தமிழகத்தின் மகத்தான புரட்சியாளர் தந்தை பெரியாரால் முன்மொழியப்பட்டு, அறிஞர் அண்ணா என்று அழைக்கப்பட்ட சி.என். அண்ணாதுரையால் வழிமொழியப்பட்ட ‘திராவிட நாடு’ கோரிக்கை கைவிடப் பட்டது, அரசியல் என்ற சுயநலத்தால் ஏற்பட்ட பெரிய சோகம்.

பெரியாரோடு இருந்தால் அரசியல் பதவிகளைச் சுவைக்க முடியாது என்று அண்ணாவும், அவரின் கூட்டத்தினரும் பெரியார்-மணியம்மை திருமணத் தைக் காரணம் காட்டி அய்யாவிடம் இருந்து விலகி, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற தனிக் கட்சி கண்டனர்.

திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இரட்டைக் குழல் துப்பாக்கியென்று அண்ணா வால் முழங்கப்பட்டாலும், அவர்தந்த கொள்கையை விட்டுவிட்டனர்.

தி.மு.க. வென்று தனியாகக் கட்சி தொடங்கிய பின்னும் ‘அடைந்தால் திராவிட நாடு, அடையாவிட்டால் சுடுகாடு’ என்று அக்கட்சியினர் வீரம் பேசினர்.

இதைப் பார்வையாளர்களாக இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் கண்ணதாசனும், சி.பி. சிற்றரசும் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொள்வார்களாம். அப்பொழுது சி.பி.சி. கண்ணதாசனிடம் ‘மண்வெட்டி எடுத்துக் கொடுங்கள்’ என்பாராம். ‘ஏன்’ என்று கண்ண தாசன் கேட்டால், ‘சுடுகாட்டுக்குக் குழிவெட்ட’ என்று பதில் சொல்வாராம்.

அண்ணா மேடைகள் தோறும், ‘திண்ணையிலே படுத்துக் கொண்டே திராவிட நாடு காண்பேன்’ என்று முழங்க, அதற்குப் பதிலாக கண்ணதாசன், ‘திண்ணை யிலே திராவிட நாடென்றால் தொன்னையிலே பாயசமா? சோற்றுப் பொறிகடலையா? இல்லை போட்டுப் புரட்டிப் பொழுதை வீணாக்கும் சீட்டு விளையாட்டா? என்னயா பேச்சு இது’ என்று கவிதையே எழுதினார்.

இதற்குப் பின்னால், இந்தியாவின் தலைமை அமைச்சராக இருந்த சவகர்லால் நேரு அவர்கள், பிரிவினை கோரும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட விண்ணப்பம் தரும் போதே - “இந்திய ஒருமைப் பாட்டை ஏற்பேன் என்று உறுதி கூற வேண்டும்” என்று சட்டம் செய்தவுடனே, பதவிக்குப் போவதற்காக இலட்சியத்தைக் கைவிட்டனர்.

இப்பொழுதெல்லாம் தமிழ்த் தேசியம் பற்றி அதிகம் பேசப்படுகின்றது. புலியைப் பார்த்துப் பூனை சூடு போட்ட கதையாக இது இருக்கின்றது. இந்தத் தமிழ்த் தேசியவாதிகள் தந்தை பெரியாரை எவ்வளவு கீழ்த் தரமாக விமர்சிக்கின்றனர்.

‘புது சமுதாயம் துள்ளியெழுவதற்கு முதல் நெருப் பைக் கொளுத்தித் தந்தவர் பெரியார்’ என்பார் கண்ண தாசன். அதுவே முற்றிலும் உண்மை.

தமிழ்த் தேசியவாதிகளால் தனித்தமிழ்நாடு கிடைக்குமா என்பது கேள்விக்குறி. அதற்கான கட்ட மைப்பு இவர்களிடம் உண்டா?

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் சிங்கப்பூரிலிருந்து தமிழ்த்தேசியம் பேசுகின்றார். இன்னொருவர் வளை குடா நாட்டிலிருந்து முகநூலில் எழுதுகின்றார். ஈழ விடுதலைப் போராட்டத்தால் தமிழினம் பேரழிவைச் சந்தித்த பின்னும், தனித்தமிழ்நாடு என்பது சாத்தியமா என்பது கேள்விக்குறியே.

ஈராக், ஆப்கானிஸ்தான் போல தமிழ் மண் பிணக்காடாக மாற வேண்டுமா? ‘கண் சிவந்தால் மண் சிவக்கும்’, ‘இரத்தம் சிந்தாமல் எந்தப் புரட்சி யையும் வெல்ல முடியாது’ என்பவை வீர வசனங்கள்.

உலகமே முதலாளித்துவ பூதத்தின் பிடியில சிக்கித் தவிக்கின்றது. ஆனானப்பட்ட சோவியத் யூனியனையே அமெரிக்கா உடைத்துச் சிதைத்து பொதுவுடைமைத் தத்துவத்தைப் புதை குழிக்குள் தள்ளிவிட்டது.

‘உலகத்தில் பாதி சிவப்பாய் இருக்கு; உழைப்பவர் நெஞ்சம் களிப்பாய் இருக்கு!’ என்ற பட்டுக்கோட்டை யாரின் பாடல் வரிகள் பொய்த்துப் போய் வெகுகால மாகிவிட்டது.

‘கிழக்கு உதயத்தைக் கீறி எடுத்து, இந்திய மண்ணில் உலவ விட்டு, புதிய வசந்தத்தைப் புஷ்பிப் போம்’ என்ற பொதுவுடைமைக் கட்சிகள், போன தேர்தலில் மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்தள்ளன.

குடும்ப அரசியல் என்ற குட்டையில் விழுந்து கலைஞர் தோல்வியின் உச்சத்தையே தொட்டுவிட்டார்.

இந்த இடத்தில் கொஞ்சம் கலைஞர் கருணாநிதி பற்றியும் பேசுவோம்.

தமிழ் தமிழென்று முழங்கிய இவர் தமிழுக்காகச் செய்த பணியென்ன? அண்ணாவின் மறைவுக்குப் பின்னால் கலைஞர் தலைமையிலான தி.மு.க. காலத் தில்தான் ஆங்கிலவழிக் கல்விக்கூடம் புற்றீசல் போல ஆரம்பமானது.

ஆங்கிலம் படித்தால்தான் வாழமுடியும்; வளர முடியும் என்ற மாயை மக்கள் மத்தியில் உருவானது. தமிழ்வழிக் கல்வி என்பது கேவலமாகக் கருதப் பட்டது. அவர் மகள் கனிமொழிகூட இராமகிருஷ்ணா இந்து மிஷன் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி பயின்றவர்தான்.

பெருந்தலைவர் காமராசர் ஆண்ட காலத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளும் நிரம்பி வழிந்தன. அங்கே தமிழ்வழிக் கல்வி தான் போதிக்கப்பட்டது. அப்படிப் படித்தவர்கள் அறிஞர்களாகவும், மருத்துவர் களாகவும், பொறிஞர்களாகவும், கலை வல்லுநர்களா கவும் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தனர்.

எனக்குத் தெரிந்து, ஒருவர் தமிழ்வழிக் கல்வியால் உயர்ந்து கும்பகோணம் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகி, அரசால் மேற்படிப்புக்குத் தேர்வு செய் யப்பட்டு பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டார். அவர் பெயர் செல்லப்பா என்பதாக ஞாபகம்.

அந்தக் காலத்தில் சர்ச் பார்க் கான்வென்ட், ஊட்டி, கொடைக்கானலென பணக்காரர்களுக்குக் கான்வென்ட்டுகள் இருந்தனவே தவிர, சாதாரண மக்கள் தமிழ்வழிக் கல்விதான் பயின்றார்கள்.

இன்று சாதாரணக் குடிசைவாசி கூட ‘மம்மி, டாடி’ என்றால்தான் மகிழ்ச்சி வெள்ளத்தில் பூரிப்படைகின்றான்.

குழந்தைகளை, ‘அங்கிள்கிட்டே குட்மார்னிங் சொல்லு’ என்றுதான் அறிமுகம் செய்கின்றனர்.

பெங்களூரில் கேந்திர வித்யாலயாவில் பயிலும் என் பேத்தியே என்னிடம், ‘எனக்கு இந்தியும், ஆங்கில மும் போதும்’ என்கிறாள்.

செம்மொழி மாநாடுகளும், உலகத் தமிழ் மாநாடு களும் வெறும் திருவிழாக்கள்தான்.

நடுவண் அரசு இந்தியைத் திணிக்கப் பார்க் கின்றது. அதற்கான மிருகபலம் அதற்கு உள்ளது.

1938லும், 1965லும் நடந்தது போன்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் போல் மீண்டும் வெடிக்குமா என்றால் அது கேள்விக்குறி.

இன்றைய இளைஞனின் குறிக்கோள் படிக்க வேண்டும்; கார்ப்ப்ரேட் நிறுவனங்களில் கை நிறையச் சம்பளம் வாங்க வேண்டும்; சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே.

இன்னொரு சாராருக்கு டாஸ்மாக் தான் சொர்க்கம். நிறையப் பெற்றோர் குழந்தைகளை இந்தி டியூசனுக்கு அனுப்புகின்றனர்.

வெள்ளைக்காரனின் ஆங்கிலம் அவனின் அறிவாண் மையால் பரவியது. வணிகம் செய்ய வந்து சூழ்ச்சி யால் நாடு பிடித்தான்.

கங்கை கொண்டு, கடாரம் வென்றவனுக்கு தமிழைப் பரப்ப முடியவில்லையே.

மெல்லத் தமிழினி வாழுமா? மெல்லத் தமிழினிச் சாகுமா?

இது ஒரு கேள்விக்குறி. 

Pin It