மே நாளில், உழைப்போர் விடுதலையை ஊரெங்கும் உயர்த்திப் பிடிப்போம்!

காரல்மார்க்சு செர்மனியில் பிறந்தவர்; இலெனின் இரஷ்யாவில் பிறந்து, அங்கே முதன்முதலில் சமதர்மத்தைச் சமைத்து உலக உழைக்கும் மக்களின் விடுதலைக்கு அடித்தளமிட்டவர்.

மார்க்சு வாழ்ந்த சமகாலத்தில் இந்திய மண்ணில் அத்திப்பாக்கம் அ. வேங்கடாசலநாயகர், மகாத்மா சோதிராவ் கோவிந்தராவ் புலே, வடலூர் இராமலிங்க அடிகளார், பண்டித அயோத்திதாசர் ஆகிய புரட்சிச் சிந்தனையாளர்கள் வாழ்ந்தனர். தாங்கள் தாங்கள் பிறந்த உழைப்பாளிச் சாதி, வேத-ஆகம, சுருதி-ஸ்மிருதிக் கொள்கைப்படி இழிந்த சாதி என ஆக்கப்பட்டிருந்ததை எதிர்த்து அவர்கள் எழுதினர்; பேசினர்; போராடினார்.

இந்த இழிவான நிலைமை இந்தியாவில் இருப்ப தைக் குறித்து காரல்மார்க்சு முதன்முதலாக 1853 மே 14-இல் ஒரு கட்டுரை எழுதினார்; அக்கட்டுரையை 1853 சூன் 9-இல் “நியூ யார்க் டிரிபியூன்” (New-York Tribune) என்னும் ஆங்கில நாளேட்டில் வெளியிட்டார்.

அவர் என்ன எழுதினார்? 

“இந்தியாவிலுள்ள இழிந்த சாதிகளைச் சார்ந்த மக்கள், தாங்கள் எந்தப் பலனும் கருதாமல், மேல் சாதிக்காரர்களுக்குத் தொண்டூழியம் செய்வதுதான் மோட்சத்துக்குப் போக ஒரே வழி என நம்ப வைக்கப்பட்டிருக்கிறார்கள்” என்றே அவர் எழுதினார்.

இந்தக் கோட்பாட்டை மனுஸ்மிருதியில் பத்தாவது அத்தியாயத்தில் 62ஆவது சூத்திரத்தில், மனு எழுதி யிருக்கிறார் என்பதையும் அக்கட்டுரையின் அடிக்குறிப் பில் தடித்த எழுத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த ஏற்பாட்டை அதுவரையில் இந்தியாவிலிருந்த இஸ்லாமியர் ஆட்சியும் காப்பாற்றியது; 1757க்குப் பிறகு இந்தியாவில் கால் கொண்ட பிரிட்டிஷ் அரசும் காப் பாற்றியது.

இன்றைய பார்ப்பன-பனியா-இந்திய ஆட்சியும், அரசமைப்புச் சட்டமும் இந்த ஏற்பாட்டைக் காப்பாற்றுகின்றன.

இந்தக் கொடுமைக்கு - பிறவி சாதி அடிமைத்தனத்துக்கு மார்க்சும் ஆளாகவில்லை; இலெனினும் ஆளாக வில்லை. ஆனால், செர்மனியிலும் இரஷ்யாவிலும் மற்ற அய்ரோப்பிய நாடுகளிலும் உடலுழைப்புத் தொழிலாளர்களும், வேளாண் கூலிகளும் நாளொன்றுக்குப் பதினெட்டு மணிநேரம் மாடாக உழைத்தால் தான் வயிறு வளர்க்க முடியும் என்கிற ஈனநிலை அன்று இருந்தது. அதை அந்நாடுகளின் அரசர்களும் அரசுகளும் கட்டிக்காத்ததைக் கண்டனர்; கொதித்தெழுந்தனர்; போராடினர்.

பொதுவுடைமைக் கொள்கையின் பேராசான்களாக விளங்கிய மார்க்சும் - எங்கெல்சும் “பொதுவுடைமைக் கொள்கை அறிக்கை”யினை 1848 பிப்ரவரியில் வெளியிட்டனர். உலகிலிருந்த ஆட்சியாளர்களும் முதலாளி களும் பெருநில உடைமையாளர்களும் அவ்வறிக்கை யைக் கண்டு அஞ்சி நடுங்கினர்; தங்களுக்கு அழிவு வரப்போகிறது என எண்ணிக் கலங்கினர்; கூக்குர லிட்டனர்.

1848 அறிக்கையினால் உந்துதல் பெற்ற பிரெஞ்சு நாட்டுத் தொழிலாளர்கள் பிரான்சில் 18-3-1871இல் ஒரு பெரும் புரட்சியை நடத்தி, பிரெஞ்சு அரசாட்சியைக் கவிழ்த்துத் தொழிலாளர்களின் தற்காலிக அரசை (Paris Commune) - 72 நாள் ஆட்சியை நிலைநாட்டினர்; அந்த இரண்டரை மாத ஆட்சியின் போதே கல்வியிலிருந்தும், அரசிலிருந்தும் மதத்தை அகற்றினர். ஆனால், அந்த அரசு அகற்றப்பட்டது.

இதனாலும் உந்துதல் பெற்ற இலெனின், 1898 க்கும் 1903க்கும் இடையில், தலைமறைவு வாழ்க் கையின் போதே, அன்றைய இரஷ்யத் தொழிலாளர்களை ஒன்றாகத் திரட்டி, 1905இல் முதலாவது புரட்சி யை மேற்கொண்டார்.

அன்றைய இரஷ்யாவில் ஆலைத் தொழில் வளர்ச்சி பெருகியிருக்கவில்லை; பெரிய எண்ணிக்கையில் வேளாண் தொழிலாளர்களும், சிறு-குறு வணிகர்களும், சிறு-குறு நில உடைமையாளர்களுமே அதிகமாக இருந்தனர். இலெனினின் முதலாவது புரட்சி 1907இல் தோல்வி கண்டது. அதுகண்டு அவர் அஞ்சி ஒதுங்கி விடவில்லை.

சார் மன்னனின் கொடுங்கோலாட்சியை வீழ்த்திச் சமதர்ம சமுதாயத்தைப் படைக்க வேண்டுமென உறுதி பூண்டார்.

அவர் அளவுக்கு மார்க்சியக் கொள்கையில் அறிவும் தெளிவும் உள்ளவர் டிராட்ஸ்கி. “இரஷ்யா போன்ற ஒரே ஒரு நாட்டில் புரட்சியை மேற்கொண்டால் அது வெல்லாது; நிலைக்காது. உலகத் தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி, உலகெங்கும் ஒரே சமயத்தில் புரட்சி செய்தால்தான் - அது நிரந்தரப் புரட்சியாக இருக்கும் (Permanent Revolution) என, இலெனினுக்கு முரண் பட்டுக் கூறினார், டிராஸ்கி.

ஒரே ஒரு நாட்டில் சமதர்மம் சமைத்தால் அதைப் பார்த்து மற்ற நாட்டுத் தொழிலாளர்களும் உடனே புரட்சிக்கு அணியமாவர். (Immediate Revolution) என்பதை, மிகமிக அமைதியாகவே, தக்க முகாந்திரங் களைக் கூறி டிராட்ஸ்கிக்கு விளக்கிக் கூறினார், இலெனின். ஏன்?

“மார்க்சு அளித்த கோட்பாடு நமக்கு ஒரு பொது வழிகாட்டி நெறிதான். அந்தக் கோட்பாட் டைப் பிரான்சில் செயல்படுத்துவதைப் போலவே இங்கிலாந்தில் செயல்படுத்த முடியாது; செருமனியில் செயல்படுத்துவதைவிட வேறான வழியில் தான் பிரான்சில் செயல்படுத்த முடியும்; இரஷ்யாவில் செயல்படுத்துவது போலவே செருமனியில் செயல்படுத்த முடியாது” என்பதையும் டிராட்ஸ் கிக்கு இலெனின் எடுத்துச் சொன்னார்.

ஏன்? ஏன்? ஏன்?

அந்தந்த நாட்டின் சமுதாய அமைப்பு வெவ்வேறு தன்மையிலானது. அதனால்தான் இந்தச் செயல்முறை வடிவத்தை அளித்த மேதை இலெனின், இரஷ்யா என்ற தனி ஒரு நாட்டில், உலக வரலாற்றில், சமதர்ம சமுதாயத்தை முதன்முத லாகச் சமைத்துக் காட்டினார்.

அதை எப்படியெப்படிச் செய்தார்?

இரஷ்யா இன்னும் தொழில் வளர்ச்சி பெற்ற நாடாக உருவாகவில்லை; வேளாண்மையைச் சார்ந்த நாடாகவே இருக்கிறது. பெரும்பாலோர் சிறு-குறு நில உடைமையாளர்களே; பலரும் வேளாண் கூலிகளே என உணர்ந்தார். இந்தப் பெரிய எண்ணிக்கை யினரையும் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தத் திட்டமிட்டார். அவர்கள் நிலப்பிரபுக்கள் அல்ல – குலாக்குகள் அல்ல என்பதைப் புரிந்துகொண்டு அவர்களை ஒன்று திரட்டினார்.

அதேபோல், சிறு-குறு வணிகர்கள் வயிற்றுப் பாட்டுக்காக வணிகம் செய்கிறவர்கள்; அவர்கள் பூர்ஷ் வாக்கள் அல்ல - முதலாளிகள் அல்ல என அறிவித்து அவர்களையும் ஒன்றுதிரட்டினார்.

“அனைத்து நாடுகளின் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்! (Workers of All Countries, Unite)” என்பது தான், மார்க்சும் - எங்கெல்சும் தந்த மூல விடுதலை முழக்கம் - 1848-இல். ஆயினும் முதலாவது புரட்சியி னூடே பட்டறிவு பெற்ற இலெனின் அவர்கள், அம்மூல முழக்கத்துடன் “தொழிலாளர்களே, விவசாயிகளே, ஒன்றுசேருங்கள்!” (Workers and Peasants Unite) என்னும் போர்த்தந்திர - அன்றைய இரஷ்ய சமுதாய - பொருளாதார இருப்பு நிலைக்கு ஏற்ற ஒரு முழக்கத்தை 1912இல் அளித்தார். அந்தப் பெரிய கூட்டத்தார் பேரெழுச்சி பெற்றனர்.

அது போதுமா? அதுவும் போதாது என அவரே கண்டார்.

“நாம் இரஷ்யன் மொழியினத்துக்காரர். நம் தலைiமையை எல்லோரும் ஏற்றால், ஒருவேளை ஆர்மீனியர், தஜூஸ்கியர் முதலானோர் பேரில் இரஷ்யன் மொழி திணிக்கப்படும் - சார் காலத்து ஒற்றை மொழி ஆதிக்கக் கொடுமை நீடிக்கும் எனப் பிறமொழிக்காரர்கள் எண்ணுவர் அல்லவா?

ஆதலால், நாம் அவரவர் மொழி அவரவர் நாட்டிலும், சோவியத்து அரசிலும் சம உரிமை பெறும் என அவரவர்களுக்கு உறுதிதர வேண்டும்” என, 1914இல் இலெனின் முடிவெடுத்தார். “ஒடுக்கப்பட்ட தேசிய இன மக்களே, ஒன்றுசேருங் கள்!” ((All Oppressed Nations, Unite) எனப், பின்னும் ஒரு முழக்கத்தை - இரஷ்ய மொழி பேசாத எல் லோருக்கும் அளித்தார்.

உழைப்பாளி - தொழிலாளி - சிறு விவசாயி - சிறு வணிகர், அனைத்து மொழிகளையும் பேசுவோர் அணியே மிகப் பெரிய அணியாக - அன்றையச் சூழலில் இருந்த இரஷ்யாவில் ஒன்றுதிரண்டது.

பத்தே நாளைய புரட்சிப் போரில், 1917 நவம்பர் 7 அன்று சோவியத்துச் சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றது.

இலெனின் கருதியது போல், இரஷ்யாவைப் போல், மிகப்பெரிய நாடான சீனத்தில், அந்த நாட்டு வேளாண் மக்களை அணிதிரட்டி நீண்ட நெடும் பயணத்தை நடத்தி, பின்னும் 32 ஆண்டுகளில், மாவீரர் மாசேதுங், 1949இல் சீனாவைச் சமதர்ம நாடாக உருவாக்கினார்.

பின்னும் பத்தாண்டுகளில், அமெரிக்காவை அடுத் துள்ள குட்டிநாடான கியூபாவில், பிடல்காஸ்ட்ரோ, மாவீரன் செகுவேரா ஆகியோரின் புரட்சிப் போரால் சமதர்ம சமுதாயம் அமைந்தது.

ஆனால், இந்தியாவில்?

அதிகாரம் வாய்ந்த வரலாற்று முறைப்படி, இந்தியாவில் 1925இல் முளைத்த பொதுவுடைமைக் கட்சி, 1990க்குள் - இலெனினின் போர்த்தந்திரங்களையும், வியூகங்களையும், சமூக இருப்புநிலை ஆய்வையும் முன்வைத்துக் கற்றது என்ன? இவர்கள், நாம் இருக்கிற இந்தியாவில், குறைந்தது 2000 ஆண்டுகளாகப் பிறவியால் நால்வருண சாதி வேறுபாடு இருக்கிறது; மேல்வருணத்தார் என்கிற பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகியோர், இந்தியரில் வெறும் 10 விழுக் காடு மக்களே இருக்கிறார்கள்.

 இவர்களுள் 90 விழுக் காட்டுப் பேர் பெரிய நிலஉடைமைக்காரர்களாக - இந்தியாவில் இருக்கிற வேளாண் நிலப்பரப்பில் பாதிக்கு மேல் உடைமையாகப் பெற்றவர்களாக இருக்கிறார்கள்; இவர்களுள் 95 விழுக்காட்டு பேர் 1000 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் பெரிய அளவில் பங்குபெற்று இருக்கிறார்கள்.

 99 விழுக்காட்டுப் பேர் நல்ல கல்வி யாளர்களாக இருக்கிறார்கள் - இவர்கள் தாம் உழைப் பாளிச் சாதி மக்களாக உள்ள - 90 விழுக்காட்டுப் பேராக உள்ள சூத்திரர் - ஆதிசூத்திர மக்களின் பரம்பரை எதிரி களாக - உண்மையான எதிரிகளாக - சுரண்டும் வர்க் கத்தாராக இருக்கிறார்கள் என்பதை என்றைக்காவது வெகுமக்களுக்கு இவர்கள் விளக்கிச் சொன்னார்களா?

2014லிலும் சூத்திரருள் 100க்கு 25 பேருக்குச் சொந்த நிலமில்லை; ஆதி சூத்திரருள் 100க்கு 65 பேருக்குச் சொந்த நிலமில்லை; சூத்திரருள் 100க்கு 30 பெண்களுக்கு எழுத்தறிவு இல்லை; ஆதிசூத்திரருள் 100க்கு 40 பெண்களுக்கு எழுத்தறிவு இல்லை.

மார்க்சு 1853இல் எழுதினாரே, இழிசாதி மக்கள் எதை நம்பினார்கள் என்று, அதே நிலையில், 2014 லிலும் மெத்தப் படித்த - கொஞ்சமும் படிக்காத சூத்தி ரரும், ஆதி சூத்திரரும் நம்பிக்கொண்டு - கற்பனையான பிறவி உள்சாதி அடிப்படையில் பகைத்துப் பகைத்துப் - பிணங்கிப் பிணங்கிக் கிடக்கிறார்களே, இந்த ஈனத்தனமான நிலைமையை நம் தமிழகப் பெரு மக்களுக்கு நாம் எடுத்துச் சொல்லுவோம்.

“அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்” என்பது பட்டறிவுப் பழமொழி.

இந்த உண்மையைத் தமிழக ஊரெங்கும் உள்ள உழைப்பாளி மக்களுக்குச் சொல்லிட - மேதை அம்பேத்கர், பாவேந்தர் பிறந்த நாளை முன்வைத்தும், உலகத் தொழிலாளர்கள் கொண்டாடும் மே நாளை ஒட்டியும் உரத்துப் பரப்புரை செய்வோம். வாரீர்!

4.10.1931இல் தந்தை பெரியார் அவர்கள் சொன்னபடி, சமதர்மப் புரட்சி, இந்தியாவில் - தமிழகத் தில் வெடித்திட நாம் வழிகாண்போம்!

நெஞ்சை நிமிர்த்தி - கைகளை உயர்த்தி வாரீர்! வாரீர்! வாரீர்! என அன்புடன் அனைவரையும் அழைக் கிறோம்.

- வே.ஆனைமுத்து

Pin It