இந்திய விடுதலை இயக்கத்தின் முன்னணித் தலைவர் களில் ஒருவர் - விடுதலைப் போரில் பங்கேற்ற போராளி - தென்னகத்தின் முதல் பொதுவுடைமைவாதி - முதன்முதலாக மே நாளைக் கொண்டாடிய கம்யூனிஸ்டுத் தோழர் - தொழிலாளர் தலைவர் - மிகச்சிறந்த பகுத்தறிவுவாதி - அறிவியல் ஆய்வுரையாளர் - சுயமரியாதை இயக்கச் சிந்தனையாளர் என்ற பன்முக ஆளுமை கொண்ட ம. சிங்காரவேலர் அவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட மீனவர் வகுப்பைச் சேர்ந்த வெங் கடாசலம் செட்டி-வள்ளியம்மை இணையருக்கு 18.2.1860 இல் மூன்றாவது செல்வ மகனாகப் பிறந்தார்.
அந்நாளில், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்கள் கல்வி பெறும் உரிமையும் வாய்ப்பும் இன்றி வாழ்ந்து வந்தனர். அத்தகைய சூழலில் ஒருவர் தொடக்கக் கல்வி யினைப் பெறுதல் என்பதே குதிரைக் கொம்பாகும்.
ஆனால், அன்றைய சாதிக் கட்டுப்பாடுகளையும் சமூக அமைப்புகளையும் உடைத்தெறிந்துவிட்டு, சிங்காரவேலர் சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள இந்து உயர்நிலைப் பள்ளியில் தம் பள்ளிப் படிப்பையும், 1894ஆம் ஆண்டில் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்துப் பி.ஏ. (B.A.) பட்டமும் பெற்றதுடன், சில ஆண்டுகள் கழித்துச் சட்டக் கல்லூரியில் பயின்று, பி.எல். (B.L.) பட்டமும் பெற்றார் என்பது மிகப் பெரிய சாதனையாகும். 1907இல் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞராகத் தன்னைப் பதிவு செய்துகொண்டார். அந்நாளில் வாழ்ந்த சிறந்த வழக்கறிஞர்களுக்கிணையாகச் சிறப்புடன் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1889இல் சிங்காரவேல் - அங்காளம்மாள் திருமணம் நடைபெற்றது. இத்திருமணம் சாதி மறுப்புத் திருமணமாகும். இவர்களது ஒரே மகள் கமலா இவர்களது பெயர்த்தி சீத்தா. பிலிப் ஸ்பார்ட் என்ற கம்யூனிஸ்டுத் தோழர், 1939இல் சீத்தாவை மணம் புரிந்துகொண்டார்.
இளமைக் காலத்தில், சிங்காரவேலர், சமூக அநீதிகளைக் குறிப்பாகத் தீண்டாமைக் கொடுமைகளை எதிர்க்கத் துணிவு கொண்டார். அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போர்க்குர லாகப் பண்டிதர் அயோத்தி தாசர் (1845-1914) விளங்கினார். சிங்காரவேலுக்கு அவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக புத்த நெறியில் ஈடுபாடு ஏற்பட்டது.
பண்டிதர் அயோத்திதாசரும், அடையாறு திசாபிகல் சொசைட்டியைச் சார்ந்த கர்னல் ஆல்காட் (Colonel Olcot) அவர்களும் இணைந்து, சென்னைக்கு வருகை தந்துள்ள புத்த நெறியாளர், அனாகரிகா தர்மபாலாவிற்கு வரவேற்பளிக்க விரும்பினர். 1898 ஆகஸ்டு 8 அன்று சிங்காரவேலரின் இராயப்பேட்டை இல்லத்தில், இலங்கை புத்த நெறியாளர் தர்மபாலாவிற்கு வரவேற்பளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது மஹாபோதி சங்கம் சென்னையில் நிறுவப்பட்டது.
சென்னை ஐஸ்அவுஸுக்கு(Ice House)ப் பக்கத்தில் மஹாபோதி சங்கம் ஒரு கட்டடத்தில் இயங்கி வந்துள்ளது. அங்கே நடைபெறும் கூட்டங்களில், திரு.வி.க. தன் மாணவப் பருவத்தில் நண்பர்களுடன் சென்று கலந்துகொள்வார். சொற்பொழிவுகளுக்கிடையே கேள்விகள் கேட்டு விடைபெற முயற்சிப்பார்; சில நேரங்களில் கலவரமும் விளைவிப்பார். ஒருநாள், சிங்காரவேலர் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினார். திரு.வி.க. அச்சொற்பொழிவினைக் கேட்டுத் தன்னை இழந்தார். சிங்காரவேலரின் அன்பரானார்.
சிங்காரவேலர், 1902இல் வர்த்தகத் தொடர்புகளை அமைக்க இங்கிலாந்து சென்றார். 1902ஆம் ஆண்டில் இங்கிலாந்திற்குச் சிங்காரவேலர் மேற்கொண்ட பயணம் மகத்தான அனுபவமாக அமைந்தது என்றே கூறலாம்,
அந்த நேரத்தில் தான் மகத்தான சோசலிஸ்ட் பேச்சாளரும் அமைப்பாளருமான கெர் ஹார்டியின் தலைமையின் கீழ்ப் புதிதாக உருவாக்கப்பட்டிருந்த தொழிலாளர் கட்சி பிரிட்டிஷ் அரசியலின் வடிவத்தை மாற்றியமைத்துக் கொண்டிருந்தது. உயிரோட்டமான சோசலிஸ்ட் தத்துவம் நடைமுறை என்ற பாரம்பரியத்தை உருவாக்கி விட்டுச்சென்ற பிரடெரிக் எங்கெல்ஸ் மறைந்து அப்போது ஏழு ஆண்டுகளே ஆகியிருந்தது. இவை, சிங்காரவேலரின் உள்ளத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தின.
இலண்டனில் அவர் இருந்தபோது அங்கு நடந்த உலக பௌத்த மாநாட்டிலும் கலந்துகொண்டார்.
வழக்கறிஞராக, சிங்காரவேலர் புகழ்பெற்றுத் திகழ்ந்தார்; பல துறைகளில் தீவிரத்துடன் பணியாற்றினார். ஆதலினால் கவி பாரதி, வ.உ.சி., சக்கரைச் செட்டியார், சுப்பிரமணிய சிவா போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்புகளேற்பட்டன.
அக்காலத்தில் அவர் சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டார். மீனவக் குப்பங்களில் பிளேக் நோய் ஏற்பட்ட காலத்தில் பிளேக் ஒழிப்பு இயக்கத்தில் தன்னையும் ஈடுபடுத்திக் கொண் டார். அவர் குடியிருப்பிலேயே பொதுச் சமையல் வைத்து மக்களுக்கு உதவி செய்தார். 1917இல் இன்புளூயன்சா காய்ச்சல் பரவியது. அந்நோய் பரவாது தடுத்திடவும், நோயிலிருந்து விடுபடவும் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்குத் துணையாக இருந்தார். இதுபோன்ற பொதுப் பணிகளில் ஈடுபட்ட சில நாள் களிலேயே காங்கிரஸ் இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கினார். இயல்பாகவே போராட்டக் குணம் கொண்ட சிங்காரவேலர் விடுதலை இயக்கப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்டதில் வியப்பேதுமில்லை.
ரௌலட் சட்டம் (Rowlatt Act)) என்பது பிரித்தானிய இந்தியாவில் இயற்றப்பட்ட ஒரு குற்றவியல் சட்டமாகும். மார்ச் 1919இல், அச்சட்டம் இயற்றப்பட்டது. விடுதலை வேண்டு கின்ற இந்தியர்களை அடக்கவும், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான சதிகளை நசுக்கவும் அச்சட்டம் கொண்டுவரப்பட்டது.
அந்த சட்ட அமலாக்கத்தை எதிர்த்து, காந்தியார், 1919 ஏப்ரல் 6ஆம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தார். காந்தியின் அழைப்பை ஏற்றுச் சிங்கார வேலர், சென்னை நகரின் பல பகுதிகளில், இளைஞர்களோடும், மாணவர்களோடும் தேசியப் பாடல்களைப் பாடிக்கொண்டும், ஏகாதிபத்திய எதிர்ப்பு முழக்கங்களை முழங்கிக் கொண்டும் ஊர்வலமாகச் சென்றுள்ளார் காங்கிரசின் முக்கியத் தலைவர் களில் ஒருவராய் விளங்கினார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை
1919, ஏப்ரல் 13ஆம் நாள் பஞ்சாபில் ஜாலியன் வாலா பாக்கில் அந்தக் கோர நாடகம் அரங்கேறியது. இந்திய சரித்திரத்தின் முகத்தில் கருப்பு மை பூசிய கொடிய ஞாயிற்றுக் கிழமை அது. இவ்வன்கொடுமையை எதிர்த்து சிங்காரவேலர் பல கண்டனக் கூட்டங்கள் நாடு முழுதும் நடத்தினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரப் பங்கேற்றார். தம் வழக்கறிஞர் தொழிலைத் துறந்தார். 24.5.1921 அன்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தன் வழக்கறிஞர் அங்கியை நெருப்பிலிட்டுச் சாம்பலாக்கினார். மக்களிடையே பிரிட்டிஷார் மீது எதிர்ப்புணர்வினைத் தூண்டிவிட்டார். மக்கள் தங்களுக் கிடையே ஏற்படும் வழக்குகளுக்குத் தீர்வுகாண பிரிட்டிஷ் நீதிமன்றங்களுக்குச் செல்லாது, அவர் நிறுவிய ‘ஹிந்துஸ்தான் பஞ்சாயத்து’ என்ற அமைப்பில் முறையிட்டு நீதி பெறும்படிக் கூறினார். ‘ஹிந்துஸ்தான் பஞ்சாயத்து’ ஞாயிற்றுக்கிழமை களில் ‘பாரத் ஆசிரமம்’ என்ற இடத்தில் கூடி வழக்குகளை விசாரித்து நீதி வழங்கி வந்துள்ளது.
ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் போன்ற கொடிய நிகழ்வுகளுக்குப் பின்னர், பிரிட்டிஷ் அரசின் மீதும், பிரிட்டிஷார் மீதும் மக்கள் கடும் சீற்றமும், வெறுப்பும், அவநம்பிக்கையும் கொண்டிருந்தனர்.
மக்களின் நம்பிக்கையையும் நல்லெண்ணத்தையும் பெறுவதற்காக 13.1.1922 அன்று பிரிட்டிஷ் வேல்ஸ் இளவரசர் தன் மனைவியுடன் நல்லெண்ணத் தூதுவராக சென்னைக்கு வந்தார்கள். அவரது வருகையை எதிர்த்து சிங்காரவேலர் மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினார். அலைகடலென மக்கள் கூடி ஆர்ப்பரித்தனர். சென்னை மாநகரமே குலுங்கியது. பிரிட்டிஷ் அரசு கலங்கியது.
அன்று, காங்கிரசுக்கு ஆதரவாகத் தொழிலாளர்களைத் திரட்டினார். தொழிலாளர் பிரச்சனைகளை எடுத்துக்கொண்டு பணியாற்றும் இயக்கமாக காங்கிரசை உருவாக்கப் போராடி னார். தீவிர இடதுசாரி கருத்துக்களை காங்கிரசு மேடை களிலும், தன் கட்டுரைகளிலும் முன்வைத்தார்.
1918 ஏப்ரலில், ‘சென்னை மாகாணச் சங்கத்தின் மாநாடு’ தஞ்சையில் நடைபெற்றது. அம்மாநாட்டில்தான், ஈ.வெ.ரா. சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் சந்திப்பு நிகழ்ந்தது.
ருஷ்யாவில் 1917 அக்டோபரில் புரட்சி ஏற்பட்டு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஜார்மன் னரை வீழ்த்தி சோசலிச மக்கள் குடியாட்சி மலர்ந்தது.
சிங்காரவேலரின் நட்பைப் பெற்றிருந்த மகாகவி சுப்பிரமணிய பாரதி இந்த ருஷ்ய புரட்சியைக் குறித்து,
“ஆகாவென் றெழுந்ததுபார் யுகப்புரட்சி
கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்
குடிமக்கள் சொன்னபடி குடிவாழ்வு
மேன்மையுறக் குடிமை நீதி
கடியொன்றி லெழுந்தது பார்; குடியரசென்று
உலகறியக் கூறி விட்டார்
அடிமைக்குத் தளையில்லை யாருமிப்போது
அடிமையில்லை அறிக என்றார்”
என்று உணர்ச்சியோடு பாடுகின்றார்.
இந்த யுகக் கவி பாரதி 1921 செப்டம்பர் 11இல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மடியில் தான் உயிர் நீத்தார்.
அகிலத்திலுள்ள மக்கள் அனைவரும் ருஷ்யப் புரட்சியின் வெற்றிகண்டு எழுச்சி பெற்றனர். அடிமைப்பட்ட மக்கள் உள்ளத்தில் விடுதலைத் தீ பரவலாயிற்று. இந்தச் சூழலில் தான் இங்கு தமிழ்நாட்டில் சிங்காரவேலர் தீவிர உறுதி கொண்ட அரசியல் தலைவராக எழுந்தார். கம்யூனிஸ்டு தத்துவத்தின்பால் ஈர்க்கப்பட்டார். காங்கிரசு மேடைகளில் கம்யூனிஸ்டு கொள்கைகளைப் பரப்பினார். அக்காலத்தில் அவரைப்போல் செயல்திறன் மிக்க காங்கிரசு தலைவர் வேறெவரும் கிடையாது என்று கூறலாம். ஒத்துழையாமை இயக்கத்தில் தீவிரப் பங்கேற்ற காலத்திலிருந்தே பாட்டாளி வர்க்கம், காங்கிரசில் சோசலிசம் ஆகியவற்றைப் பற்றிச் சிந்திப்பவராக இருந்துள்ளார். 1922இல் அவரது இல்லம் காவல்துறையினரால் சோதனையிடப்பட்டது. சட்டவிரோத மான ஆவணங்கள் ஏதும் அவர்களுக்குக் கிட்டவில்லை. 13 டிசம்பர் 1922 சுதேசமித்திரன் இதழில், “தொழிலாளர் சுயராஜ்ஜியத்திற்காக காங்கிரசு பாடுபட வேண்டும்” என்று அவர் எழுதியிருந்தார். இக்கட்டுரையின் சில பகுதிகளை, ‘கான்பூர் போல்ஷ்விக் சதி (6.3.1924) வழக்கில்’ பயன்படுத்தினர்.
கயா காங்கிரசில்
1922இல் கயாவில் நடைபெற்ற காங்கிரசில் சிங்கார வேலர் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் தான் எஸ்.ஏ. டாங்கேயைச் சந்தித்தார்.
“தொழிலாளர் ஸ்தாபன அமைப்பு” என்ற தலைப்பில் சிங்காரவேலர் பேசினார்.
“தலைவர் அவர்களே, தோழர்களே, நான் உலகக் கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதியாக உங்கள்முன் நிற்கின்றேன். உலகக் கம்யூனிஸ்டுகளின் வாழ்த்துகளை உரித்தாக்கு கின்றேன். நமது காங்கிரசு இயக்கம் சுதந்தரம் பெறப் போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வுரிமைகளை எல்லோரும் பெறவேண்டும், சிலர் கைகளில் அதிகாரம் குவிதலை நாம் விரும்பவில்லை, சுயராஜ்ஜியம் என்பது தொழிலாளரும் உழைக்கும் மக்களும் உண்மையான விடுதலையைப் பெறுவதென்பதாக இருக்க வேண்டும். ஆகையால், தோழர் களே, நாம் தொழிலாளர்கள் நலத்தில் மிகுதியான கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வேண்டுகின்றேன். தொழிலாளரை நேரடியாக அணுகி நாட்டிலுள்ள தொழிற் சங்கங்களை காங்கிரசு அமைப்பின் ஒரு பகுதியாக ஒன்று திரட்ட வேண்டும்.
கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள். அத்தகைய மனித இன ஒற்றுமையை உண்டாக்க இந்தியத் தொழிலாளரும் உதவி செய்வர்.”
இவை கயா காங்கிரசில் சிங்காரவேலர் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.
எம்.என். ராய் மார்ச் 1, 1923ல் “வேன்கார்டு” ((VANGUARD) இதழில், சிங்காரவேலர் கயா காங்கிரசில் தன்னை உலகக் கம்யூனிஸ்டுகளில் ஒருவன் என்று கூறியதைப் போற்றிப் புகழ்ந்து எழுதியுள்ளார்.
சிறந்த சிந்தனையாளர்களும், மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்த தலைவர்களும் நிறைந்திருந்த ‘கயா காங்கிரஸ் மாநாட்டில்’ சிங்காரவேலர் கலந்துகொண்டு உரையாற்றியது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். அரசு வழக்குத் தொடுத்துவிடும், மேன்மையான தேசியத்திலிருந்து ஒதுக்கப் பட்டு விடுவோம் என்று இளையவர் அஞ்சி நின்றபோது, 60 வயதிற்கும் மேற்பட்ட முதியவர் தம்மை ஒரு கம்யூனிஸ்டு என்று அறிவித்தபோது அவரைப் பார்த்துச் சிரித்தவர்கள் அவரது அஞ்சாமையைக் கண்டு வியந்திருக்க வேண்டும்.
மே நாள்
உலகமுற்றும் தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே நாள், இந்தியாவில் முதன்முதலாக 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் இருந்த கடற்கரையில் சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. அன்றைய தினமே, தொழிலாளர் விவசாயிகள் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி புரட்சிகர ஜனநாயக சமத்துவத் திட்டத்திற்காகக் காங்கிரசுக்குள் ளேயே செயலாற்றிட வேண்டுமென்று அதனைத் தொடங்கி னார். அக்டோபர் 1923இல் “லேபர் கிசான் கெசட்” (Labour
Kisan Gazette) என்ற மாதமிருமுறை வெளிவரும் ஆங்கில இதழையும், “தொழிலாளன்” என்ற தமிழ் வார இதழையும் கட்சியின் சார்பாக வெளியிடுவது குறித்து அறிவித்தார்.
21.1.1924இல் லெனின் மறைந்தார். தொழிலாளர் விவசாயக் கட்சி தன் அலுவலகத்தில் செங்கொடியை அரைக் கம்பத்தில் பறக்கச் செய்து அஞ்சலி செலுத்திற்று. லேபர் கிசான் கெஜட்டில் வெளியான கட்டுரை லெனினுடைய ஆற்றலையும் சேவையையும் பாராட்டியது.
1924 மார்ச் 6ஆம் நாள், “கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்குத்” தொடர்பாகக் காவலர் அவரைக் கைது செய்ய வந்த போது, அவர் பெரிதும் நோயுற்றுப் படுக்கையில் இருந் தார். ஆறு திங்களுக்குமேல் பிணியால் இடர்ப்பட்டார். பிரிட்டிஷ் அரசு அவரை வீட்டுக் காவலில் வைத்திருந்தது. குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி, பின்னர் அவரை, அரசு விடுதலை செய்தது.
இந்துமத அறநிலையப் பாதுகாப்புச் சட்டம்
பிப்ரவரி, 1925இல் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியினர் இந்துமத அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தனர். கோயில்களின் சொத்துக்கள், மத அறக்கட்டளைகள் ஆகிய வற்றைச் சரியான கட்டுப்பாட்டின்கீழ்க் கொண்டு வருவதே அதன் நோக்கமாகும். இச்சட்டத்தால் இந்து மதத்திற்கு ஆபத்து என்று சனாதனிகளும் காங்கிரசாரும் எதிர்த்தனர். இச்சட்டத்தை ஆதரித்து, 13.2.1925 அன்று “நவசக்தி” இதழில் சிங்காரவேலர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“நமது தேசிய சொத்துக்கள் சரியான நிர்வாகமின்றிச் சீரழிந்து போவதைத் தடுத்து சரியான நிர்வாகத்தின் கீழ்க் கொண்டு வருவதை எதிர்ப்பது ஏன்? இந்து மதத்திற்கு ஆபத்து என்று கூறுவது சரியன்று. உடன்கட்டை ஏறுதல் என்ற வழக்கம் ஒழிக்கப்பட்ட காலத்திலும், விதவா விவாகச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதும் இத்தகைய கூச்சல்களே எழுந்தன. கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக் களை சரியான நிர்வாகத்திற்குட்படுத்தக் கூடிய இந்தச் சட்டத்திற்கு விரோதமாக ஏன் கிளர்ச்சி செய்ய வேண்டும்? ஆதலினால் இந்த தர்ம பரிபாலன சட்டம் பல வழிகளில் நன்மை தரக்கூடியதென்று ஜனங்களிடையே சென்று பிரச்சாரம் செய்வது தமிழ்நாட்டுத் தலைவர்களுடைய கடமையாகும்.”
தமிழ்நாடு காங்கிரசு மாநில மாநாடு 1925, நவம்பர் 21, 22 தேதிகளில் திரு.வி.க. தலைமையில் காஞ்சியில் நடை பெற்றது. அம்மாநாட்டில் சிங்காரவேலர் கொடி ஏற்றினார். அம்மாநாட்டில் ஈ.வெ.ரா, எஸ். இராமநாதன், சுரேந்திரநாத் ஆரியா, வி. சக்கரைச் செட்டியார் ஆகியோர் பிராமணர்-பிராமணரல்லாதார், தீண்டாதார் ஆகியோருக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் வேண்டுமென்று தீர்மானம் கொண்டுவந்தனர். மாநாட்டுத் தலைவர் திரு.வி.க. தீர்மானத்தை அனுமதிக்க வில்லை. ஆதலால், ஈ.வெ.ரா. காங்கிரசிலிருந்து விலகி சுய மரியாதை இயக்கத்தைத் தொடங்கினார். அவ்வியக்கத்தின் கொள்கைகளில் சில, பொருள் முதல்வாதக் கோட்பாடுகளை யும் கம்யூனிசக் கொள்கைகளையும் பரப்புவதற்கு வழிகோலின. ஈ.வெ.ரா.வுடன் ஏற்பட்ட தொடர்பால், சிங்காரவேலர், “குடிஅரசு”, “புரட்சி” ஆகிய தமிழ் வார இதழ்களில், சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள், பகுத்தறிவுக் கருத்துகள், சமத்துவக் கொள்கை கள், அறிவியல் விளக்கங்கள் எனப் பல்வேறு துறைகளைச் சார்ந்த விஷயங்கள் பற்றிக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
சென்னை மாநகராட்சியில்
1925இல் சென்னை மாநகராட்சித் தேர்தலில் காங்கிரசு சுயராஜ்யக் கட்சி சார்பில் வேட்பாளராக நின்று, யானைக்கவுளி தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 3.11.1925 இல் நிரந்தரக் கல்விக் குழுவிற்குத் (Standing Committee) தேர்ந்தெடுக்கப்பட்டார். நகரத்தின் சுகாதாரம் மேன்மையுற நடவடிக்கை எடுத்தார். ஏழைக் குழந்தைகளுக்குச் சத்துணவு வழங்கவும், குடியிருப்பு வசதிகளைப் பெருக்கவும், மருத்துவ வசதிகள் பெருகவும், குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்திட வும், சிறார்களின் கல்வி சிறந்திடவும் நடவடிக்கைகள் எடுத் தார். இவர் சென்னை மாநகராட்சி உறுப்பினராக இருந்த போது, பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடத்திக் காட்டினார். பிரிட்டனிலிருந்து சென்னைக் வந்த கம்யூனிஸ்டுத் தோழர் சக்லத்வாலாவிற்கு சென்னை மாநகராட்சி வரவேற்பளிக்க ஏற்பாடு செய்தார். சக்லத்வாலா பேசிய கூட்டங்களில் அவரது உரையை சிங்காரவேலர் தமிழில் மொழிபெயர்த்தார். சக்லத்வாலாவின் வருகை சோவியத் யூனியனின் சாதனைகளைப் பரப்பவும் கம்யூனிசத் திட்டத்தைப் பற்றிய சீரிய புரிதல் உருவாகவும் உதவி செய்தது.
கான்பூரில் 1925 டிசம்பர் 26ஆம் நாள் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது. அன்றைய தினமே கான்பூரில் கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில், பொதுவுடைமைக் கட்சியினர் “இந்தியா பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுபட்டு முழுச் சுதந்தரம் அடைதல் வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
இதே ஆண்டில் ஆர்.எஸ்.எஸ். இயக்கமும் தோன்றியது. அதன் தொடக்க மாநாட்டில் இந்திய விடுதலை குறித்துத் தீர்க்கமான தீர்மானம் எதனையும் கொண்டுவரவில்லை. ஆனால் காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்தைக் கண்டித்தும், முஸ்லிம்களை விஷப்பாம்பென்றும், முஸ்லிம் ஆதிக்கத்திலிருந்து விடுதல பெறுவதுமே உண்மையான சுதந்தரம் என்றும் அந்த ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் பேசப் பட்டது. 1925 முதல் மாநாட்டிலேயே அவர்களது நிறம் என்ன வென்று தெரியவந்தது.
முதல் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மாநாட்டில், கான்பூரில், தலைமையேற்றவர் தென்னகத்தின் முதல் பொது வுடைமைவாதி ‘சிந்தனைச் சிற்பி ம.வெ. சிங்காரவேலர்’ ஆவார்.
அவர் நிகழ்த்திய நீண்ட தலைமையுரையின் சில முக்கியப் பகுதிகள் :
“தோழர்களே, இந்திய விடுதலை வேள்வியில் பங்கேற் றுள்ள போராளிகளுக்கு நமது நெஞ்சார்ந்த ஆதரவையும், அவர்கள் இந்த இந்திய விடுதலைப் போரில் வெற்றி அடைந்திட வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.”
‘திலகர், தேசபந்து தாஸ், சுப்பிரமணிய சிவா, மேலும் லெனின், ரோசா லக்ஸம்பர்க், கார்ல் லீப்நேக்ட், எம்ழுவாரே’ ஆகியோரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினார்.
‘நமது நாட்டின் விடுதலைக்காக நடைபெறும் போராட்டத் தில் நம் பொதுவுடைமைத் தோழர்கள் பெரும் அளவிற்குப் பங்கேற்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்தார்.
“இந்திய சுதந்தர அரசு, வருங்காலத்தில் முதலாளிகளின் ஆட்சியாக அமைந்திடாமல், அடிப்படையில் பாட்டாளி மக்களின் நலத்திற்கான ஆட்சியாக மலர்வதற்கு விழிப்புடன் செயல்படுவது பொதுவுடைமைத் தோழர்களின் கடமை” என்று வலியுறுத்தி னார்.
“உழைக்கும் பாட்டாளி மக்கள் பங்குபெறாமல், பூர்ஷ் வாக்களும் அறிவுஜீவிகளும் சுயராஜ்ஜியத்தைப் பெற்றுவிட முடியாது. தொழிலாளர்களிடம் காங்கிரசு முதலாளித்துவத் தலைமை உண்மையுடன் நடந்துகொள்வதில்லை” என்றும் சுட்டிக்காட்டினார்.
“நமக்கு ஏற்படக்கூடிய அபாயத்தைக் குறித்து எச்சரிக் காவிட்டால் எனது கடமையிலிருந்து தவறியவன் ஆவேன். ஒத்துழையாமை இயக்கத்தின் மூலம் பெற்ற அனைத்துக் கட்சிகளின் நல்லிணக்கம், வகுப்புவாத, மதவேறுபாடுகளால் அழிக்கப்பட்டுவிடலாம் என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்தியர்களாகிய நாம் மிதமிஞ்சிய சாதி மதப் பற்றுள்ளவர் களாக இருக்கின்றோம். இதுவே நமது ஒற்றுமைக்குப் பங்கம் விளைவிக்கும் சக்தியாகும்.”
மதமும் சாதியும் நம்மிடையே நிலவி வரும் நீண்ட நெடிய அரசியல் ஒருமைப்பாட்டை விழுங்கி விடுகின்ற பேய்களாகும். இன்று மறுபடியும் நமது நாடு மதவாதத்தால் சிதறடிக்கப்பட்டு வருகின்றது. இத்தகைய அற்பக் காரியங்களில் ஈடுபடும் தலைவர்கள் நமது நாட்டிற்கும் இலட்சியத்திற்கும் துரோகிகளாவர்.
சிங்காரவேலரின் இக்கூற்று 2017ஆம் ஆண்டிலும் பொருந்துகின்ற வகையில் அமைந்துள்ளது.
அமெரிக்காவில் சாக்கோ, வான்சிட்டி என்ற இரண்டு கம்யூனிஸ்டுகளை எலக்டிரிக் ஷாக் கொடுத்துக் கொன்றுவிட் டார்கள். இச்செயலைக் கண்டிக்கச் சிங்காரவேலர் சென்னை நேப்பியர் பூங்காவில் ஆகஸ்டு 1927இல் மாபெருங்கண்டனக் கூட்டத்தைக் கூட்டினார். சிங்காரவேலர் உரையாற்றிய தோடு, அமெரிக்காவின் அடாத செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக் கும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். சுயமரியாதைக் கழகத் தலைவர்களில் ஒருவரான கே.வி. அழகிரிசாமி எழுச்சியுரை ஆற்றினார்.
உலகின் பல்வேறு நாடுகளில் செயல்பட்டுவந்த கம்யூனிஸ்டு அமைப்புகளோடு தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் வெளி யிடும் புதிய நூல்கள், பத்திரிகைகள் பெற்றிட தன் நண்பர் களின் முகவரியைக் கொடுத்துவிடுவார். அவர்கள் இவரிடம் நூல்களைச் சேர்த்துவிடுவார்கள்.
தொழிற்சங்கத் தொடக்கக் காலம்
1917ஆம் ஆண்டு அக்டோபரில் இரஷ்யப் புரட்சி நடந் தேறியது, 27.4.1918இல் இந்தியாவின் முதல் தொழிற்சங்க மான “சென்னை தொழிலாளர் சங்கம்” தொடங்கக் காரண மாக இருந்தவர் சிங்காரவேலர். அது முதற்கொண்டே தொழி லாளர் பிரச்சினைகளில் தோழர் சிங்காரவேலர் தீவிரக் கவனம் செலுத்தத் தொடங்கினார்.
தொழிலாளர் இயக்கத்தின் தொடக்கக் காலத்தில் எந்தவொரு சங்கத்தின் முக்கியப் பொறுப்புகளிலும் அவர் இல்லை எனினும், அந்தக் காலக்கட்டத்தில் இரயில்வே தொழிலாளர், டிராம்வே தொழிலாளர், மின்வாரியத் தொழிலாளர், மண்ணெண் ணெய்த் தொழிலாளர், ரொட்டித் தொழிலாளர், தெருக்கூட்டும் தொழிலாளர், பஞ்சாலைத் தொழிலாளர் ஆகியோரின் போராட் டங்களில் பங்கேற்பதைத் தனது பழக்கமாகவே கொண்டி ருந்தார்.
1920 டிசம்பர் 9 அன்று பி அண்டு சி மில் (B & C Mill) தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி உத்தரவின் போரில், தொழிலாளர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அதில், பாபுராவ், முருகன் என்ற 2 தொழிலாளர்கள் களத்திலேயே மாண்டனர். இந்தியத் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முதல் தியாகிகள் இவ் விருவரே. மறுநாள் நடந்த இறுதி ஊர்வலத்தில் பாடையைத் தூக்கிச் சென்றவர்களில் தோழர் சிங்காரவேலரும் ஒருவர்.
வேலை நிறுத்தம் சுமார் ஓராண்டு காலத்திற்கு நீடித்தது. ஆங்கிலேய கவர்னர் வில்லிங்டனுக்கு எதிரான தொழிலாளர் பேரணியில் திரு.வி.க., சக்கரைச் செட்டியார், இ.எஸ். ஐயரோடு தோழர் சிங்காரவேலரும் பங்கேற்றார். இப்போராட்டத்தில் சுமார் 13,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர். ஆலை நிர்வாகம் போராடும் தொழிலாளருக்குப் பதிலாக ஏழை ஆதித்திராவிட மக்களை வேலையில் அமர்த்தினர். அதனால் சாதி இந்துக்களுக்கும் ஆதித்திராவிடர்களுக்கும் இடையில் வகுப்புப் பகைமையை உண்டாக்கி, வேலை நிறுத்தத்தை உடைக்க நிர்வாகம் முயன்றது. அப்போதே சாதியைக் கொண்டு தொழிலாளர் ஒற்றுமையைக் குலைக்க பிரிட்டிஷார் முயற்சித்தனர்.
எல்லாக் காலங்களிலும் ஒற்றுமையை உடைக்கும் சக்தி யாக சாதியும் மதமும் இருந்துள்ளன; இருந்து வருகின்றன.
அப்போராட்டத்தை ஒடுக்க முடியாமல் போகவே, 1921 ஆகஸ்ட் 29 அன்று பிரிட்டிஷ் போலீஸ் மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் ஒரு பெண் உட்பட ஏழு தொழிலாளர் கள் கொல்லப்பட்டனர். சிங்காரவேலர் “துப்பாக்கிப் பிரயோக சம்பவம்” பற்றி மிக உருக்கமான கட்டுரை எழுதினார். “சரியோ, தவறோ அவர்கள் படும் துன்பங்கள், அவர்கள் தாங்கும் துயரங்கள், அவர்களுக்கு ஏற்படும் இழப்புகள் யாவும் அவர்கள் ஆன்மாக்களில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அவர்களுடைய ஆறு குற்றமற்ற தோழர்களின் மரணத்தின் நினைவு அவர்களை மேலும் அதிகத் துன்பங்களை-மேலும் அதிக இழப்புகளை-மேலும் அதிகத் துயரங்களைத் தாங்கும் வலிமையைத் தரும். இறந்தவர்களும் தொடர்ந்து பணி யாற்றுகின்றனர் என்று ஆறுதல் கூறி, வால்ட்டர் விட்மனின் கவிதையுடன் முடித்தார்.” சிங்காரவேலுவின் இக்கட்டுரை, வரலாற்றில் இடம்பெறத்தக்கது என்பார் திரு.வி.க.
செப்டம்பர் 19 மற்றும் அக்டோபர் 15இல் மீண்டும், மீண்டும் தொழிலாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. அப்போது நடந்த தொழிலாளர் ஊர்வலத்தை தோழர் சிங்கார வேலரே வழிநடத்தினார். எந்தத் தீர்வையும் எட்டாமல், சர்.பி. தியாகராயர் ஆலோசனைப்படி வேலை நிறுத்தம் கைவிடப் பட்டது.
1921 மே 17 அன்று சூலை பஞ்சாலைத் தொழிலாளரி டையே பேசிய போது, உலகம் முழுவதும் உள்ள தொழி லாளர்களின் நிலையையும், ஒற்றுமையின் தேவையையும் வலியுறுத்தினார். “எல்லாவற்றையும் தொழிலாளரே உற்பத்தி செய்கின்றனர். ஆனால், அவர்களிடம் ஏதும் இல்லை” என்பதைச் சுட்டிக்காட்டினார். பல்வேறு நாடுகளில் நடந்துகொண்டிருந்த வர்க்கப் போராட்டங்களை ஆய்வு செய்து, சென்னைத் தொழி லாளர்களுக்கு வழிகாட்டினார். அதில் அவரின் மார்க்சிய சிந்தனைப் போக்கின் வளர்ச்சி வெளிப்படலாயிற்று.
இரயில்வே தொழிலாளர் போராட்டம்
வங்காளத்திலுள்ள கரக்பூரில் இரயில்வே தொழிலகத் தொழிலாளர் ஆள் குறைப்பை முன்னிட்டு, 19.2.1927இல் பெரும் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. அப்போராட் டத்தை முகுந்தலால் சர்க்கார் தலைமையேற்று நடத்தினார். அப்போராட்டம் வங்காளத்தையே உலுக்கியது. அந்தப் போராட் டத்தில் சிங்காரவேலர் வங்காளத்துக்குச் சென்று முகுந்தலால் சர்க்காருடன் சேர்ந்து போராடியுள்ளார்.
19.7.1928 அன்று நாகை இரயில்வே வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது. நாகப்பட்டினம், போத்தனூர் ஆகிய ஊர்களிலுள்ள இரயில்வே பணிமனைகளில் ஆட்குறைப்பும், பழிவாங்கல் நடவடிக்கையும் நடந்து கொண்டிருந்தன. மேலும், நாகை, போத்தனூரிலுள்ள பணிமனைகளைப் பொன்மலைக்கு மாற்றவும், பணித்தேர்வு என்ற முறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் நிருவாகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவற்றை எதிர்த்தே அன்று வேலை நிறுத்தம் தொடங்கியது.
நாகப்பட்டினம் இரயில்வே போராட்டத்தில் ஈ.வெ.ரா.வும் பங்கேற்றார்.
வங்க இரயில்வே போராட்டத்தில் ஏற்பட்ட விழிப்பு, நாகைத் தொழிலாளர்களிடையே நல்ல ஒற்றுமையை ஏற்படுத்தியது. இப்போராட்டத்தினால் தமிழக இரயில்வே துறையே நிலைகுலைந்தது. இதனால், அன்றைய அந்நிய அரசு சிங்காரவேலர், முகுந்தலால் சர்க்கார், பெருமாள் ஆகியோருடன் தொழிலாளர் பலரையும் கைது செய்தது.
இந்தப் போராட்டத்தில் சிங்காரவேலரும், முகுந்தலால் சர்க்காரும் சதிசெய்தனரென்று 10 ஆண்டுக் கடுங்காவல் தண்டனையை அவர்களுக்கு விதித்தது, அன்றைய பிரிட்டிஷ் அரசு. சிங்காரவேலர் சென்னை சிறையில் அடைக்கப்பட்டார். சிங்காரவேலருக்கு விதிக்கப்பட்ட தண்டனை உயர் நீதி மன்றத்தால் குறைக்கப்பட்டு ஆகஸ்டு 1930இல் விடுதலை யானார். அப்பொழுது அவருக்கு வயது 70. 1930க்குப் பின்னர் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களில் தீவிரப் பங்கேற்க இயலவில்லை என்ற போதிலும், பல தொழிற்சங்க நடவடிக்கைகளில் தொடர்ந்து அக்கறை காட்டினார்.
சிறையிலிருந்து விடுதலை பெற்ற பின்னர், 1931 முதல் 1935 வரை சிங்காரவேலர், பெரியார் நிறுவிய சுயமரியாதை இயக்கத்தில் முக்கியமான பங்கினையாற்றினார். 1931 டிசம்பர் 26ஆம் நாள் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டினைத் திறந்து வைத்து ஆற்றிய உரையில், தொன்றுதொட்டு இருந்து வரும் மூடப்பழக்கவழக்கங்களை, சாதி, மத வேற்றுமைகளை எதிர்த்து சுயமரியாதை இயக்கம் பணியாற்றுவதை அவர் பாராட்டினார். “சோசலிசம் மட்டுமே சாதி, மத, பொருளா தார வேற்றுமைகளற்ற சமுதாயத்தைப் படைக்க முடியும்” என்றார்.
“குடிஅரசு” ஏட்டில் ‘சமதர்ம விளக்கம்’ என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி முடித்தார். அதன் பின்னர் தொடர்ந்து, “கடவுளும் பிரபஞ்சமும்” என்ற கட்டுரைத் தொடரையும், அதனைத் தொடர்ந்து, ‘விஞ்ஞானமும் மூடநம்பிக்கைகளும்’ என்ற தொடரையும் எழுதினார்.
1932 மே மாதம் சேலம் மாவட்ட சுயமரியாதை மாநாடு நடந்தது. அம்மாநாட்டிற்கு சிங்காரவேலர் தலைமை தாங்கி ஆற்றிய உரையின் முக்கியப் பகுதி வருமாறு :
“உங்கள் சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக் கங்கள் மதங்களையும், மதக் கோட்பாடுகளையும், மூடநம்பிக் கைகளையும் சமூக வாழ்க்கையினின்று அகற்றுவது, சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவது, ஆணுடன் பெண்ணும் சரிநிகர் சமத்துவம் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் ஆகும். நமது நாட்டிலுள்ள 34 கோடி சாமான்ய மக்கள் உண்மை யான சுதந்தரம் பெற்றுப் பசி இல்லாமலும், மதக் கற்பனை யில்லாமலும், சாதி சமயமில்லாமலும் உண்ண, உடுக்க, இருக்க வசதிகள் யாவருக்கும் சரிநிகர் சமானமாக வாழ்க்கை பெற சமதர்ம இராஜ்யத்தை ஸ்தாபியுங்கள்” என்றார்.
இந்திய விடுதலை இயக்கம், பொதுவுடைமை இயக்கம், சுயமரியாதை இயக்கம் மூன்றிலும் பங்கேற்றுப் பணிபுரிந்தார். இம்மூன்று இயக்கங்களின் சிந்தனைச் சக்தியாக விளங்கினார்.
சாதி, மத பேதமற்ற (சோஷலிச) சமதர்ம சமுதாயம் மலர்ந்திட அல்லும் பகலும் சிந்தித்துச் செயலாற்றிய சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் 11.4.1946 அன்று எண்ணுவதையும் எழுதுவதையும் செயலாற்றுவதையும் நிறுத்தி, நீங்காத் துயிலில் ஆழ்ந்தார். வாழ்க அவரது கொள்கைகள்! வளர்க சோசலிசம்! எனக் கூறி, புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசன் கவிதையோடு நிறைவு செய்கின்றேன்.
“சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய் புரட்டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப்பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல், அரசியல் அவனால்!
தோழமை உணர்வு தோன்றிய தவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி!”
- மரு.க.சோமாஸ் கந்தன்