தெலுங்கர் தெலுங்கராக இருக்கும்போது

கன்னடர் கன்னடராக இருக்கும்போது

மலையாளிகள் மலையாளிகளாக இருக்கும்போது

தமிழர் மட்டும் எதற்குத் திராவிடராக இருக்க வேண்டும்?

- என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்..

முதலில்.. தமிழ்நாட்டின் தமிழர்கள் யாரும் தங்களைத் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்வதில்லை.. பதிவிடுவதும் இல்லை..

தமிழர்கள் திராவிடர்கள் என்று சொல்லிக் கொள்ள வேண்டும் என்று பேசுவதும் இல்லை..

தமிழ்நாட்டைத் திராவிட நாடு என்று சொல்பவர்களும் இல்லை..

தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட விரிந்த பரப்பு கொண்ட திராவிட நாடு என்ற கருத்து, 1956க்கு முன்பு சென்னைத் தலைமாநிலம் (மெட்ராஸ் பிரசிடென்சி) என்ற பெயரில் இருந்தபோது இருந்தது.

அந்தக் கருத்தின் அடிப்படையில்தான் 1956க்கு முன்பு பெரியாரும் திராவிடநாடு கேட்டார்.

1963 வரை திமுக அந்தக் கருத்தைக் கொண்டிருந்தது.. அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு என்று கூட முழங்கினார்கள்..

ஆனால் 1963ல், இந்திய அரசு கொண்டு வந்த பிரிவினைத் தடைச் சட்டத்திற்கு அஞ்சிய நிலையில் திராவிட நாடு கேட்பதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன நாங்கள்தாம் கைவிட்டு விட்டோம் எனத் திமுக திராவிட நாடு விடுதலைக் கருத்தை அப்போதே கைவிட்டு விட்டது. இப்போது யாரும் அப்படியான முழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை..

ஆனால் கருத்தளவில் இந்தியாவில் உள்ள அனைவரையும் இந்தியர் ­என எண்ண வைத்திருக்கின்றது இந்திய அரசு. திராவிடர் என்பதாகக் கூறி வந்த திமுகவினர்கூடத் தங்களை இந்தியன் என்பதாகக் கூறிக்கொள்கின்றனர்.

மொழியால் தமிழன், இனத்தால் திராவிடன், நாட்டால் இந்தியன் என்பதாகக் குழப்ப அடையாளத்தையே திமுகவினரிடையே கலைஞர் பரப்பினார்..

ஒருவனுக்கு மொழியினமும் தேசிய இனமும்தான் அடையாளம் எனில், இந்தியா என்பது தேசமும் இல்லை இந்தியன் என்பது தேசிய இனமும் இல்லை.

இந்தியா என்பது ஓர் அரசாகவும், அரசு சார்ந்த நாடாகவும் இருக்கிறதே அல்லாமல் இந்தியா என்பது தேசமாகவும், இந்தியன் என்பது தேசிய இனமாகவும் இல்லை, இருக்க இயலாது..

இந்தியாவைத் தேசமாகவும் இந்தியன் என்பதைத் தேசிய இனமாகவும் அடையாளப்படுத்துவது எல்லா நிலைகளிலும் பிழையானது, அடிமை நிலைப்பாடுடையது.

இந்தியக் குடிமகன் என்பது வேறு, இந்தியன் என்பது வேறு. தமிழர்கள், வங்காளிகள், காஷ்மீர், பஞ்சாபிகள் என இந்திய அரசு அதிகாரத்திற்குள் இருக்கிற அனைவரும் இந்தியக் குடிமக்களாக இருக்கலாம். ஆனால் அனைவரையும் இந்தியர்கள் என்று சொல்வது ஒவ்வொருவரின் தேசிய இன அடையாளங்களையும் அழிக்கவே செய்யும்..

இந்நிலையில் இப்போதும் தமிழர்கள் இந்தியர்கள் என்றே பதிவு செய்ய வைக்கப்பட்டுள்ளனர்..

பள்ளிச் சான்றிதழ் முதல் பிறப்புச் சான்றிதழ் தேர்தல் பதிவுகள் என அனைத்திலும் இந்தியர் என்றுதான் பதிய வேண்டியிருக்கிறது..

தமிழர் என்றோ வங்காளிகள் என்றோ பஞ்சாபி என்றோ யாரும் பதிந்து கொள்ள முடியாது..

இந்திய அரசு அப்படியாகப் பதிவு செய்வதை மறுக்கிறது..

இந்தியன் என்று பதிவு செய்யப்படுவதை இழிவாகவோ, தவறாகவோ கருதி அதை எதிர்த்து எந்த அரசியல் கட்சிகளும் பேசுவதும் இல்லை.. போராடுவதும் இல்லை..

இந்திய அரசியல் சட்டப்படி இந்தியக் குடிமகன் என்றுகூடப் பதிவு செய்யட்டும்.. ஆனால் அதற்காகத் தமிழர்களோ பிறரோ இந்தியர்கள் ஆகிவிட முடியாது.

தமிழர்களை இந்தியர்கள் என்று பதிவு செய்யக்கூடாது என்று பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் தென்மொழித் தொடர்பினரும் தோழர் தமிழரசன் அரசியலை ஏற்றுச் செயல்படுவோர்கள் மட்டுமே போராடி வருகின்றோம்..

நாம் தமிழர்கள் என்று கை உயர்த்திக் கொள்பவர்கள் கூட அதை எதிர்த்து வாய் திறப்பதோ போராடுவதோ இல்லை..

இந்நிலை ஒருபுறம் இருக்க,

பள்ளி, கல்லூரி, பிறப்புச் சான்றிதழ்களில் பிற ஆவணங்களில் இந்தியன் என்று பதிந்து கொண்டிருப்பது போல் திராவிடன் என்று எங்காவது பதிகிறார்களா?

நாங்கள் எல்லாம் இந்தியாவைச் சார்ந்தவர்கள் என்றோ, வெளிநாடுகளுக்குச் செல்கிற ஒருவர் நாங்கள் இந்தியாவிலிருந்து வருகிறோம் என்றோ சொல்லிக் கொள்வது போல், நாங்கள் எல்லாம் திராவிட நாட்டைச் சார்ந்தவர்கள் என்றோ, திராவிடநாட்டிலிருந்து வருகிறோம் என்றோ எவரும் சொல்லிக் கொள்வது இல்லை..

சில பொழுதுகளில் தமிழ்த் தேச உணர்வுள்ள சிலர் வெளிநாடுகளில் தமிழ்நாட்டில் இருந்து வருகிறோம்; அது இந்தியாவின் தென்கோடியில் உள்ளது என்ற அளவில் சொல்வதுண்டு.

அது உண்மையும் கூட. ஆனால் எவரும் நாங்கள் திராவிட நாட்டிலிருந்து வருகிறோம் என இல்லாத ஒன்றைச் சொல்வதில்லை. தமிழர், தமிழ்நாடு என இருப்பதையே சொல்ல மறுக்கிற எவரும் இல்லாததைச் சொல்வதேயில்லை.

ஆனால், திராவிடம் என்கிற கருத்து ஒன்று நிலவி வருகிறது..

அது எவ்வாறு நிலை வருகிறது? யாரிடம் நிலை வருகிறது? ஏன் நிலவி வருகிறது? என்பது மிகவும் முதன்மையானது.

ஆரியம் என்பது அதிகார கருத்தாக மாறிய பொழுது, திராவிடம் என்பது ஆரியம் அல்லாத அடையாளக் கருத்தாகவும், ஆரிய அதிகாரத்தை எதிர்த்த கருத்தாகவும் நிலவத் தொடங்கியது.

ஆரியர்களே உயர்ந்தவர்கள், ஆரிய மொழியே சமஸ்கிருதம், ஆரிய வர்த்தம் என்பதே ஆரியக் கருத்தாடல்கள் அதிகாரம் செலுத்தும் பகுதி, ஆரிய நாடு என்பதே ஆரிய அதிகார அரசுக்குரிய நாடு என்பதெல்லாம் வரலாறு நெடுக பார்ப்பனிய அதிகார வகுப்பின் வரலாறாக இருந்து வருகிறது..

வேத புராண சாஸ்திரங்கள் என்னும் ஆரியப் புனைவு இலக்கியங்கள் தொடங்கி அதைச் சார்ந்து எழுதிய பாரதி வரை அதைக் கடந்து இன்று வரை உள்ள கருத்தாளர்கள் அனைவரும் ஆரியம், ஆரிய மொழி, ஆரிய வர்த்தம், ஆரிய நாடு எனப் பெருமை பேசுகிறவர்களே..

"பேரிமய வெற்பு முதல் பெண்குமரி ஈறாகும்

ஆரிய நாடு என்று அறி"

"உன்னத ஆரிய நாடு எங்கள் நாடே

ஓதுவம் இஃதை எமக்கில்லை ஈடே"

"ஆரிய நாட்டினர் ஆண்மையோ டியற்றும்

சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக"

- என்றெல்லாம் எண்ணற்ற இடங்களில் இதை ஆரிய நாடு என்று பெருமைபட்டுக் கொள்ளவார் பாரதியார்..

அதேபோல் ஆரியரை உயர்த்தி நிறுத்துவதோடு பிறரையெல்லாம் இழிவு செய்து கீழ்நிலைப்படுத்தி இழித்துரைப்பார்..

"வீரிய மொழிந்து மேன்மையும் ஒழிந்து, நம்

ஆரியர் புலையருக்கு அடிமைகள் ஆயினர்"

"தீய புலைருக்கும் விடுதலை"

"ஆரியத் தன்மை அற்றிடும் சிறியர்

யாரிவண் உளர்? அவர் யாண்டேனும் ஒழிக!"

புலையரை இழித்தும், ஆரியரல்லாதவரை, ஆரியத் தன்மை இல்லாதவரை ஒழிக எனும் கருத்தைப் பாரதி கொண்டிருந்ததைக் கவனிக்க வேண்டும்.

ஏதோ அன்றைய பாரதி மட்டுமில்லை இன்றைக்கும் ஆரியப் பார்ப்பனிய கருத்தாடல் கொண்ட அனைவருமே வேதங்களையும் புராணங்களையும் ஆரியத்தையும் உயர்த்திக் கொண்டாடி வருகின்றனர்..

ஒரு கிழமைக்கு இரண்டு முறையிலாவது ஆரியப் பார்ப்பனிய கருத்தாடல்களை உச்சி முகர்ந்து கொள்கின்றன ஊடகங்கள் அனைத்தும்..

தினமணி, தினமலர், தமிழ் இந்து என்கிற பார்ப்பனர்களின் செய்தி ஊடகங்களில் மட்டுமன்றி.. தினத்தந்தி, சன் தொலைக்காட்சி உள்ளிட்ட பார்ப்பனரல்லாத பார்ப்பனியச் சார்புடைய இதழ்களில், காட்சி ஊடகங்களில் எல்லாம் வேத புராண குப்பைக் கூலங்களே ஏற்றிப் போற்றப்படுகின்றன.. ஆரியம் தலை விரித்தாடுகிறது..

அந்நிலையில் அதிகார வெறி கொண்ட ஆரிய பார்ப்பனியத்தை எதிர்த்து அனைவரையும் சமம் என்னும் நோக்கம் கொண்டதாகவே எழுந்து செயலாற்றியது தமிழ் அறம்..

தமிழ் அற உணர்வு கொண்ட பழந்தமிழ்ப் பேரினம் விரவி இருந்த பகுதிகளுக்குள் எல்லாம் ஊடுருவித் தமிழியத்தைக் கூறு பிரிக்கவும் சிதைக்கவும் செய்தது ஆரியம்.

சமஸ்கிருதத்தைக் கலந்து தமிழியத்தை சிதைத்தது..

சாதி கலப்பால் பிறந்த குழந்தையை எப்படி ஒரு குறிப்பிட்ட சாதியின் குழந்தை என்று சொல்ல இயலாதோ.. அப்படித் தமிழிலிருந்து சமசுக்கிருதக் கலப்பால் உருக்கொண்ட மொழிகளைத் தமிழ் என்று சொல்ல இயலாமல்தான், மொழிப் பெயர் தேயங்கள் தமிழியத் தொடர்பு மொழிகள் உருக்கொண்டன..

அவற்றை ஆரியம் தனக்குச் சார்பானவாக அரவணைத்ததுடன், தமிழ் மூலத்திலிருந்து பிறந்த அவற்றையெல்லாம் தமிழுக்குப் பகையாக ஆக்குவதிலேயே ஆரியம் கவனம் செலுத்தியது.. செலுத்துகிறது.. தூண்டி வருகிறது..

ஆனால், தமிழ் மூலத்திலிருந்து திரிந்த அவற்றைத் தமிழியத் திரிபு மொழிகள், திரமிள -திராவிட மொழிகள் எனச் சொல்லிக் கொள்வதில்கூட தமிழர்கள் சிலர் மறுக்கின்றனர்.

தமிழ் மூலத்தினின்று தோன்றியவையே அவையெல்லாம் என்ற கருத்தை வலிமைப்படுத்தி உலகறிய தமிழர்கள் செய்யாத நிலையில்தான் கால்டுவெல், பர்ரோ போன்ற அயல் நில அறிஞர்கள், தலைவர்கள் அவற்றை உலகறியச் செய்தனர்.

தமிழே திராவிடத்திற்குத் தாயும், ஆரியத்திற்கு மூலமும் என்று அதன் மொழி, இனச் சிறப்பை உலகறிய முழங்கினார் பாவாணர். தமிழர்களின் குமுகவியல், அரசியல் வாழ்வியல் சிறப்புகளைத் தமிழ் உலகம் எங்கும் பரப்பினார் பாவலரேறு.

ஆனால், தொடக்கத்தில் ஆரியத்தை எதிர்த்த திமுக, பினனர் ஆரியத்தை வலுவாக எதிர்க்கும் திறனிழந்து போனது.

ஆனால் ஆரியத்தை எதிர்த்துக் கருத்தளவில் உருக்கொண்டதே திராவிடம்.

ஆரியத்தை எதிர்த்த தமிழியத் தொடர்புடைய இனமக்களையெல்லாம் இணைத்த பொதுச் சொல்லாகவே திராவிடம் அயாத்திதாசர் காலத்திற்கு முன்பிருந்தே உணரப்பட்டது.. பரப்பப்பட்டது..

திராவிடம் என்பதைத் திராவிட நாடாக அடையாளப்படுத்தி முனைந்த முனைப்பு ஆங்கிலேயரால் இந்தியா என வலிய உருவாக்கப்பட்ட அக்காலத்தின் இயங்கியல் போக்கில் நடந்த முயற்சி.

அந்த நாட்டின் முயற்சியில் ஏற்பட்ட பிழை பல்வேறு கோணங்களில் உணரப்பட்டு 1956 இல் பெரியார் தொடங்கிப் படிப்படியாக அனைவராலும் கைவிடப்பட்டது..

1956 க்குப் பின்னர் தமிழ்நாடு தமிழருக்கே என்பதே வலுப்படத் தொடங்கியது..

திராவிடம் என்பதை ஆரியத் தொடர்பற்ற தமிழிய மொழிகளின் அடையாளச் சொல் என்பதாகவும், ஆரிய எதிர்ப்புக்கான தமிழிய தொடர்புடைய இனங்களின் ஒருங்கிணைப்புச் சொல் என்ற அளவிலும் விளங்கிக் கொள்ளாமல் தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள இணைப்புச் சொல்லாக மட்டுமே புரிந்து கொள்ளும் நடைமுறையை திமுகவே வளர்த்தது..

திமுக தோற்றம் கொண்டு தேர்தலில் ஈடுபடத் தொடகிய பின்னர் அதன் தேர்தல் வாக்குத் தேவைக்காகத் தமிழ்நாட்டில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாளத் தாய் மொழியினரின் வாக்குகளை ஈர்ப்பதற்காகவே திராவிடம் என்பதன் பொருளின் உள்ளடக்கத்தை மாற்றியது திமுக.

எனவே, திராவிடம் என்பதற்குரிய உள்ளீடான ஆரிய மறுப்பு, ஆரிய எதிர்ப்பு என்கிற கருத்தாடல்கள் வலுவிழந்து போயின.

பெரியார் மறைவுக்குப் பின்னர், தமிழ்நாடு தமிழருக்கே முன்னெடுப்பதைத் திராவிடர் கழகம் கைவிட்ட பின்னர், விடுதலை அலுவலகப் பெயர்ப் பலகையில் உள்ள தமிழ்நாடு தமிழருக்கே முழக்கத்தை அழித்துவிட்ட பின்னர்.. படிப்படியாக ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு, இந்தியப் பார்ப்பனிய அரசக் கட்டமைப்பு எதிர்ப்புகளைத் திராவிடம் என்கிற பெயரின் உள்ளீட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொண்டது திராவிடர் கழகம்..

அதனால் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய ஐயா ஆனைமுத்து, மயிலாடுதுறை இராமதாசு, தஞ்சை இரத்தினகிரி, பேரா.வீரபாண்டியன், பேரா. நெடுஞ்செழியன், கோவை இராமக்கிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்ட பலரும் பல நிலைகளில் ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பை வலுப்படுத்திட இயக்கங்களை உருவாக்கினர்.

எனவே, திராவிடம் எனும் சொல்லுக்கு ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு, இந்திய அரசக் கட்டமைப்பின் மறுப்பு என்கிற பொருள் உள்ளீடு இன்னமும் இயக்கங்களிடையே உயிர்ப்பித்துக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டு அளவில் தமிழ்த்தேசிய எழுச்சிக்கு, தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுக்குத் தமிழ்த்தேசம், தமிழ்நாடு, தமிழர் என்னும் அடையாளப்படுத்தங்களே சரியானவை.., போதுமானவை என்ற போதிலும், இத்தகைய நோக்கிலேயே இந்தியாவிலுள்ள பிற தேசிய இனங்களிடையே எதிர்ப்புணர்வை இந்திய பார்ப்பனிய அதிகாரப் போக்கு எதிர்ப்பை உணர்த்துவதற்கு, விளங்க வைப்பதற்குத் திராவிடம் எனும் சொல்லும் தேவைக்குரியதாக உள்ளது.

உலக அளவில் சில நூற்றாண்டுகளாகத் தமிழ் அறிஞர்களாலும், அண்டை மொழித் தேச அறிஞர்களாலும், எண்ணற்ற வெளிநாட்டு அறிஞர்களாலும் அக்கருத்து உலக அறிவுத்தளத்தில் ஆரிய மறுப்பு சொல்லாகப் பதியப்பட்டுள்ளது. உலக அகராதிகள் அனைத்திலும் திராவிடம் என்பதற்குச் சமசுக்கிருதம் அல்லாத என்கிற விளக்கங்களே பதியப்பட்டுள்ளன..

இந்நிலையில் இச்சொல்லின் உள்ளீடை இழக்கும் வகையிலும் பிற தேசங்களுக்கும் உலக அளவிலும் விளக்கப்படுத்துவதற்கும் இயல்பாகப் பரவி இருக்கிற அச்சொல்லை மறுக்க வேண்டும் என்பது தேவையற்றது.

அவ்வகையில் அச்சொல்லை கையாள்வது தேவையானதாகவும் உள்ளது.

இன்றைக்கு உள்ள இந்திய பாசிச ஒற்றை அதிகார அரசு அமைப்பு என்பது வல்லரசியத்தால் மட்டுமின்றி ஆரிய பார்ப்பனியத்தாலும் கட்டமைக்கப்பட்டு அதிகார அளவில் வலுப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்திய எதிர்ப்பு என்பதை ஏதோ பாஷக என்கிற கட்சி எதிர்ப்பாக, காங்கிரஸ் கட்சி என்கிற கட்சி எதிர்ப்பாகப் புரிந்து கொள்ளாமல் இந்திய ஒற்றை பாசிச அரசு உருவாக்க அமைப்பையே எதிர்ப்பது என்று புரிந்து கொள்ள வேண்டும். இந்திய எதிர்ப்பு என்பது ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு என்பதாகவும், கார்ப்பரேட் வல்லதிகார எதிர்ப்பு என்பதாகவும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அவ்வகையிலான இந்திய எதிர்ப்பைத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் மட்டுமே செய்ய இயலாது. இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களின் ஒற்றுமையை வலுப்படுத்தியே செய்ய வேண்டியிருக்கிறது. அவ்வகையிலான தேசிய இனங்களின் ஒற்றுமை கொண்ட புதிய ஒன்றியத்தை உருவாக்க வேண்டிய தேவை இருக்கிறது.

இந்தியாவில் உள்ள பிற தேசிய இனங்களுக்குக் கார்ப்பரேட் முதலாளிய எதிர்ப்பு அரசியல் புரிதலை உருவாக்குவது போல, ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பு அரசியலையும் விளங்க வைக்க வேண்டியுள்ளது.

ஆரியப் பார்ப்பனிய எதிர்ப்பை, சமசுக்கிருத அதிகார எதிர்ப்பை, வேதபுராணம் ஆரிய கருத்துருவாக்க எதிர்ப்புகளை, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிகாரங்கள் எதிர்ப்பை சரியாக விளங்க வைக்க வேண்டிய தேவை ஆரியத்திற்கு நேரெதிரான தமிழியத்திற்கே உள்ளது.

அத்தகைய அரசியல் விளக்கப்படுத்தங்களுக்கு ஆரிய மறுப்பை, எதிர்ப்பை அடையாளப்படுத்தி உருக்கொண்ட திராவிடம் எனும் சொல்லும் தேவைக்குரியதாகின்றது.

ஆரியம் என்னும் அதிகார வெறி அடையாளங்கள் இருக்கின்றவரை திராவிடம் எனும் ஒருங்கிணைப்பு உரிமைச் சொல் புழக்கத்தில் இருக்கவே செய்யும்.

திராவிடம் என்பது எந்தத் தனி ஒரு தேசிய இன மக்களையும் குறிக்கும் சொல் இல்லை.. எனவே தமிழர்களைத் தமிழர்கள் என்று சொல்லாமல் திராவிடர்கள் என்று சொல்ல வேண்டிய தேவையில்லை.. அதுபோல் தெலுங்கர்களையோ, கன்னடர்களையோ பிற தமிழியத் தொடர்புடைய எந்த ஒரு தனி இனத்தையோ திராவிடர் என்று சொல்லவேண்டிய தேவையில்லை.

ஆதலால் ஆரியம் அல்லாத தமிழிய மூலத்திலிருந்து விரிந்து பெருகிய தமிழினத் தொடர்புடைய மக்களையெல்லாம் இணைத்து அடையாளப்படுத்துகிற பொதுச்சொல் என்கிற அளவில் விளங்கிக் கொள்ளவும் கையாளவுமே வேண்டியுள்ளது.

பொழிலன், தமிழக மக்கள் முன்னணி