தந்தை பெரியார் “திருச்சிச் சிந்தனையாளர் கழகம்” என்னும் தனி அமைப்பை 07.03.1970 இல் தொடங்கி வைத்தார். அதன் செயல்பாட்டைப் பார்த்தவர்கள் அவரவர் இடத்தில் ‘சிந்தனையாளர் கழகம்’, ‘பகுத்தறிவாளர் கழகம்’ என்னும் பெயர்களில் அமைப்புகளை உருவாக்கினர். பகுத்தறிவுபரப்பல், தமிழின உணர்வை விதைத்தல் இவற்றில் நாட்டம் உள்ள எல்லாத் தமிழர்களையும் ஒன்று சேர்க்கும் அமைப்புகளாக இவை விளங்கின.

திருச்சிச் சிந்தனையாளர் கழகம்தான் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்னும் மூன்று பெருந்தொகுப்புகளை 01.07.1974 இல் வெளியிட்டது. அக்கழகத்தின் நிறுவனர்களுள் நானும் ஒருவன். “சிந்தனைகள் நூல்” வெளிவந்ததை அடுத்து, “சிந்தனையாளன்” என்ற பெயரில், 17.08.1974 இல் ஒரு கிழமை ஏட்டை நான் என் சொந்தப் பொறுப்பில் தொடங்கினேன்.

பெரியார் தொண்டர்கள் சிலரும், இயக்கத்துக்கு வெளியே உள்ள தமிழர்கள் பலரும் இந்த இதழை வரவேற்றனர்.

இதன் சாதனைகள் அளப்பரியவை.

1.     1975 இலேயே பிற்படுத்தப்பட்டோருக்கு நடுவண் அரசு வேலையிலும் கல்வியிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்கிற பெரியாரின் கொள்கையைத் தூக்கிப் பிடித்த முதல் ஏடு “சிந்தனையாளன்”தான். இது உண்மை வரலாறு.

2.     தந்தை பெரியார் ஒரு பொதுவுடைமைக்காரர் என்பதை அடையாளப்படுத்தியது “சிந்தனையாளன்” தான்.

3.     தந்தை பெரியாரின் நூற்றாண்டுவிழா வட புலத்தில் 1978 - 1979 இல் கொண்டாடப்பட ஒரு செய்தி ஊடகமாகப் பயன்பட்டது. ‘சிந்தனையாளன்’ இதழே.

4.     பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், மதச் சிறுப்பான்மையினர் நலன் காக்க அனைத்திந்திய அளவில் ஒரு பேரவை 19.08.1978 முதல் இயங்க வழி கண்டது ‘சிந்தனையாளன்” ஏடு.

5.     1979 ஆகஸ்டில் தமிழ் நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்து, 1980 பிப்பிரவரியில் தமிழ் நாட்டுப் பிற்படுத்தப்பட்டோருக்கு 50ரூ இட ஒதுக்கீடு கிடைக்க வழி கண்டது, ‘சிந்தனையாளன்’.

6.     ‘தமிழ் வழிக் கல்வி’, ‘மொழிவழித் தேசிய இன விடுதலை’ ‘தமிழீழ விடுதலை’ பற்றிய தெளிவை உண்டாக்கிய ஏடு ‘சிந்தனையாளன்’.

இவ்வளவு சாதனைகளுக்கும் அடித்தளமாக விளங்கும். “சிந்தனையாளன்”, 1981 முடிய என் சொந்தப் பொறுப்பிலேயே கிழமை ஏடாக வெளி வந்தது. எனக்கு நூற்றுக்கணக்கான ஆண்டு உறுப்பினர்களே தொடர்ந்து ஆதரவு அளித்தனர். எனக்கு ஏற்பட்ட நொடிவிலிருந்து வேலூர் மற்றும் சூலூர் நண்பர்கள் மீட்டனர்.

இவ்வளவுக்குப் பிறகும், கிழமை இதழாகத் தொடர முடியவில்லை; மாதம் இருமுறை இதழாக ஓராண்டும், ‘செய்தி மடலாக’ ஓராண்டும் வெறும் 1000 படிகளே வெளியிடப்பட்டது. இது ஒர் அவலம். தமிழர்கள் எந்தக் கட்டத்திலும் ‘ஓகோ’ என்று வரவேற்று “சிந்தனையாளன்” இதழுக்கு ஆதரவு நல்கவில்லை.

ஆனாலும் மார்க்சியப் பெரியாயப் பொதுவுடைமைக் கட்சியின் ஏடாக வெளிவரத் தொடங்கிய பிறகு, கட்சித் தோழர்களின் முனைப்பால், 1988 முதல் படிப்படியாக வளர்த்தெடுக்கப்பட்டு, இன்று 3000 படிகளாக வெளிவருகிறது.

1989 முதல் ஆண்டுதோறும் சிறப்பு மலரை வெளியிட்டு அதன் வழியாகக் கிடைக்கும் வருவாயைக் கொண்டும், அவ்வப்போது தமிழ் மக்கள் அளிக்கும் நன்கொடையைக் கொண்டும் தட்டுத் தடுமாறி மாதா மாதம் “சிந்தனையாளன்” ஏடு வெளிவருகிறது. ஆனால், வருத்தப்பட வேண்டிய நிலையே தொடர்கிறது. ஏன்?

1.     ஆண்டு உறுப்பினர் எண்ணிக்கை பெருகவில்லை. இவ்வகையில் கட்சித் தோழர்களின் முயற்சி போதிய அளவில் இல்லை. ஓரளவு பயன் பெற்ற தமிழ் மக்களுக்கு இந்த ஏடு வெளி வருவதைத் தெரிவிக்க ஏற்ற வழிகளை நாங்கள் செய்யவில்லை.

2.     ஒரு தடவை ஆண்டு உறுப்பினராகப்பதிவு செய்தவர் அடுத்துப் புதுப்பிப்பது இல்லை. அப்படிப் புதுப்பிக்காதவர் 1200 பேர்களுக்கு மேல் உள்ளனர். இரண்டு ஆண்டுகளாகக் கட்டணம் செலுத்தாதவர்கள் உண்டு. இது கொஞ்சமும் நல்லது ஆகாது. இதை இவர்கள் உணர வேண்டும்.

3.     வாழ் நாள் கட்டணம் ரூ. 200, ரூ. 500 என இருந்து, பிறகு ரூ 1,000 என உயர்ந்தது. ரூ. 200, ரூ. 300, ரூ. 500 செலுத்திய பல நண்பர்கள் மேற்கொண்டு ரூ. 800, ரூ. 700, ரூ. 500 அனுப்பிட முன் வரவில்லை. இப்படி ஆர்வம் அற்றவர்களாக இருப்போர் 500 பேர்கள் ஆவர். இது மிகவும் வருந்தத் தக்கது.

“சிந்தனையாளன்” இதழை இப்போது, பெறுகிற நண்பர்கள் மேலே கண்ட இருவகையினர். இவர்கள் அவரவர் அனுப்ப வேண்டிய ஆண்டுக்கட்டணத்தை - நிலுவை முழுவதையும் இன்றே அனுப்பிப் புதுப்பித்து உதவுங்கள்.

ரூ. 500, வரை வாழ்நாள் கட்டணம் செலுத்தியவர்கள், மீதம் உள்ள 500 ரூபாவை உடனே விடுத்து வையுங்கள்.

“சிந்தனையாளன்” முட்டுப்பாடின்றி வெளிவர உதவுங்கள் எனத் தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகிறேன்.

Pin It