kolathur_mani_560

'இந்திய அரசே காஷ்மீர் மக்களின் மீதான போரை நிறுத்து' என்ற கண்டன முழக்கத்துடன் சென்னை, சைதாப்பேட்டையில் 13.8.2010 வெள்ளிக்கிழமை அன்று காலை உள்நாட்டு அடக்குமுறை எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதலில் காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஆர்ப்பாட்டம் நடைபெறுவதற்கு ஒரு நாள் முன்னதாக அதாவது நேற்றிரவு கூட்டமைப்பினரைத் தொடர்பு கொண்ட காவல்துறையினர் அனுமதியை ரத்து செய்திருப்பதாகக் கூறினர். பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேச வாய்பிருப்பதாக காரணம் கூறினர். ஆனால் தடையை மீறி இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kolathur_mani_401ஆர்பாட்டத்தை தொடக்கி வைத்து கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய கண்டன உரை:

காஷ்மீர் பிரச்சினை என்றாலே அது இஸ்லாமிய சமூகத்தினரின் பிரச்சினை என்று ஒரு தவறான பிரச்சாரத்தை இந்திய அரசு இந்திய மக்களிடம் பரப்பி வருகிறது. ஆனால் அங்கு ஓர் அப்பட்டமான மனிதப் படுகொலை இந்திய ஆட்சியாளர்களால் தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு கொண்டுக் இருக்கிறது. இதை மக்களிடம் இருந்து மறைக்கவே மதச் சாயத்தை இப்போராட்டத்தின் மீது இந்தியா சுமத்துகிறது. ஆனால் காஷ்மீர் மக்களோ தாங்கள் காஷ்மீரிகள்; இந்தியாவுக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ சொந்தமானவர்கள் அல்லர் என்று தொடர்ந்து போராடிவருகின்றனர். இராணுவத்தை வைத்து அந்த மக்களை அடிமைப்படுத்தி இருக்கும் இந்திய அரசு குறைந்த பட்சம் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுவார்த்தைக்குக்கூட இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் அவர்கள் எந்த நாட்டுடன் இருக்கவேண்டும் என்பதை காஷ்மீர் மக்களே முடிவு செய்ய வேண்டுமே ஒழிய இராணுவத்தை வைத்து மக்களை ஆண்டு கொண்டு இருக்கும் இந்திய அரசு அல்ல.

ஆகவே நாம் இந்த கண்டன ஆர்பாட்டத்தின் மூலம் ஒரு சில கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வைக்கிறோம்.

1. இந்திய அரசு காஷ்மீர் மக்களின் மீதான போரை உடனே நிறுத்த வேண்டும்.
2. காஷ்மீரில் இருந்து இராணுவத்தைத் திரும்பப் பெறவேண்டும்.
3. காஷ்மீர் மக்களின் மீது சுமத்தப்பட்டு இருக்கும் சிறப்பு இராணுவச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
4. காஷ்மீர் மாநிலத்தின் சுயநிர்ணய உரிமைக்கான பேச்சுவார்த்தையை இந்திய அரசு உடனே துவக்க வேண்டும்.

மேலும் இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு முதலில் அனுமதி வழங்கிய காவல்துறை கடைசி நிமிடத்தில் ரத்து செய்து தடைவிதித்து உள்ளது என்றாலும் நீண்ட நாட்களாக விடுதலைக்காக இந்திய அரசிடம் போராடி வரும் காஷ்மீர் மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க நாம் தொடர்ந்து நமது மக்களிடம் இப்பிரச்சினையை தடைகளை தாண்டியும் கொண்டு செல்ல உறுதி ஏற்போம். அவர்களுக்கான ஆதரவுக்குரலை தொடர்ந்து ஒலிப்போம் என உறையாற்றினார்.

இந்த ஆர்பாட்டத்தில் கைதானோர் அனைவரும் 15 நாட்கள் காவலில் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.