சென்னையில் பிரசிடெண்ட் பாபு ராஜேந்திரபிரசாதுக்கு கருப்பு கொடி

ஆயிரக்கணக்கான திராவிடர்கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டம்

இன்று (22-2-53) காலையில் நடைபெற்ற இந்திய பிரசி டெண்ட் பாபு ராஜேந்திர பிரசாது அவர்களின் பவனியின் போது, வடநாட்டு ஆட்சியின் மீதுள்ள தங்கள் வெறுப்பைக் காட்டிக்கொண்டனர் திராவிடர் கழகத்தினர் கருப்புக் கொடியைப் பிடித்து. ஆயிரக்கணக்கில் திராவிட கழகத் தோழர்கள், தோழர் எஸ். குருசாமி அவர்கள் தலைமையில் சென்னை கவர்ன்மெண்ட் மாளிகைக்கு எதிரில் கரங்களில் கருப்புக்கொடிகளுடன் நின்று கொண்டு அமைதியான முறையில் அரைமணி நேரம்வரையில் ஆரவாரம் செய்து கொண்டிருந்தனர். அய்யாயிரக்கணக்கான மக்கள் விண் அதிர பெருங்குரல் எழுப்பி பிரசிடெண்டின் கவனத்தைத் திருப்பி, அவரும் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கைகூப்பி வணக்கம் தெரிவிக்கும்படி செய்தார்கள்.

கழக ஏற்பாட்டின்படி 22-2-53ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை 7-30 மணி முதல் 8-30 மணிக்குள் சென்னையில் நடந்த இந்திய பிரசிடெண்ட் பாபு இராஜேந்திர பிரசாத் அவர்கள் பவனியில் சென்னை கவர்மெண்ட் மாளிகைக்கு எதிரில் பவனி வரும்போது கழகத்தோழர்கள் 1000 கணக்கில் அந்த இடத்தில் நின்று

வட நாட்டு ஆட்சி எங்களுக்கு வேண்டாம்

வடநாட்டு சுரண்டல் ஒழிக

பனியா பார்ப்பான் ஆட்சி அழிக

ஆந்திரத் தலைநகர் சென்னையில் வேண்டாம்

இலஞ்சக் கொள்கை ஆட்சி வேண்டாம்

என்ற சொற்களை பெரிய எழுத்துக்களின் பொரித்த 100க் கணக்கான தட்டிகளுடனும் அந்த வாக்கியங் களை பெருத்த குரலில் ஒலித்துக் கொண்டும் கருப்புக் கொடிகளை பறக்கவிட்டு ஆட்டின வண்ணமாகவும் 1/2 மணி நேரம் ஆரவாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

சரியான 8-15 மணிக்கு பிரசிடெண்ட் அவர்கள் பவனி கார் அந்த இடத்திற்கு வந்ததும் அங்கு நின்று கொண்டிருந்த அய்யாயிரக்கணக்கான மக்கள் விண் அதிர பெருங்குரலுடன் கூவி பிரசிடெண்ட், கவர்னர் ஆகியவர்கள் கவனத்தைத் திருப்பி ஆர்ப்பாட்டக்காரர் களைப் பார்த்து அவர்கள் கைகூப்பி வணக்கம் தெரி விக்கும்படி செய்தார்கள். இந்தக் காட்சியைப் பார்த்த அங்கிருந்த எல்லா பொது மக்களும் கைதட்டினார்கள்.

சென்னையில் பல சந்தர்பங்களிலும் காட்டிய கருப்புக் கொடி நிகழ்ச்சிகளில் இந்தக் கருப்புக்கொடி நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகும். அறிக்கையில் குறிப்பிட்ட இடத்தில் மக்கள் வந்து கூடுவதை போலீசார் தடுக்கவும் இல்லை, கலைக்கவும் இல்லை என்பதோடு அந்த இடத்தில் எவ்வித கலவரம் குழப்பம் அசம்பாவிதம் எதுவும் நடை பெறவுமில்லை.

கருப்புக்கொடி சம்பவத்தின் போது அங்கிருந்த அதிகாரிகளும் பொதுமக்களும் கருப்புக்கொடி காட்டிக் கொண்டிருந்தவர்களும் மேலும் சொல்லப் போனால் பவனி வந்த தலைவர்களும் ஒருவர்க்கொருவர் பார்த்து சிரித்த முகத்துடனும் புன்முறுவல் பூத்த முகத்துடனும் காட்சியை அனுபவித்தார்கள்.

மற்றொரு புறம்

கருப்புக் கொடி காட்சியானது கவர்ண்மென்ட் மாளிகைக்கு முன் இந்தப்படி நடந்தது ஒரு புறம் இருக்க, மற்றொரு புறத்தில் அதாவது பவனி எவரஸ்ட்டு ஓட்டலுக்கு முன்புறம் வருகையில் அங்கு மக்கள் நடக்கும் மேடையில் பல கூட்டங்கள் ஏன் என்றால் கவர்ண்மென்ட் மாளிகைமுன் போலீசார் மக்களை நிற்க அனுமதிப்பார்களே இல்லையோ என்ற சந்தேகத்தின் மீது பிரிவு பிரிவாய் சுமார் 300, 400க்கு மேற்பட்ட தோழர்கள் கொடிபிடித்துக் காட்டிக் கண்டனக் குரல் எழுப்பி இருக்கிறார்கள். அதையும் அதிகாரிகள் தடுக்காமலும் விரட்டாமலும் இருந்ததாகத் தெரிகிறது.

அந்த நிலையில் ஏதோ ஒரு இடத்தில் லெவல் கிராசுக்குப் பக்கத்தில் பவனி வரும்போது 5, 6 தோழர்கள் போலீ சார் மருங்கு அணிக்குள் புகுந்து பவனிகாருக்கு எதிரில் கார் சிறிது நேரம் நிற்கும் படியான அளவுக்கு நின்று கொடியை பவனிக்கார் மீது போட முயற்சித்ததாகவும் உடனே போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு போய் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இது எப்படி இருந்தாலும் இப்படி ஆயிரக்கணக்கான மக்கள் பல இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டத்தில் யாதொரு கலவரமும் குழப்பமும் இல்லாமல் ஸ்டேட் சடங்கு போல் ஒழுங்காய் அமைதியாய் குதூகலமாய் நடந்தது பாராட்டத்தக்கதாகும்.

நிற்க இந்தக் கருப்புக்கொடி ஆர்ப்பட்டத்தில் கடைசிநேரத்தில் கண்ணீர்த் துளி தோழர்களும் அவர்கள் தலைவர் அறிக்கைப்படி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கதாகும். அவர்களும் சுமார் 200, 300 பேர்கள் போல் பவனியின் எல்லா இடங்களிலும் கருப்புக் கொடியுடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது. இது பாராட்டத்தக்கதோகும்.

இந்தக் கருப்புக் கொடி ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்ட எல்லாத் தோழர்களுக்கும் அதில் எவ்வித அசம்பாவிதத்திற்கும் இடமில்லாமல் ஒழுங்காக அமைதியாக நடத்திய தலைவர் குருசாமி அவர் களுக்கும் மற்றம் மாவட்டத் தலைவர்கள் சி. டி. மாணிக்கம், விஸ்வலிங்கம், ஜக்கரியா, முனுசாமி, எம். கே. டி. சுப்பரமணியம், எ. பி. ஜனார்த்தனம், பாவலர், சுப்பராயலு, கோபால், எம். பி, ராகவன், சண்முகம், எம். சி., எஸ்.சம்பந்தம் மற்றும் எல்லாக் கட்சி தோழர்களுக்கும் தாய்மார்களுக்கும் தி.க. சார்பாக நன்றியை உரித்தாகுக.

குறிப்பு :

லெவல் கிராசுக்கு பக்கத்தில் ஏற்பட்ட அசம்பா விதமான சம்பவம் ஏற்படாதிருந்தால் கழகத்திற்கு மேலும் பெருமையாக இருந்திருக்கும் ஆனாலும் அதிகாரிகள் இதை இலட்சியம் செய்யாமல் பிடித்து வைத்த தோழர்களை விரட்டி விடுவார்கள் என்று கருதுகிறோம்.

****

கருப்புக் கொடி பிடித்த அய்ந்து தோழர்கள் கைது; இரண்டொருவருக்கு பலத்த அடி?

இன்று காலை சென்னைக்கு வந்த இந்திய பிரசிடெண்ட் பாபு ராஜேந்திர பிரசாது, எழும்பூரிலிருந்து காலை 8-30 மணிக்கு சென்னை மவுண்ட்ரோடு கவர்ன்மெண்ட் மாளிகைக்கு பவனி செல்லும் போது பெரியமேட் லெவல் கிராஸிங்குக்கு எதிரில், நடை பாதையில் நின்றுகொண்டிருந்த சில தோழர்கள் பிரசிடெண்ட் கார் அருகில்வந்ததும் திடீரென்று குதித்துச் சென்று கருப்புக்கொடி காட்டியதுடன் ஒருவர் கருப்புக் கொடியையும் காரில் போட்டதாகவும் கூறப்படுகிறது.

பிரசிடெண்ட் கார் சில வினாடிகள் நிற்க நேர்ந்த தென்றும் கூறப்படுகிறது. கார் கடந்து சென்றது. அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் இத்தோழர்களை கைது செய்து அடித்து பெரிய மேட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்துச் சென்று அடைத்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. கைது செய்யப்பட்ட தோழர்கள்: என். ராமசாமி, எம்.துரைராஸ், எஸ். கணேசன், எஸ். முத்து, எம். எஸ். ஆசீர்வாதம், கெ.சங்கரன் ஆகியவர்களாகும். இவர்கள் எல்லோருக்கும் நல்ல அடி என்றும் தோழர் கணேசன் என்பவருக்கு வாயிலிருந்து இரத்தம் ஒழுகிக் கொண்டிருந்ததாகவும், கூறப்படுடிகிறது. போலீசார் கையைத் திருகியதன் காரணமாக ஒருவரின் கைமுறிந்து போயிருக்கலாம் என்று அஞ்சுவதாக கூறப்படுகிறது. ஒரு தோழர் அடி தாங்கமாட்டாமல் அதேயிடத்தில் மலஜலம் கழிந்து விட்டார் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட தோழர்களில் ஆசீர்வாதத்தைக் தவிர இதரர்களைப் பின்னர் போலீசார் விடுதலை செய்து விட்டதாகவும், தோழர் ஆசீர்வாதம் மீது, ரோடை குறுக்கே கடந்து சென்றதாக வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

விடுதலை, 22.2.53

Pin It