வேதாந்தா என்னும் நிறுவனம் சுரங்கங்களில் இருந்து தாதுப் பொருள்களைத் தோண்டி எடுத்து உலோகங்களைப் பிரித்து எடுக்கும் தொழிலை மேற்கொள்வதற்காக இலண்டன் பங்குச் சந்தையில் திசம்பர் 2003இல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்திற்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொழில், வணிகத் துறையின் ஒப்புதல் இருந்ததால் இதன் பங்குகள் வேகமாக வளர்ச்சியடைந்தன. ஆனால், இந் நிறுவனம் சுற்றுச் சூழலைப் பற்றிக் கவலைப்படாமல் நடந்து கொள்வதைப் பார்த்த மக்களில் சிலர் இதிலிருந்து விலகிக் கொண்டனர். மக்களின் மன ஓட்டத்திற்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து திருச்சபையும் இந் நிறுவனத்திலிருந்து தன்னுடைய பங்குகளைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.

இப்படி விவரம் அறிந்த மக்களால் ஆபத்து எனப் புரிந்து கொண்டு விரட்டியடிக்கப்படும் தொழில்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் புகலிடம் கொடுப்பதற்கென்றே உள்ள நாடு பாருக்குள்ளே நல்ல நாடான பாரதநாடு தானே? அமெரிக்க மக்களால் விரட்டியடிக்கப்பட்ட யூனியன் கார்பைடு நிறுவனம் போபாலில் வரவேற்கப்பட்டு வரலாறு காணமுடியாத படுகொலைகளைச் செய்துவிட்டு, வரலாறு காணமுடியாத அளவில் அனாயாசமாகத் தப்பிச் செல்லவில்லையா? யூனியன் கார்பைடு மத்தியப் பிரதேசம் வரவேற்றது போல், வேதாந்தாவை ஒரிசா வரவேற்றது.

ஒரிசா மாநில அரசு நியமகிரி என்ற மலைப்பகுதியில் உள்ள அலுமினியக் கனிமங்களைத் தோண்டி எடுத்துச் செல்ல இந்நிறுவனத்தை வரவேற்றது. இதனால் அப்பகுதியில் வாழும் பழங்குடியினரின் வாழ்க்கை முற்றாக நசிந்து விடும் என்று சமூக நல ஆர்வலர்கள் எவ்வளவு எடுத்துக் கூறியும் ஒரிசா அரசாங்கம் செவிசாய்க்கவில்லை. இதனை எதிர்த்துப் பல சமூகநல ஆர்வ அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடுத்தன. (நம் நாட்டில் பொது நன்மைக்காகப் பணத்தைச் செலவிடும் மக்கள் மிகக் குறைவு. அவர்களும் எந்த ஒரு சிக்கலையும் நீதிமன்றத்திடம் ஒப்புவித்துவிட்டு, தங்கள் பெரிதாகச் சாதித்துவிட்டதாக நினைத்து அதன்பின் செயல்படாமல் அமர்ந்து விடுவது வழக்கமான ஒன்றுதான். தெருவில் இறங்கிப் போராடினால் தான் நியாயம் கிடைக்கும் என்ற உண்மை நமக்குப் புரிவதே இல்லை.)

உச்சநீதிமன்றமும் வழக்கம்போல முதலாளித்துவப் பொருளாதாரச் சக்கரம் தடையின்றிச் சுழல வேண்டும் என்பதையும், இதனால் மக்களுக்கு ஏற்படும் இழப்புகளையும், துயரங்களையும் கணக்கில் கொள்ளக் கூடாது என்பதன் அடிப்படையிலும் அலுமினியக் கனிமங்களைத் தோண்டுவதற்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டது. இதன்மேல் பாதிக்கப்படும் பழங்குடி மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்தவுடன் 22-7-2010 அன்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் இத்தொழிலைத் தொடங்குவதற்கு, சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் அனுமதி தேவை என்றும், இவ்வனுமதியை மறுப்பதற்கு அமைச்சகத்திற்கு உரிமை உண்டு என்றும், மக்களின் எதிர்ப்புகட்கு அடங்காமல் போனால் இவ்வனுமதியை மறுத்து, சிக்கலை சமாளிக்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆனால், வேதாந்தா நிறுவன அதிகாரிகள், உச்சநீதிமன்றம் அரங்கம் தோண்டுவதற்குத் தடைவிதிக்காத நிலையில், அதை அனுமதித்ததாகக் கொள்ள வேண்டும் என்றும், இந்திய நாட்டின் மிக உயர்ந்த அமைப்பான உச்சநீதிமன்றம் அனுமதித்து உள்ள நிலையில், இத்தொழிலுக்கு அனுமதி மறுக்க சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்துக்கு உரிமை இல்லை என்று வாதிடுகின்றனர்.

வேதாந்தா நிறுவனத்தின் அடாவடியைக் கண்டிக்க இந்திய நாட்டின் பிற மாநில மக்கள் முன்வரவில்லை. முன் வரவில்லை என்பதைவிட, இப்படி ஒரு பிச்சினை இருப்பதையே தெரிந்து கொள்ளவில்லை. (நம் நாட்டின் பொதுவுடைமைக் கட்சிகளும் கூலி உயர்வு வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருப்பதால், இச் சிக்கல்களை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று நினைக்கவே இல்லை) ஆனால், இலண்டன் மாநகரில் உள்ள மக்கள் 28-7-2010 அன்று தங்கள் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் இந்தியாவில் செய்துவரும்) செய்யத்துடிக்கும் அட்டூழியங்களைக் கண்டித்தும், இதனால் ஒன்றும் அறியா அப்பாவிப் பழங்குடி மக்களின் அன்றாட வாழ்க்கை காவு கொடுக்கப்படுவதை விளக்கியும் இங்கிலாந்து பிரதமர் இல்லத்தின் முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இச்சிக்கல் உலக அளவில் கவனத்தை ஈர்த்த பின்னர், இச்சுரங்கத் தொழிலினால் பழங்குடி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி ஆராய்ந்து அறிக்கை தருவதற்கு என்.சி. சக்சேனா என்பவரின் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தன் பணியைச் செய்ய முடுக்கிவிடப்பட்டது. அவரும் 20-08-2010 அன்று அறிக்கையை அளிக்கவிருப்பதாகவும், அது ஒரு வெடிகுண்டாக இருக்கும் என்றும், இப்போதைக்கு, அதற்குமேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை என்றும் 7-8-2010 அன்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் இருந்து சிலவற்றை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். உழைக்கும் மக்களின் நலன்களுக்காக அரசாங்கமும், நீதிமன்றங்களும், ஒருபோதும் தாமாக முன்வந்து செயல்படமாட்டா. மக்கள் ஒன்றுபட்டுப் போராடினால் அதை எதிர்க்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கும் இல்லை. நீதிமன்றங்களுக்கும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டு மக்கள் ஒன்று திரள்வது எப்போது?

Pin It