திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ரயில்வே குமாஸ்தாவாக பணியாற்றியவரின் மகனாக 1951ம் ஆண்டு நீதிநாயகம் சந்துரு அவர்கள் பிறந்தார். மாணவர் பருவம் முதல் அரசியலில் ஈடுபாட்டுடன் செயல்பட்டு ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போராடியவர். மவுண்ட்ரோடு அரசினர் கலைக் கல்லூரியில் சேர்ந்து அரசியல் சார்ந்த பல்வேறு புத்தகங்களை ஆழ்ந்து படித்தவர். சிறு வயது முதல் சென்னை நகரிலேயே வளர்ந்துவிட்டதால் கிராமங்களைப் பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும் கல்லுரியில் படித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் NCC, AICUF-ல் இருக்கும் போதுதான் அறிந்து கொண்டார். கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது மாணவர் சோசலிஸ்ட் அமைப்பு (Student’s Socialist Forum) என்ற அமைப்பை தனது கல்லூரி தோழர்களுடன் சேர்ந்து உருவாக்கி விடுதிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்தார்கள்.

chandru_303தி ஹின்டு பத்திரிக்கையில் அப்போது உதவி ஆசிரியராக என்.ராம் அவர்கள் பணியாற்றியபோது ‘Campus Scene’ என்ற தலைப்பில் மாணவர் சோசலிஸ்ட் அமைப்பின் செய்திகளை வெளியிட்டார். இந்தச் செய்திகள் கல்லூரி வளாகத்தையே கொதிக்க வைத்தது. சி.பி.ஐ.எம். கட்சியில் அப்போது தலைவராக இருந்த வி.பி.சிந்தனின் அறிவுரையினரால் ஈர்க்கப்பட்டு இடதுசாரி அமைப்பில் தனது கல்லூரி தோழர்களுடன் இணைந்தார். ‘மாணவர் சோசலிஸ்ட்’ அமைப்பானது அகில இந்திய அமைப்பாக பின்னர் ‘இந்திய மாணவர் சங்கம்’ என்று மாறியது. கல்கத்தா போன்ற பல மாநிலங்களுக்கு இந்திய மாணவர் சங்கத்தின் பிரதிநிதியாக சென்று வந்தவர் மற்றும் சென்னையில் குறைந்தபட்ச கூலி உயர்வு கேட்டு தமிழக விவசாயிகளுக்காக பேரணியை ஏற்பாடு செய்து நடத்தியவர். லயோலா கல்லூரியில் மாணவர் பேரவைக்கு அமைப்பு விதிகள் வேண்டும் என்றும், ‘கல்லூரி மாணவர்’ இதழில் “சமயம்” பற்றிய பகுதி கூடாது என்றும் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தபோது தைரியமாகத் தன் கருத்துக்களை எடுத்துக் கூறினார். அதுமட்டுமின்றி கல்லூரி விடுதியின் நிர்வாக சீர்கோடுகளை தட்டிக்கேட்டபோது காவல்துறையினரால் விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டவர்.

எம்.ஆர்.எப் கம்பெனியில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக தடையை மீறிப் பேசியதற்காக முதன் முதலில் 15 நாட்கள் சிறைவாசம் சென்றவர். பட்டப்படிப்பை முடித்த பின்பு மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் கட்சி அலுவலகமே சந்துரு அவர்களுக்கு வீடாக மாறியது. சட்டப்படிப்பும், வழக்கறிஞர் பணியும் SFI-யில் செயலாளராக இருந்த சமயத்தில், போலீஸ் தடியடியின்போது அண்ணாமலை பல்கலைகழக வளாகத்தில் உள்ள பெரிய நீர்தேக்க தொட்டியில் இரண்டாம் ஆண்டு கணிதவியில் படித்துவந்த உதய குமார் என்ற மாணவரின் இறந்த உடல் மிதந்து கொண்டிருந்தது. மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் அரசுக்கு எதிராக நடத்தி என்.எஸ்.ராமசாமி என்ற உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியின் தலைமையில் விசாரணைக் கமிஷன் உருவாகுவதற்கு காரணமானவர். இறந்தது உதயகுமார் இல்லை என அப்போதைய மாநில அரசு மறுத்து வந்தது. ஆனால் தொடர்ச்சியான போராட்டம் மற்றும் கமிஷனில் தகவல்களை சமர்பித்து அதனை பொய்யாக்கினார்.

விசாரணைக் கமிஷன் தலைவர் நீதிபதி என்.எஸ்.ராமசாமி அவர்கள் சந்துரு அவர்களை சட்டம் படிக்க சொல் என்று தனது பெஞ்ச் கிளர்க்கிடம் கூறி அனுப்பிய பின்புதான் சட்டக்கல்லூரியில் சட்டம் படிக்கச் சென்றார். 1972-ம் ஆண்டுகளில் SFIயின் மாநிலச் செயலாளராக பொறுப்பு வகித்து இந்திய மாணவர் சங்கத்தின் இரும்புக் கோட்டையாக சட்டக்கல்லூரியை தனது சகதோழர்களுடன் சேர்ந்து மாற்றினார். 1976-ல் வழக்கறிஞராக தன்னை பதிவு செய்து கொண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் தனது வழக்கறிஞர் பணியினைத் தொடங்கினார். ஒரு சாதாரணமான வழக்கறிஞராக தஞ்சையிலோ, மயிலாடுதுறையிலோ சந்துரு அவர்கள் தொழில் நடத்த விரும்பவில்லை. சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை முன்சீப் மற்றும் மாஜிஸ்டிரேட் கோர்டுகளில் நடத்துவதால், இயக்கத்திற்கு பெரிய நன்மை ஏதும் கிடைக்கப் போவதில்லை என்று எண்ணிய சந்துரு அவர்கள் தனது சட்டப்யிற்சியை உயர்நீதிமன்றத்தில் தொடங்கினார்.

இங்கிலாந்தில் படிக்கும் போதே அங்கிருந்த இடதுசாரி கருத்துக்களால் கவரப்பட்டு, சென்னையில் வந்து தனது வக்கீல் தொழில் மூலம் வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களுக்காகவே தனது சிந்தனையை செலுத்திய அதிசயப் பிறவியான புகழ்பெற்ற பாரிஸ்டர் வி.ஜி.ராவ் அவர்களின் ராவ் & ரெட்டி நிறுவனத்தில் சேர்ந்தார். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிறுவனத்தில் கடுமையாக உழைத்தார். வழக்கறிஞராகி ஒரு வருடம் கூட ஆகாதபோதும், நெருக்கடி நிலையின் போது, சென்னை மத்திய சிறையில் ‘மிசா’ சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டிருந்த அரசியல் தலைவர்களைக் கொடுமைப்படுத்திய செயல்களை விசாரிக்க அமைக்கப்பட்ட நீதிபதி இஸ்மாயில் கமிஷனில் இடம் பெற்றிருந்ததன் மூலம் உயர்நீதி மன்றத்தில் எல்லோரிடத்திலும் சந்துரு பிரபலமானார். வழக்கறிஞர் தொழில் ஒருபுறம் செய்து வந்த அதே நேரத்தில், பல தொழிற்சங்க இயக்கங்களுக்கு நீதிமன்றத்திலும், வெளியிலும் பக்கபலமாக ஆதரவாக நின்றார்.

ஜீனியர் விகடன் வார இதழில் “ஆர்டர் ஆர்டர்” என்ற தலைப்பில் இவர் எழுதிய 28 கட்டுரைகள் சட்ட உலகையே உலுக்கி எடுத்து பொது மக்களிடம் பேராதரவைப் பெற்றது. பல வழக்கறிஞர் சங்கங்கள் சந்துரு அவர்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடர முடிவெடுத்தபோதும், வெறுப்புற்ற சில நீதிபதிகள் இவரின் வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்க மறுத்தபோதும் உண்மைகளை உலகிற்கு எடுத்துரைத்தவர். அது மட்டுமின்றி பம்பாயிலிருந்து வெளிவரும் Lawyers Collective என்ற சட்ட உலகம் பற்றிய ஆங்கில மாத இதழின் ஆசிரியர் குழுவில் சேர்ந்து ஆங்கிலத்தில் சட்டங்கள் பற்றி பல கட்டுரைகளை எழுதினார். அதில் குறிப்பாக அப்போது உச்சநீதிமன்ற நீதிபதியான வி.ராமசாமி அவர்கள் சண்டிகரில் தலைமை நீதிபதியாக இருந்தபொழுது செய்த நிர்வாக முறைகேடுகளை பஞ்சாப் மாநிலம் சென்று முழு விவரங்களையும் திரட்டி கட்டுரை ஒன்றை எழுதி அகில இந்திய அளவில் கவனத்திற்குக் கொண்டு வந்தார். இதுபோன்று ஒரு வழக்கறிஞராக மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆதரவாக நின்றவர். குறிப்பாக காவல்துறையின் அடக்குமுறைக்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். இவ்வாறு சமூகத்தின் பன்முகப்பட்ட பிரச்சினைகளில் ஈடுபட்டு வந்ததால், தினசரி தொழில் நடத்துவதற்கும், அதையொட்டி ஒரு அலுவலகம் நடத்துவதற்கும் மிகவும் சிரமப்பட்டார்.

அப்பொழுது உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் “மூத்த வழக்குரைஞர்” என்ற மதிப்பினை சந்துரு அவர்களுக்கு வழங்க விரும்பினார்கள். அதன் பிறகு 12.11.1997 அன்று உயர்நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் பங்கேற்ற கூட்டத்தில் அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சீனியர் அட்வகேட் அந்தஸ்து வழங்கப்பட்டது. அதன் பிறகு அகில அளவில் உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்திற்கும் சென்று முக்கிய வழக்குகளை நடத்துவதற்கு சந்துரு அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கிட்டியது. சந்துரு அவர்கள் வழக்கறிஞராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில் கொடிய அடக்குமுறைச் சட்டமான பொடாவை எதிர்த்து திறமையாக வாதாடி முக்கிய தீர்ப்புகளை பெற்றிருக்கிறார். இவர் வழக்கறிஞராக பணியாற்றியபோது, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பில் தலித் சமூக மாணவர்கள் சேருவதற்கு வயது வரம்பைக் குறைத்து தமிழக அரசு ஒரு அரசாணை பிறப்பித்திருந்தது. இந்த அரசாணையை நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்கிட்டு ரத்து செய்ய பாடுபட்டவர்.

உச்சநீதி மன்ற முன்னாள் நீதிபதி நீதிநாயகம் வி.ஆர்.கிருஷ்ணய்யருடன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நட்புறவு கொண்டுள்ளவர். வி.ஆர்.கிருஷ்ணய்யரைப் போலவே தொழிலாளர்களுக்காக அடித்தட்டு ஏழைமக்களுக்காக சந்துரு அவர்கள் மாணவர் பருவம் முதல் செயல்பட்டு வருபவர். உயர்நீதிமன்ற நீதிபதியாக வி.ஆர்.கிருஷ்ணய்யர் அவர்கள் சந்துருவை நீதிபதியாக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி ஒருவரிடம் கூறியதை அடுத்து சந்துரு அவர்கள் கடந்த 31.07.2006 அன்று உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். தொண்ணூறு வயதாகியும் தனது முதுமை வயதிலும் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விடாமுயற்சியுடன் எந்த நோக்கத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்டாரோ அந்த லட்சியமே வழிநடத்திச் செல்லும் என்று பதவி ஏற்பின்போது உறுதி எடுத்துக்கொண்டார்.

துடிப்புமிக்க உயர் நீதிமன்ற நீதிபதி மற்றும் புரட்சிகர தீர்ப்புகள்:

வழக்கறிஞர் தொழில் செய்து வந்தபோது தொழிலாளர்களுக்காகவும், அடித்தட்டு ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் எப்படி உண்மையாகப் போராடினாரோ அதே உணர்வுடன் தனது நீதிபதி பதவி மூலம் தற்போது துடிப்புடன் செயல்பட்டு வருகிறார். மத்திய அரசின் எண்ணெய் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் நிறுவனம், அந்நிறுவனத்தின் தொழிற்சங்கம் 30.03.2007 அன்று விடுத்திருந்த வேலை நிறுத்தத்தை தொழில் தகராறுகள் சட்டம் 1947 ன் பிரிவு 23ன் படி சட்டத்திற்கு முரணானது என்றும் சட்டப்படி செல்லாது என்றும் அறிவிக்கும்படி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிநாயகம் சந்துரு அவர்கள் பல்வேறு முன்னுதாரணங்களையும், முன் தீர்ப்புகளையும் மேற்கோள் காட்டி அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள சுதந்திர உரிமைகளை தொழிலாளர்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் தள்ளுபடி செய்தார் (Bharath Petroleum Corporation Ltd Vs. petroleum  Employees Union W.p.No. 1346 of 2007).

பொதுக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கேட்டபோது சட்டம், ஒழுங்குப் பிரச்சினை வந்துவிடும் என காவல்துறையினர் மறுப்பு தெரிவித்து விட்டனர். அதன்பின்பு அனுமதி வேண்டி வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு வந்தது. இதனை பி.கே.மிஸ்ரா, சந்துரு ஆகிய இரு நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் விசாரித்தார்கள். பொதுக்கூட்டம் நடத்துவது என்பது அரசியல் அமைப்புச்சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை என்று கூறி உடனடியாக பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கி அதற்கு தேவையான பாதுகாப்பை காவல்துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்று சந்துரு அவர்கள் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். (C.J.Rajan Vs. Deputy Superintendent of Police, Mayiladurai, W.P. No. 13681 of 2007) இவ்வாறு ஜனநாயக அமைப்பில் தொழிலாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை உறுதி செய்து சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கு நீதி வழங்கி தனது கடமையைச் சிறப்பாக செய்து வருகிறார். 

வணிக ரீதியாக பாதுகாக்கப்பட்ட தகவல்களையும், சமூகத்தில் உள்ள பெரும்பான்மையான மக்களின் நலன்கள் சார்ந்து இருக்கும் பட்சத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன் கீழ் தர வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். (V.V.Mineral, regd Firm through its managing partner, Tisiyanvidai, Tirunelveli District Vs. Director of Geology and Mining Chennai & 20ths (2007 (4) MLJ 394) இதே போன்று தகவல்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கும்போது தகவல் கேட்பவர் தனது தனிப்பட்ட விபரங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.

மகாத்மா காந்தியின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இந்திய தேசிய விமான ஆணையத்தில் பணிபுரிந்து வரும் பெண் ஊழியர் ஒருவர் கதர் துணியையே அணிய விரும்பினார். அதற்காக அனுமதி கேட்டு கடிதம் ஒன்றை அந்த பெண் பணியாளர் எழுதினார். மத்திய அரசின் நிறுவனம் தனது சட்டக் கடமையிலிருந்து விலகி அந்த ஊழியருக்கு குற்றப் பத்திரிக்கை ஒன்றை வழங்கியது. அதை எதிர்த்து அந்த பெண் ஊழியர் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணைக்காக நீதிநாயகம் சந்துரு அவர்களிடம் முன் வந்தது. இந்திய தேசிய விமான ஆணையம் குற்றப்பத்திரிக்கை கொடுத்தது தவறு என்றும், கதர் ஆடைகளை அணிவதை சட்டப்படி தடுக்க முடியாது என்றும் தேசப்பக்தியுடன் கூறி உடனடியாக 4 வாரங்களுக்குள் அந்த பெண் ஊழியருக்கு ரூபாய் 5,000 வழங்க உத்தரவு பிறப்பித்தார் (S.Kasthuri Vs. The Chairman Regional Executive Director, Indian National Airport Authority, Chennai W.P.No.17380 of 1999). ஆண் இல்லாத வீட்டிற்குள் நுழைந்து அலமேலு மங்கை என்ற பெண்ணை அவரது குழந்தைகளின் முன்பாக வீட்டுனுள் நுழைந்து காவல்துறை ஆய்வாளர் அவமானப்படுத்திய வழக்கில் காவல்துறை ரூபாய் 5 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என தனது தீர்ப்பில் சந்துரு அவர்கள் குறிப்பிட்டுள்ளார். (30.04.2010- தி ஹின்டு)

காலனி ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட நமது இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகளை My Lord, Your Lordship என்று தான் அழைத்து வருகிறோம். ஆனால், அடிமை முறைக்கு எதிராக தனி மனிதர்களை துதி பாடாமல் நீதிமன்றங்களுக்கு மட்டுமே மதிப்பளிக்க வேண்டும் என்று தெரிவித்து “ஹானரபில் கோர்ட்” என அழைத்து தன்னை சார் என அழைத்தால் போதுமென தான் அமரும் நீதிமன்றத்தில் அறிவிக்கையை இடம் பெறச் செய்திருக்கிறார். நீதித்துறை வரலாற்றிலே இது போன்ற அறிவிக்கையை வேறு எந்த நீதிபதியும் செய்தது இல்லை. நீதிநாயகம் சந்துரு அவர்கள் தான் நீதிமன்றத்தில் இருக்கும் போதும், வீட்டில் இருக்கும்போதும் பாதுகாப்பிற்காக பொதுவாக அனைத்து நீதிபதிகளுக்கும் வழங்கப்படும் பாதுகாப்பை வேண்டாமென்று கூறிவிட்டார்.

காலனி ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த நாள் முதல் இன்று வரை நீதிபதிகள் கௌரவத்திற்காக நீதிபதிகள் நடந்து செல்லும்போது செங்கோல் தூக்கிச் செல்லும் முறை நடைமுறையில் இருக்கிறது. ஆனால் தனக்கு செங்கோல் பிடிக்க வேண்டாம் என்று தனது பணியாளரிடம் கூறியுள்ளார். ஜூலை மாதம் 2006ல் நீதிபதியாக பதவியேற்ற நீதியரசர் கி.சந்துரு அவர்கள் 54,00க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கியுள்ளார். ஜூன் மாதத்தில் ஒரே நாளில் 75 சிவில் அப்பீல் வழக்குகளுக்கு தீர்ப்பு கூறி சாதனை படைத்துள்ளார்.

30.09.2008ன் கணக்கெடுப்பின் படி 4,46,975 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. அதிலும் 4223 மேல் முறையீட்டு சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளது. இவ்வாறு லட்சக்கணக்கில் வழக்குகள் தேங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 1780 வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்துள்ளார். மாணவராக இருந்தபோதும், வழக்கறிஞராக இருந்தபோதும் எவ்வாறு சமூகத்தின் மேல் அக்கறையுடன் செயல்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்று தந்தாரோ அதே சாதனைகளை நீதித்துறையிலும் தொடர்கிறார். நீதிநாயகம் சந்துரு அவர்கள் விரைவிலேயே உச்சநீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்று சென்று இந்தியா முழுவதும் நீதியை வழங்க வாழ்த்துவோம். 

- ஆர்.கருணாநிதி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

செல்பேசி: +91- 9994513250

Pin It