கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

உலகம் முழுவதும் வலதுசாரிகளின் சிந்தனை போக்கு நூல் பிடித்தார் போல் பொருந்தி போவது தற்செயலானது அல்ல. அது அவர்கள் நம்புகின்ற கோட்பாட்டின் இயங்கியல் ஒற்றுமை. அப்படி தமிழ்ச் சூழலில் பாஜகவினருக்கும் பெரியாரை நிராகரித்து விட்டு தமிழ்த்தேசியம் பேசுவதாக கூறிக் கொள்பவர்களுக்கும் பல நேரங்களில் கருத்து ஒற்றுமை உண்டாகி வருவதை நாம் பார்க்க முடிகிறது. இவர்கள் பேசும் தமிழ்த்தேசியம் தஞ்சாவூர் தமிழ்த்தேசியமாக சுருங்கி நிற்பதும், அதனூடாக "சைவ தேசிய" சிந்தனைப் போக்கு வளர்த்தெடுக்கப்படுதலையும் அம்பலப்படுத்த வேண்டியது அரசியல் கடமையாக நம் முன் நிற்கிறது.

இந்த 'தமிழ் சைவ தேசிய’ சிந்தனைப் போக்கு ஒரு வகை நவீன நிலப்பிரபுத்துவ இலாப நோக்கத்துடன் உருவாக்கப்படுகிறது. தமிழர் வரலாற்றில் மன்னர்களும், நிலப்பிரபுக்களும் சாதியையும் அது நிகழ்த்தும் பொருளாதார சுரண்டலையும் மிக இயல்பான ஒன்றாக மக்கள் ஏற்றுக்கொள்ள மதம் என்ற நிறுவனத்தை தான் பயன்படுத்தினார்கள். அதனடிப்படையில் தான் கி.பி. 5 முதல் 8 ஆம் நூற்றாண்டு வரை பக்தி இயக்கம் பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. தமிழர் வரலாற்றில் பக்தி இயக்க காலக்கட்டத்தைப் போன்ற வரலாற்று விரயம் நடந்தது இல்லை. மதத்தின் பெயரால் மனிதர்களை கொலை செய்தல், சமூகத்திற்கு பயன்படாத பக்தி பாடல்களை எழுதுவதில் தமிழ்ப் புலவர்களை ஈடுபடுத்துதல், மற்ற மதத்தினர் மீது வெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொள்ளுதல் என்று நம்மை பின்னோக்கி இழுத்து, வரலாற்றின் பெரும் சுவற்றில் ஆனி அரைந்து நிறுத்தியது பக்தி இயக்கம். பக்தி இயக்கம் பெருமளவில் தமிழகத்தின் இடைநிலை சாதியர்களாலும், நிலப்பிரபுக்களாலும் முன்னெடுக்கப்பட்டது. அது சனதானத்தை உள்வாங்கிய மத (சைவ/வைணவ) நிறுவனங்களாக நின்று சாதியப் பொருளாதார கட்டமைப்பை பாதுகாத்தது.

seeman senthamizhan and maniarasanஇதன் அடிப்படையில் தான் சைவ நிலப்பிரபுத்துவம் காவிரி டெல்டா பகுதிகளில் தன் சுரண்டலை நிதானமாக செய்து வந்துள்ளது. இந்த சுரண்டல் சமூகத்தின் இறுக்கத் தன்மையின் மீது ஓங்கி மிதிக்கும் வாய்ப்பு 11 நூற்றாண்டுகள் கழித்து தான் தமிழ்ச் சமூகத்திற்கு கிடைத்தது. அந்த வாய்ப்பை சமூகத்தின் இயங்கியல் தன்மையின் வாயிலாக வரலாறு ஒரு நாத்திக இயக்கத்திற்கு தான் அளித்தது. ஆம், நோய்க்கேற்ற மருத்துவமாக பெரியாரின் பகுத்தறிவு இயக்கம் இருந்தது. தலைவர் பெரியார் அவர்கள் பெரும் படையை திரட்டி அந்த படையின் முன் வரிசையில் நின்று களம் கண்டார். அவர் நாத்திக இயக்கத்தை, சுயமரியாதை இயக்கமாகவும் பின்னர் திராவிட இயக்கமாகவும் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து சமர் செய்தார். சனதானத்தை அரசியல் பண்பாட்டு தளத்தில் நின்று சமரிட்டு தமிழ் நாட்டை பக்குவப்படுத்தினார்.

காவிரி டெல்டா பகுதிகளில் திராவிட விவசாய சங்கமும், பொதுவுடமை இயக்கத்தின் விவசாய சங்கமும் நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிரான வர்க்க அரசியலை தீர்க்கமாக நடத்தியது. இந்த இடதுசாரி தன்மையிலான அரசியலே பக்தி இயக்கத்தின் தாக்கத்தில் இருந்தும், நிலவுடைமை சுரண்டலில் இருந்தும் தமிழர்களை விடுவித்துள்ளது.

இந்த வகையில் பழைய வரலாற்றின் மீதான பகுப்பாய்வில் இருந்து சமகால தமிழர் அரசியல் வரலாற்றை நாம் நோக்கும் பொழுது, தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்பதை மறுக்கும் 'தமிழ் இந்து' என்பதும், 'ஊர் (கிராமத்திற்கு) திரும்புவோம்'! என்பதும், ‘நூறுநாள் வேலைத்திட்டம் தான் விவசாயத்திற்கு எதிரி!’ என்பதும், வருணாசிரமத்தின் அடிப்படையிலான சாதியினை ‘குடி’ என்பதும் இணைகிற புள்ளி நிலப்பிரபுத்துவ சமூக சிந்தனைப் போக்கே. இவர்கள் உருவாக்க துடிப்பது நவீன நிலப்பிரபுத்துவ சமூகத்தை தான். தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் உழைப்பால் வீழ்த்தப்பட்ட இவர்களின் நிலப்பிரபுத்துவ சமூகத்தை மீள் உருவாக்கம் செய்ய முயற்சி செய்கிறார்கள்.

ஐயா தொ. பரமசிவன் போன்ற பண்பாட்டு ஆய்வாளர்கள் முன்வைத்த ‘தமிழர்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல!’ என்பது பண்பாட்டு மற்றும் வரலாற்று ரீதியான எதிர் முழக்கம். திராவிட இயக்கச் சிந்தனை மரபின் இயங்கியல் தொடர்ச்சியான 'மே பதினேழு இயக்கம்' இதை சாமானிய மக்களுக்கு புரிகின்றன வகையில் எளிமைப்படுத்தி பேசியது. "உன் சாமி வேறு என் சாமி வேறு" என்று மே பதினேழு இயக்கம் கடந்த காலங்களில் எழுப்பிய அந்த முழக்கம் தமிழ்த்தேசிய அரங்கில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது பாஜகவினரிடமும், சனதானவாதிகளிடமும் கலக்கத்தை உருவாக்கியது. இதனை மே பதினேழு இயக்கத்தின் மீது அதன் பின்னர் நிகழ்த்தப்பட்ட தொடர் ஒடுக்குமுறைகள் மூலம் உணரலாம்.

அக்டோபர் 2, 2016 அன்று தாம்பரம் பாரதி திடல் பகுதியில் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா' கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் முகமது அன்சாரி தலைமையில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் ஆற்றிய உரையில், "தமிழர்கள் இந்துக்கள் அல்ல! இந்துத்துவ அரசியலை நீங்கள் கையில் எடுக்கிறீர்கள் என்றால் நீங்கள் தமிழர்கள் இல்லை என்று அர்த்தம். ஏன் என்றால் தமிழர்கள் இந்துக்கள் அல்ல!" என்று பேசினார். இந்த முழக்கத்தின் தாக்கத்தை உணர்ந்த இந்திய பார்ப்பனிய அரசு தன் கைப்பாவையாக இருந்த அதிமுக அரசின் காவல்துறையை வைத்து தோழர் திருமுருகன் மீது வழக்குத் தொடுத்துள்ளது (மு.த.அ. எண்: 1730/217 தேதி: 23-10-2017). பிரிவு 153 மற்றும் 505(2) ன் கீழ் பதியப்பட்ட அந்த வழக்குகளுக்கு இன்று வரை தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இதனால் சனதானவாதிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சரிசெய்யும் இளக்கியாக தான் தமிழ்த்தேசிய பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்கள் ‘தமிழ் இந்து’ என்ற புரட்சிகர சொல்லை (!) உருவாக்கி உள்ளார். இதன் மூலம் அம்பலப்பட்டு நிற்கும் இவர்கள் பெரியாரிய மற்றும் முற்போக்கு தமிழ்த்தேசிய இயக்கங்களை பார்த்து வைக்கும் வாதம் என்ன? “நீங்கள் (நாம்) தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று பேசிக்கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள். அப்படி பேசுவதன் மூலம் மாறப்போவது எது?” என்று கூறுகிறார்கள். ஆனால், ஐயா மணியரசன் அவர்களோ 'ஆரிய இந்து - தமிழ் இந்து' என்று வடவர்களிடம் இருந்து தமிழர்களை பிரித்து காட்டக்கூடிய செயல்வடிவம் பற்றி பேசுகிறார் (?). அதோடு நில்லாமல் ‘தமிழர்கள் இந்துக்கள் அல்ல’ என்று பேசிக்கொண்டே இந்து என்று நம்மை குறிப்பிட்டுக் கொள்கிறோம் என்று குற்றச்சாட்டுகள் வைக்கின்றனர்.

ஐயா மணியரசன் அவர்களின் மகன் ம.செந்தமிழன், 'செம்மை' என்று ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். அந்த அமைப்பு இயற்கை விவசாயம் சார்ந்த பயிற்சி உள்ளிட்ட சில வேலைகளை செய்து வருகிறது. அதன் மிக முக்கிய முழக்கம் ஊர் திரும்புதல் (கிராமத்திற்கு திரும்புவோம்) என்பது தான். இதன்பால் ஈர்க்கப்பட்டு நல்ல வேலையில் இருக்கும் இளைஞர்கள் தங்கள் வேலையை உதறிவிட்டு இயற்கை விவசாயம் செய்கிறோம் என்று ஊர் திரும்பி வருதல் நடைபெறுகிறது. தன் தாத்தாவையும் தந்தையையும் பண்ணை கூலி முறையில் இருந்து விடுவித்ததோடு, அடுத்த தலைமுறையானது கல்வி, வேலைவாய்ப்பு மூலம் பொருளாதாரத்தை உயர்த்திக்கொண்டு சுயமரியாதையோடு வாழ வகுத்தது திராவிட இயக்கத்தின் அரசியல் எழுச்சி என்பதை உணராத தலைமுறைகளாக இவர்கள் திசைமாற்றப்பட்டுள்ளனர். விளக்கில் விழும் விட்டில் பூச்சிகளாக இவர்கள் நல்ல வேலைகளை உதறிவிட்டு ஊர் திரும்புவதை கையறு நிலையில் அவர்களின் தாய் தந்தையர் பார்க்கும் அவலம் ஆங்காங்கே நடந்து வருகிறது.

அடுத்ததாக நூறுநாள் வேலைத்திட்டம் தான் விவசாயத்திற்கு எதிரி என்று பண்ணையார்களின் குரலாகவே நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்கள் பேசுகிறார். பெரு விவசாயிகள் தங்கள் நிலங்களில் இறங்கி வேலை செய்யும் ஆட்கள் நூறு நாள் வேலைக்கு செல்வதையும் அதில் அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச வேலை உத்தரவாதத்தையும் பொறுத்துக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். நிலப்பிரபுத்துவ பண்ணையார் மனநிலையில், விவசாயக் கூலிகள் பண்ணை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அடைவதை எதிர்க்கும் நோக்கமே இதில் உள்ளது. சாதிய சிந்தனையில் உருவான இந்த கருத்தை தமிழ்த்தேசியம் பேசுவதாக கூறும் தலைவர் பேசுகிறார். நூறு நாள் வேலைத் திட்டத்தில் பங்குபெறும் உழைக்கும் மக்களை சோம்பேறிகளாக கருதி கருத்து வெளியிடுகிறார்கள் அந்த கட்சியினர். அதோடு மட்டுமல்லாமல், ஆரியர்கள் வகுத்த இன்றைய சாதியினை, ஆரியர்களின் படையெடுப்புக்கு முந்தைய இனக்குழுக்களை அடையாளப்படுத்தும் ‘குடி’ என்று கூறுவது, ஆரிய பார்ப்பனியத்திற்கு வெள்ளையடிக்கும் செயலாகும்.

இந்த மூன்று நபர்களும் வெவ்வேறு மொழிகளில் மாற்றி மாற்றி ஒரே செய்தியை தான் பேசுகிறார்கள். அது "சுய கிராம பொருளாதார மீட்பு" என்கிற வேலைத்திட்டம் தான். ஆம், தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதை ஆய்வு செய்கிறார். அதில் சாதி என்பது ஒரு சமூகப் பொருளாதார கட்டமைப்பு என்று வரையறை செய்கிறார். மேலும், சாதி பிழைத்து வருவதற்கு மிக முக்கியமான காரணமாக சுய கிராம பொருளாதார கட்டமைப்பை சுட்டிக்காட்டுகிறார். மலிவான சாதனங்கள் (கருவிகள்) தான் இதை பாதுகாத்து வருகிறது என்று இந்திய சூழலில் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் தோலை உரித்து காண்பிக்கிறார்.

தோழர் தமிழரசன் தமிழ்த்தேசியத்தின் வளர்ச்சிக்கு எதிரியாக எதை பார்த்தாரோ அந்த நிலப்பிரபுத்துவ சிந்தனைக்கான மறுமலர்ச்சி இயக்கத்தைத் தான் ஐயா மணியரசன், செம்மை செந்தமிழன் மற்றும் சீமான் வகையறாக்கள் செய்து வருகின்றனர். நிலத்தோடு பினைக்கப்பட்ட சாதிய சமூகத்தில் இருந்து முதல் தலைமுறையினராக கல்வியை, கருவியை கைக்கொள்ளும் மக்கள்திரள் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு மாறியிருக்கிறது. இது திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடமை இயக்கத்தின் உழைப்பால் நடந்தது. இதை மாற்றி மீண்டும் பழைய தஞ்சாவூர் நிலவுடைமை சமூகத்தை தமிழ்த் தேசியத்தின் பெயரால் உருவாக்க துடிக்கிறார்கள் இவர்கள். அதன் உட்கருவில் ஆர்எஸ்எஸ்-இன் இந்து தேசியத்தை போல "தமிழ் சைவ தேசியம்" ஒளிந்து கிடக்கிறது என்பதே நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி.

இவர்களிடம் நமக்கு மிக எளிமையான சில கேள்விகள் எழுகிறது. இந்திய தேசியத்தை எதிர்க்கும் (?) இவர்கள் தங்களை இந்தியர்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்ளவதை சுலபமாக மறப்பது ஏனோ? முதல் தலைமுறை படித்த, நிலமற்ற இளைஞர்கள் 'செம்மையின்' மூலை சலவையால் ஊர் திரும்பிய பின்னர் யாருடைய நிலத்தில் விவசாயம் செய்வார்கள்? அதே பழைய பண்ணையாளர்களின் நிலத்திலா? நூறு நாள் வேலைக்கு செல்பவர்கள் சோம்பேறிகள் என்றால் விவசாயள் கூலிகளாக இருக்கும் மக்களின் உழைப்பால் பலன் அடையும் விவசாய நிலம் வைத்திருக்கும் முதலாளிகளுக்கு பெயர் என்ன?

‘நாங்கள் இந்துக்கள் அல்ல’ என்கிற எங்கள் முழக்கம் வெற்று பேச்சு அல்ல. அது பார்ப்பனிய அதிகாரத்தின் வேரை ஆட்டிப் பார்க்கும் அரசியல் சொல். தமிழ்த் தேசிய அரசியல் புரிந்தவர்களால் புரிந்துகொள்ள முடியும் நாம் இந்திய தேசியத்தினுள் நின்று தான் தமிழ்த்தேசிய கருத்தை வளர்த்தெடுக்கும் வேலையை செய்து வருகிறோம். அப்படி வளர்த்தெடுக்கப்படும் தமிழ்த்தேசிய அரசியல் முற்போக்கு மற்றும் இடதுசாரி தன்மையை கொண்டதாக வளர வேண்டும் என்ற சிந்தனையும் பொறுப்புணர்வும் மே பதினேழு இயக்கத்திற்கு இருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் திசை வழிப் போக்கினை உறுதிச் செய்வதில் உள்ள தடைக்கற்களை மே பதினேழு இயக்கம் தொடர்ந்து அம்பலப்படுத்தும்.

- மே பதினேழு இயக்கம்