தமிழகம் உட்பட இந்திய ஊடகங்களில் அடிக்கடி வெளிப்படும் செய்தி, விவாதம் செய்யப்படும் கருத்து ‘யார் குடியரசுத் தலைவர்?’ என்பதேயாகும். ஆகஸ்ட் திங்களில் புதிய குடியரசுத் தலைவராக பிரணாப் முகர்ஜியும், துணைக் குடியரசுத் தலைவராக அன் சாரியும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்திய அரச மைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு 1952இல் பாபு இராஜேந்திரபிரசாத் முதல் குடியரசுத் தலை வரானார். கல்வியாளர் இராதாகிருஷ்ணன் துணைக் குடியரசுத் தலைவரானார். இருவரும் இந்த இரு பதவிகளில் பத்தாண்டுகள் தொடர்ந்தனர்.

1962இல் இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவரானார். 1967இல் மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைக்காதா என்று காத்திருந்தார். காங்கிரசுத் தலைமை அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. காங்கிரசு ஆட்சியை அக்காலக் கட்டத்தில் இராதாகிருஷ்ணன் குறை கூறினார். இதை 1967இல் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் பயன் படுத்திக் கொண்டன. 1967க்குப் பிறகு கல்வியாளர் ஜாகிர் உசேன் குடியரசுத் தலவரானார். இரண்டாண்டு களில் அவர் இறந்துவிட்டதால் குடியரசுத் தலைவர் தேர்தல் 1969இல் நடைபெற்றது. அக்காலக்கட்டத்தில் காங்கிரசும் பிளவுபட்டது. பிரதமர் இந்திராகாந்தியின் ஆதரவோடு காங்கிரசு வேட்பாளராக முன்மொழியப் பட்ட நீலம் சஞ்சீவரெட்டி, ‘மனசாட்சிப்படி’ வி.வி.கிரிக்கு வாக்களிக்கப்பட்டுத் தோற்கடிக்கப்பட்டார். துணைக் குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய வி.வி. கிரி எதிர்க்கட்சியினர் வாக்குகளையும், காங்கிரசு வாக்கு களையும் பெற்று வெற்றி பெற்றார். இதுபோன்று மனசாட்சிப்படி அதிசயம் நிகழ்ந்தால்தான் சங்மாவும், ஜஸ்வந்த் சிங்கும் 2012 தேர்தலில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

1974இல் காங்கிரசு ஆதரவோடு பக்ருதின் அலி அகமது குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். இவர் காலத்தில்தான் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப் பட்ட அடிப்படை உரிமைகள் உட்பட பல மக்களாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன. குடியரசுத் தலைவர் தனது உரிமையையும் விட்டுக்கொடுத்தார். அரசியல் தலைவர்கள், ஊடகத் துறையினர், நெருக்கடி நிலை யை எதிர்த்தோர் உட்பட பல ஆயிரக்கணக்கானோர் மிசா என்ற கொடிய சட்டத்தின்கீழ்க் கைது செய்யப் பட்டு விசாரணை இன்றி சிறையில் அடைக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டனர். பேச்சுரிமை உட்படப் பல அடிப் படை உரிமைகள் முடக்கப்பட்டன. மேலும், இதற்காகப் பல அரசமைப்புச் சட்ட விதிகள் திருத்தப்பட்டன. பிரதமர் பதவி உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றங்களால் கேள்வி கேட்க முடியாத உயர்ந்த பதவியாக மாற்றப்பட்டது. இதற்கும் இந்தக் குடியரசுத் தலைவர் கையொப்பமிட்டார். ஆனால் மூன்றாண்டுகளிலேயே குடியரசுத் தலைவராக இருந்த இவர் மறைந்து விட்டார்.

1977இல் காங்கிரசு தோற்கடிக்கப்பட்டு, சனதா ஆட்சிக் காலத்தில் ஆந்திராவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி ஒருமனதாகக் குடியரசுத் தலைவராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். 1982இல் நடுவண் அரசில் உள் துறை அமைச்சராகப் பணியாற்றிய கியானி ஜெயில் சிங் குடியரசுத் தலைவர் வேட்பாளராகக் காங்கிரசு சார்பில் நின்று வெற்றி பெற்றார். இவர் காலத்தில்தான் இந்திரா காந்தி சுட்டுக்கொல்லப்பட்டார். சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்தன.

1984இல் பிரதமராக இராஜீவ்காந்தி பதவியேற் றார். இவர் காலத்தில் நடைபெற்ற இரு அரசியல் நிகழ் வுகள் குறிப்பிடத்தக்கவை. 1983இல் ஆந்திராவில் தெலுங்கு தேசம் என்ற கட்சியைத் தொடங்கிச் சில மாதங்களிலேயே சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு என்.டி. இராமராவ் பெரும் வெற்றியைப் பெற்று முதல் வரானார். இவர் இதயச் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற போது, ராமாராவின் அமைச்சரவையில் இடம்பெற்ற பழைய காங்கிரசுக்காரரான பாஸ்கர் ராவை ஆந்திர ஆளுநர் காங்கிரசின் டெல்லித் தலை மைக் கட்டளைப்படி முதலமைச்சராக ஆக்கினார். தெலுங்கு தேசக் கட்சியின் 200 சட்டமன்ற உறுப்பி னர்களில் வெறும் 10 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்ற பாஸ்கர் ராவை முதலமைச்சராக ஆக்கி, இந்திய சனநாயகத்தை முறித்துப் போட்டார் பிரதமர் இந்திரா காந்தி. இதனை எதிர்த்து எல்லா எதிர்க்கட்சியினரும் ஒன்றிணைந்து போராடினர்.

இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட சில நாட்களில் என்.டி. ராமாராவ் பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்களை உரிய அடையாளங் களுடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் சென்று மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு அழைத்திட வேண்டுகோள் விடுத்தார். அரசமைப்புச் சட்டப்படி செயல்படாத ஆந்திர மாநில ஆளுநர் ராம்லாலைப் பதவி நீக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆளுநர் காங்கி ரசுக் கட்சியின் செயலாளர் போலச் செயல்பட்டிருக் கிறார் என்று குற்றம் சுமத்தினர். குடியரசுத் தலை வரின் தலையீட்டின்படி சட்டமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. என்.டி.ஆர். தனது பெரும்பான்மையை மெய்ப்பித்தார். சில நாள்களே பதவியில் இருந்த பாஸ்கர் ராவ் முதல்வர் பதவியை விட்டு விலகினார். ஜெயில் சிங், ராம்லாலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கினார். மீண்டும் ராமாராவ் முதலமைச்சரானார்.

ராஜீவ் பிரதமராக இருந்தபோது 1987இல் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்கிற்கு மீண்டும் ஒரு சோதனை ஏற்பட்டது. அரசியல் தலைவர்கள், பொது வாழ்வில் ஈடுபடுவோர் ஆகியோரின் மடல்களை உளவுத் துறையினர் பிரித்துப் பார்க்கும் உரிமை அளிக்கும் அஞ்சல் அலுவலகச் சட்டம் (Post Office Bill, 1987) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடி யரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட போது ஜெயில் சிங் இந்தச் சட்டத்திற்கு அனுமதி தரவில்லை. மேலும் பதவியை விட்டு விலகும் போது தனக்குப் பிறகு வரும் குடியரசுத் தலைவரும் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கோப்பில் வேண்டு கோள் விடுத்திருந்தார். இவருக்குப் பின்பு குடியரசுத் தலைவரான ஆர்.வெங்கட்ராமனும் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் இந்தச் சட்ட வரைவினைப் பிரதமராக இருந்த வி.பி. சிங்கிடம் 1990ஆம் ஆண்டு அனுப்பி விட்டார். இந்தச் சட்டம் மீண்டும் இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளின்படி நாடாளுமன்ற மேலவைக்கு அனுப் பப்பட்டது. இன்று வரை அச்சட்டம் காத்திருப்புப் பட்டி யலில் இருப்பது இந்திய சனநாயகத்தின் மற்றொரு சாதனைதானே.

குடியரசுத் தலைவராக வெங்கட்ராமன் இருந்த போது, மாநில அரசுகளை எவ்விதச் சட்ட அணுகு முறைகளையும் மேற்கொள்ளாமல் கலைத்தார். குறிப்பாக, 1991இல் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்த தி.மு.க. அமைச்சரவையை ஆளுநரின் பரிந்துரையைப் பெறாமலேயே மற்ற காரணங்களைக் கூறிக் கலைத்தார். இதற்கு முன்பு கர்நாடகாவில் முதல்வர் எஸ்.ஆர். பொம்மை தலைமையிலான அரசினை 1989இல் இந்திய அரசமைப்புச் சட்ட 356 ஆம் விதியின்கீழ் பதவி நீக்கம் செய்தார். 1994இல் உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் 356 ஆம் விதியைப் பயன்படுத்துவதில் வெங்கட்ராமன் குடியரசுத் தலைவருக்கு உள்ள அதிகாரத்தை உரிய முறையில் பயன்படுத்தவில்லை என்று தனது கடுமை யான கண்டனத்தைத் தெரிவித்தது. இதை மறைத்து விட்டு இன்று ஊடகங்கள் ஆர். வெங்கட்ராமன் சிறந்த குடியரசுத் தலைவர் என்று சான்றிதழ் வழங்குவது வெட்கக்கேடான செயலாகும்.

பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்த போது 1992இல் சங்கர்தயாள் சர்மா குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார். 1997இல் கே.ஆர். நாராயணன் குடியரசுத் தலைவரானார். தாழ்த்தப்பட்ட சமுதாயத் தைச் சேர்ந்த கே.ஆர். நாராயணன் எடுத்துக்காட்டான உயரிய மரபுகளைப் பின்பற்றி குடியரசுத் தலை வராகப் பணியாற்றினார் என்பதைப் பல சட்ட வல்லு நர்கள் குறிப்பிட்டுள்ளனர். புகழ்பெற்ற சட்ட அறிஞர் பாலி நாரிமன் “எனது நினைவு மறைவதற்கு முன்பு” (Before Memory Fades - An Autobiography, Hay House India, 2010) என்ற நூலில், கே.ஆர். நாராயணன் மிக மென்மையான குடியரசுத் தலைவராகத் தனக்கே உரிய தகைமையோடு பணியாற்றினார் (K.R. Narayanan was not only a very gracious head of the state but also held his own) என்று குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக, பிரதமர் குஜ்ரால் தலைமையில் இருந்த நடுவண் அரசு பீகார் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அமைச்சரவை முடிவினை ஒப்புதலுக்கு அனுப்பிய போது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 74(1)ஆம் விதியின்படி குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற தனது முடிவை ஒரு நீண்ட விளக்கத்தோடு மீண்டும் பிரத மருக்கு கே.ஆர். நாராயணன் அனுப்பினார். இதைப் படித்துவிட்டு பிரதமர் குஜ்ரால் குடியரசுத் தலைவரின் முடிவின்படியே நடந்தார் என்று கூறி பாலி நாரிமன் தனது நூலில் (பக்.433) கே.ஆர். நாராயணனைப் புகழ்ந்துள்ளார்.

1999இல் 356ஆம் விதியைப் பயன்படுத்திப் பீகார் முதல்வராக இருந்த திருமதி. ராபிரி தேவி அரசை நடுவண் அரசு கலைக்க முற்பட்டபோது, கே.ஆர்.நாராயணன் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். மீண்டும் நாடாளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற் றிக் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப் படுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு வேண்டுகோள் விடுத்தது. எஸ்.ஆர். பொம்மை தொடர்ந்த வழக்கில், 356ஆம் விதியைப் பயன்படுத்துவதற்கு உரிய காரணங்கள் இருந்தால் நாடாளுமன்றம், நாடாளு மன்ற மேலவை ஆகிய அவைகளில் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. நாடாளுமன்ற மேலவையில் காங்கிரசுக் கட்சிக்குப் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருந்தனர். நாடாளுமன்ற மேலவையில் தீர்மானம் வந்தால் அது தோற்கடிக்கப்படும் என்று காங்கிரசு வெளிப்படையாக அறிவித்தது. எனவே, பா.ச.க. கூட்டணி அரசு இத்தீர்மானத்தைத் திரும்பப் பெற்றது.

பா.ச.க. தலைமையில் அமைந்த தேசியச் சன நாயகக் கூட்டணியின் பிரதமராக வாஜ்பாய் இருந்த போது, 2002இல் அப்துல் கலாம் குடியரசுத் தலைவ ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எளிமையான குடியரசுத் தலைவராக இவர் பணியாற்றினாலும், இசுலாமி யர்கள் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட போது தனது வெளிப்படையான கண்டனத்தைத் தெரிவிக்கா தவர். பீகாரில் 2005இல் மே மாதம் சட்டமன்றம் கலைக்கப்பட்டுக் குடியரசுத் தலைவர் ஆட்சி முறைக்கு வந்தது. இதன் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் சட்ட அறிஞர் சோலி சோரப்ஜி வழக்குத் தொடர்ந்தார். 356ஆம் விதியைத் தவறாகப் பயன்படுத்தி இருக் கிறார்கள் என்று வாதிட்டார். 2005இல் நவம்பர் திங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் நிதிஷ் குமார் வெற்றி பெற்று முதலமைச்சரானார். இருப் பினும், இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற அமர்வு அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக 356ஆம் விதியைப் பயன்படுத்தியது தவறு என்று சுட்டியது. மேலும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ருசிய நாட்டிலிருந்து தொலைஅச்சு (Fax) வழியாக ஆட்சிக் கலைப்பிற்கு ஒப்புதல் வழங்கியது பற்றியும் தனது தீர்ப்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்தது.

2007இல் தேசிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் பிரதீபா பாட்டீல் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உலக நாடு களைச் சுற்றி உலா வந்த குடியரசுத் தலைவர்களில் முதன்மையானவராகவும் உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் தன் குடும்பத்தோடு இருந்து அதிகச் செலவு செய்துள்ளார் என்பதைத் தகவல் அறியும் சட்டத்தின் வழியாகச் சில தன்னார்வத் தொண்டு அமைப்பினர் விவரங்களைப் பெற்று வெளிப் படுத்தியுள்ளனர். மேலும், 205 கோடி ரூபாயைத் தனது விமானப் பயணத்திற்கு மட்டும் செலவழித் துள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர். மேற்கூறிய நிகழ்வுகள் குடியரசுத் தலைவர்கள் பற்றிய அதிகாரத் தையும், செயல்பாடுகள் பற்றியும் அறிந்து கொள்வ தற்குப் பயன்படும்.

அறிஞர் அண்ணா அவர்கள் ஒரு முறை - ஆட்டுக் குத்தாடி, நாட்டிற்கு ஆளுநர் - என்று ஆளுநர் பதவி யைப் பற்றி நகைச்சுவையோடு குறிப்பிட்டார். இவ் வகையில் மாட்டிற்குக் கொம்பு - நாட்டிற்குக் குடியரசுத் தலைவர் என்றும் குறிப்பிடலாம். ஆனால் மாடு எப்போதும் கட்டிப்போடப்பட்டிருப்பது போல, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குடியரசுத் தலைவருக்கான அதிகாரங்கள் பற்றிய விதிகள் குடியரசுத் தலைவரைக் கட்டிப்போடும் தன்மையைப் பெற்றிருக்கின்றன.

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் விதி 52 தொடங்கி 78 வரை குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவைர் ஆகியோரின் தேர்தல் முறை பற்றியும், தகுதிகள், அதிகாரங்கள் பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. தேர்தலில் போட்டியிட 35 வயது என்பது அடிப்படைத் தகுதியாகும். இந்தியக் குடிமகனாகவும் இருக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி முப்படைத் தளபதிகள் மத்திய அரசின் தலை மை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர் போன்ற அரசமைப்புச் சட்டப் பதவிகளுக்கானோரை (Constitutional Posts) நியமனம் செய்யலாம். ஆனால் அவர்கள் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. மத்திய அரசு விரும்பும் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். நாடாளுமன்ற இரு அவை களிலும் ஆண்டுக்கு ஒரு நாள் ஒரு சொற்பொழிவை ஆற்ற முடியும். அந்தச் சொற்பொழிவைக்கூட மத்திய மத்திய அரசுதான் எழுதித்தரும். அப்படி என்றால் குடியரசுத் தலைவர் பதவிக்கு ஏன் இவ்ளவு போட்டி என்று சிலர் நினைக்கக் கூடும். இந்தியா 1947இல் விடுதலை பெற்றது. 1950இல் குடியரசாக மாறியது. அரசமைப்புச் சட்டப்படி ஒரு குடியரசுத் தலைவரும் தேவைப்பட்டார். 1990க்குப் பிறகு ஒரு கட்சியின் ஆட்சி என்கிற நிலை நடுவண் அரசில் முடிவுற்றது. குடியரசுத் தலைவர் பதவிக்கான போட்டியும் மாறிய அரசியல் சூழலில் வலிமை பெற்றது. ஆனால், டெல்லியில் சிலரின் அரசியல் ஆதிக்கம் இன்றும் தொடருகிறது.

குடியரசுத் தலைவர் பதவியின் அதிகாரமும் அதன் தன்மைகளும் 1919, 1935ஆம் ஆண்டுகளில் வெள்ளையர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்புச் சட்ட விதிகளை ஒட்டியே பெரும்பாலும் அமைந்துள்ளன. இன்றைய குடியரசுத் தலைவர் பதவியும் வெள்ளை ஏகாதிபத்தியம் விட்டுச்சென்ற எச்சமாகத்தான் உள்ளது. வைசிராய் பதவிதான் புதிய தோற்றத்தில் குடியரசுத் தலைவர் பதவியாக மாறியது. ஆங்கிலக் கிழக்கிந்தியக் குழும ஆட்சி முடிவுற்று, பிரிட்டிஷ் அரசின் நேரடி ஆட்சி 1857இல் நடை முறைக்கு வந்தது. அன்றிலிருந்து இங்கிலாந்து நாட்டு அரசியின் பிரதிநிதியாக வைசிராய் அல்லது கவர்னர்-ஜெனரல் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய நேரடி நிர்வாகத்தின் கீழ்தான் இங்கிலாந்து அரசின் செயல்பாடுகள் இந்தியாவில் அமைந்தன. வைசி ராயை நினைத்த நேரத்தில் அவர் பதவிக் காலமான அய்ந்து ஆண்டுகளுக்குள் மாற்ற முடியும் என்ற அதிகாரப் பிரிவைச் சட்டங்களில் இணைத்திருந்தனர். பெரும்பாலும் வெள்ளை ஏகாதிபத்திய அரசின் நோக் கங்களை எதிரொலிப்பவர்தான் கவர்னர்-ஜெனரல் களாக நியமிக்கப்பட்டனர்.

அன்றைய வைசிராய் மாளிகைதான் இன்றைய குடியரசுத் தலைவர் மாளிகையாக மாற்றப்பட்டது. வெள்ளை ஏகாதிபத்திய அரசு இம்மாளிகையைக் கட்டுவதற்கு இன்றைய மதிப்பில் 290 கோடி ரூபாய்கள் செலவிட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு காந்தியவாதிகள் வைசிராய் மாளிகையை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றனர். அது விடுதலைப் போராட்ட உணர்விற்கு எதிராக அமைந்துவிடும் என்று போராட்டம் நடத்தினார்கள். யாராவது விடுவார்களா ஆடம்பரத்தை? விடுதலை பெற்ற இந்தியா தன்னைக் குடியரசு என்று பெருமையாக அறிவித்துக் கொண் டாலும், நடுவண் அரசிற்கு முழுமையாக ஒத்துப்போ கிறவர்கள்தான் குடியரசுத் தலைவராக இருக்க முடியும் என்ற வெள்ளை ஏகாதிபத்திய அரசியல் மரபினை அப்படியே விடுதலை பெற்ற இந்தியாவிலும் பின் பற்றினார்கள். விதிவிலக்காகத் தங்களின் ஆளுமை யால் சில குடியரசுத் தலைவர்கள் செயல்பட்டுள்ளார் கள் என்பதை மேற்கூறிய சில நிகழ்வுகள் நமக்கு தெளிவுபடுத்துகின்றன. இருப்பினும் இந்திய அரச மைப்புச் சட்டத்தின் 61ஆம் விதியும் 4 துணை விதிகளும் குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகாரத்தை வழங்குகின்றன.

நாடாளுமன்றத்தில் மொத்த உறுப்பினர்களில் நான்கில் ஒரு பங்கினர் 14 நாட்களுக்கு முன் முன்னறிவிப்புச் செய்து, குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யும் தீர்மானத்தை முன்மொழிய லாம். குடியரசுத் தலைவர் மீது குற்றச்சாட்டுகள் அடிப்படையில் விவாதங்கள் நடத்தலாம். நாடாளு மன்றத்தின் ஒவ்வொரு அவையிலும் மொத்த உறுப்பி னர்களில் மூன்றில் இரண்டு பங்கினரும் தீர்மான வாக்கெடுப்பின்போது அவையிலுள்ள உறுப்பினர்களில் பாதிப் பேருக்குக் குறையாத எண்ணிக்கையுள்ள உறுப்பினர்களாலும் ஆதரிக்கப்பட்டால் குடியரசுத் தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம். இந்தச் சட்டத் தில் ஒரு ஏகாதிபத்திய உணர்வு இழைந்தோடியிருப் பதைக் காணலாம். நாடாளுமன்ற இரு அவை உறுப்பினர்களாலும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந் தெடுக்கப்படக் கூடிய குடியரசுத் தலைவரை வெறும் நாடாளுமன்ற உறுப்பினர்களே நீக்கிவிட முடியும் என்கிற பிரிவு கூட்டாட்சி இயலுக்கும், மக்களாட்சி முறைக்கும் எதிராகவே அமைந்துள்ளது. மேலும் ஒரு அரசியல் முதிர்ச்சியான கூட்டாட்சி முறைமையைப் போற்றுகிற அரசமைப்புச் சட்டமாகவும் இது அமைய வில்லை.

ஒரு முறை குசராத் சட்டமன்றம் கலைக்கப்பட்ட போது, குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தக் கூடாது என்று ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப் பட்டது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம், குசராத் சட்ட மன்ற உறுப்பினர்களின் வாக்குகள் இல்லாமலேயே குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று தீர்ப்பினை அளித்தது. அரசமைப்புச் சட்ட வல்லுநர் ஏ.ஜி. நூரானி, தனது நூலில் (Constitutional Questions and Citizen’s Rights, Oxford University, 2006), இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்ற சட்டமுறைகளைப் பின்பற்றியும், ஒட்டியும்தான் இந்தியக் குடியரசுத் தலைவருடைய அதிகாரம் அமைந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்ட குடியரசுத் தலைவரை நீக்கும் அதிகார விதியை, இன்று வரை இந்தியா பயன்படுத்தவில்லை.

இருப்பினும், குடியரசுத் தலைவருக்குச் சில சிறப்பு அதி காரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இராணுவ நீதிமன்றத்தால் அளிக்கப்படும் தண்டனை, நிருவாக அமைப்பால் வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றத்தால் வழங்கப்படும் உச்சநிலைத் தண்டனையான தூக்குத் தண்டனை உட்பட மற்ற தண்டனைகளையும் முழுமை யாக நீக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரத்தையும் மத்திய அரசிற்குப் பயந்தோ, பணிந்தோ பல குடியரசுத் தலைவர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர். இன் றைய இந்திய அரசியலில் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட ஆட்சியியலில் பிரதமரும், அமைச்சர வையும், நாடாளுமன்றமும் பெரும் பங்கினை ஆற்றினாலும், பிரதமரையும், அமைச்சர்களையும் ஆட்டிப்படைக்கும் அதிகாரம் அறிவிக்கப்படாத டெல்லி மகாராணியாக ஆட்சி செலுத்துகிற சோனியாவிற்கு உள்ளது என்பது வெள்ளிடை மலையாகும். ஒரு காலத்தில் பிரிட்டிஷ் மகாராணியார்தான் வைசிராயை நியமித்தார். இன்று இத்தாலி நாட்டு மகாராணி இந்தியக் குடியரசுத் தலைவரையும், துணைத் தலைவரையும் தேர்ந்தெடுக்கிற ஏகபோக அதிகாரத்தைப் பெற்றுள் ளார்.

வாழ்க இந்திய சனநாயகம்.

Pin It