உயர் பதவிகள் அனைத்தும் ஐரோப்பியர்களுக்கு வழங்கப்பட்டன. அவர்களுக்கு வழங்கப்பட்ட மிக அதிகப்படியான ஊதியமும் ஓய்வூதியமும் இந்திய வரி வருவாயிலிருந்து கழிக்கப்பட்டன. பிரித்தானியப் பேரரசை விரிவுபடுத்துவதற்காக இந்தியாவில் நடத்தப்பட்ட பல போர்களுக்கான செலவுகள் முழுவதையும் இந்திய மக்களே ஏற்க வேண்டியிருந்தது. இங்கிலாந்து இந்தப் பேரரசை உருவாக்க ஒரு சல்லிக்காசு கூட செலவு செய்யாமல், அதனை இந்தியாவின் அரசுக் கடனாக மாற்றியது. இங்கிலாந்திலுள்ள கம்பெனியின் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகை வழங்குதல், இலண்டனில் இந்திய அலுவலகத்தின் செலவுகள், கடனுக்கான வட்டி முதலியவை ‘தாய்நாட்டுச் செலவுகள்’ என்ற பெயரில் இந்தியாவிலிருந்து கடத்தப்பட்டன.

இங்கிலாந்து இந்தியாவுக்கு அமைதியையும் ஒழுங்கையும் தந்ததாகக் கூறினாலும், அதற்குப் பதிலாக இந்தியாவின் தங்கத்தையும் வெள்ளியையும் உறிஞ்சி, நாட்டைப் பொருளாதார வறுமைக்கு உள்ளாக்கியது. இதனை அண்ணல் அம்பேத்கர் இவ்வாறு தொகுத்துக் கூறுகிறார்:

“சட்டமுறையான வாதங்கள் மானிட நேயங்கொண்ட வாதங்கள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர் போலவே இருந்தன. பேரரசின் அடிமை நாடுகளை உருவாக்கிய இந்தியக் கடனைப் பகிர்ந்துகொள்ள ஆங்கிலேய நாடாளுமன்றம் அப்பட்டமாக மறுத்துவிட்டது. கிழக்கிந்தியக் கம்பெனியின் கடன் சுமையான £ 6,94,73,484 பவுண்டு முழுவதும் பெரும்பாலும் பயனற்ற செலவினங்களுக்கே பயன்படுத்தப்பட்டது. அது, கம்பெனியின் செயல்பாடுகளில் எவ்வகையான பங்கும் பெறாத ஏழ்மையில் வாடிய உள்நாட்டு மக்களின் மீதே சுமத்தப்பட்டது. இதுமட்டுமல்ல, அவப்பேறான 1857 கிளர்ச்சியால் £ 4,00,00,000 செலவானது. நியாயமாகப் பார்த்தால், பேரரசை விரிவாக்குவதற்கான நியாயமான செலவினம் என்ற முறையில் இங்கிலாந்துதான் கிளர்ச்சிக்கான செலவினத்தை ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.” (தொ. 28, பக். 242)

பேரரசு நிதி அமைப்பு - மாகாண நிதி அமைப்பின் உருவாக்கம்

பிரித்தானிய இந்தியாவில் மாகாண நிதி முறையின் பரிணாம வளர்ச்சி, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இது இந்திய மாகாணங்களின் அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியைப் பாதித்தது.

1833 ஆம் ஆண்டு சட்டம் இந்தியாவை ஓர் ஒற்றையாட்சி முறையாக மாற்றியது. இதன் மூலம் அனைத்து வருவாய்களும் தலைமை ஆளுநரின் கட்டுப்பாட்டில் வந்தன; மாகாணங்கள் வெறும் “திரட்டும் மற்றும் செலவு செய்யும் முகமைகளாக” மட்டுமே செயல்பட்டன. மாயோ பிரபு அறிமுகப்படுத்திய ‘ஒதுக்கீடு முறை’யும் ‘பகிர்ந்து கொள்ளப்பட்ட வருவாய்’ முறைகளும் மாகாணங்களின் தேவைகளை விட மத்திய அரசின் நிதித் தேவையையே முதன்மையாகக் கருதின. நெருக்கடிக் காலங்களில் மாகாணங்களின் இருப்புத் தொகையை மத்திய அரசு தன்னிச்சையாக எடுத்துக் கொண்டது.

பிரித்தானிய நிருவாகம் கல்வி மற்றும் பொதுநலத் திட்டங்களை விட, இராணுவம், காவல்துறை போன்ற ‘ஒழுங்கு பேணல்’ சார்ந்த துறைகளுக்கே 52% முதல் 80% வரை நிதிகளைச் செலவிட்டது. செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும் ஏழைகளுக்குச் சுமையாகவும் வரிமுறை அமைந்திருந்தது. குறிப்பாக, உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்ட உப்பு வரி, உழவர்களின் உழைப்பை உறிஞ்சிய நில வருவாய் இரண்டும் மக்களை வறுமையில் தள்ளின. மாகாணங்களின் பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான சாலைகள், கால்வாய்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் முதலியவற்றுக்கு மிகக் குறைந்த அளவே நிதி ஒதுக்கப்பட்டது.

மாகாணங்கள் தாங்கள் செலவு செய்யும் பணத்தைத் தாங்களே திரட்ட வேண்டிய அவசியம் இல்லாததால், நிதி நிருவாகத்தில் பொறுப்பின்மையும் வீண் செலவுகளும் அதிகரித்தன. மாகாணங்களுக்குத் தன்னிச்சையாக வரி விதிக்கும் அதிகாரமோ கடன் வாங்கும் அதிகாரமோ வழங்கப்படவில்லை. இதனால் மாகாண அரசுகள் தங்களின் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்த எப்போதும் மத்திய அரசின் தயவை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. 1919ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட இரட்டை ஆட்சி முறை, நிதி அதிகாரத்தை மத்திய அரசிடமே வைத்திருந்தது. எனவே, மாகாண அமைச்சர்களால் தங்களின் துறைகளில் (மாற்றப்பட்ட துறைகள்) சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் போனது.

சுருக்கமாகச் சொன்னால், மாகாண நிதி முறையின் பரிணாமம் இந்தியாவிலிருந்து செல்வத்தை இங்கிலாந்திற்கு எளிதாகக் கடத்தவும், இந்தியாவில் ஒரு வலிமையான இராணுவ ஆட்சியைத் தக்கவைக்கவும் உதவியதே தவிர, இந்திய மாகாணங்களின் உண்மையான பொருளாதார அல்லது அரசியல் தன்னாட்சிக்கு வழிவகுக்கவில்லை.

இந்திய ரூபாய் - பிரித்தானியக் கொள்கை

“முகலாயப் பேரரசின் கடைசிக் காலகட்டத்தில், அன்றைய தரநிலையின்படி கணித்தால், பொருளாதார அடிப்படையில் இந்தியா முன்னேறிய நாடாக இருந்தது. வணிகம் பெருமளவு நடந்தது; வங்கி நிறுவனங்கள் நன்கு வளர்ந்திருந்தன. பரிமாற்றங்களில் கடன் ஒரு குறிப்பிடத்தக்க பங்காற்றியது. பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் இந்திய மக்கள் பிரித்தானிய ஆட்சியின் கீழ் வந்தபோது, பரிவர்த்தனை ஊடகமும் மதிப்பின் பொதுவான தரநிலையும் மற்றவற்றுடன் கூடவே இந்திய மக்களின் பொருளாதாரத்தின் மிக உயர்நிலைக் கூறுகளாக இருந்தன. (தொ. 31, பக். 27)

முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, இந்தியாவில் நாணய முறை பெரும் குழப்பத்தில் இருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏறக்குறைய 200-க்கும் மேற்பட்ட வெவ்வேறு எடையுள்ள, வெவ்வேறு தூய்மை கொண்ட நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.

“முகலாயப் பேரரசு தனது ஆட்சியைத் தடங்கலின்றி நடத்தி வந்தவரை, நாணயச் சாலைகள் பலவாக இருந்ததில், கேட்டைவிட நற்பலனே அதிகம் இருந்தது. ஏனெனில், ஒரே அதிகாரத்தின் ஆட்சிக்குட்பட்ட ஒரே துறையின் பல கிளைகளாக அவை இருந்தன. முகலாயப் பேரரசு பல தனி அரசுகளாகச் சீர்குலைந்தது. அது, பல்வேறு இடங்களில் செயல்பட்ட பேரரசு நாணயச்சாலையின் கிளைகளை, காசுகளை வெளியிடும் சுதந்திரமான தொழிற்கூடங்களாக ஆக்கியது. பேரரசின் வீழ்ச்சியையடுத்து விடுதலைக்கான பொதுவான போட்டி ஏற்பட்டது. அதில், அரசுரிமையின் மிகச் சிறந்தவொரு சின்னமாக விளங்கிய நாணயம் வெளியிடும் உரிமை, அப்போதிருந்த அரசியல் சூதாடிகள் மிகவும் விரும்பிய உரிமையாக ஆனது. வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த அரச குலங்கள் விடாப்பிடியாக வைத்துக் கொள்ளவிரும்பிய கடைசிச் சலுகையாகவும் அதிகாரத்தைப் பெறப் பாடுபடும் அரசியல் சூதாடிகள் பெற ஆசைப்படும் முதல் உரிமையுமாக இருந்தது. விளைவு என்னவெனில், எந்த உரிமை ஒரு காலத்தில் கடமைப் பற்றுடன் நடைமுறைப்படுத்தப்பட்டதோ, அந்த உரிமை, வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகிவிட்டது.” (தொ.31, பக்.31)

இவற்றை ஒருங்கிணைத்து ஒற்றை நாணயத்தை உருவாக்க முயன்றாலும், கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியின் கீழிருந்த மூன்று மாகாணங்களும் (வங்காளம், மதராஸ், பம்பாய்) தங்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லாமல் தனித்தனி நாணய முறைகளை நிருவகித்து வந்தன. அவை வெள்ளி நாணயங்களை வெளியிட்டன.

“மூன்று மாகாணங்களுக்கிடையே நிதித்துறை சுதந்திரம் இருந்திருந்தால், இந்த நாணயமுறை சுதந்திரம் அதிகத் தீங்கை விளைவித்திருக்காது. மூன்று மாகாணங்களும் தற்சார்பான நிதிஅமைப்பைக் கொண்டிருந்தன. ஆனால் நடைமுறையில், தங்களது பற்றாக்குறைகளைச் சரிகட்ட அவை ஒன்றையொன்று சார்ந்திருந்தன. அவற்றிடையே ஒரு வழக்கமான ‘அளிப்பு’ முறை இருந்தது. ஒரு மாகாணத்தின் மிகை, பிற மாகாணங்களின் பற்றாக்குறைகளை இட்டுநிரப்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. பொது நாணயம் இல்லாத நிலையில் இந்தச் செயல்முறை கணிசமான அளவு தடங்கலை எதிர்கொண்டது. ‘அளிப்பு’ செயல்பாட்டின் பாதையில் பொது நாணயம் இல்லாததால் ஏற்பட்ட இன்னல்கள் இரண்டு வெவ்வேறு வழிகளில் உணரப்பட்டன. ஒரு மாகாணம் பிற மாகாணங்களின் நாணயங்களைச் சட்டப்படியான செலாவணியாகப் பயன்படுத்த முடியாத நிலையில், ஒவ்வொரு மாகாணமும் தற்சார்பாக இருக்கும் வகையில் பெருமளவு செயல்பாட்டு நிலுவைகளைப் பூட்டி வைக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இது வணிகத்தைப் பாதித்தது.” (தொ. 31, பக். 54)

1833 இல் நிருவாகம் மையப்படுத்தப்பட்ட பிறகு, 1835 இன் XVII ஆவது சட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் ‘பொதுவான நாணயம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. சிதறிக்கிடந்த நாணய முறைகள் முடிவுக்கு வந்தன.

1835 ஆம் ஆண்டு சட்டத்தின் மூலம் இந்தியாவில் சட்டப்படியான பணமாக தங்கம் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டது. இந்திய மக்கள் வெள்ளியைத்தான் விரும்புகிறார்கள் என்ற போலிக் காரணத்தைப் பிரித்தானிய அரசு முன்வைத்தது. உலக அளவில் தங்கத்திற்கான தேவை அதிகரித்தபோது, இந்தியா தங்கத்தைத் திரட்டத் தொடங்கினால், அது இங்கிலாந்து போன்ற நாடுகளின் தங்க இருப்பைப் பாதிக்கும் என்று பிரித்தானிய நிதித்துறை அஞ்சியது. இதனால் இந்தியா தனது பொருளாதாரத் தேவைகளுக்காகத் தங்கத்தை இறக்குமதி செய்வதை அது தடுத்தது. காலனிய ஆட்சியாளர்கள், இந்தியாவை வெள்ளித் தரநிலையிலேயே முடக்கி வைத்தனர்.

ஆனால், பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் உலகம் முழுவதும் பல நாடுகள் (குறிப்பாக, இங்கிலாந்து 1816 முதல்) தங்கத் தரநிலைக்கு மாறத் தொடங்கின. இருப்பினும், இந்தியா வெள்ளியை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட நாணய முறையிலேயே வலுக்கட்டாயமாக நீடிக்க வைக்கப்பட்டது.

50 ஆண்டுகள் ஊசலாட்டத்துக்குப் பின், 1893 இலிருந்து படிப்படியாக உருவான தங்கச் செலாவணித் தரநிலை, இந்தியப் பொருளாதாரத்தை விட பிரித்தானிய நிதி நலன்களுக்கே அதிக முக்கியத்துவம் அளித்தது. இதன்படி, இந்திய ரூபாய் தங்கத்தைத் தரநிலையாகக் கொண்ட பிரித்தானிய பவுண்டுடன் மாறும் தன்மை கொண்டிருந்தது. இந்திய அரசாங்கம், தங்கக் கையிருப்பு பற்றிக் கவலைப்படாமலேயே தனது தேவைக்கேற்ப விருப்பம் போல ரூபாய்களை வெளியிடும் வசதி இருந்தது.

கவுன்சில் பில்கள் என்பது இந்தியாவிலிருந்து இங்கிலாந்திற்குப் பணத்தை அனுப்பும் ஒரு சிக்கலான பணப்பரிமாற்ற முறையாகும். அதன்கீழ், இங்கிலாந்திலுள்ள இந்தியச் செயலர் அங்குள்ள வணிகர்களுக்கு கவுன்சில் பில்களை விற்பார். அந்த வர்த்தகர்கள் தங்கம் கொடுத்து அவற்றை வாங்குவார்கள். அந்தப் பில்களைக் கொண்டு அவர்கள் இந்தியாவிலுள்ள கம்பெனியின் கருவூலத்திலிருந்து ரூபாய்களைப் பெற்றுக் கொள்வார்கள்.

வழக்கமான வணிகத்தில், இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு ஈடாகத் தங்கம் அல்லது வெள்ளி இந்தியாவுக்குள் வந்திருக்க வேண்டும். ஆனால், கவுன்சில் பில்கள் மூலம், அந்த ஏற்றுமதி வருமானம் இங்கிலாந்திலேயே தங்கி, ‘தாய்நாட்டுச்’ செலவுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதனால் இந்தியா தனது உழைப்பிற்குப் பதிலாக எவ்விதப் பொருளாதார வளத்தையும் பெறாமல், வெறும் காகிதப் பரிமாற்றங்களிலேயே செல்வத்தை இழந்தது.

இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு வரவேண்டிய தங்கம் இலண்டனிலுள்ள இந்தியாவுக்கான செயலரின் கைகளிலேயே தங்கியது. இது இலண்டன் பணச்சந்தையில் பிரித்தானிய நிதியாளர்களுக்குக் குறைந்த வட்டியில் பணம் கிடைக்க உதவியது.

சுருக்கமாகச் சொன்னால், பிரித்தானிய நாணயக் கொள்கை இந்தியாவை ‘சோதனைச்சாலையாக’ பயன்படுத்தியதோடு, இந்திய மக்களின் உழைப்பை இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் கருவியாகவே செயல்பட்டது.

இந்திய வணிக நலன்

பிரித்தானிய வரிக் கொள்கை இந்தியத் தொழில்களை முடக்கி, பிரித்தானியத் தயாரிப்புகளுக்குப் பாதை சமைத்தது. நாட்டின் பல பகுதிகளில் விதிக்கப்பட்ட போக்குவரத்து வரிகளும் நகர வரிகளும் இந்தியாவைச் சிறிய பொருளாதாரச் சதுரங்களாகப் பிரித்தன. இது, பொருட்கள் இடம் விட்டு இடம் நகர்வதைத் தடுத்ததுடன், இந்தியத் தொழில்களின் ‘உள்ளூர்மயமாக்கலை’ அழித்தது.

“இந்தியாவுக்கான கொள்கை மொத்தமும் இங்கிலாந்து ஆலை உற்பத்தியாளர்களின் நலன்களை அடிப்படையாக வைத்தே தீர்மானிக்கப்படுகிறதென்பது ஐயத்துக்கு அப்பாற்பட்டது; இதற்குக் காரணத்தை எங்கோ போய், தேட வேண்டியதில்லை. இங்கிலாந்து வாக்காளர்களுக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவரும், இந்தியாவுக்கான உச்ச நிருவாகியாகவுமிருந்த இந்தியாவுக்கான அரசுச் செயலரின் முதன்மை அக்கறை என்பது, இங்கிலாந்து ஆலை உற்பத்தியாளர்களின் சந்தைகள் அவர்களுக்கு மூடப்படாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்வதாகவே இருந்தது.” (தொ. 30, பக்.189)

பிரித்தானியத் தயாரிப்புகள் இந்தியாவிற்குள் மிகக் குறைந்த வரியுடன் நுழைய அனுமதிக்கப்பட்டன; ஆனால் அதே நேரத்தில் இந்தியத் தயாரிப்புகள் இங்கிலாந்திற்குள் நுழைய விடாமல் தடுக்க 50% முதல் 500% வரை மிக அதிக வரி விதிக்கப்பட்டது. இந்தியப் பொருட்கள் வெளிநாட்டுச் சந்தைகளில் போட்டியிட முடியாமல் இருக்க, அவற்றின் மீது அதிக ஏற்றுமதி வரிகள் சுமத்தப்பட்டன.

“தங்கள் துன்ப துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நாடாளுமன்றத்திடம் உள்நாட்டு மக்கள் விண்ணப்பித்துக்கொண்டனர். அதில் அவர்கள் கீழ்க்காணுமாறு குறிப்பிட்டிருந்தனர்: ‘அயல்நாட்டுத் தொழில் துறையும், இங்கிலாந்தின் தொழில் துறையும் வளர்ந்து வளம் பெறுவதற்காக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குப் பண்டங்களை ஏற்றுமதி செய்வதற்கு எல்லா வகைகளிலும் ஊக்கமளிக்கப்படுகிறது; அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகின்றன. அண்மைக் காலம் வரை, பருத்தியைப் பயிரிட்டும் பருத்திப் பொருள்களைத் தயாரித்தும் பிழைப்பு நடத்திவந்த ஆயிரக்கணக்கான உள்நாட்டு மக்கள், இன்று உண்ண உணவின்றிப் பட்டினி கிடக்கின்றனர்.’ ஆனால், இந்த வேண்டுதலுக்கு எந்தப் பலனும் கிட்டவில்லை. இந்தியாவை ஆளும் கதிப்போக்கைத் தங்கள் கையில் எடுத்துக்கொண்டவர்களின் கண்ணோட்டத்தில் இங்கிலாந்தின் நலன்களே எப்போதும் முன்னிலையில் இருந்தன.” (தொ. 29, ப. 152-153)

இதன் இறுதிப் பகுதி அடுத்த இதழில் வெளியாகும்.

- மா.சிவகுமார், அண்ணல் அம்பேத்கர் ஆக்கங்கள் மக்கள் பதிப்புக் குழுவின் இணைப் பதிப்பாசிரியர்.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.