anaimuthu 4002014, மே “சிந்தனையாளன்” இதழில், இந்திய அளவில் போட்டியிட்ட நாடாளுமன்றக் கட்சிகள் பற்றியும், தமிழ கத்தில் போட்டியிட்ட கட்சிகளின் தன்மை பற்றியும் விவரிவாகவே எழுதியிருந்தோம்.

காங்கிரசுக் கட்சி 100 இடங்களுக்கு மேல் பெற முடியாமல் தோற்றுப்போகும் என்றும், பாரதிய சனதாக் கட்சி 200 இடங்களைப் பெற்றாலே கூட்டணி ஆட்சி யை அமைத்துவிடும் என்றும் எழுதியிருந்தோம். ஏன்?

இந்தியப் பெருமுதலாளிகளும், பன் னாட்டுப் பெருமுதலாளிகளும் மேற்கண்ட இரண்டு கட்சிகளும் வெற்றி பெற வேண்டும் என்பதில் சமமான அக்கறை கொள்வார்கள் என நாம் கருதியே அப்படி எழுதினோம். ஆனால் நடந்தது என்ன?

கௌதம் அதானி, முகேஷ் அம்பானி போன்ற இந்தியப் பெருமுதலாளிகளும், பன்னாட்டுப் பெருமுதலாளிகளும் 2012 முதலே திட்டமிட்டபடி, பாரதிய சனதாக் கட்சியையும் - குறிப்பாக நரேந்திர மோடியையும் வெற்றிபெற வைக்க வேண்டி எல்லா ஊடகங்களின் வாயிலாகவும் மோடியைப் பூதாகாரமாகப் பெரிய அளவில் விளம்பரப்படுத்தினர்.

இந்தியப் பார்ப்பன-பனியா ஊடகங்களும், டிவிட்டர், ஃபேஸ் புக் எனப்படும் கருத்துப் பரப்பு ஊடகங்களும் அதையே செய்தன.

மேற்கண்ட எல்லா வலிமையான ஊடகங்களும், பிரதமர் வேட்பாளரான பாரதிய சனதாவின் மோடியால் 2002இல் குசராத்தில் 2000 இஸ்லாமி யர்களைப் படுகொலை செய்து மதவெறிக் கொடுமை இழைக்கப்பட்டதையும், பல நூறாயிரம் இஸ்லாமியர்கள் குசராத்தில் அச்சத்தால் இடம்பெயர்ந்து அகதிகளாக ஆக்கப்பட்டதையும் அடியோடு மறைத்தன.

மேலும் மோடிக்குக் கை கொடுக்க, இதுபற்றி உச்சநீதிமன்றம் சொன்ன கருத்தும், பா.ச.க.வுக்கு ஆதரவாக அமைந்தது.

“வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்காதவர்கள் பாவிகள்” என்பதுபோல, இந்தியா முழுவதிலும், எல்லா மாநிலங்களிலும் எல்லாக் கட்சிகளாலும் பணம் தருவது  நடைமுறைப்படுத்தப்பட்டது.

எனவே, தேர்தல் வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 543 இடங்களில் 282 இடங்களை பா.ச.க. எளிதாகக் கைப்பற்றிவிட்டது, இந்த 282 பேர்களுள் மு°லீம் ஒருவர்கூட இல்லை.

அதிலும் பத்து மாநிலங்களில் 100க்கு 100 இடங் களையும் பா.ச.க. பெற்றுவிட்டது. பெரிய மாநிலமான உ.பி.யில் 80இல் 73 இடங்களைக் கைப்பற்றி, யாதவ சாதியை மட்டுமே கை முதலாகக் கொண்ட சமாஜ்வாதிக் கட்சி, சமார் சாதியை முதலீடாகக் கொண்ட பகுஜன் சமாஜ் கட்சி களை மண்ணைக் கவ்வச் செய்துவிட்டது. பீகாரிலும் அப்படியே நடந்தது.

இந்த இரண்டு மாநிலங்களிலும் போட்டியிட்ட சாதி முதலீட்டுக் கட்சிகளுக்குக் கொள்ளையடிப்பதும், பதவி பெறுவதும் மட்டுமே கொள்கை.

ஆனால் பாரதிய சனதாவுக்கு ஒரு தெளிவான கொள்கை இருக்கிறது.

1.  இந்துத்துவா கொள்கையைக் கட்டிக்காப்பது.

2. அயோத்தியில் இராமர் கோயிலைக் கட்டுவது.

3. இராமாயணம், மகாபாரதம், கீதை ஆகிய இதிகாசக் கொள்கைகளை மக்களிடம் செல்வாக்குப் பெறச் செய்வது; இராம இராச்சியத்தை அமைப்பது.

4. வருணாசிரமத்தைக் காப்பது.

5. இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், பவுத்தர், சமணர் முதலான 20 கோடி மதச் சிறுபான்மை மக்களை இந்துத்துவப் பண்பாட்டுக்கு அடங்கியிருக்கும் படி அச்சுறுத்துவது.

இவற்றைப் பற்றி, இராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்கம் 1948 பிப்பிரவரியில் நாகபுரியில் எடுத்த முடிவை எப்படியாவது நிலைநாட்டுவது- அதற் காக இந்திய ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது மட்டுமே பா.ச.க.வின் திட்டவட்டமான இறுதிக் குறிக் கோள். அது, அட்டியின்றி 2014இல் நிறைவேறி விட்டது.

உ.பி., பீகார், ம.பி. முதலான மாநிலங்களில் கால் கொண்ட லோகியா சோசலிசவாதிகளின் கட்சிகள் யாதவ், லோதி, குர்மி, குஷ்வாகா (கொய்ரி) சாதிக்காரர்கள் பதவி பெறுவதற்கும் சாதிச் சேனைகளை வைத்துக் காலித் தனம் செய்து  தீண்டப்படாதாரை ஒடுக்கி, அரசியல் பதவி பெற முயற்சிப்பதோடும் நின்றுவிட்டன.

அதற்கு முன்னரே, 1916இல் தென்னாட்டில் தோற்று விக்கப்பட்ட திராவிடக் கட்சியின்  பிறங்கடைக் கட்சிகள் - இந்திய அளவில் பார்ப்பன அரசியல் ஆதிக்கம், உயர் அதிகாரவர்க்கத்தில் உயர்சாதி ஆதிக்கம் ஒழிப்பு என்ப தைப் புறக்கணித்துவிட்டுத் தமிழ்நாட்டில் மட்டும் மய்யங் கொண்டு, இடஒதுக்கீட்டை மட்டும் காப்பாற்றிக் கொண்டது.

இந்தி ஆட்சி மொழி என்பதை அகற்ற எதுவும் செய் யாமல் தோற்றுவிட்டது; மாநில அரசிடம் இருந்த  கல்வித் துறை அதிகாரத்தை மீட்டுப் பெற எதுவும் செய்யாமல் பெயரளவுக்கு மாநில சுய ஆட்சி பற்றிப் பிதற்றி வருகிறது. நாட்டுப் பிரிவினைக் கோரிக்கையைப் பதவிகளைக் கைப்பற்றுவதற்காகவே கைவிட்டுவிட்டது.

மக்களை உதாசீனம் செய்வதிலும், மக்களைக் கசக்கிக் கொள்ளையடிப்பதிலும், கல்வியைத் திட்ட மிட்டுப் பாழாக்குவதிலும், மதுவை ஆறாக ஓடச் செய்திவலும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. இரண்டு கட்சிகளும் ஒரே தன்மை வாய்ந்தவை.

இலவசங்களைக் கொடுத்து, இழிந்த பிச்சைக்காரப் புத்தியைத் தமிழரிடம் வளர்த்து, தேர்தல் காலத்தில் வாக்காளர்களுக்குத் தலைக்கு  ரூபா 200, 500, 1000; ஒரு மதுப்புட்டி; ஒரு பொட்டலம் கறிச்சோறு கொடுத்து - மாறி, மாறி 1980 முதல் 2009 வரை தி.மு.க. வெற்றி, அ.தி.மு.க. வெற்றி என்று 37, 38, 40 நாடாளுமன்ற இடங் களையும் இவர்கள் மாறி மாறிக் கைப்பற்றினார்கள்.

ஆனால் 2014 தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு, 37 இடங்களைத் தமிழகத்தில் கைப்பற்றி - இந்திய அளவில், மக்கள் அவையில், மூன்றாவது இடத்தைப் பெற்றுவிட்டது.

தமிழகச் சட்டமன்றத்துக்கான 234 தொகுதிகளில் 217 தொகுதிகளில் அ.தி.மு.க. 2014 தேர்தலில் நல்ல அளவுக்கு வெற்றி பெற்றுவிட்டது. இது 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. 234 இடங்களில், பெரிய அளவிலான எண்ணிக்கையில் வெற்றி பெற ஓர் அடித்தளமாகும்.

2016இல் இப்படி நேரக் கூடிய வாய்ப்பைத் தடுக்க தி.மு.க. முயற்சிக்கும். ஆனால் இறுதி முடிவு மக்கள் கையில்தான்.

அனைத்திந்திய அளவிலான டாக்டர் அம்பேத்கரின் “இந்தியக் குடிஅரசுக் கட்சி” மகாராட்டிரம் என்கிற மும்பை மாநிலத்திலும், உ.பி.யிலும் 1957 வரை மிகச் செல் வாக்கோடு திகழ்ந்தது. அம்பேத்கர் அவர்கள், தாம் வாழ்ந்த காலத்திலேயே, தம் தளபதிகள் நல்லவர்களாக இல் லையே என்று கவலைப்பட்டார்.

1957, 1962 தேர்தல்களுக்குப் பிறகு இந்தியக் குடி அரசுக் கட்சி, மாநில மேலவை, மாநிலங்களவை  நியமனப் பதவிகளுக்காக, காங்கிரசின்  தொங்கு சதையாக மாறி அழிந்துவிட்டது.

2014இல், மகாராட்டிரத்தில் சிவசேனாவும், பா.ச.க.வும் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிக் கொண்டன.

சர்க்கரை ஆலைக் கொள்ளையரான சரத்பவாரும், கிருஷ்ணா குழுவின் ஆய்வு அறிக்கையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய காங்கிரசும் இத்தேர்தலில் அங்கு மண்ணைக் கவ்வின.

“பகுசன்” என்றால், “பெரும்பான்மை மக்கள்” என்று மட்டுமே பொருள்.

இந்து பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் இ°லாமியர், சீக்கியர், கிறித்து வர் என்கிற - மக்கள் தொகையில் 83 விழுக்காடு பேராக உள்ள மக்கள் மட்டுமே “பகுசன்” ஆவர்.

“இவர்களை  ஓரணியாகத் திரட்டி இந்திய அரசைக் கைப்பற்றுவோம்” என்று தான், மேதை அம்பேத்கர் 1948இல் ஒரு மாநாட்டில் அறிவித்தார். அதுவே அவரின் அரசியல் குறிக்கோள்.

அம்பேத்கரியத் தலைவர்களில் எவரும் - பிற்படுத்தப் பட்ட வகுப்புத் தலைவர்களில் எவரும் இந்தக் குறிக் கோளை ஒரு வேலைத் திட்டமாகக் கொண்டு முயலாத நிலையில், 1976 முதல் இத்திசையில் முயன்றவர் கன்ஷிராம் ஒருவரே.

2-12-1979 முதல் 1984 முடிய இந்நோக்குத்துக்காக கன்ஷிராம் நடாத்திய நாகபுரி, தில்லி, சண்டிகர், பூனா, மீண்டும் தில்லி ‘பாம்செஃப்’ மாநாடுகளில் நான் சிறப்பு விருந்தாளியாகப் பங்கேற்றேன். பெரியாரையும், சிறீ நாராயண குருவையும், இடஒதுக்கீட்டுக் கொள்கையை யும் பற்றி “பாம்செஃப்” அமைப்பினருக்குப் புரிய வைக்க நான் பயன்பட்டேன்.

1. “பாம்செஃப்”, 2. DS4, 3. “பகுஜன் சமாஜ் கட்சி” ஆகிய மூன்று அமைப்புகளையும் - முறையே,

1) “வெகுமக்களை ஒற்றுமைப்படுத்துவதற்காக”வும்; 2) இவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்துவதற் காகவும்; 3) சட்ட அவைகளைக் கைப்பற்றுவதற்காக வும் என்றே திட்டமிட்டு அவர் அமைத்தார்.

இந்த எல்லா அமைப்புகளையும் கைப்பற்றிக் கொண்ட ஆசிரியை மாயாவதி “பகுஜன்” - என்பதை அடியோடு விடுத்து, “சர்வஜன்” என்று அறிவித்து - சமார் + பார்ப்பனர் + சத்திரியர் + வைசியர் + பூமிகார் + லோதி சாதியி னரின் கூட்டணி ஆதிக்கத்தில் மூன்று தடவைகள் உ.பி. முதலமைச்சர் ஆனார். அவருக்கு எல்லாத் தொல் லைகளையும் தந்த முலாயம் சிங் என்கிற மூர்க்கர் உ.பி.யில் 80இல் 4 இடங்களை மட்டுமே பெற்றார்; மாயாவதி ஒரு இடம்கூடப் பெறவில்லை.

ஆறு இடங்களைப் பெற்றுள்ள ஜம்மு-காஷ்மீரில் 3 இடங்களைப் பா.ச.க. முதன்முதலாக வென்றெடுத்துள்ளது.

குடும்ப அரசியலையும்,  பணக்கொள்ளையையும் தொடர்ந்து நடத்திவரும் - நேரு குடும்பம் - ஷேக் அப் துல்லா - முலாயம்சிங் - லாலுபிரசாத் - சரத்பவார் - கலைஞர் குடும்பங்களின் தலைமையிலான கட்சிகள் படுதோல்வி  அடைந்தன.

பா.ச.க. அறவே இடம்பெறாத மாநிலம் ஒடிசா. அது தொடர்ந்து 30 ஆண்டுகளாக - “பட்நாய்க்” என்கிற காய°த்த சாதிக்காரர் ஆட்சியில் இருப்பது ஆகும்.

2014 தேர்தலில், தமிழகத்தில், 39இல் இரண்டு இடங்களை பா.ச.க. அணி பெற்றது. ஒன்றில் கிறித்து வருக்கு எதிராக இந்துத்துவாவை முதலீடாகக் கொண்டு பா.ச.க. வேட்பாளர்; இன்னொன்றில் வன்னியர் சாதி அடிப்படையிலான கட்சியின் வேட்பாளர் என இருவர் வெற்றி பெற்றனர்.

தமிழகத்தில் 37 இடங்களைக் கைப்பற்றிய அ.தி.மு.க. - வகுப்புவாரி இடஒதுக்கீடு ஒன்றில் தவிர - மற்றெல் லாத் துறைகளிலும் நல்ல இந்துத்துவா கொள்கை ஆதரவுக் கட்சியே ஆகும்.

இன்று, இந்திய ஆட்சியை, ஊட்டமான இந்துத்துவா கொள்கைக் காவலர் - இன்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்ட ராக விளங்கும் நரேந்திரமோடி, சொந்தக்காலில் நிற்கப் போதிய பா.ச.க. பெரும்பான்மையுடன் கைப்பற்றியுள் ளார்.

பாரதிய சனதா திட்டமிட்டு வளர்ந்த விசையை இதோ பாருங்கள் :

1989       -              85           1999       -              180

1991       -              120         2004       -              112

1996       -              161         2009       -              116

1998       -              182         2014       -              282

பாரதிய சனதா தனித்து 282; பாரதிய சனதா கூட்டணி உறுப்புக் கட்சிகள் 54; ஆகமொத்தம் 336 இடங்கள்.

இந்த, 543க்கு 336 கூட்டணிப் பெரும்பான்மை என்பது, இந்துத்துவா கொள்கையை வெற்றி பெற வைத்திட உண்மையில் மிகவும் போதுமானது.

இது பற்றி முதலில் கவலைப்பட வேண்டியவர்கள் - இந்தியா மதச்சார்பற்ற - சமதர்ம நாடாக ஆக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளைக் கொண்ட பொதுவு டைமை பேசும் நாடாளுமன்றக் கட்சியினரே ஆவர்.

இன்று அக்கட்சிகளின் நிலை மிகவும் ஈனமானது.

1975 முதல் கம்யூனிஸ்டுக் கட்சிகள் வெளியிலிருந்து இந்திய ஆளும்கட்சிக்கு ஆதரவு, அமைச்சரவையில் பங்கேற்று ஆளுங்கட்சிக்கு ஆதரவு என்ற இரண்டு வகை நிலைப்பாடுகளை மட்டுமே மேற்கொண்டார்கள்.

லெனினியத்தை ஏற்ற அவர்கள் - ஸ்டாலினை நேரில் பார்த்து அவரை அறிந்த அவர்கள் - மாவோ வைக் கண்டு பேசிய அவர்கள் தம் அணுகுமுறையில் ‘சோவியத்து அணுகுமுறை’, ‘சீனத்து அணுகு முறை’ என்று மட்டுமே நம்பிச் செயல்பட்டார்கள். “இந்தியாவுக்கான அணுகுமுறை” என எதையும் அவர்கள் உருவாக்கவுமில்லை; பின்பற்றவும் இல்லை.

1.காட்டாக, இலெனினும், ஸ்டாலினும் வென்றும், கட்டியும், காத்தும் சென்ற மொழிவழித் தேசியத் தன்னாட்சி உறுப்புகளைக் கொண்டதாக “இந்தியா” அமைக்கப்பட வேண்டும்  என்கிற திசையில் அவர்கள் பயணிக்கவில்லை.

2. இன்றைய அரசமைப்புச் சட்டம் பிறவி - நால்வருண ஏற்பாட்டையும், பழைய பழக்கவழக்கச் சட்டம் என் பதையும் பாதுகாக்கிற மதச்சார்பு உள்ளது - மதச் சார்பு அற்றது அல்ல என்பது பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

3. சென்னை மாகாணத்திலும், இன்றைய தமிழகத்தி லும் 1927 முதல் தொடர்ந்து, சாதி அடிப்படையில் கல்வியிலும் அரசு வேலையிலும் தரப்படுகிற இட ஒதுக்கீடு-இந்திய நடுவண் அரசிலும், இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் வரவேண்டும் என்பது பற்றி அவர்கள் கவலைப்படவே இல்லை.

அத்துடன், “பெரியார் ஒரு பிராமணத் துவேஷி”, “அம்பேத்கர் ஒரு ஆதித்திராவிடர் தலைவர்” என்று மனதறிந்து பொய்யே பேசினர்.

4.மதம் என்ற பேரால் மக்கள் மூடநம்பிக்கையாளர்களாகவும், சடங்குப் பண்பாடு தோய்ந்தவர்களாகவும் இருப்பதை மாற்றிட வேண்டும் என்று அவர்கள் கவலைகொள்ளவே இல்லை.

5.பெரிதும் வேளாண்மையை நம்பியே 65 விழுக் காடு மக்கள் உள்ள இந்தியாவில், பாசன வசதிப் பெருக்கம். மின்சாரப் பெருக்கம், வேளாண் நிலங் களைப் பிரித்துத்தரும் நில உச்சவரம்புச் சட்டம்  அமல் இவை வந்து சேர எதுவும் செய்யாமல் - மாத ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்களின் ஊழியர்கள் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் அமைப்புகளைக் கட்டிக்காத்து, கூலி உயர்வு, பஞ்சப்படி உயர்வு, போனசில் நல்ல பங்கீடு  பெற்றுத் தருவது என்பவை மட்டுமே வேலைத் திட்டங்கள் எனக் கொண்டு செயல்பட்டனர்.

இவை சரியா என, அன்புகூர்ந்து இவர்கள் சிந்திக்க வேண்டும்.

இடதுசாரிக் கட்சிகள் மக்கள் அவையில் பெற்ற இடங்கள் :

2009 இல் :

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - 16

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி                        -4

புரட்சிகரச் சோசலிஸ்ட் கட்சி                             - 2

ஃபார்வர்டு பிளாக்                                              - 2

                                                                        -----

543க்கு                                                               24

                                                                        -----

2014 இல் :

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) - 9

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி                      - 1

மற்ற இடதுசாரிக் கட்சிகள்                               - 0

                                                                      -----

543க்கு                                                            - 10

                                                                      -----

மேலே சொல்லப்பட்டவற்றின் ஒட்டுமொத்த விளை வாகத்தான் அவர்கள் இத்தேர்தலில் புறங்காணப் பட்டனர். நிற்க.

திராவிட நாடாளுமன்றக் கட்சிகளும், தமிழ்ப் பாதுகாப்பு அமைப்பு, தமிழர் விடுதலை கோரும் அமைப்பி னரும் பின்கண்ட செய்திகளைப் பற்றி ஆழ்ந்து எண்ண வேண்டும்.

1. 1965 முதல் ‘இந்தி தான் இந்தியாவின் அலுவல் மொழி’ என்பதும்; ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரையில் (அதாவது இவர்கள் இந்தியை ஏற்கிற வரையில்) ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக இருக்கும்’ என்பதும் சேர்ந்து, இந்தியை 2014 இலேயே ஆட்சி மொழியாக ஆக்கிவிட்டன. திராவிடக் கட்சிகள் இதை முறியடிக்க, 1957 முதல் 2013 வரையில் நாடாளுமன்றத்திலும், இந்தி பேசும் மாநிலங்களிலும் இதுபற்றி எடுத்த நடவடிக்கைகள் என்ன? பயன் என்ன? ஏன் ஏதும் செய்யவில்லை?

2. 1976 முடிய – IIT போன்ற தேசியக் கல்வி நிறு வனங்கள் தவிர்த்த மற்றெல்லாக் கல்வித்துறை அதிகாரங்களும் மாநில அதிகாரப் பட்டியலில் (State List)) இருந்தன. 1977 சனவரி முதல் அவ் அதிகாரங் கள் பொது அதிகாரங்கள் பட்டியலுக்கு (Concurrent List)) மாற்றப்பட்டன.

இந்த அதிகாரங்களை மீட்டுப்பெற தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகள் முதலான நாடாளுமன்றத் தமிழ்நாட்டுக் கட்சிகள் என்ன செய்தன? ஏன் செய்யவில்லை? இனி எப்போது செய்வார்கள்?

3. உச்சநீதிமன்றம் “பாபர் மசூதியின் கூம்புக்கு (Dome) நேர் கீழே தான் இராமர் பிறந்தார் என்று இந்துக் கள் நம்புகிறார்கள்” என்றும்; “இந்துமாக் கடலில் உள்ள சேது அணையை இராமர்  கட்டினார் என்று இந்துக்கள் நம்புகிறார்கள்” என்றும் கூறி,

1. அயோத்தியில், அரசு இராமர் கோயில் கட்டலாம்; 

2. சேதுக் கால்வாய்த் திட்டம் - சேது அணைப் பாதையில் கட்டப்படக்கூடாது எனக் கூறியதே - இதற்குக் காங்கிரசு, தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் உள்ள நாடாளுமன்றக் கட்சிகளும், தமிழ்-தமிழர் அமைப்புகளும் முன் வைக்கும் தீர்வு என்ன? அத்தீர்வை நோக்கிய செயல்பாடு என்ன?

இந்நிலையில் - வருண ஒழிப்பு, மதச்சார்பற்ற தன்மை, சமதர்ம சமுதாய அமைப்பு இவை அரசியல் சார்ந் தவை - அரசமைப்பு மூலம் தீர்க்கப்பட -  அடையப்பட வேண்டியவை என்பதைத் தமிழகத்திலுள்ள மார்க்சிய - லெனினிய - பெரியாரிய - அம்பேத்கரிய வாதிகள் புரிந்து கொள்ளுவதும், அது வந்து சேர எல்லாம் செய் வதுமே தமிழ் மக்கள் முன் இன்று உள்ள தலையான கடமையாகும்.

Pin It