இந்தியாவில் வற்றாத ஆறுகளான ஜீலம், ஜீனாப், இரவி, பியாஸ், சட்லெட்சு ஆகிய அய்ந்து ஆறுகள் பாயும் நாடு பஞ்சாப் நாடு. இந்திய இராணுவத்தில் முதன்மையான இடத்தில் இருப்பதுவும் பஞ்சாப் நாடே. இந்த பஞ்சாப் நாட்டில் நடைபெற்ற ஒரு குற்றம் பற்றியும், அதற்குக் காவல் துறையும், நீதித் துறையும் எப்படி நடவடிக்கை எடுத்தன என்பதையும் இங்கே காண்போம்.

விருந்தும் வேதனையும் :

இந்த வளமான பஞ்சாப் மாநிலத்தில் நிதித்துறை ஆணையராக இருந்த எஸ்.எல். கப்பூர் என்பவர் மாநிலத்தின் உயர்நிலை அதிகாரிகளுக்கு 18.7.1988 இல் ஒரு சிறப்பான விருந்து அளித்தார். இதில் அய்.ஏ.எஸ்.; அய்.பி.எஸ். மற்றும் ஊடகத் துறையினர் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் ரூபன் தியோள் பஜாஜ், அய்.ஏ.எஸ். என்ற பெண்ணும் கலந்து கொண்டார். இவர் நிதித்துறையின் சிறப்புச் செயலர். இவரது கணவரும் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியே. இதே விருந்தில் ஒரு அய்.பி.எஸ். காக்கிச் சட்டைக்காரரும் குடிபோதையில் அலைந்து திரிந்தார். இந்தக் காக்கிச் சட்டை தன்னருகில் வந்து அமருமாறு ரூபன் தியோள் பஜாஜ், அய்.ஏ.எஸ். அம்மையாரைக் கேட்டது. காக்கிச் சட்டைக்கு மதிப்பளித்து ரூபன், அய்.ஏ.எஸ். அம்மையும் அவருக்கு அருகில் சென்று உட்காரப் போகும் நிலையில், அந்த நாற்காலியைத் திடீரெனத் தனக்கு மிகவும் அருகில் இழுத்துப்போட்டார் அந்தக் காக்கிச்சட்டைக்காரர். ஆயினும், அதே நாற்காலியைப் போதிய தூரத்தில் தள்ளி வைத்து, மீண்டும் அமர ரூபன் முயற்சித்தபோது, மறுபடியும் அந்த நாற் காலியைத் தன் அருகில் இழுத்துப் போட்டார் அந்த அதிகாரி. இந்த இழிவான ஈனச் செயல் அந்தப் பெண் அதிகாரிக்கு மட்டுமல்லாமல் அங்கே இருந்த அனைவருக்கும் அருவெறுப்பை அளித்தது. உடனே ரூபன் அய்.ஏ.எஸ். முன்பு தான் இருந்த இடத்திற்கே சென்று உட்கார்ந்தார்.

ஆணவத்தின் எல்லை :

ஒரு சில மணித்துளிகளில் நன்கு திட்டமிட்டு, அந்தக் காக்கிச் சட்டைக்காரர் தன் ஆணவச் சேட்டை யைக் காட்டத் தொடங்கினார். இப்போது அந்தக் காக்கிச் சட்டை ரூபன் அம்மையாரின் நேர் எதிரில், அவரை உரசும் நிலையில் நின்று கொண்டு : “உடனே எழுந்து என்னுடன் வா” என்று விரலைச் சுட்டி ஆணை யிட்டார். மிகவும் மோச மான, அருவெறுக்கத்தக்க நிலையை அறிந்த ரூபன் தான் உட்கார்ந்திருந்த நாற் காலியைப் பின் பக்கமாகத் தள்ளி விட்டு, நிகழ்ச் சியை விட்டு வெளியேறத் திரும் பும்போது அந்தச் சிறப்பு நிகழ்ச்சியில் - அத்தனைப் பேர் முன்னிலையில் ரூபன் அய்.ஏ.எஸ். முதுகின் அடிப் பாகத்தில், தன் கையால் தட்டியும், கிள்ளியும் ரசித்தார், அந்தக் காக்கிச்சட்டைக்கார மிருகம். இந்த ஈன இழி செயல் - மனிதத் தன்மையே இல்லாத காட்டு விலங் காண்டிச் செயல் - அங்கிருந்த அனைவருக்குமே அருவெறுப்பையும், அதிர்ச்சியையும் அளித்தது. இப்படி யெல்லாம் நடந்துகொள்ள எந்தக் கிரந்த சாசேப் நூலில் படித் தாரோ அந்தக் காக்கிச்சட்டைக்காரர்.

அதிகாரம் :

அத்துமீறலை, ஆணவத்தைக் கொடுக்கும்

கட்டுப்பாடற்ற அதிகாரம் :

கட்டுப்பாடற்ற அத்துமீறலை ஆணவத்தைக் கொடுக்கும்.

என்பது இந்தக் காக்கிச்சட்டையைப் பொறுத்தமட்டில் நூற்றுக்கு நூறுக்கும்மேல் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

எப்படி வந்தது :

இந்தக் காக்கிச் சட்டைக்கு இப்படிப்பட்ட, எல்லை மீறிய அதிகாரமும், ஆணவமும் எப்படி வந்தது? காலிஸ்தான் தனி நாட்டுப் பிரிவினைப் போராட் டத்தை ஒழித்திட ‘எதையும் செய்யலாம்’ என்ற அனு மதியை இந்தக் காக்கிச் சட்டைக்கு அன்றைய அரசு அளித்தது. அதனால், மதம் பிடித்த யானை போல இந்தக் காக்கிச் சட்டை 2,00,000 (இரண்டு இலட்சம்) இளைஞர்களை ‘காலிஸ்தான் போராளி’ என்ற போர்வையில் சுட்டுக்கொன்றது.

இது காந்தி நாடல்லவா?

கொடிகட்டிப் பறந்தது அகிம்சை!

தனி நாடு கேட்டுப் போராட நினைக்கும் எவருக் கும் தெலுங்கானா போராட்டமும், காலிஸ்தான் போராட்டமும் ஒரு முக்கியப்பாடம்.

பஞ்சாப் நாடே நடுங்கியது!

இந்த நடுக்கம் எல்லோரிடமும் இருக்க வேண்டும்!

அதிலும் இந்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளிடமும் இருக்க வேண்டும் என்ற கனவில்.

இல்லை, அதிகாரப் போதையில், இல்லை, இல்லை, அதிகார மமதையில் அலைந்தது, அந்த மனித மிருகம்! “நான் நினைத்ததுதான் சட்டம், ஒழுங்கெல்லாம். என்னை யாரும் கட்டுப்படுத்த முடியாது” என்ற கனவில் மிதந்தது அந்தக் காக்கிச் சட்டை.

இந்தக் காக்கிச்சட்டை ‘வில்லன்தான்’ பஞ்சாப் நாட் டின் காவல்துறை இயக்குனர் திலகம். தமிழ்நாட்டின் தருமபுரியின் ‘தீவிரவாதிகள்’, ‘நக்சலைட்டுகள்’ என்ற முத்திரை குத்தியும், முத்திரை குத்தாமலும் பல இளைஞர்களைச் சுட்டுக் கொன்றதைப் போல, வீரப்பன் என்ற ஒரே ஒரு மனிதனை, அவன் கண் பார்வையே கெட்டு, நடமாட முடியாத நிலைமை வரும்வரை, 25 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பின்பும் அவனை உயிருடன் பிடிக்கும் தெம்பும், திராணியும் இல்லாமல் - ‘வீரப்பன் வேட்டை’ என்ற போர்வையில் பல கொள்ளைகள், கொலைகள், கற்பழிப்புகள் நடந்திடக் காரணமான தமிழ்நாட்டு மீசைக் காவல் அதிகாரியைப் போல; பஞ்சாபில் ஒரு தேவாரம்! வீரப்பனை உயிருடன் பிடித்து விசாரித் திருந்தால் தெரிந்திருக்கும்; வீரப்பனை விடக் கொடிய “அரசியல் வீரப்பன்கள்” எத்தனைபேர். கொடிய “அதிகாரி வீரப்பன்கள்” எத்தனை பேர் என்பது! நம் நாட்டு யோக்கியதையே அவ்வளவுதான்.

ஆளுநரின் கீதை :

பலர் முன்னிலையில் தன்னை இழிவும், அவ மானமும் செய்ததைப் பொறுக்க முடியாத ரூபன், அய்.ஏ.எஸ். - மாநில முதல் குடிமகனான ஆளுநர் சித்தார்த்த சங்கர் ரே அவர்களிடம் காக்கிச் சட்டை மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டினார். ஆனால், அந்த ‘மானங்கெடாத’ ஆளுநரோ :

“தேச நலன் கருதி அந்த நிகழ்ச்சியை அடியோடு மறந்துவிடு; எது நடந்ததோ - அது நன்றாகவே நடந்தது” எனக் கூறும் கீதா உபதேசம் போலக் கூறி முடித்தார். இந்த ஆளுநரின் மனைவியை அல்லது மகளை ஒரு காக்கிச்சட்டை இப்படி நடத்தினால், ஆளு நரின் உபதேசம் எப்படி இருந்திருக்கும் என வாசகர்கள் நினைக்கக் கூடாது!

அந்தக் காக்கிச்சட்டை ஒரு கிரிமினல் குற்றவாளி!

1.            ஒரு பெண்ணின் பெண்மையைக் களங்கப்படுத் தியது;

2.            வார்த்தை சைகை மூலம் ஒரு பெண்ணை அவ மானப்படுத்தியது;

ஆகியவற்றிற்கு இந்தியத் தண்டனைச் சட்டம் பிரிவு 354 மற்றும் 509ன்படி நடவடிக்கை எடுக்கக் கோரினால் : அந்தக் கிரிமினல் குற்றத்தையும், தேச நலனையும் எப்படி இணைத்துப் பேசுகிறார்கள் என ஆளுநரின் முகத்தில் அறைவதைப் போலக் கூறி; “இதை நான் விடப்போவதில்லை” எனச் சபதம் கூறி வெளியேறினார், ரூபன் அய்.ஏ.எஸ்.

கடமை ‘தவறாக்’ காவல்துறை :

வாயிலில் சென்னை மாநகரக் காவல் ஆணையர் அலுவலக நுழைவாயிலில் “நீ உனக்காக அல்ல - மக்களுக்காக ஆவாய்!” என்று பெரிதாக எழுதி யிருக்கும். பஞ்சாப் நாட்டிலும் காவல்துறை தமிழ் நாட்டைப் போலதான் எனத் தெரிகிறது.

ரூபனின் விடாமுயற்சி :

தன் புகார் மீது காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததை அறிந்த ரூபன் அய்.ஏ.எஸ். நீதிமன்றத்தில் முறையீடு செய்து, வழக்கு விசாரணைக்கு அனுமதி ஆணைபெற்றார்.

“வழக்கைத் திரும்பப் பெறாவிட்டால் கொலை தான்” என்ற காக்கிச் சட்டையின் மிரட்டல் உருட்டலுக் கெல்லாம் ரூபன் அஞ்சவில்லை.

29.7.1988இல் ரூபன் வழக்கு பதிவு செய்யப் பட்டது. அவரது கணவரும் ஒரு அய்.ஏ.எஸ். அவரும் தலைமைக் குற்றவியல் நடுவர் மன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.

வந்ததே கோபம் காக்கிச் சட்டைக்குக். 1989இல் உயர்நீதிமன்றத்தில், ரூபனுக்கு எதிராகக் குற்ற மறு ஆய்வு மனு ஒன்றைக் காக்கிச் சட்டை போட்டது. “99 குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரே ஒரு நிரபராதிகூடத் தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது” என்ற உயரிய கோட் பாட்டின் அடிப்படையில் ‘நிரபராதி’ காக்கிச்சட்டை தண் டனை பெறக்கூடாது என்ற அடிப்படையில், ரூபன் மற்றும் அவரது கணவர் வழக்கு இரண்டையும் தள்ளுபடி செய்தது ‘உயர் அநீதிமன்றம்’.

இந்த உயர் அநீதிமின்றத் தீர்ப்பு மிகவும் தவ றானது - அரசியலமைப்புச் சட்டத்திற்கே எதிரானது என்ற அடிப்படையில், அந்தத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்யவும், தன் வழக்கை மறுபரிசீலனை செய்யவும் 1995இல் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மனு வழக்கு ஒன்றை ரூபன் தொடர்ந்தார். இந்த மனுவை நன்கு ஆய்வு செய்த உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற ‘அநீதிபதிகளின்’ அநீதித் தீர்ப்பை ரத்து செய்து, ரூபன் வழக்கைக் கீழமை நீதிமன்றம் மீண்டும் விசாரணை செய்ய ஆணையிட்டது.

சோதனை மேல் சோதனை :

ரூபன் வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் காக்கிச் சட்டைக்கு 3 மாதம் சிறைத் தண்டனையும்; ரூ.500 அபராதமும் விதித்தது. விடுமா காக்கிச்சட்டை?

இந்தத் தீர்ப்பை எதிர்த்து செஷன்சு நீதிமன் றத்திற்குச் சென்றது காக்கிச்சட்டை. கீழ் நீதிமன்றம் கொடுத்தத் தண்டனையை உறுதி செய்தது மட்டு மல்லாமல், ரூ.2,00,000 (இரண்டு இலட்சம்) இழப்பீடும், ரூ.50,000 வழக்குச் செலவும் விதித்தது; மேலும் பொது நிகழ்ச்சிகளில் குடித்துக் கூத்தாடித் திரியக் கூடாது, தரக்குறைவாக மனிதத்தன்மை இல்லாமல் நடக்கக் கூடாது என்பன போன்ற நிபந்த னைகளை உள்ளடக்கிய நன்னடத்தைச் சட்டவிதி முறைகளின் அடிப்படையில் மூன்று ஆண்டுகள் நடந்துகொள்ள வேண்டும் என்றும் எச்சரித்துத் தீர்ப்பளித்தது செஷன்சு நீதிமன்றம். காக்கிச் சட்டைக்கு அடங்காக் கோபம் கொப்பளித்தது. ஓடியது உயர்நீதி மன்றத்திற்கு. மேல் முறையீடு செய்தது காக்கிச்சட்டை. செஷன்சு நீதிமன்றத் தண்டனைகளை உயர்நீதி மன்றமும் உறுதி செய்து, நன்னடத்தைப்படி நடக்க வேண்டிய காலத்தை மட்டும் ஓராண்டாகக் குறைத்தது. ஒப்புமா காக்கிச் சட்டை - உச்சநீதிமன்றத்தில் முறை யீடு செய்தது.

இறுதிக்காட்சி : காக்கிச்சட்டையின் மமதை மண் டையில் இடிவிழுந்து, அதன் கோட்டைக் கொத் தளங்கள் தரைமட்டமான நாள் 27.7.2005. எல் லையே இல்லாத அதிகார, ஆணவ, மமதையில் பறந்த கொடி இறக்கப்பட்ட நாள் 27.7.2005.

‘காலம் என்பது கறங்குபோல் சுழன்று கீழது மேலாய்; மேலது கீழாய் மாறும்’ என்பதை காக்கிச் சட்டைக்கு அறிவுறுத்திய நாள் 27.7.2005. ஆம்! இந்தக் காக்கிச் சட்டைக் கொடூரனின் கொடிய வழக்கில் இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் அளித்த நாள் 27.7.2005.

காக்கிச்சட்டை அய்.பி.எஸ். செய்தது குற்றம் குற்றமே! கிரிமினல் குற்றமே! என உயர்நீதிமன்றத் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்தது. ஆயினும், சிறைத் தண்டனைக்குப் பதிலாக நன்னடத்தைச் சட்டப்படி நன்னடத்தை அலுவலகத்தில் ஓராண்டு காலம் கையெழுத்து இடவேண்டும் என்று ஆணை யிட்டது. மேலும் 2,00,000 (இரண்டு இலட்சம்) அபராதம் கட்ட வேண்டும் என்றும் ஆணையிட்டது. அந்த நட்ட ஈட்டுத் தொகையை ரூபன் அய்.ஏ.எஸ். வாங்காததால்; ரூபன் விருப்பப்படி அவர் கூறும் ஒரு பெண்கள் நல அமைப்புக்கு வழங்கவும் ஆணை யிட்டது. அபராதத் தொகையை உயர்நீதிமன்றத் திலேயே கட்டிவிட்டதால், உச்சநீதிமன்ற ஆணைப்படி நன்னடத்தைச் சட்ட விதிமுறைப்படி ‘அடியேன்’ தவ றாமல் நடப்பேன் என்று மன்னிப்புக் கூறி வெளியே வந்தது, அந்தக் காக்கிச் சட்டை அய்.பி.எஸ்.

“இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன்

கெடுப்பார் இலானும் கெடும்”

என்ற குறளுக்கு இந்தக் காக்கிச் சட்டை ஒரு எடுத்துக்காட்டு.

இந்த வழக்கில் வெற்றி பெற - நியாயம் பெற தொய்வில்லாத் தொடர் நடவடிக்கை மேற்கொண்ட ரூபன் தியோள் பஜாஜ், அய்.ஏ.எஸ். மற்றும் அய்.ஏ.எஸ். ஆன இவரது கணவருக்கும், 18 ஆண்டுகள் ஆகின. இத்தனைக்கும் இது ஒரு உரிமையியல் - சிவில் வழக்கு அல்ல - ஒரு குற்றவியல் - கிரிமினல் வழக்கு. நம் நாட்டில் காவல் துறையின் யோக்கியதைக்கும், நீதிமன்றத்தில் நீதியைப் பெறும் நிலைமைக்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

ஒரு பெண்ணை - ஒரு அய்.ஏ.எஸ். பெண் ணையே இழிவும், மானபங்கமும் செய்தால் தான் மேலும் ஒரு முடிசூடா மன்னனாக, இந்தியாவிலேயே ஒரு சர்வாதிகார அய்.பி.எஸ்.ஆக உலா வரலாம் என்ற மமதையில் குற்றம் செய்த இந்தக் காக்கிச் சட்டை - கிரிமினல் அய்.பி.எஸ்.சுக்கு கீழமை நீதிமன்றங்கள் கொடுத்தத் தண்டனையைக் கூட்டாமல்விட்டால் கூட, குறைக்காமல் தண்டனை வழங்கி - காக்கிச் சட்டை சிறையில் கம்பி எண்ணியிருந்தால்; பண்பாடு பாதுகாக்கப்பட்டிருக்கும் - மிகச் சிறந்த பாராட்டுக்குரிய - ஒரு முன்மாதிரியான வழக்கு முடிவாக எதிர்க்காலத்திற்கும் பயன்பட்டிருக்கும். உச்சநீதிமன்றத்தின் மதிப்பு மேலும் உச்சம் அடைந்திருக்கும். வருங்காலத்தில் இதுபோன்ற ‘வில்லன்’ கே.பி.எஸ். கில். அய்.பி.எஸ்.கள். அதிகார மமதை கொள்ளாமல் இருக்கப் பயன் பட்டிருக்கும்.

எது எப்படி இருப்பினும் ரூபன் தியோள் பஜாஜ் அய்.ஏ.எஸ். 21ஆம் நூற்றாண்டின் கண்ணகியே!

Pin It