மன்னராட்சி, மக்களாட்சி, அல்லது வேறு எந்த ஆட்சியாக இருந்தாலும் ஆளப்படுவதற்கு மக்கள் வேண்டும். சிங்கக்கூட்டமோ புலிக்கூட்டமோ வாழவேண்டுமானால் அப்பகுதியில் மான்கூட்டமோ மாட்டு மந்தைகளோ வரிக்குதிரைக் கூட்டமோ இருக்கவேண்டும். ஒரு வேட்டை விலங்கு தம்மினத்தையே வேட்டையாடுவதில்லை. வேட்டையாடப்படும் ஒரு விலங்கு தம்மை வேட்டையாடும் விலங்குகளை எதிர்த்து நிற்கமுடிவதில்லை. ஆனால் மாந்த இனத்தில் மட்டும் மக்களிலேயே ஒருவன் அதிகாரமிக்க ஒரு வேட்டைக்காரனாக மாறித் தம்மினத்தையே வேட்டையாட முடியும். மக்களாட்சியிலும் இது முடியுமே. மக்களாட்சியில் ஒரு கூட்டமே அதிகாரத்தைப் பங்கிட்டுக்கொள்கிறது. மனித இனத்துக்கும் விலங்கினத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடு இதுதான். மனிதன் பகுத்தறிவுவாதி அல்லவா?

மக்கள் என்றால் என்ன? அல்லது யார்? அதிகாரத்திலிருப்பவர்கள் தங்களுடைய ஆணைகளை, விருப்பங்களை இறக்கிவைத்து இன்புறுவதற்குரிய ஒரு இடம்தான் “மக்கள்” என்பதாகும். இப்படித்தான் நாம் விளக்கம் கொடுக்க முடிகிறது. “மக்களால் மக்களுக்காகவே ஆட்சி” என்பது ஒரு பாசாங்கு, ஏமாற்றுவேலை. மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு துறைகள் உண்மையில் அதிகார நடுவங்களே. மக்கள் தன்னுரிமையும் விருப்புரிமை (சுதந்திரம்)யும் உடையவர்கள் என்பது ஒரு வெளிக்கூச்சல். அச்சுறுத்தல் என்பது அதிகாரத்தின் உள்ளீடு. அதிகாரம் பதவியினால் கிடைக்கிறது. பதவிச் சுகம் மிகப் பெரியது.

நிலப்பிரபுத்துவ மன்னராட்சிகளைத் தூக்கியெறியக் குருதி சிந்திப் போராடியது என்னவோ மக்கள்தான். ஆனால் அவர்களுக்குத் தலைமை தாங்கியது என்னவோ முதலாண்மையாளர்கள்தான். ஆக மக்களாட்சி என்பது முதலாளிகளின் ஆட்சி என்று பொருள். அதிகாரம் காலம்தோறும் இடம் மாறுகிறது. அதிகாரம் செலுத்தப்படும் முறை மாறுகிறது. ஏழை மக்களின் உழைப்பை முதலாளிகளுக்குப் பெற்றுத்தர அது செயல்படுகிறது. அதற்குக் கூலியாகப் பெற்ற கையூட்டால் அவ்வரசியல் வாதிகள் (மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்) மன்னர்களை விடப் பகட்டாக வாழ முடிகிறது. மக்களாட்சிக் காவலர்கள் “தெய்வம்’ போல, அவர்கள் செய்வது மக்களுக்குத் தெரியாது.எதிர்ப்பவர்களை-அவர்களுடைய வண்ட வாளங்களை வெளியிடுபவர்களை அடக்க, அழிக்க அவர்கள் செய்யும் கீழறுப்பு வேலைகள் யாருக்கும் வெளிப்படையாகத் தெரியாது. மன்னன் அன்றே கொல்வான் என்பது வெளிப்படையானது.

மக்களாட்சி மெய்யியல்களைக் கருத்தியலாக வெளியிட்டால் சலிப்புத் தட்டும் என்பதால் மக்களாட்சியின் மாண்புகளை விளக்கச் சில நிகழ்வுகளை முன் வைக்கிறேன்.

1. இந்திய அரசமைப்புச் சட்டம் “எல்லாரும் சமம்’ என்று கூறுவதாக எல்லா அரசியல்வாதிகளும் கூறுகின்றனர். ஆனால் அதே சட்டம் பழைய பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்ட சட்டங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டது. அதாவது பார்ப்பான் - சூத்திரன் என்ற வருண அடிப்படையைக் கொண்ட சாத்திரங்களையும் ஆகமங்களையும் அது ஏற்றுக்கொள்கிறது. அப்படியென்றால் பின் தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களை ஏமாற்றத்தானே “சமம்” என்ற கட்டுக்கதை! சமம் எங்கிருக்கிறது?

சான்றாகத், திருச்செந்தூர் முருகன் கோயிலில் பதினாறு இலக்க உரூபாய் செலவில் வேள்விச்சாலை (யாக குண்டங்கள்) அமைத்தார்கள். நாட்டில் மழை இல்லாமல் போய்விடுமே என்ற அச்சத்தில் ஒரு பித்தர் மண்பூசை (பூமிபூசை) செய்யாமல் வேள்விச்சாலைகள் அமைத்தது குற்றம் என வழக்குத் தொடுத்தார். மதுரை நீதிமன்றம், அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது என்றா கூறியது? அல்லது “பரிகாரம்” செய்துவிடுங்கள் என்று கூறியதா? எல்லா ஆகமங்களையும் படித்துவிட்டு அது குற்றந்தான் என்று கூறிவிட்டது. மீண்டும் ஒரு பதினேழு இலக்க உரூபாய் செலவு. ஆகமங்கள் அரசமைப்புச் சட்டமாகச் செயல்படுகிறதா இல்லையா?

2. அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமைகள் பகுதியில்தான் பின்தங்கியோருக்கும், பட்டியல் சாதியினருக்கும், பழங்குடிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் பிரிவுகள் உள்ளன. இப் பிரிவுகள் நீக்கப்படும் வரையில் இட ஒதுக்கீடு என்பது அடிப்படை உரிமையாக இருக்கும் என்று நாம் நம்புகிறோம். “ஆனால், அது ஒரு சலுகை தானே தவிர அடிப்படை உரிமை அல்ல என்கிறது உச்சநீதிமன்றம்.” அப்படியெனில் அது மேட்டுக்குடியினர்க்குரிய சட்டமா? பெரும்பான்மையான மக்களுக்குரிய சட்டமா? சமம் எங்கே இருக்கிறது?

3. அரசியல் சட்டம் இட ஒதுக்கீட்டிற்கு மேல்எல்லை எதுவும் விதிக்கவில்லை. ஆனால் எந்த அரசும் தனது ஆட்சிப் பரப்பில் அய்ம்பது விழுக்காட்டிற்குமேல் ஒதுக்கீடு செய்தல் கூடாது எனப் புதிய அரசமைப்புச் சட்டப்பிரிவையே உச்ச நீதிமன்றம் உருவாக்குகிறது. எது பெரியது? அரசியல் சட்டமா? உச்ச நீதிமன்றமா? இது மேட்டுக்குடிக்குரிய சட்டமா? ஒடுக்கப்பட்டோரை ஒதுக்கும் சட்டமா?

4. உச்ச நீதிமன்றம், “எதற்கெடுத்hலும் கண்ணை மூடிக்கொண்டு தடைவிதித்தல் கூடாது” எனக் கீழ் நீதிமன்றங்களுக்குப் பொதுவான ஆணை ஒன்றைப் பிறப்பித்தது. அந்த அடிப்டையில், பல இலக்கம் மலைவாழ் பழங்குடியினர் தங்கள் வாழ்வாதாரங்களை இழப்பதால் நருமதா அணைத் திட்டத்திற்குத் தடைவிதிக்க வேண்டுமென மேதா பட்கர் வழக்குத் தொடுத்தபோது, பலகோடி உரூபாய்கள் செலவழிக்கப் பட்டுவிட்டன என்று கரணியம் காட்டித் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. பலகோடி உரூபாய்கள் செலவழித்த பின்னரும் எந்த மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்காத போதும் சேதுக்கால்வாய்த் திட்டத்திற்கு ஒரு கட்டுக்கதை (புராணக்கதை) நாயகனை வைத்து அதே நீதிமன்றம் தடைவிதித்து விட்டதே! ஏழைகள் வாழ்வை இழக்கலாம்; ஒரு கட்டுக்கதை நாயகனுக்கு மாசு உண்டாகலாமோ? எனவே, சட்டம் மக்களுக்காக என்று சொல்ல முடியுமா?

போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்தியாவிலுள்ள அத்தனை கோயில்களையும் இடிக்குமாறு உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளதையும் மனங்கொள்ளவேண்டும். ஆனால் ஒரு கட்டுக்கதைக்கு அது ஏன் முதன்மை அளிக்கிறது? பார்ப்பனியப் பாதுகாப்புத்தானே? இராமர் பாலம் கட்டியதை எந்த அகழ்வாய்வும் மெய்ப்பிக்கவில்லை. ஒருவேளை நீதிமன்றத்துக்கு வேறு வழியில், அணை இருப்பது தெரியுமோ என்னவோ?

4. தருமபுரியில் மூன்று பெண்களை உயிரோடு வைத்து ஒரு பேருந்தைச் சிலர் கொளுத்தினார்கள். அது ஈவிரக்கமற்ற செயல்தான். அப்போது கொளுத்தியவர்களுக்கு எதிரான கட்சி ஆட்சி நடத்தியது. கொளுத்தியவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டது. ஆட்சி மாறியதும் சாட்சிகள் தடம் புரண்டனர். மீண்டும் ஆட்சி மாறியது. ஆனாலும் பெண்களை இழந்த பெற்றோர்களின் இடைவிடாத முயற்சியினால்தான் வழக்கு முடிவுக்கு வந்தது. குற்றவாளிகள் தண்டனை பெற்றனர்.

மதுரையில் “தினகரன்” நாளிதழின் அலுவலகத்தில் மூன்று பேர்களை உயிரோடு வைத்துச் சிலர் கொளுத்திவிட்டனர். இது என்ன மாந்தநேயச் செயலா? யார்மேலும் வழக்கு நடந்ததாகத் தெரியவில்லை. இறந்தவர்களுக்கு வேண்டியவர்கள் யாருமில்லையோ? இதுவும் மக்களாட்சியின் மாண்புதானே.

5. மக்களாட்சியில் சாதனைகளே இல்லையென்றும் கூறிவிட முடியாது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் சொத்துக்களை மதிப்பிடுங்கள். அவர்கள் ஏற்ற பதவிக்குத் தகுந்தாற்போல் பதவி வகித்த காலத்திற்கு நேர் விகிதத்தில் சொத்துக்கள் பெருகியிருக்கும் சிலருக்குப் பலகோடிக் கணக்கில் சொத்துக்கள் இருக்கும். எல்லாம் பதவிக்காலத்தில் அவர்கள் உழைத்துச் சம்பாதித்தவை. இதைப்போல முதலாளிகள் இருநூறு மடங்கு சுரண்டி இருப்பார்கள் என்பதையும், மக்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் ஒருபகுதி இவர்களின் பைக்குள் சென்றுவிடுகிறது என்பதையும் காட்டுகிறது. இல்லையெனில் மக்கள் தொகையில் மூன்றிலொரு பங்கினர் வறுமைக்கோட்டிற்குக் கீழே எப்படி இருக்கமுடியும்?

6. நாடு விடுதலை அடைந்து அறுபத்து மூன்று ஆண்டுகளாக இந்த அரசு மலைவாழ் பழங்குடியினரைத் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. அப்பாவி மக்கள் போராடினார்களா? ஊர்வலம் போனார்களா? அவர்களின் வாழ்வாதாரங்களான மலைகளையும் காடுகளையும் சுரண்டுவதறகுத் தனியார்களுக்குத் தாராளமாக அரசு உரிமங்கள் வழங்குகின்றது. மலைவாழ் மக்கள் எதிர்ப்புக் காட்டினால் அரசு அதனைப் பயங்கரவாதம்’ என்று குற்றம் சாட்டுகிறது. காந்திய வழியில் போராடினால் இந்த அரசு கேட்கும் என்பதுபோல் பாசாங்குக் காட்டுகிறது. இந்த அரசு ஏழை எளிய மக்களுக்காக என்று யாராவது நெஞ்சில் கைவைத்துக் கூறமுடியுமா?

7. கெட்டுப்போக இருக்கும் உணவுத்தானியத்தை உடனடியாக ஏழைகளுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கூறியது. உச்சநீதிமன்றம் கருதுவதுபோல் பங்கிடுவது அவ்வளவு எளிதல்ல என்கிறார் உணவு அமைச்சர். அது கருத்து அன்று; ஆணை என்கிறது உச்சநீதிமன்றம். தலைமை அமைச்சரோ நாணமின்றி, “முப்பத்தேழு விழுக்காட்டு மக்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழேயுள்ளனர். அவர்களுக்குப் பங்கிடுவது இயலாதது. நீதிமன்றங்கள் நிருவாகத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது” என்கிறார். இப்படிக் கூற அவர் வெட்கப்படவில்லை. ஏழை மக்களுக்கு அளிக்கும் அளவீட்டை அதிகரிக்கலாம். அல்லது அரசாங்கத்தின் உதவியில் மட்டுமே வாழ்கிற ஆதரவற்றோர்கள், வயதானவர் ஆகியோர்களுக்குப் பங்கிட்டு அளிக்கலாம். ஆனால் உணவுத் தானியம் அழிந்தாலும் அழியட்டும், பிரித்துக்கொடுக்க முடியாது என்பது பணக்காரன் வீட்டுப் பேச்சுத்தானே.

“மக்களாட்சி என்பது மக்களுக்காக” என்பது ஒரு ஏமாற்று வேலையே. ஆட்சியென்பது அதிகாரத்தின் கையில் இருக்கிறது. அதிகாரம் முதலாளிகளின் ஏவல்நாயாக மாறுகிறது. மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் பெருத்த வேறுபாடில்லை. இரண்டுமே எளிய மக்களை அச்சுறுத்தவே செய்கின்றன. தேர்தல் காலத்தில்மட்டும் ஆளப்படுவோன் கொஞ்சம் தலைநிமிர்ந்து நிற்கிறான். அவ்வளவே.

மக்களாட்சியில் அரசியல் என்பது வணிகம்போல் ஒரு தொழிலாகிவிட்டது. அத்தொழிலில் எல்லாராலும் ஈடுபட முடிவதில்லை. ஆனால் எதுவுமில்லாதவன்கூட இதில் ஈடுபடலாம். ஒரு தடவை அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டால் அவன் முதலாளியாகிவிடுவது திண்ணம். மக்களாட்சியில் மக்கள் அடுத்த தேர்தல் எப்போது வரும்? என்ன இலவசம் கிடைக்கும்? என்று காத்திருக்க வேண்டியதுதான். இவையே இன்று நாம் காணும் மக்களாட்சியின் மாண்புகள்.

Pin It