தலையங்கம்

வெள்ளம் போல் தமிழர் கூட்டம் இருந்தும், நாள்தோறும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இனப்படுகொலைக்கு ஆளாவதைத் தடுக்க முடியவில்லை. உலகெங்கும் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து போரை நிறுத்துவதற்கு நடத்தும் போராட்டத்திற்கு, இதுவரை எந்தத் தீர்வும் கிட்டவில்லை. இருப்பினும், தற்பொழுது இந்தியாவில் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், போர் நிறுத்தத்தைக் கொண்டு வந்து விடும் என்று கூறப்படுகிறது. எல்லா அரசியல்வாதிகளும் நாடகம் நடத்துகிறார்கள் என்ற நிலையில், அவர்களில் யார் ஒருவர் ஆட்சிக்கு வந்தாலும் போர் நிறுத்தத்திற்கு வழி ஏற்பட்டுவிடும் என்று சொல்வதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. நம்முன் இரு அணிகள் உள்ளன: 1. தி.மு.க. – காங்கிரஸ் 2. அ.தி.மு.க. – மூன்றாவது அணி / பாரதிய ஜனதா கட்சி.

ஈழத் தமிழர்களின் பிரச்சினை முதன்மையானது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், அதற்காக மதவெறி கட்சிகளுக்கு இடமளித்துவிடக் கூடாது. பா.ஜ.க. ஆட்சியின்போது, ஈழத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதால் போரின் தீவிரம் உணரப்படவில்லை எனினும், பா.ஜ.க. அரசு ஈழத்தமிழர் சார்பாக எவ்வித நேர்மறையான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் – அது பாராமுகமாகவே நடந்து கொண்டது. தமிழகத்தைப் பொருத்தவரை, அ.தி.மு.க.வின் ஆட்சிக் காலம் நெருக்கடி நிலையை ஒத்ததாகவே இருந்தது.

இவற்றுக்கெல்லாம் அப்பால், நடுவண் அரசில் எந்தக் கட்சி பொறுப்பேற்றாலும், ஆளும் பார்ப்பன வர்க்கம்தான் தீர்மானிக்கும் சக்தியாக செயல்படுகிறது. இந்திய ஆட்சி நிர்வாகத்தின் இதயமாக செயல்படும் இவர்கள்தான் – ஆட்சியாளர்களின் செயல் திட்டத்தை வரையறுக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் (அமைச்சர்கள்) பார்ப்பனரல்லாத / மாநிலங்களின் பிரதிநிதிகள் இருந்தபோதும், ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்திட்டத்தில்– தனியார் துறையில் இடஒதுக்கீடு அளிப்பது போன்ற தலித், பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான திட்டங்கள் விவாதிக்கப்படவே இல்லை என்பது இதற்கு ஒரு சான்று.

தமிழ் நாட்டில் ஈழத்தமிழர் பிரச்சனையைத் தவிர, வேறு எந்தப் பிரச்சினையுமே இல்லை என்பதைப் போன்றதொரு தோற்றத்தைத் தமிழ்த் தேசியவாதிகள் உருவாக்கி வருகின்றனர். அதனால்தான் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்ற பரப்புரையிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இக்கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்பது, தமிழகத்தைப் பொருத்தவரை அ.தி.மு.க.; மத்திய ஆட்சியை பொருத்தவரை பா.ஜ.க. கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய மூன்றாவது அணியில் அவர்களைத் தவிர எஞ்சிய

அனைவரும் பா.ஜ.க.வோடு உறவாடியவர்களே! இனியும் அதற்குத் தயாராக இருப்பவர்களே. பா.ஜ.க. – ஜெயலலிதா ஆபத்தை இவர்கள் உணர்ந்ததால்தான் – "இவர்களுக்கு வாக்களியுங்கள்' என்று நேர்மையாக அவர்களால் சொல்ல முடியவில்லை! எனவேதான் "எதிராக வாக்களியுங்கள்' என்கின்றனர்.

எதிர் அணியின் யோக்கியதை என்ன? தமிழீழத்தை ஏற்காதவர்கள் கம்யூனிஸ்டுகள்; புலிகள் இல்லாத தமிழ் (மாநில) ஈழத்தை அ.தி.மு.க. உதட்டளவில் கோருகிறது; ம.தி.மு.க.வும் பா.ம.க.வும் தங்களுடைய அற்ப நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கூட இழக்க மனமில்லாதவர்கள்; ஈழ ஆதரவு அணி செய்த ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், தீர்மானங்கள், கடை அடைப்புகள், மனிதச் சங்கிலி என இவை அனைத்தையும் தி.மு.க.வும் செய்தது. தி.மு.க. பதவி விலகவில்லை. ஆனால், அதைப் பிறரும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

ஈழப்பிரச்சனையில் இவ்வளவு நெருக்கடி நிலை ஏற்பட்டபோதிலும் கூட, விடுதலைப்புலிகள் காங்கிரஸ் அரசிடம் தங்கள் மீதான தடையை நீக்கும் வேண்டுகோளை முன்வைத்தே வருகிறார்கள். ஆனால், அவர்களின் ஆதரவாளர்கள் மட்டும் தீவிர எதிர்ப்பாளர்களாக இருக்கிறார்கள்! அவர்கள் விருப்பப்படியே தமிழகத்தில் காங்கிரஸ் தோற்று, ஆனால் பிறமாநிலங்களில் வெற்றி பெற்று, மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டால் சிக்கல் இரட்டிப்பாகும். எனவே, தேர்தலில் "காங்கிரசை தோற்கடிக்க வேண்டும்' என்ற முழக்கம், அதற்கு நேரெதிரான பா.ஜ.க.வை ஆதரிப்பதற்குதான் பெரிதும் பயன்படும்.

இப்படி எல்லாம் சொல்வதால், நாம் தி.மு.க.– காங்கிரஸ் கட்சியின் தவறுகளை எல்லாம் நியாயப்படுத்துவதாகப் பொருள் ஆகாது. ஒப்பீட்டளவில், யார் மதசார்பற்ற கொள்கையை கடைப்பிடிக்கிறார்கள்; ஜனநாயகத்தைப் பேணுகிறார்கள்; சமூக நீதி செயல்திட்டங்களுக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைப் பொருத்துதான் – நம்முடைய ஆதரவும் எதிர்ப்பும். எனவே, பா.ஜ.க.வின் இந்துத்துவ செயல்திட்டங்களை செயலற்றதாக்க, நாடாளுமன்றத் தேர்தலில் "ஜனநாயக முற்போக்குக் கூட்டணி'யை ஆதரிப்பதே மதசார்பின்மைக்கு வலு சேர்க்கும்.