நானும் நீயுமடி

மீனும் சோறுமடி

என்று வாழ்ந்த காலம்

மலை யேறிவிட்டது

விண்ணைத் தொடும்

விலைவாசி ஏற்றம்

எளியவரை யெல்லாம்

மண்ணில் புதையவைக்கும்

கூற்றமாய் மாறிவிட்டது

ஊருண்ண ஊருணி

என்பதெல்லாம் போய்ப்

புட்டிகளில் நிரப்பப்பட்ட

நீரே

விலைக்கு விற்பனை

கை வீசம்மா கை வீசு

எல்லாம் கதைக்குதவாது

‘பா பா பிளாக்சீப்’

என்றால்தான்

படிப்பதாக அர்த்தமென

மழலைச் செல்வங்கள்

ஆங்கிலம் பாடுகின்றன

பரத்தையைவிடக் கேவலமான

பணம் சம்பாதிப்பதற்காகத்

தன்னை அடகுவைக்கத்

தயாராகி விட்டார்கள்

இந்நாட்டு மன்னர்கள்

என் மகன்கூட

பன்னாட்டு நிறுவனத்தில்தான்

வேலை செய்கின்றான்

என்று சொல்வதில்தான்

நம்நாட்டு

மக்களுக்குப் பெருமிதம்

எப்படியும்

பணம் சம்பாதித்து

அடுத்த தலைமுறைக்குச்

சேர்த்து வைப்பதில்தான்

எல்லோருக்கும் குறி

இந்த ஓட்டப்பந்தயத்தில்

தோற்றுப் போகின்றவனுக்காக

இருக்கவே இருக்கின்றன

குப்பங்களும் குடிசைகளும்

Pin It